இலங்கையிலுள்ள ஏனைய நகரங்களை விட மலையக நகரங்களில் சாராய தவறணைகள், கள்ளுக்கடைகள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
மலையக தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகின்றது. இதை மலையகத்தில் காணப்படும் அளவுக்கதிகமான மதுக் கடைகள் நிரூபிக்கின்றன என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரச அனுமதி பெற்ற மதுபானக் கடைகளுடன் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் கசிப்பு, சீனி கரிஞ்சான், எமரஜன் போன்ற மது வகைகளும் மலையக தோட்டங்களில் பிரபல்யமடைந்துள்ளன. இவற்றை தோட்டங்களிலுள்ள சிலரும் தோட்டங்களுக்கு அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்த சிலரும் தயாரிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு இவர்கள் தாம் தயாரிக்கும் மது வகைகளை கடனுக்கு வழங்குவார்கள். சரியாக சம்பள தினத்தன்று சம்பளம் வழங்கும் இடத்திற்கு வந்து அதை மொத்தமாக வசூலித்து விடுவார்கள்.
இது தோட்டங்களில் மட்டும் நடைபெறும் சம்பவங்கள் அல்ல. சில கிராமங்களிலும் இடம்பெறுகின்றன. ஆனால் கிராமத்தவர்களுக்கு மது வகைகள் கடனுக்கு வழங்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு மாதசம்பளம் கிடைப்பதில்லை.
மலையகம் வறுமையில் வாடுகின்றது, மலையக தோட்டத்தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையானதால்தான் இந்த வறுமை அவர்களை பீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எல்லாத் தோட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. இருந்தாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் குறிப்பாக ஆண்கள் மதுவருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.
வறுமை காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், குறிப்பாக சிறுமிகள் நகரங்களிலுள்ள தனவந்தர்களின் வீடுகளில் பிள்ளைகளை பராமரிப்பதற்கும் வீட்டுவேலைகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். சிறுவர்கள் நகரிலுள்ள கடைகளிலும் நடைபாதை வர்த்தகர்களின் உதவியாளர்களாகவும் தொழில் புரிகின்றனர். இது மட்டுமல்ல, கடந்த சில வருடங்களாக தோட்டங்களிலுள்ள பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வதும் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவை அனைத்திற்கும் மலையக மக்களின் வறுமையே காரணமாகும்.
நாம் முகம் கொடுக்கும் எந்தவொரு பிரச்சினைக்கும் காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை தீர்த்துக்கொள்ள முடியும். காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கும் பொறுமை வேண்டும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மது மருந்தாக அமையாது. மலையகத் தோட்டங்களில் ஏற்படும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு மூலகாரணம் மது பாவனையே என்பது மலையக புத்திஜீவிகளின் கருத்தாகும்.
இன்று மலையகம் கல்வித்துறையில் முன்னேறி வருகின்றது. பல கல்விமான்கள் மலையகத்தில் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மலையகத் தோட்டங்களிலிருந்து உருவாகியுள்ளமை எமக்குப் பெருமையளிக்கும் விடயமாகும். இப்படியிருக்கும் போது தோட்டங்களில் மது பாவனை அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாக உள்ளது. தோட்டத்தில் வேலை நாட்கள் குறைந்துள்ள நிலையில், கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் மதுவுக்கு செலவிடுவதால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. பாடசாலைகளுக்குச் செல்லும் பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து இடைநிறுத்தி வீட்டு வேலைகளுக்காக நகரங்களிலுள்ள வீடுகளுக்கு அனுப்பும் சம்பவங்கள் பல சமீபத்தில் இடம்பெற்றுள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர் கண்டி அக்குறனை பிரதேசத்திலுள்ள தனவந்தர் வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய 14 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கந்தானை பிரதேசத்திலுள்ள பொலிஸ் அதிகாரியொருவரின் வீடொன்றில் கடமையாற்றிய சிறுமியொருவர் அந்த அதிகாரியின் பாலியல் சில்மிஷத்தை பொறுக்க முடியாமல் அழுதபடி அந்த அதிகாரியின் வாகனத்தில் செல்லும் போது அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சிறுமி பொலிஸாரால் காப்பாற்றப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சிறுமி பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த போதே பாடசாலையிலிருந்து இடை நிறுத்தி இந்த பொலிஸ் அதிகாரியின் வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த இரு சிறுமிகளும் மலையகத்தை சேர்ந்தவர்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.
