Headlines News :
முகப்பு » » தொழிலாளர்களின் காணி ,வீடு விவகாரம் ஊவா தேர்தல் மேடைகளில் எதிரொலிக்காதது ஏன்?

தொழிலாளர்களின் காணி ,வீடு விவகாரம் ஊவா தேர்தல் மேடைகளில் எதிரொலிக்காதது ஏன்?


தொழிலாளர்களின் குடியிருப்பு மற்றும் காணி விவகாரங்கள் தொ டர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் மு.சிவலிங்கம் அவர்களின் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்களால் காணி உறுதி என்ற பெயரில் வழங்கப்பட்ட எந்த விதமான உரித்துடைமையும் இல்லாத கடதாசி பத்திரங்களும் நினைவில் இல்லாமலில்லை. ஆனால் கடந்த காலங்களில் இவ்வாறு மலையக மக்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களில் பல கோடி கமிஷன் அடித்த தமிழ் பிரதிநிதிகளை ஏன் மு.சிவலிங்கம் அவர்கள் சுட்டிக்காட்டாமல் போனாரோ தெரியவில்லை. சில வேளைகளில் சமூகத்தை காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற நல்ல எண்ணமோ? காரணம் ஆட்சியை பிடிப்பதற்காக பல பல்டிகளை அடிப்பதும் வாக்குறுதிகள் என்ற பெயரில் அருமையான வசனங்களை கோர்த்து பொய்களை அவிழ்த்து விடுவதும் தேசிய கட்சி தலைவர்களுக்கு வாடிக்கையான ஒரு விடயம் தான். ஆனால் சமூகத்திற்காக இருக்கிறேன் ,சாகிறேன் என்று மார்தட்டிக்கொண்டு வாகனங்களில் சர் சர்ரென்று போய் கொண்டிருப்போர் இவ்வாறு சொல்லவும் முடியாது, வாக்குறுதிகள் அளிக்கவும் முடியாது. ஏனெனில் இவர்கள் பதில் கூற கடமை பட்டுள்ளவர்கள். ஆனாலும் தொழிலாளர்களின் வீடு மற்றும் காணி உரிமை தொடர்பில் இது வரை இவர்கள் வாய் திறக்காமலிருப்பதை பார்த்தால் இவர்களை எந்த வகை அரசியல்வாதிகளுக்குள் அடக்குவது என்பது தெரியவில்லை. ரணில் தலைநகரிலிருந்து வந்து அக்கறையோடு தொழிலாளர்களுக்கு மலசல கூடங்கள் இல்லை என்று கவலைப்பட்டு சென்றார். ஆனால் தினந்தோறும் மலசல கூடங்கள் இல்லாத குடியிருப்புகளை கடந்து செல்லும் மலையக மக்கள் தெரிவு செய்த பிரதிநிதிகள் மௌனமாகத்தானே இருக்கின்றார்கள்? 

தேர்தல் காலமும் வாக்குறுதிகளும்
தேர்தல் காலங்களில் வழங்கப்படும் எந்த வாக்குறுதிகளும் நூற்றுக்கு நூறு வீதம் நிறைவேற்றப்படுவதில்லை என்பது இலங்கையைப்பொறுத்த வரை எழுதப்படாத சட்டம். மலைய மக்கள் தொடர்பில் ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளே நிறைவேறாமல் இருக்கும் போது பிரதிநிதிகளின் வாக்குறுதிகள் எப்படி நிறைவேறும்? ஆனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் போது "தேர்தல் காலங்களில் டிமாண்ட் பண்ணுவோம் , ஒன்னுக்கும் கவலைப்படாதிங்க " என்று சாமளிப்புகளை மட்டும் சொல்லி விட்டு பிரதிநிதிகள் தமது டிமாண்டுகளை மட்டும் தான் பேசுவார்களே ஒழிய மக்களின் பிரச்சினைகள் அங்கு பேசப்படுவதில்லை. அப்படி பேசியிருந்தால் 150 வருடங்களாக காணி ,வீடு உரிமையில்லாது இந்த மக்கள் இருந்திருப்பார்களா? 

ஊவா தேர்தலும் டிமாண்ட்களும்
தற்போது ஊவா மாகாண தேர்தல் களை கட்டியிருக்கிறது. பதுளை மாவட்ட பிரதிநிதித்துவ குறைப்பானது சிறுபான்மை பிரதிநிதித்துவத்திற்குதான் ஆப்பு வைத்துள்ளது. இதை தேர்தல் முடிந்து பெறுபேறுகள் வரும்போது அனைவரும் உணர்வர். ஆனால் இந்த தேர்தல் மேடைகளில் இது வரையில் குறித்த தொழிலாளர் காணி ,வீடு பிரச்சினைப்பற்றி எவராவது கதைத்தாக செய்திகள் வரவில்லை. அட்டன் நகரில் மலசல கூடங்களைப்பற்றி கதைத்த எதிர்கட்சித்தலைவர் ஊவா தேர்தல் மேடைகளில் இது பற்றி கதைப்பாரா? சில வேளைகளில் கதைக்கக்கூடும் காரணம் எதிர்கட்சியின் பணி அது. அதிருக்கட்டும் காலம் காலமாக மாறி மாறி ஆட்சியமைத்த அரசாங்கங்களிலேயே அங்கம் வகித்து வரும் ( இதற்கு அவர்கள் கூறும் காரணம் மக்கள் நலனுக்காகவாம்) மலையக பிரதிநிதிகள் அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது இது குறித்து கதைக்க ஆயத்தமா? ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்தோட்டப்பகுதிகளுக்கு தற்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் உலாவரத்தொடங்கியுள்ளன. போதாததற்கு சிலர் பெரிய பங்களாக்களை வாங்கிப்போட்டு இரவிரவாக டிஸ்கசன் செய்து இந்த தேர்தலில் எப்படி வெற்றி பெறலாம் என்ற உபாயங்களை ஒரு புறம் வகுத்து வருகின்றனர். ஆனால் என்ன டிமாண்ட்டுகளை வைத்து ஆளுந்தரப்பிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் மறந்தும் செய்து விட மாட்டார்கள், காரணம் இது இவர்கள் இனி ஐந்து வருடங்களுக்குப்பெற்றுக்கொள்ளப்போகும் அனுகூலங்களுக்கான முதலீடாயிற்றே? ஆகவே வேறு பட்டு நிற்கும் கட்சிகள் தொழிற்சங்கங்கள் கூட இந்த விடயத்தில் மிக ஒற்றுமையாக காய்களை நகர்த்துகின்றனர். ஆனால் எதிர்கட்சியினர் கூட இன்னும் இவ்விடயத்தை ஆரம்பிக்க வில்லை. சில நேரங்களில் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கக்கூடும்.

ஒரே நாடு இவர்களுக்கு மட்டும் ஏன் புறக்கணிப்பு?
ஆரம்பத்தில் சிறுபான்மை என்றார்கள், பின்பு கள்ளத்தோணிகள் என்று பரிகாசித்தார்கள், நாடற்றவர்கள் என ஒரு தொகையினரை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். எல்லாம் முடிவுக்கு வந்து பிரஜா உரிமையும் கிடைத்தது. தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை பெற்று ஜனநாயக ரீதியான அந்தஸ்த்தைப்பெற்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் கிடைக்க வேண்டிய சகலதும் இந்த மக்களுக்குக்கிடைத்துள்ளது (காணி ,வீட்டு உரிமையைத் தவிர) ஆனால் உலகத்தில் வேறு எந்த இனக்குழுமமும் இப்படியான நிலைமையில் இல்லை என்பது வேதனைக்குரியது. ஒரே நாட்டில் வாழ்ந்து வரும் பல்லின இனக்குழுமங்களுக்கு இப்படியான வகையில் பாரபட்சம் காட்டினால் முரண்பாடுகளை எப்படி தீர்க்க முடியும்? சுமார் ௧௧௮ மொழிகள் பேசப்படும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கூட எந்த இனக்குழுக்களுக்கும் இப்படியான நிலைமை இல்லை. அங்கு சிறுபான்மை இனத்தவர் அதிகாரமிக்க பிரதமர் பதவியில் அமரலாம், கௌரவமிக்க ஜனாதிபதியாகலாம். அது தான் ஜனநாயகம். ஆனால் இலங்கையில் மலையக மக்களுக்கு நடப்பது என்ன? காணி வீட்டுரிமை தொடர்பில் பல்வேறு சிவில் அமைப்புகள் மட்டுமே இத்தனை காலமும் குரல் எழுப்பி வந்திருக்கின்றன. சொல்லப்போனால் எதிர்கட்சி வரிசையில் அமரும் போது மட்டுமே மலையக பிரதிநிதிகளுக்கு மலையக மக்களின் பிரச்சினைகள் தெரியவரும் .ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுவார்கள். ஆனால் நடப்பது ஒன்றுமில்லை. சரி எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலுக்கு இன்னமும் ௧௭ நாட்கள் இருக்கின்றன. பார்ப்போம் மலையக மக்களின் வீடு ,காணி உரிமை பற்றி மறந்தேனும் எவரும் வாய்திறக்கிறார்களா என்று.

(03-09-14) சூரியகாந்தியில் விக்ரமிசிங்கபுரத்தான் எழுதிய ஆக்கம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates