தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐந்து தமிழ் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனூடாக தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலும் மலையகத்திலும் பல காலமாக தொடர்ந்து நிலவி வரும் பிரச்சினைகள், குறைபாடுகள் என்பவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்பது தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம், மீள்குடியேற்றம் – புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாக கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வேலாயுதம் மற்
றும் பிரதி அமைச்சராக மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு சேவையாற்றக்கூடிய புதிய அமைச்சுக்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு செயற்பட்டு வந்தபோது அந்த அமைச்சின் மூலம் மலையக பகுதிகளில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை. தோட்டப்பகுதி வீதிகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பனவும் அபிவிருத்தி செய்யப்படாமல் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் அதிகளவிலான சேவைகள் செய்யக்கூடியதாக இருந்த போதிலும் அதுபற்றி அப்போது அக்கறை காட்டப்படவில்லையென்றே கூறப்படுகின்றது.
தற்போது புதிய அரசாங்கத்தின் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பழனி திகாம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மலையக மக்களுக்கு அதிக சேவையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மலையக வீடமைப்பு திட்டம் தோட்ட வீதிகள் மூடப்பட்டுள்ள தோட்ட தபால்நிலையங்கள் மற்றும் கலாசார மண்டபங்கள் என்பவை திறக்கப்படுவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு பொது வசதிகள் உட்பட தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தினால் இந்து கலாசார அமைச்சு ஓரங்கட்டப்பட்டிருந்தது. தற்போது அந்த அமைச்சுக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம் இந்து சமய விவகார அமைச்சராக டி.எம். சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தில் இந்து கலாசார அமைச்சு இல்லாத நிலையில் இந்து கலாசாரம் தொடர்பான செயற்பாடுகள் இந்து கலாசார திணைக்களத்திடம் வழங்கப்பட்டிருந்தன. இந்து கலாசார திணைக்களத்தினூடாக மலையக பகுதிகளுக்கு போதிய சேவைகள் கிடைக்கவில்லையென்றே கூறப்படுகின்றது. குறிப்பாக தோட்ட பகுதிகளில் ஆலயங்கள் கட்டப்பட்டு பாதியில் இடை நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அறநெறி பாடசாலைகள் சரியாக இயங்குவதில்லை. கடந்த சில காலமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மாற்று மதத்தை தழுவி வருகின்றமையை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்தோடு தோட்டப்பகுதிகளில் உள்ள ஆலயங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இந்து சமய வளர்ச்சி மற்றும் கலாசாரங்கள் என்பன நத்தை வேகத்திலேயே சென்று கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க கல்வி அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்களையும் கொண்ட தமிழ் தேசிய பாடசாலை இல்லாதது இம்மாவட்டத்தில் பெரும் குறைபாடாகவே காணப்படுகின்றது. இதற்கு எந்தவொரு அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வளங்கள் கொண்ட தேசிய பாடசாலை ஒன்றை அமைத்து தருவதாக மலையகத் தலைவர்கள் தமிழ் மக்களிடம் உறுதியளித்திருந்தனர். அதன் காரணத்திலேயே இரத்தினபுரி மாவட்ட மக்கள் தமிழர் ஒருவரை வெற்றி பெறச் செய்தார்கள்.
சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் முடிவடைந்து தற்போது இரண்டு வருடத்திற்கும் மேல் கடந்த நிலையில் இன்னும் இரத்தினபுரியில் தேசிய பாடசாலை அமைப்பதற்கு காணியை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் அதை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும். இவ்வாறு வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியபடியால் மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே புதிய கல்வி அமைச்சர் இரத்தினபுரி மாவட்டத்திற்கு தேசிய பாடசாலை ஒன்றை நிறுவுவது உட்பட கல்வி வளர்ச்சி சிறந்த பங்காற்றுவார் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
பெருந்தோட்டத்துறையில் சிறந்த அனுபவம் வாய்ந்த ஒருவரான வேலாயுதத்துக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு வழங்கப்பட்டுள்ளமை பொருத்தமானதாகும். மலையக மக்கள் ஆண்டாண்டு காலமாக தேயிலை மற்றும் இறப்பர் போன்ற துறைகளிலேயே தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். தோட்ட தொழிலாளர்களுடைய தொழில் பொருளாதார அபிவிருத்தி வேலைவாய்ப்பு சமூக அபிவிருத்தி போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவரது கடமையாகும்.
நாட்டில் வாழும் சகல பெண்களுக்காகவும் குரல் கொடுக்க பாராளுமன்றத்தில் பெண் அமைச்சர் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தி பெண்கள் மத்தியில் வரவேற்பினைப் பெற்றுள்ளது. மகளிர் விவகார அமைச்சின் மூலம் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழும் பெண்களுக்கான உரிமைகள் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் தொழில்வாய்ப்பு உட்பட உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்கள் மீதான அடக்கு முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...