ஜனாதிபதித்தேர்தலில் மலையகப் பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பு இன்று மழுங்கடிக்கப்பட்டு வருகின்றது. மலையக தொழிலாளர் வர்க்கத்தினர் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக அணி திரண்டனர். நுவரெலியா மாவட்டத்தில் 81 வீதமான பெருந்தோட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த வாக்களிப்பின் மூலம் தெரிவித்த செய்தியை இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் பெரும்பான்மை கட்சிகளும் உறுதியாக நம்புகின்றன. இந்த நம்பிக்கை நியாயமானதே. சில மலையகக் கட்சிகள் அளவுக்கதிகமான அடக்கு முறைகளை இம்மக்கள் மீது மேற்கொள்வதும் மேற்படி கட்சிகள் மீதான அதிருப்திக்குக் காரணமாகும்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களாகவும் பணிப்பாளர்களாகவும் இணைப்புச் செயலாளர்களாகவும் பலர் இருந்தனர். அத்துடன் அமைச்சர் பிரதி அமைச்சர்களாக பதவி வகித்த மலையக பிரதிநிதிகள் தங்களது கடமையை முழு அளவில் சமூகப் பற்றோடு மேற்கொள்ளவில்லை என்று பெருந்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மலையகத்தில் உரிய முறையில் மேற்கொள்ளத் தவறி விட்டனர். கூரைத்தகடுகளும் மண் வீட்டுக்கான கூடாரங்களும் கோவில்களுக்கு மின்மேள இயந்திரங்களும் பஞ்சாராத்தி தட்டுக்களும் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்குவதுமே அபிவிருத்திகளாக மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
தேர்தல் காலத்தில் இவ்வாறான சலுகைகளைப் பெற்றுக்கொண்ட மலையக மக்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டவில்லை. கடந்த அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் இம்மக்கள் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் காட்டிய அக்கறை பொறுப்பு வாய்ந்த அரசொன்றாக நின்று அபிவிருத்தியை மேற்கொள்ளவில்லை. லயன்குடியிருப்பு கட்டடத்தை உடைத்தெறிந்து தனி வீடு நிர்மாணித்து தருவதாக நீண்ட காலமாக ஏமாற்றி வந்ததை இந்நாடே அறியும்.
மலையக தலைவர்கள் பலவீனமடைந்த நிலையில் மக்களின் சிந்தனை திசை மாறியது. இவர்களின் திசை மாற்றத்தால் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் வெற்றியை தனதாக்கிக் கொண்டார். இந்நாட்டின் நல்லாட்சிக்காக முழுமையான ஆதரவை வழங்கிய மலையக பெருந்தோட்ட மக்களின் பங்களிப்பை ஊடகங்கள் கண்டு கொள்ளத் தவறி விட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தொலைக்காட்சிகளில் சிங்கள ஆங்கில மொழிகளில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அரசியல் விவாதத்தில் ஏனைய மாகாண சிறுபான்மை மக்களின் தேர்தல் பங்களிப்பு அப்பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி தொடர்ச்சியாக பேசப்படுகிறது. ஆனால் பெருந்தோட்ட மக்களின் தேர்தல் பங்களிப்பு பெருந்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றி இவ்விவாதங்களில் விவாதிக்கப்படுவதில்லை.
அரச, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பல உள்ளன. 13.6 மில்லியன் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்வையிடுகின்றனர். சிறுபான்மை மக்களுக்குள் சிறுபான்மை இனமாக வாழும் மலையக மக்களின் தேவைகளை ஏனைய மக்களும் உணரச் செய்ய வேண்டும். அரசியல் விவாதங்களில் இந்த மக்களின் தேர்தல் பங்களிப்புப் பற்றி எடுத்துக்கூறப்படுவதில்லை. அல்லது திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.
இந்நாட்டிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். புள்ளி விபரத் திணைக்களத்தின் சனத்தொகை தகவல் நூலின் இனத்தொகுதி புள்ளி விபரத்தில் முதலாவதாக சிங்களவர்களும் இரண்டாவதாக இலங்கைத் தமிழரும் மூன்றாவதாக இந்தியத்தமிழரும் பதிவு செய்யப்பட்டுள்ளதை அனைவரும் அறிந்து கொள்ளல் அவசியமாகும். சிங்கள, ஆங்கில மொழி மூலமான அரசியல் விவாதங்களில் மலையக சமூகத்தின் தேவைகள் பற்றி விவாதிப்பது காலத்தின் கட்டாயமாகும். வெகுஜன ஊடக நெரிசலுக்குள் மலையக சமூகம் ஆழமாய் ஊடுருவிச் செல்ல வேண்டியுள்ளது.
மலையக சமூகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவே புரட்சிகரமான வகையில் வாக்களித்தனர். இதை சகோதர பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் உணர வேண்டும். சமத்துவ உரிமைக்காக போராடும் இச் சமூகம் ஜனநாயகத்திற்கு எதிரான சமூகமல்ல. இச்சமூகம் ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள் இந்தச் சமூகத்தை கௌரவப்படுத்துதல் அனைவரினதும் கடமையாகும். பல்லினச் சமூகங்களில் ஒரு சமூகம் ஏனைய சமூகம் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாற வேண்டும். இத்தேர்தல் மூலமாக மலையக சமூகம் மலையக அரசியல் பாரம்பரியத்தையே உடைத்தெறிந்து விட்டது. மலையக சமூகத்தின் உரிமைகளுக்காக அவர்களின் தியாகத்திற்காக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இதுவே இன்றைய தேவையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...