பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமாா் அவா்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நோ்காணல்.
1.கேள்வி – ஆட்சியுரிமை சட்ட மூலத்தின்படி வழக்குத் தொடர வழங்கப்பட்டுள்ள ஒரு வருட கால அவகாசத்தை 6 மாதங்களாக குறைக்கும்படி நீங்கள் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தது ஏன்?
இந்தக் கேள்விக்கு நான் பாராளுமன்றத்தில் ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் chandrakumar-180814தொடர்பான விவாதத்திலே தெரிவித்திருந்த விடயத்தை இங்கே நினைவுபடுத்துவது நல்லதென்று கருதுகிறேன். இச்சட்டமூலத்தினூடாக 12 மாதங்களோ அல்லது அதற்கும் கூடுதலாகவோ கால அவகாசம் வழங்கும்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் 3,101 குடும்பங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,300 குடும்பங்களும் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளன. இக்குடும்பங்களில் கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ், வீடுகளைப் பெறுவதற்குப் பயனாளிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் காணி உரிமம் அற்றவர்கள் என்று இனங்காணப்பட்டுள்ளமையினால், அந்த வீட்டுத் திட்டத்தினூடாகவும் ஒரு வீட்டைப் பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலைமையில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். எனவேதான் இந்தச் சட்டமூலத்தில் வழங்கப்படும் கால அவகாசத்தை ஆறு மாதங்களாக நிர்ணயிக்குமாறு கேட்கிறேன்.
ஏனென்றால், இந்தக் குடும்பங்கள் கடந்த 30 – 35 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்ற காணிகள், 1970களில் ஆட்சியிலிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வகுப்புத்திட்டம், படித்த வாலிபர் திட்டம், படித்த மகளிர் திட்டம் போன்ற பல்வேறு விசேட திட்டங்களுக்கூடாக வழங்கப்பட்டவை. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்தான் காணிகள் இப்படி வழங்கப்பட்டது. இதில் பெரும்பாலும் அரச உத்தியோகத்தர்கள்தான் அந்தத் திட்டங்களினூடாக அன்று காணிகளைப் பெற்றிருந்தார்கள். அவை சிறிய காணிகள் அல்ல! 10 ஏக்கர் மேட்டு நிலம், 10 ஏக்கர் வயல் காணிகள் என்ற அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டன. அன்றைய அரசு ஏன் இந்தக் காணிகளை வழங்கியது என்றால் இந்தக் காணிகளை அபிவிருத்தி செய்து, நாட்டின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்து, அபிவிருத்தியின் பங்காளர்களாக வேண்டும் காரணத்துக்காகத்தான். ஆனால், அன்று காணிகளைப் பெற்ற பலர் அந்தக் காணிகளைப் பயன்படுத்தவில்லை.
ஏனென்றால், அவர்கள் வேறுகாணிகளின் உடைமையாளர்களாக அல்லது வசதி படைத்தவர்களாக இருந்த நிலையிலேயே அந்த திட்டங்களுக்கூடாகவும் காணிகளைப் பெற்றிருந்தார்கள். பலர் அந்தக் காணிகளைச் சென்று பார்க்காமலேயே அவற்றை விட்டுவிட்டுப் போய் விட்டார்கள். இந்நிலையில் 1977 மற்றும் 1983 இனக்கலவரங்களின்போது மலையகத்திலிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள் இந்தக் காணிகளைத் துப்பரவு செய்து அதில் குடியேறினார்கள். இப்போது அவர்களின் குடும்பங்கள் ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டன. இவர்கள் அனைவரும் இன்று காணி உரிமைத்துக்காகவும் வீட்டுத் திட்டத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதேவேளை இந்த காணிகளின் உரிமையாளர்களில் 90 சதவீதமானவர்கள் இன்றுவரை – யுத்தம் முடிந்து 5 வருடங்களாகியும்கூட – இந்தக் காணிகளுக்கு உரிமை கோரவில்லை. ஏனென்றால், இவர்கள் அப்பொழுதும் இப்பொழுதும் வசதிபடைத்தவர்களாகவே உள்ளனர். அத்துடன், பலர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். காடுகளாக இருந்த இந்தக் காணிகளை வளப்படுத்தி நாட்டின் விவசாய உற்பத்தியில் பங்கு வகித்த இந்த மலையகத்திலிருந்து வந்த மக்களுக்கு இன்று காணி சொந்தமாக இல்லை. ஆனால், அதே காணியில்தான் இன்றும் அவர்கள் வாழ்கின்றார்கள். ஆகவே, இந்த விடயத்தை அனைத்துத்தரப்பினரும் நியாயமாகப் பார்க்க வேண்டும். அப்படியில்லையென்றால், இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மலையகத்திலிருந்த வந்த மக்கள் திட்டமிட்டுப்புறக்கணிக்கப்படுவதாக அண்மையில் வடக்கு மாகாணசபையின் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். உண்மையான பிரச்சினை இந்த மக்கள் காணி உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதேயாகும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆனால், அன்று இந்தக் காணிகளைப் பெற்றவர்கள் இந்த நாட்டின் உற்பத்தியில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பது மட்டுமல்ல, யுத்தத்துக்குப் பின்பு காணிச் சந்தையிலே காணி விலை பல மடங்கு பெருகியிருக்கின்ற நிலையில் இப்போது அந்தக் காணிகளில் இருப்பவர்களை விரட்டிவிட்டு அவற்றை விற்றுவிட்டு மீண்டும் வெளிநாடு செல்வதில்தான் அக்கறையாக இருக்கின்றார்கள். அப்படியான சில சம்பவங்கள் அங்கு நடந்துகொண்டிருக்கின்றன. எனவேதான் இந்தச் சட்டமூலத்தை ஆறுமாத கால அவகாசமுள்ளதாக மாற்றுங்கள் என்று இந்த மக்களின் சார்பாகக் கேட்கிறேன்.
இதேவேளை இந்தக் கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிருக்கிறார். இது இந்தக் காணி உரிமையாளர்களான – வசதிபடைத்தவர்களின் நலனை மட்டுமே குறியாகக் கொண்டதாகும். பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும், இதுவரைகாலமாக இன்னல்களைச் சந்தித்து வாழும் இந்தக் காணிகளில் குடியிருக்கும் ஏழைகளுக்கு எதிராக எடுக்கப்படும் நிலைப்பாடாகவும் இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் ஒரு விடயத்தைக் கவனிக்கலாம். முதலமைச்சர் சொல்கிறார், மலையக மக்கள் திட்டமிட்டுப்புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று. அதே கட்சியைச் சேர்ந்த இன்னொரு முக்கியஸ்தரான சுமந்திரன் சொல்கிறார், இந்த மக்களுடைய நலன்கள் முக்கியமானதல்ல, இந்த மண்ணை விட்டு வெளியேறிச் சென்றவர்களின் நலனே முக்கியமானது என்று. இதை நீங்களும் மக்களும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
கேள்வி – 1977 மற்றும் 1983 வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறிய இந்திய வம்சாவளி மலையக மக்கள் தாங்கள் வாழ்ந்த, பயிர் செய்த காணிகளை மீளப் பெற இந்த சட்ட மூலம் வழி செய்யாதா?
இல்லை. அதனால்தான் இந்தச் சட்டமூலத்தை நான் எதிர்ப்பதோடு அதில் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். பாராளுமன்றத்தில் இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் காணி உரிமம் கோருவதற்குத் தகமையாகத் திட்டங்களுக்கு ஊடாக வழங்கப்பட்ட இந்தக் காணிகளில் குடியிருப்பவர்கள் இந்தச் சட்ட வரம்புக்குள் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு சட்டத்திருத்தத்தை ஆட்சியுரிமைச் சட்டமூலத்தில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திப் பேசியிருந்தேன்.
1977 மற்றும் 1983 காலப்பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறிய இந்திய வம்சாவழி மலையக மக்கள், அந்தக் காலப்பகுதிகளில் சொந்தமாக காணிகள் வழங்கப்படாது இவ்வாறான திட்டக் காணிகளிலேயே குடியமர்த்தப்பட்டார்கள். இன்றுவரை இவர்கள் இந்தக்காணிகளில்தான் தொடர்ச்சியாகக் குடியிருந்து வருகின்றனர். ஆனால் உண்மையிலேயே அந்தக் காலப்பகுதிகளில் இந்த மக்களுக்கு அரச காணிகளைக் குடியிருப்பதற்காக பகிர்ந்தளித்திருக்க முடியும். இதனை அக்காலப் பகுதியில் இருந்த எவரும் செய்யவில்லை. இது அந்த மக்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சமாகும். அநீதியாகும்.
பெரும் நிலச் சொந்தக்காரர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்ட காடுகளாக இருந்த இந்தக் காணிகளை துப்பரவு செய்து வளப்படுத்தி பாதுகாப்பதற்காக இந்த மக்களை இந்தக் காணிகளில் குடியமர்த்தினார்கள். கிட்டத்தட்ட இற்றைக்கு 30 வருடங்களுக்கு மேலாக இந்தக் காணிகளில் குடியிருக்கும் மலையக வம்சாவழி மக்களே இந்தக் காணிகளை அபிவிருத்தி செய்து பெறுமதிமிக்க நிலமாக மாற்றியிருக்கிறார்கள்.
எந்த நோக்கத்திற்காக இந்தக் காணிகள் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்தை காணிகளைப் பெற்றவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் காணிகளில் குடியமர்த்தப்பட்ட மலையக வம்சாவழி மக்களே தேசிய உற்பத்திக்குப் பங்களிப்புச் செய்யும் வகையில் அந்தக்காணிகளை மாற்றியமைத்திருக்கிறார்கள். குடியிருப்புகளை உருவாக்கியுள்ளனர்.
யுத்தகாலத்திலும் கூட இந்த மக்கள் குடியிருப்பதற்கு என்று சொந்தமாக ஒரு துண்டு காணியேனும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. எனவே தற்போது அதிரடியாகக் கொண்டுவரப்படும் இந்தச் சட்டமூலமானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேற்படி காலப்பகுதிகளில் வந்து குடியேறி வாழ்ந்து வருகின்ற மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டுவிடும்.
எனவே இந்த சட்டமூலம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் குடியேறி இவ்வாறான காணிகளில் வசித்துவரும் இந்திய வம்சாவழி மலையக மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மையளிக்கப்போவதில்லை. முழுமையான அளவில் பாதிப்பையே தரும். ஆகவே நீண்ட காலமாக குடியிருக்கும் அந்த மக்களைப் பாதிக்காத வகையில் சட்டமூலம் அமையவேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.
கேள்வி – தற்பொழுது காணி உரிமை இல்லாது இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் வீடுகளை பெற முடியாத இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கு இந்திய வீடுகளை பெற மாற்றுத் திட்டத்தை அரசிடம் பேசி பெற்றுக் கொடுப்பீர்களா?
இது ஒரு கடினமான விடயம். மாற்றுத்திட்டங்களை இலகுவில் செயற்படுத்த முடியாது என்பதால்தான் நாங்கள் இந்த மக்களை அவர்கள் தற்போது குடியிருக்கின்ற காணிகளிலேயே வீட்டுத்திட்டத்தைப் பெறக் கூடியவகையில் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்று கூறுகின்றோம். ஏற்கனவே யுத்தத்தினாலும், இடம்பெயர்வுகளினாலும் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மேலும் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க முடியாது. அது நியாயமுமல்ல. இவ்வளவு குடும்பங்களுக்கும் புதிய காணிகளைத் தெரிவுசெய்து, வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதுடன், அவ்வாறு வழங்குவது நியாயமும் அல்ல. ஏனெனில், 30-35 வருடங்களாக இந்தக் காணிகளை வளப்படுத்தியவர்களை தூர இடங்களில் உள்ள காணிகளில் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. அது ஏற்புடையதுமல்ல. எனவே, தற்பொழுது அவர்கள் குடியிருக்கின்ற காணிகளுக்குள்ளேயே இதற்குத் தீர்வு காணப்படவேண்டும். இவ்வளவு தொகையான குடும்பங்களுக்கும் புதிய இடங்களைத் தெரிவ செய்து புதிதாக அந்த இடங்களில் குடியேற்றம் செய்வது இலகுவான காரியமும் அல்ல. அற்கேற்றவாறு மக்கள் வாழக்கூடிய காணிகளைத் தேர்ந்தெடுப்பதும் சாத்தியமானதல்ல.
எனவே இந்தக் காணிகளை அவற்றில் குடியிருக்கும் வறிய மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடியவிதத்தில் நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதே பொருத்தமானதாகும். இல்லையெனில் இந்த ஏழை மக்கள் மேலும் பல காலம் குடிசை வீடுகளில் அடிப்படை வசதியற்ற நிலையில்தான் வாழவேண்டியிருக்கும். காணி உரிமம் இல்லையென்றால் ஒரு மலசலகூடத்தைக் கூட இந்த மக்களுக்கு நிர்மாணித்துக்கொடுக்க முடியாது. மின்சாரத்தை இந்த மக்கள் பெறுவதற்கு வழியிருக்காது. எனவே மேலும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இவர்கள் வாழவேண்டியிருக்கும். எனவேதான் இந்த மக்களின் நியாயமான பிரச்சினையைக் கவனத்திற் கொண்டு, விசேட ஏற்பாட்டை இந்தச் சட்டமூலத்தில் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
கேள்வி – நீங்கள் கோரிக்கை விடுத்துள்ளதைப்போன்று இந்தச் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டு வரப்படாது, ஒரு ஆண்டுகால அவகாசமோ இரண்டு ஆண்டுகால அவகாசமோ காணி உரிமையாளர்களுக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் இந்த மக்களின் அடுத்த கட்ட நிலை எப்படி இருக்கும்?
வசதி படைத்தவர்கள் மீண்டும் இந்தக் காணிகளைப் பெற்றுக்கொள்வார்கள். செலவில்லாமல் நல்ல வளமான காணிகளாக அவர்களுக்கு இந்தக் காணிகள் கிடைக்கலாம். அதேவேளை காடாகக் கிடந்த காணிகளைக் கழனிகளாக்கி, நல்ல குடியிருப்புகளாக்கி, பயிர்வளர்த்துப் பாடுபட்ட மக்கள் நிலமற்றவர்களாக – நாதியற்றவர்களாக வெளியேறி வீதியில் நிற்கவேண்டிய நிலை ஏற்படும். இதனை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த மக்களிடம் இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு இவர்களைப் போராடத்தூண்டும். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட அனுபவத்தை உடைய மக்கள் இவர்கள். இந்த மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களும் அல்ல. ஏறக்குறைய 8,401 குடும்பங்கள் வரையில் உள்ளவர்கள். ஆகவே இந்த மக்களுக்கான நிவாரணத்தை, நீதி, நியாயத்தை அரசாங்கமும் அனைத்துத் தரப்பினரும் வழங்கியே ஆகவேண்டும்.
இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒரு கோரிக்கையை இந்தக்காணிகளை அரசாங்கத்திடமிருந்து முன்னர் பெற்றிருந்தவர்களிடம் விடுக்கிறேன். ‘இந்த மக்கள் புலம்பெயராமல், இந்த மண்ணிலிருந்து கொண்டு போராட்டத்தில் பங்கேற்றவர்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள். இன்னல்களைச் சந்தித்தவர்கள். இப்படியெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பல பாடுகளைச் சந்தித்த மக்களின் நிலையைக் கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு இந்தக் காணிகளை வழங்குங்கள். இப்படிச்செய்வதன்மூலமாக நீங்கள் இந்த மக்களின் வாழ்க்கையை ஈடேற்றுவதற்கு உதவுவதுடன் இந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பங்களித்தவர்களாகவும் இருப்பீர்கள்’ என்று.
என்னுடைய இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மக்களின் நிலையைக் கருத்திற்கொண்டு இந்த மக்களுக்கு உதவும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுமானால் 8400 க்கு மேற்பட்ட குடும்பங்களும் நல்லதோர் எதிர்காலத்தைப் பெறும்.
நன்றி - e-jaffna
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...