இந்தக் குடும்பங்களின் வறுமைக்கு காரணம் என்ன? பெற்றோர் தோட்டத்தில் கடமையாற்றுகின்றனர். பிள்ளைகள் அரசாங்க பாடசாலைகளில் இலவசமாகக் கல்வி கற்கின்றனர். பாடசாலை சீருடை, பாடப்புத்தகங்கள் அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்காக ஒரு சிறு தொகையையே செலவிட வேண்டியுள்ளது. அது கொப்பிகளுக்கும் , போக்குவரத்துக்காகவுமேயாகும். பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மதுவுக்கு அடிமையாகியிருப்பதே பிள்ளைகளின் எதிர்காலம் சூனியமாவதற்கு காரணமாகும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
தோட்டங்களில் மதுவருந்துவதை தடுக்க வேண்டிய தோட்டத்துறை தொழிற்சங்கங்களும் மலையக அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்கள் மதுவருந்தும் பழக்கத்தை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத்தான் விரும்புகின்றனர்.
தங்களது தொழிற்சங்கத்துக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள ஆரம்பத்தில் மதுவை வழங்கினர். இன்று மலையகக் கட்சிகள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள மதுவை தோட்டத் தொழிலாளர்களுக்கு லஞ்சமாக வழங்குவதை பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.
பாராளுமன்றத் தேர்தல் முதல் மாகாண சபைத் தேர்தல்கள் வரை மலையக அரசியல் கட்சிகள், தோட்டங்களுக்கு பெட்டி பெட்டியாக சாராய போத்தல்களை விநியோகித்து வருகின்றன. இதற்கேற்றாற் போல மலையக நகரங்களிலுள்ள பெருந்தொகையான சாராயத் தவறணைகளில் பல இந்த அரசியல்வாதிகளுக்கு சொந்தமாகவுள்ளதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.
சில வருடங்களுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது மாகாண சபை வேட்பாளர் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களின் மதுவருந்தும் பலவீனத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இவருக்கு அந்த மாகாணத்தில் பல சாராய தவறணைகள் இருந்தன. அவர் தோட்டங்களிலுள்ள ஆண் தொழிலாளர்களுக்கு புதுவிதமாக மதுவை வழங்கினார். அவர் வாக்கு கேட்கச் செல்லும் தோட்டங்களிலுள்ள தொழிலாளர்களுக்கு சாராய கூப்பன்களை விநியோகித்தார். அந்தக் கூப்பன்கள் மூலம் அந்த வேட்பாளர்களுக்கு சொந்தமான சாராய தவறணைகளில் ஒரு குறிப்பிட்டளவு மதுவை இலவசமாவே அருந்தலாம்.வாக்குக்கு மாற்றீடாக மது வழங்கும் கைங்கரியத்தை ஆரம்பித்து வைத்த "பெருமை" இந்த வேட்பாளரையே சாரும். இவரது சாதனை வீண்போகவில்லை. நினைத்ததை சாதித்துக் கொண்டார். இவரது சாதனையை பலர் இப்போது பின்பற்றத் தொடங்கி விட்டனர். தேர்தல் காலங்களில் சாராயமும், சட்டவிரோத மதுபானங்களும் மலையகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.மதுபானக் கடையை அகற்றுமாறு வட்டவளை ரொசல்ல மக்கள் கடந்த 13 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். தோட்டப் பெண்கள் கொழுந்து கூடைகளுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் பௌத்த மதகுருமார் உட்பட கிராம மக்களும் இணைந்து கொண்டனர்.
மலையக மக்கள் மது அரக்கனின் கோரப்பிடியால் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். மலையகப் பெண்களும் பிள்ளைகளுமே மதுவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் மது அரக்கனை எதிர்த்துப் போராடுமளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இதனால் தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் எதிர்காலத்தில் மலையகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறக்கூடும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...