Headlines News :
முகப்பு » , » ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம் - லெனின் மதிவானம்

ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம் - லெனின் மதிவானம்எதிர்வரும் செப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் 'சி.வி. சில சிந்தனைகள';;; என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வௌ;வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.
ஸி.வி.யின் சமூக முக்கியத்துவத்தையும் மலையக இலக்கிய கதியில் அவரது ஆக்கங்கள் செலுத்தும் பாதிப்பினையும் கொண்டு நோக்குகின்ற போது ஸி.வி. பற்றிய தேடல் வளர் நிலையிலேயே உள்ளதாக தோன்றுகின்றது. ஸி.வி. ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா எனப் பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டவர். அவரது நூற்றாண்டு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்காக ஹட்டனிலே ஸி.வி. நூற்றாண்டு நினைவுக் குழு நியமிக்கப்பட்டு சில முன்னோடி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தருணத்தில் ஸி. வி. பொறுத்து செய்யக் கூடிய விடயங்கள் சிலவற்றை கவனத்திலெடுத்தல் அவசியமானதாகும்.

ஸி.வி.யை நாம் புரிந்து கொள்வதற்கும் ஆராய்ச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், குறிப்புக்கள்;, நூல்வடிவம் பெறாத கட்டுரைகள், ஆக்கப் படைப்புக்கள், வரைந்த கேலிச் சித்திரங்கள் இதுவரை முறையாகக் கிடைக்கவில்லை. சில ஆவணங்கள் மல்லியப்பு சந்தி திலகரிடமும் சுப்பையா இராஜசேகரிடமும் இருப்பதை பார்வையிடக் கூடியதாக இருந்ததில் மகிழ்ச்சி. அவர் 'சாக்குக்காரன'; என்ற சிறுகதையை எழுதியிருப்பதாக 'தாக்கம்' இதழில் ஸி.எஸ்.காந்தி குறிப்பிட்டிருக்கின்றார். வீரகேசரியில் வெளிவந்த அக்கதை திரு.அந்தனி ஜீவா சேகரித்து வைத்திருப்பதாக என்னிடம் கூறியிருக்கின்றார். அவ்வகையில் அவரது அனைத்து படைப்புகளையும் தொகுத்த அடக்கத் தொகுப்பொன்று வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாகும். ஸி.வி.யின் சிலநூல்கள் அச்சுறுப்பெற்றுள்ளன. இவ்வாறு வெளிவந்த நூல்களையும் இப்போது பெற முடியாதுள்ளது. மேலும் இது தொடர்பான தகவல் தெரிந்தவர்களைத் தேடியறிவதும் சிரமமாக உள்ளது. அவர்களில் சிலர் இன்று மறைந்து விட்டமை இன்னொரு துரதிஸ்டவசமான நிகழ்வாகும்.


 இவ்விடத்தில் முக்கியமானதொரு விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஸி.வி. இறந்த பின்னரே அவரது ஆக்கங்களிற் சில நூலுருவம் பெற்றன. அவர் தமது நூல்களை மீள்நோக்கி சீராக வெளியிடும் வாய்ப்பு அவருக்கிருக்கவில்லை. அன்னார் வாழ்ந்த காலத்தில் மலையக படைப்புகளின் வெளியீட்டு வசதி மிகக் குறைவாகவே காணப்பட்டன. அத்துடன், ஸி.வி. ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் தமிழில் மொழிமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட இடர்பாடுகள் - மயக்கங்கள் கவனத்தில்கொள்ளத்தக்கவை. உதாரணமாக 'In Ceylon Tea Garden'என்ற கவிதைத் தொகுப்பை சக்தி பால ஐயா இலங்கைத் 'தேயிலைத் தோட்டத்திலே' என மொழிமாற்றம் செய்தாக கூறப்படுகின்றது. சக்தி பால ஜயாவின் நூலில் சி.வி.யின் கவிதைகளில் காணப்பட்ட இயல்பான மண்வாசனைப் பண்பும் அவற்றோடு இணைந்த சொற்களும் காணப்படவில்லை. சக்தி பால ஜயாவின் கவிதைத் தொகுப்பினை மொழிபெயர்ப்;பு என்று கூறுவதை விட தழுவல் எனக் கூறுவதே பொருந்தும் (இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபோது, சி.வி.யின் படைப்பின் தாக்கத்தினால் தனது ஆக்கம் வெளிப்பட்டதேயன்றி மொழிபெயர்ப்பென தாம் குறிப்பிடப்படவில்லை என்று சக்தி பால ஜயாவின் தனிப்பட்டவகையிலும் சில கூட்டங்களிலும் கூறியதை கேட்டிருக்கின்றேன்). சி.வி. அவர்கள் அரசியல்வாதியாக, தொழிற்சங்கவாதியாக இருந்தவர். இலக்கியத் தளத்தில் மட்டுமே இயங்கியவரான சக்தி பால ஐயா இத்தகைய உணர்வுகளை எவ்வாறு எதிர் கொண்டார் என்பதும் சுவாரசியமானதோர் வினாதான்; (லெனின் மதிவானம்- 2010).

 புதிதாய்க் கண்டெடுக்கப்படும் ஸி.வி.யின் படைப்புகள் தக்கபடி பரிசோதிக்கப்பட்டும், அவற்றின் நம்பகத் தன்மை ஐயத்திற்கிடமின்றி நிறுவப்பட்டும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும். வரலாற்றுச் சுருக்கங்கள், குறிப்புரைகள், சில முக்கிய தகவல்கள் என்றவகையில், சில தகவல்கள், பயனுள்ள சங்கதிகளையும், செய்திகளையும்; தொகுத்தளித்தல் வேண்டப்படுவதாகும். இவ்விடத்தில் பிறிதொரு முக்கிய விடயம் பற்றிச் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. ‘ பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் சி. வை. தாமோதிரம்பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் முதலியோருக்கே பழந்தமிழ் நூல்கள் சிலவற்றின் பெயர்கள் சரிவரத் தெரியாத நிலையிலே, சில தமிழ் ‘ஆர்வலர்கள்’ வினோதமான பெயர்களுடன் சிலபல ‘ பழந் தமிழ்’ நூற் பிரதிகளைப் பற்றிப் பேசலாயினர். உதாரணமாக த.மு. சொர்ணம்பிள்ளை என்பவர் ‘இன்னிலை’, ‘ஊசிமுறி’ முதலிய நூல்களைத் தாமே இயற்றிப் பழந்தமிழ் நூல்கள் எனப் பறைசாற்றினார். பிற்பட்ட ஆராய்ச்சிகளினால் இப்பொய்மை ஐயத்திற்கிடமின்றி அம்பலப்படுத்தப்பட்டதெனினும், இலக்கிய உலகிலே சிலகாலம் குழப்பத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியது என்பதில் ஐயமில்லை. (கைலாசபதி.க. 1974, இலக்கிய சிந்தனை). முந்திய பதிப்புகள் மாத்திரமன்றி கையெழுத்துப் பிரதிகள் வெளிவந்த பத்திரிக்கைகள், பிரதிகள், மேற்கோள்கள்இ எடுத்தாண்டோர் படங்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து கூட்டு முயற்சியால் வெளியிடத் தக்கவையாகும்.'ஸி.வி. பதிப்புக் குழு’ ஒன்றினை அமைத்தல் காலத்தின் தேவையாகும். தனியொருவரின் முயற்சியை விட கூட்டு முயற்சி பயன்மிக்கதாகவும் பணியை இலகுபடுத்துவதாகவும் அமையும். இத்துறைச் சார்ந்த அறிஞர்களையும் ஆர்வலர்களையும் கொண்டு இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வது பயன்மிக்கதாக அமையும்.
அன்னாரின்; புனைப்பெயர்கள் பற்றிய ப+ரணமான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. கைலாசபதி, செ.கணேசலிங்கம் முதலானோரின் ஆக்கங்கள் வெளிவந்த பிரசுரங்கள், காலம், வெளியீட்டாளர்கள்- சில சமயங்களில் ஆக்கங்கள், நூல்கள் பற்றிய தகவல்களுடன் நூலகவியலாளர் என். செல்வராஜா தொகுத்துள்ளார். இவை சமூக ஆளுமைகள் பற்றிய ஆய்வுகளுக்குப் பெரிதும் உதவியுள்ளன. ஸி.வி உட்பட மலையக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் இவ்வாறு பட்டியற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவது அவசியமானதாகும்.

இதுவரை ஸி.வி. பொறுத்து வெளிவந்த ஆய்வுகளை நோக்குகின்ற போது அவற்றில் பல வழிப்பாட்டு முறையாகவே காணப்படுகின்றன. மலையக சமூகத்திற்கு அவரது பங்களிப்பு வெளிக்கொணரப்படவேண்டும் என்றவகையில்; அவர் பற்றி மறுவாசிப்பு அவசியம். அரசியல் பண்பாட்டுத் தளத்தில் அவரது செயற்பாடுகள் வியப்பை அளித்த போதினும் அவர் மீதான வழிபாட்டுணர்வுக்கு இடந்தராமல் விமர்சித்து விளக்குவதே சமூக பயன்மிக்க அம்சமாக காணப்படும். அதேசமயம் அன்னாரின் ஒவ்வொரு துறைசார்ந்த பங்களிப்புகளும் பண்முக நோக்கில் வெளிக் கொணரப்படல் அவசியமானதாகும். அவ்வாய்வுகள் பின்வரும் நான்கு நிலைகளில் இடம்பெற வேண்டும். முதலாவது, ஸி.வி.யை பல்துறைநோக்கில் அணுகி ஆராய்பவையாக இருத்தல் வேண்டும். சமூகவியல் நோக்கில் ஸி.வி.யின் சமூக முக்கியத்துவம் வரலாற்றுக் கதியில் அவரது சிந்தனைகளும், போதனைகளும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது குறித்து ஆராய்தல் இதன் பாற்படும். இரண்டாவது, ஸி.வி.யை பின்பற்றி எழுந்த மரபு அவரை பின்பற்றியும் அவரை மீறியும் எவ்வாறு வளர்ந்துள்ளது என்ற நோக்கில் ஆராயப்படல் வேண்டும். மூன்றாவது, வரலாற்றுப் பின்னணியில் ஸி.வி.யை மதிப்பிடுதல் முக்கியமானவையாகும். நான்காவதாக ஸி.வி. குறித்து வெளிவந்த ஆய்வுகள், மதிப்பீடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது பற்றியதாக இருத்தல் வேண்டும்.
இந்தவகையில் ஸி.வி.யின் நூற்றாண்டு நிறைவு நினைவையொட்டிய செயற்பாடுகள், கருத்தரங்குகள், வெளியீடுகள், கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஸி.வி. என்ற பெருமகனுக்காக நாம் செய்யும் நன்றிக் கடனாகும்.  

நன்றி - ஜீவநதி (ஆகஸ்ட்)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates