Headlines News :
முகப்பு » » பெருந்தோட்ட வீடமைப்பில் காலைவாரும் ஆட்சியாளர்கள் - துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட வீடமைப்பில் காலைவாரும் ஆட்சியாளர்கள் - துரைசாமி நடராஜா


வீடு என்பது தனியே வெயிலுக்கும் மழைக்குமான ஒரு ஒதுங்கிடம் அல்ல. அது சமூக நிறுவனமும் ஆகும். அங்கேதான் சமூக நாகரிகத்தின் அத்திபாரம் இடப்படுகின்றது என்கிறார் பேராசிரியர் மா.செ.மூக்கையா. வீடு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது. மக்களது வாழ்க்கைத் தரத்தினை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக வீடு இனம் காணப்பட்டிருக்கின்றது. உடல் நலத்திற்கும், மனத் திருப்திக்கும் வீடு உந்துசக்தியாக உள்ளது. இந்த வகையில் மலையக பெருந்தோட்ட மக்களின் வீட்டு நிலைமைகள் குறித்து நாம் சிந்திக்கின்றபோது திருப்திகொள்ள முடியாதிருப்பதும் தெரிந்த விடயமாகும்.

லயத்துச் சிறைக்குள் முடங்கிக் கிடக்கும் மலையக பெருந்தோட்ட மக்களின் இருப்பிட நிலைமைகள் குறித்து நீண்ட காலமாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இம்மக்களின் நலன் கருதி கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வீடமைப்பு திட்டங்களின் இலக்குகள் உரியவாறு எட்டப்படாமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தப்படும் வீடமைப்பு திட்டங்கள் சாதக விளைவுகளை உரியவாறு ஏற்படுத்தவில்லை. மந்தகதியிலான போக்குகளும் வீடமைப்பு தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

இதற்கிடையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு நவீன வசதிகளுடன் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதற்கேற்ப இந்த ஆண்டின் இறுதிக்குள் 855 தனிவீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாகவும் மேலும் தெரியவருகின்றது.

''லயம்'' என்ற சொல் மலையக மக்களின் வாழ்வில் கலந்ததொன்றாக உள்ளது. லயத்து வாழ்க்கையில் இருந்தும் மலையக மக்களை பிரித்தெடுத்து தனி வீட்டுக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் முயற்சிகள் அதிகமாகவே இடம்பெற்றுள்ளன. 1877இல் லயங்கள் நீண்ட கட்டடங்களாகவும் மூன்று மீற்றர் அகலமும் 3.65 மீற்றர் நீளமும் உள்ள அறைகளைக் கொண்டிருந்தன. அப்போது, விறாந்தையின் அகலம் 1.8 மீற்றராக இருந்தது. ஒற்றை லயன்கள், இணை லயன்கள் என்றவாறு பெருந்தோட்டங்களில் லயன்கள் அமைக்கப்பட்டன. 1981ஆம் ஆண்டில் 51.33 சதவீதமான இந்திய வம்சாவளி குடித்தனங்கள் ஒற்றை லயன்களில் வசித்துள்ளன. இதேவேளை, 26.35 சதவீதமான குடித்தனங்கள் இணை லயன்களில் வசித்துள்ளதாகவும் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. இதேவேளை, 1996ஆம் ஆண்டின் தகவல் ஒன்றின்படி பெருந்தோட்ட எல்லைக்குள் சுமார் இரண்டு இலட்சத்து 13 ஆயிரத்து 321 பழைய லயன் முறையைக் கொண்ட வீடுகள் இருந்ததாக அ. லோறன்ஸ் தனது நூல் ஒன்றில் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

இதில் ஒரு இலட்சத்து 04 ஆயிரத்து 556 அலகுகள் இரட்டை லயன் (இணை லயன்) காம்பரா முறையைக் கொண்டிருந்தன. ஒரு இலட்சத்து எட்டாயிரத்து 825 அலகுகள் ஒற்றை லயன் காம்பரா முறையைக் கொண்டிருந்தன. இந்த லயன்கள் பழைமை வாய்ந்தனவாகவும் காணப்படுகின்றன. திருத்தியமைக்க முடியாது அழியும் நிலையினை பல லயன்கள் எதிர்நோக்கி இருந்தன. இவ்வாறு இருந்த லயன்களின் தொகை 85 சதவீதமாகும். ஒவ்வொரு லயன் காம்பராவும் 10 அடி x 12 அடி அறையைக் கொண்டதாகவும் முன்பகுதி வராந்தாவாகவும், சமையலறையாகவும் பாவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த வீடுகளில் ஐம்பது வீதத்திற்கும் மேலானவை. 1949ஆம் ஆண்டிற்கும் முன்னர் கட்டப்பட்டதாக இரண்டாயிரமாம் ஆண்டு தகவல் ஒன்று வலியுறுத்துகின்றது. இலங்கையில் 1970ஆம் ஆண்டிற்குப் பின்னர் வீட்டு வசதிகளில் கூடுதலான அபிவிருத்தி ஏற்பட்ட போதும் பெருந்தோட்டங்களில் அது உரிய சாதக விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்பதனையும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
இது தொடர்பில் நா. வேல்முருகு தனது கட்டுரை ஒன்றில் கூறுகையில்;

இலங்கையில் 1970க்கு பின்னர் வீட்டு வசதிகளில் கூடுதலான அபிவிருத்தி ஏற்படலாயிற்று. ஆனால், இக்காலப் பகுதியில் தோட்டங்களில் வீட்டு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. எல்லாத் துறைகளிலும் கட்டப்பட்ட வீடுகளில் 10.5 சதவீதமானவை. 1971—1975ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்க, பெருந்தோட்டங்களில் உள்ள மொத்த வீடுகளில் 3.2 சதவீதமானவை மட்டுமே இக்காலப் பகுதியில் கட்டப்பட்டிருந்தன.

எல்லாத் துறைகளிலும் கட்டப்பட்ட வீடுகளில் 23.3 சதவீதமானவை 1976—1981 காலப்பகுதியில் கட்டப்பட்டன. பெருந்தோட்டங்களில் உள்ள வீடுகளில் 5.2 சதவீதமானவையே இக்காலப்பகுதியில் கட்டப்பட்டிருந்தன. 1971 முதல் 1981 வரை பெருந்தோட்டங்களிலே வீட்டு வசதிகள் மேற்கொள்ளப்படாமைக்கு மற்றொரு காரணம் அக்காலப்பகுதியில் பெருந்தோட்டக் குடித்தொகை குறைந்தமையாகும் என்று வேல்முருகு சுட்டிக்காட்டி இருக்கின்றார். இக்காலப் பகுதியில் குடித்தொகை 17.7 சதவீதமாக குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி பிரேமதாச வீடமைப்பு தொடர்பில் முன்னின்று செயற்பட்ட ஒருவராக இனம் காணப்பட்டுள்ளார். எனினும் பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு தொடர்பில் அவர் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடந்துகொண்டதாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். பத்து இலட்சம் வீடுகளை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்து அதில் அவர் பாரிய வெற்றியும் கண்டிருந்தார். மஹியங்கனை, புத்தளம், அம்பாறை, கிராந்துருகோட்டே போன்ற பல இடங்களில் பிரேமதாசவின் வீடமைப்பு திட்டம் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி இருந்தது. பல மாதிரிக் கிராமங்களை பிரேமதாச உருவாக்கினார். புதிய கிராம சேவகர் பிரிவுகளும் ஏற்படுத்தப்பட்டன. எனினும் பிரேமதாசவின் ஆட்சிக்கு தோள் கொடுத்த மலையக மக்களை அவர் வீடமைப்பில் கைகழுவிவிட்டார் என்பது வருந்தத்தக்க விடயமாகும்.

2006ஆம் ஆண்டில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைகளை கருத்தில்கொண்டு 7 பேர்ச்சஸ் காணியில் தனித்தனி வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அரச தரப்பு செய்திகள் வலியுறுத்தி இருந்தன. இதன் அடிப்படையில் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளதாகவும் முதற்கட்டமாக 155 தோட்டங்களில் மூவாயிரத்து 402 வீடுகளை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதன் சாத்தியப்பாடுகள் எவ்வாறு இருந்தன என்பது கேள்விக்குறியே ஆகும்.

அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவு–செலவு திட்டத்தில் பெருந்தோட்டத் துறையின் வீடமைப்பு திட்டம் குறித்த முன்மொழிவுகளும் உள்ளடங்கி இருந்தன. பெருந்தோட்டத் துறையில் உள்ள தரம் குறைந்த வீடுகளை மாற்றீடு செய்வதற்காக ஐம்பதாயிரம் அலகுகளைக் கொண்ட வீட்டு தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு வரவு  செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. இந்த வீடுகளின் நிர்மாணம், துப்புரவு ஏற்பாடு மற்றும் ஏனைய பல வசதிகளுடன் தேவையான பொறியியல் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்படும் என்றும் வரவு —செலவு திட்டம் வலியுறுத்தியது.

மேலும், நகர வீடமைப்பு தொகுதிகள் மற்றும் தோட்டத்துறை வீடமைப்புக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நீண்டகால சர்வதேச முறியினை அரசாங்க உத்தரவாதம் ஒன்றின் மூலம் விநியோகிப்பதற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான மறுதரப்பு நிதி ஏற்பாடாக அரசாங்கத்துக்கு மேலும் 750 மில்லியன் அமெரிக்க டொலரையும் விநியோகிப்பதற்கு வரவு  செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. இந்நிலையில் வரவு  செலவு திட்டத்தில் முன்மொழிந்த பெருந்தோட்டத்துறை வீடமைப்பு குறித்தும் காரசாரமான விவாதங்கள் மேலெழுந்தன.

தொடர்மாடி வீடுகள் என்கிற நடைமுறை தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழில் செய்யும் இடத்தில் பணியாளருக்கு வழங்கப்படும் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் என்ற மனநிலையிலேயே வைத்திருக்கும். 2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளிலேயே உள்ளூர் மற்றும் வெளியூர் ஸ்தாபனங்கள் மாடி வீட்டுத் திட்டத்தினை நிராகரித்திருந்தன. எனவே, இத்திட்டத்தை மீளவும் அமுல்படுத்த நினைப்பது புத்திசாலித்தனமாகாது. அரசாங்கம் 'தொடர்மாடி வீடுகளை அமைப்போம்' என்று மக்களைக் கவரும் வீரவசனங்களைப் பேசி தொடர்மாடி லயன் அறை முறையை ஏற்படுத்த தீர்மானித்திருப்பது தோட்டத் தொழிலாளர்களை லயன் அறை வாழ்க்கையில் இருந்து வெளியேறச் செய்யாது. அந்த லயன் அறைக்குள்ளாகவே வைத்திருக்க விரும்புகின்றது என்பதனை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மாடி வீட்டுத்திட்டம் லயத்துக்கு மேல் இன்னொரு லயம் என்ற நிலைப்பாட்டையே தோற்றுவிக்கின்றது என்றெல்லாம் தொடர்மாடி வீட்டுக்கு எதிரான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்த காணியுரிமை தோட்டத் தொழிலாளர்களுக்கும் நனவாக வேண்டும். பத்து பேர்ச்சஸ் காணியில் தனி வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் எதிரொலித்தன. ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடிவீட்டில் மேல் மாடியில் குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டால்கூட சவப்பெட்டியை சிரமம் இல்லாது கீழே கொண்டுவர முடியாது என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

மலையக பெருந்தோட்ட வீடமைப்பு குறித்து நாங்கள் பேசுகின்றபோது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமரர் சந்திரசேகரன் ஆகியோரின் சேவைகளையும் நாங்கள் புறந்தள்ளிவிட முடியாது. வீடமைப்பு குறித்த காத்திரமான முன்னெடுப்புகளை இவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அண்மைக்கால வீட்டுத் திட்டங்களில் இந்திய வீட்டுத்திட்டம் சகலரினதும் கவனத்தையும் ஈர்த்த ஒன்றாக உள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் நலன் கருதியும் இடம்பெயர்ந்தோரின் நலன் கருதியும் ஐம்பதாயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க இந்தியா உத்தேசித்துள்ளது. இவற்றுள் நான்காயிரம் வீடுகளை மலையகத்துக்கு பெற்றுக் கொடுப்பதெனவும் உடன்பாடு காணப்பட்டது. இந்த நான்காயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இடங்கள் மற்றும் பயனாளிகளை தெரிவு செய்தல் என்பன குறித்து மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளிடையே இழுபறியான நிலைமை இருந்து வந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

வடக்கு, கிழக்கிற்கென்று ஒதுக்கப்பட்ட 46 ஆயிரம் வீடுகளில் அநேகமானவை நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் மலையகத்தின் போக்கு குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். வடக்கு, கிழக்கு பகுதிகளில் வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பில் அரசியல் தலையீடு இருக்கவில்லை. அரச பொறிமுறையின் ஊடாக சிறப்பான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும் ஆனால், மலையகத்தைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மலையகத்தில் சுமார் இரண்டரை இலட்சம் வீடுகளை அமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எனினும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் இந்த இலக்கை அடைவதற்கு உரிய பங்களிப்பினை நல்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.

பெருந்தோட்டங்களை கம்பனியினர் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் தொழிலாளர் குடியிருப்பு நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றமையும் தெரிந்த விடயமாகும். இக்கூற்றில் உண்மை இல்லாமலும் இல்லை. இலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட கம்பனியினர் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பது உண்மைதான்.

மலையகப் பகுதிகளில் பல தோட்டத் தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பழைமை வாய்ந்த இந்த லயன் குடியிருப்புக்களின் சுவர்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. எப்போதும் இடிந்து விழக்கூடும் என்கின்ற அச்ச சூழ்நிலையில் குடியிருப்பாளர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். கூரைத்தகடுகள் பழுதுபார்க்கப்படாத நிலைமையும் மேலோங்கி காணப்படுகின்றது.

பல தொழிலாளர்களின் குடியிருப்பை சூழ உள்ள பகுதிகளில் நீர் முறையாக வழிந்தோடக்கூடிய விதத்தில் கான்கள் அமைக்கப்பட்டவில்லை. இன்னும் பல இடங்களில் கான்கள் உடைந்த நிலையில் காணப்படுவதால் அசுத்த நீர்பரவிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இதன் காரணமாக பலவிதமான தொற்று நோய்களும் இலகுவாக தொற்றிக்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. லயன் அறைகளில் காற்றோட்ட வசதிகளும் முறையாக இல்லாத நிலைமையே உள்ளது.

பல தோட்டங்களில் தொழிலாளர் குடியிருப்பு தொடர்பாக தோட்ட நிர்வாகமோ அல்லது கம்பனியினரோ கவனம் செலுத்துவதே கிடையாது. மாற்றாந்தாய் மனப்பான்மையிலேயே செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இயற்கை அனர்த்தங்களினால் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் பாதிக்கப்பட்டால் வீட்டை திருத்திக் கொள்ளும் பொருட்டு அரச சார்பான கொடுப்பனவுகள் எதுவும் தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதில்லை. தோட்ட நிர்வாகமே திருத்திக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசாங்கத்திடம் காணப்படுகின்றது. எனினும் தோட்ட நிர்வாகங்கள் இவ்விடயத்தில் பெரும்பாலும் கரிசனையைக் காட்டுவதற்கு தவறிவிடுகின்றன.

இதேவேளை, கிராமப்புறங்களில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு அரசு வீட்டைத் திருத்திக்கொள்ள நட்ட ஈட்டுக் கொடுப்பனவை வழங்குகின்றது. தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீட்டுரிமை இல்லாததை காரணம் காட்டி இக்கொடுப்பனவு மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசின் இத்தகைய மாற்றாந்தாய் மனப்பான்மைப் போக்கினை கண்டித்து நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறைத் தலைவருமான வி. இராதாக கிருஷ்ணன் கண்டனக்குரல் எழுப்பி இருந்தமையும் தெரிந்த விடயமாகும்.

இதேநேரம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வீடுகளை வழங்குவது தொடர்பிலும் சில தோட்ட நிர்வாகங்கள் இழுபறி நிலையினை கொண்டிருக்கின்றன தேயிலை உயிர்வாழ உரமாகிப்போன தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்கள் இருந்த வீட்டையும் கைப்பற்றிக்கொண்டு அந்த அப்பாவித் தொழிலாளர்களை தெருவில் நிற்க செய்யும் முனைப்புடன் சில கம்பனியினரும் தோட்ட நிர்வாகத்தினரும் கடந்த காலத்தில் காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தனர். எனினும் பல்வேறு தரப்பினர்களினதும் எதிர்ப்பின் காரணமாக கம்பனியினரினதும் தோட்ட நிர்வாகத்தினரதும் எதிர்பார்ப்புகள் கைகூடவில்லை.

லயத்து வாழ்க்கையில் பல இன்னல்களும் கலாசார சீரழிவுகளும் ஏற்படுகின்றன.லயத்தில் உள்ள ஒரு அறையில் ஒரு குடும்பம் வாழ்வது என்பதே சிரமமாகும். இந்த நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் லயன் அறைகளில் வசித்து வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும்.

எட்டி நின்று கருத்துச் சொல்வதனைக் காட்டிலும் லயன் அறைகளில் வசித்தவன் லயத்தின் மணத்தை நுகர்ந்தவன் என்ற ரீதியில் லயத்து வாழ்க்கையினால் ஏற்படும் வலி எனக்கு நன்றாகவே தெரியும்.

தோட்டத் தொழிலாளர் வீடமைப்பின் இன்னொரு முயற்சியாக ஹட்டன், நுவரெலியா, இரத்தினப்புரி, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் புதிய வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவிதந்திருக்கின்றது. இதற்கமைய இவ்வருடத்தின் இறுதிக்குள் 855 தனிவீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக இந்த திட்டம் பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் மூலமாக முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீன வடிவமைப்பில் 07 பேர்ச்சஸ் காணியில் இவ்வீடுகள் அமையவுள்ளன. 550 சதுர அடியில் அமையவுள்ள இந்த வீடுகள் ஒவ்வொன்றையும் நிர்மாணிக்க ஐந்து இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரியவருகின்றது. இதேவேளை, தற்போது காணப்படும் வீடுகளில் கூரைகளை மாற்றம் செய்வதற்காக94 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. நிர்மாணிப் பணிகளுக்கென்று கடன்வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

புதிய வீட்டுத் தொகுதியினை கையளிப்பதன் மூலமாக பெருந்தோட்டத் துறையை சார்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கம்பனிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மேலும் சிறந்து விளங்கும் என்றும் மனிதவளத்தின் முக்கியத்துவத்தினையும் வினைத்திறன் மிக்க தொழிலாளர்களை பேண வேண்டியதன் அவசியம் குறித்து கம்பனிகள் மேலும் வலியுறுத்தி இருக்கின்றன. இந்த திட்டம் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளின் வாயிலாக இந்த துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்வது கம்பனிகளின் நோக்கமாக உள்ளது.

மலையக மக்களின் வீடமைப்புப்பிரச்சினை இழுபறி நிலையில் இருந்து வருகின்றமைக்கு இம்மக்களின் அரசியல் கலாசார பிரதான காரணியாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான பி. இராஜதுரை ஏற்கனவே குற்றம் சுமத்தி இருந்தார். தொழிற்சங்கத்தை அடிப்படையாக் கொண்ட அரசியலே மலையகத்தில் காணப்படுவதாகவும் அநேகமான கட்சிகளுக்கு தொழிற்சங்கத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் இல்லாத போதும் மலையகத்தில் இந்நிலைமை நிலவுவதாகவும் இராஜதுரை தனது நிலைப்பாட்டை மேலும் வெளிப்படுத்தியிருந்தார். அரசியல் கலாசாரம் வீடமைப்பில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் இராஜதுரை தெளிவுப்படுத்துவதற்கு தவறவில்லை.

மலையக மக்களின் வீட்டுரிமையும் காணி உரிமையும் தற்போது கனவாகிப் போயுள்ளன. வீடமைப்பு தொடர்பிலும் உறுதியற்ற நிலைப்பாடு காணப்படுகின்றது. மலையக பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில் மலையக தமிழ் மக்களின் காணி வீட்டுரிமை தொடர்பாக ஒரு தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு வகையான வீடமைப்புத் திட்டங்கள் ஒரு முகப்படுத்தப்பட்டு இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்தில் அரச சார்பற்ற அமைப்புகளின் பங்களிப்பினைக் கூட்ட வேண்டும். குறைந்த வட்டியுடனான வீடமைப்பு கடன் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் தனது நூலொன்றில் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிந்திக்கத்தக்கதாக உள்ளன.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates