Headlines News :
முகப்பு » , , » தொழிலாளர் வர்க்கத்தின் நினைவிலழியா பாலா தம்பு - என்.சரவணன்

தொழிலாளர் வர்க்கத்தின் நினைவிலழியா பாலா தம்பு - என்.சரவணன்


இலங்கையின் பிரபல முதுபெரும் தொழிற்சங்கவாதியான தோழர் பாலா தம்பு (பாலேந்திரா தம்பு பிலிப்ஸ் - Phillips Bala Tampoe) அவர்கள் தனது 92வது வயதில் செப்டம்பர் 1ஆம் திகதியன்று மதியம் தனியார் மருத்துவமனையில் காலமானார். ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி ஒரு சிறந்த வழக்கறிஞரும் கூட. தனது சட்ட வல்லமையை தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே அர்ப்பணித்து வந்தவர். பல தொழிற்சங்க போராட்டங்களின் போது தொழிலாளர்களின் கோரிக்கைகளின் பக்கம் நின்று; கொம்பனிகளுக்கு எதிராக வாதாடி தொழிலாளர்களுக்கு நியாயம் தேடித்தந்தவர். இறுதிவரை வலதுசாரியத்துடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாத சளைக்காத போராளி.

மாறி மாறி ஆட்சியமைத்த அனைத்து அரசாங்கங்களுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தவர். இலங்கையின் வரலாற்றில் தோழர் பாலா தம்பு அளவுக்கு நீண்டகால தொழிற்சங்க போராளியாக எவரும் இருந்ததில்லை எனலாம். உலகில் நீண்டகாலமாக தொழிற்சங்கமொன்றிற்கு செயலாளராக இருந்த ஒரேயொருவர் இவர்தான் என்கிற உறுதிப்படுத்தாத ஒரு செய்தியுமுண்டு.

1948இலிருந்து இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் (CMU - Ceylon Mercantile Union) செயலாளர் நாயகமாகத் திகழ்ந்த பாலா தம்பு  மரணிக்கும்வரை சற்றும் சளைக்காது சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர். இந்த தொழிற்சங்கம் நாளடைவில் இலங்கை வர்த்தக தொழிநுட்ப மற்றும் பொது தொழிலாளர் சங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.

வாழ்க்கை
பாலா தம்பு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் தம்பு பிலிப்ஸ், பியூடிஸ் தங்கம்மா சவரிமுத்து ஆகியோருக்கு நீர்கொழும்பில் 23.05.1922 இல் பிறந்தவர். தந்தை அன்றைய பிரித்தானிய ஆட்சியில் சுங்கத் திணைக்களத்தில் இந்தியாவில் பணியாற்றியவர். பாலா தம்புவுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். இவர்களில் மூன்று சகோதரர்கள் இளமையிலேயே இறந்து விட்டார்கள். தன் அக்கா மற்றும் தங்கயுடனேயே அவர் வளர்ந்துவந்தார்.

நீர்கொழும்பு நியூஸ்டட் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் இடைநிலைப் படிப்பைத் தொடர்ந்தார். 1939ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று 1943 இல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று வெளியேறினார். இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து தாவரவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1944 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரி சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
“...நீதி மன்றங்களில் ஆங்கிலத்தில் வழக்காடும் காலம் அது. முதன் முதலாக என் பிரதிவாதிக்காக சிங்களத்தில் நீதிமன்றத்தில் வாதாடினேன். நீதிபதி இதை மறுத்துரைத்தபோது என்னுடைய பிரதிவாதியின் தாய் பாஷை சிங்களமாக இருக்கின்றபடியால், நான் பரிந்துரைப்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டுமென்று எடுத்துரைத்தேன். இது நீதித்துறையில் சரித்திரத்தில் பதிக்கப்பட்ட ஒரு சம்பவம்...” என்று தினகரனுக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
பாலா தம்பு அவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த நான்சி கொத்தலாவலை என்பவரை 1950 இல் திருமணம் செய்தார். அவருடன் மணமுறிவு ஏற்பட்ட பின்னர் தம்மோடு தொழிற்சங்கத்தில் பணியாற்றிய விக்ரமசூரிய என்பவரை 1966 இல் திருமணம் புரிந்தார். பக்கவாத நோய் முற்றிய நிலையில் 1998 இல் அவர் இறந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.


தொழிற்சங்கவாதியாக
பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இடதுசாரிக் கொள்கையில் இவர் ஈர்க்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய இடதுசாரித் தலைவர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா, பிலிப் குணவர்தன ஆகியோருடன் இணைந்தார்.

1947ஆம் ஆண்டு அரச ஊழியர் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவர் அப்போதைய ஆங்கில அரசினால் அரசுப் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது முதலாவது பகிரங்க மேடைப்பேச்சு கண்டி தலதா மாளிகையின் முன்னால் இடம்பெற்றது. வேலையிலிருந்து நீக்கப்படுவதற்கு உரிய ஆதாரமாக அந்த பேச்சு பயன்படுத்தப்பட்டது.

இரண்டாம் உலகமகா யுத்தம் நடந்துகொண்டிருந்த நிலையில் லங்கா சமசமாஜ கட்சி தடைசெய்யப்பட்டிருந்தது. கட்சி தலைமறைவு கட்சியாகவே தொழிற்பட வேண்டியிருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பு, போர் எதிர்ப்பு, சுதந்திர கோரிக்கை என்கிற கோஷங்களை முன்வைத்து இரகசிய துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டன. போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மூன்று ஆங்கில வீரர்கள் கூட தலைமறைவாக செயல்பட்ட ல.ச.ச.க.யில் இயங்கினார்கள் என்று பாலா தம்பு அவர்களின் பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார் (Daily News – 25/09.2012). அதன் பிறகு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தில் இணைந்து 1948 பெப்ரவரியில் அதன் செயலாளர் ஆனார்.

1928 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக ஊழியர் சங்கம், பாலா தம்பு செயலாளராக ஆன பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியின் செல்வாக்குக்குள் வந்தது. இக்கட்சி நான்காம் அனைத்துலக அமைப்பின் உறுப்பினராக இருந்தது. 1963 ஆம் ஆண்டில், கொழும்பு துறைமுகத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தினார். இது பின்னர் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தமாக உருவெடுத்தது.

இடதுசாரி இயக்க பிரவேச அனுபவம் குறித்து கடந்த பெப்ரவரியில் சிலுமின என்கிற சிங்களப் பத்திரிகைக்கு அவர் வழங்கிய நேர்காணலில் அவர் இப்படி குறிப்பிடுகிறார்.
“...1941ஆம் ஆண்டு காலகட்டம் அது. எனது சக மாணவர்களில் அதி தீவிர இடதுசாரிக் கொள்கையை பின்பற்றும் இருவர் நெருங்கிய நண்பர்களானார்கள். ஒருவர் ரிச்சர்ட் ஆட்டிகல. மற்றவர் டிரிவர் ட்றிபேக். இவர்களுடன் இணைந்து புரட்சிகரமான செயற்பாடுகளிலெல்லாம் ஈடுபடுவோம். இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்பட்டார்கள் என்ற குற்றச் சாட்டில் தீவிர இடதுசாரிகளான என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டீ.சில்வா, பிலிப் குணவர்தன, ரிச்மண்ட் சமரக்கொடி போன்ற இடதுசாரி தலைவர்களை கைது செய்து போகம்பறை சிறையில் வைத்திருந்தார்கள்.
இவர்களை போகம்பறை சிறையில் பார்ப்பதற்காக வேறு ஒரு பெயரில் என் நாமத்தை மாற்றிக் கொண்டு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் சிறையிலிருந்து தப்பி வெளியேறுவதற்கான திட்டங்களை வகுத்திருந்தார்கள். திட்டமிட்டபடி அவர்களுடன் வெளியேறி கொழும்பை நோக்கி தப்பி வந்தோம். பிலிப்பின் காரில் நானும் மற்றவர்களுமாக வந்து பம்பலப்பிட்டியிலுள்ள ஒரு தோழரின் வீட்டில் தங்கியிருந்தோம். அங்கிருந்து என்.எம்.பெரேரா, கொல்வின் இந்தியாவிற்கு தப்பிச் செல்வதற்கான வியூகங்களை வழிவகுத்துக் கொடுத்தோம். அதன்படி கொழும்பிலிருந்து அனுராதபுரம் சென்று அங்கே ஒரு கூலிக்கு வீடெடுத்து தங்கினோம். அன்று கொலரா நோய் அப்பகுதியில் பரவியிருந்தமையால் தடை செய்யப்பட்ட பிரதேசமாக இருந்தது. ஆகவே வெள்ளையரின் பிரவேசமோ அரச படைகளின் தேடுதலோ அங்கே குறைந்திருந்தது. அதைப் பயன்படுத்தி இந்திய வர்த்தகர்கள் வந்து போகும் யாழ். கடல் மார்க்கமாக வர்த்தகர்களோடு ஒருவராக உருமாறி தமிழகத்திற்கு சென்று விட்டார்கள். கடலைச் சுற்றி பிரித்தானிய படை இருந்த போதும் ஒருவாறு அடையாளம் தெரியாமல் சென்றடைந்தனர்...”

1964 ஆம் ஆண்டில் லங்கா சமசமாஜச் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகித்து வந்த பாலா தம்பு அவர்கள் தமது கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதனை எதிர்த்து அதிலிருந்து விலகினார்.  லங்கா சமசமாசக் கட்சி தேசிய அரசில் இணைவதை எதிர்த்து நான்காம் அனைத்துலகத்துடன் நல்லுறவைப் பேணும்வகையில் புதிய கட்சியை ஆரம்பித்தனர். நான்காம் அனைத்துலகம் இக்கட்சியைத் தமது இலங்கைப் பிரதிநிதியாக அறிவித்தது. அந்த புரட்சிகர சமசமாசக் கட்சியின் நிறுவனர்களில் லங்கா சமசமாசக் கட்சியின் 14 மத்தியக் குழு உறுப்பினர்களும், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான எட்மண்ட் சமரக்கொடி, மெரில் பெர்னாண்டோ ஆகியோரும் அடங்குவர். 1960, 1965 தேர்தல்களில் காங்கேசன்துறை தொகுதியில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் போட்டியிட்ட வி. காராளசிங்கமும் பாலா தம்பு குழுவினரோடு ல.ச.ச.க.விலிருந்து வெளியேறிய அணியில் இருந்தவர். அதன் பின்னர் பாலா தம்பு இலங்கை புரட்சிகர சமசமாஜக் கட்சியின் தலைவரானார். 1960 மார்ச், 1960 யூலை 1965 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்களில் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

பாலா தம்பு இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றி வந்ததோடு, உழைக்கும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது நிர்வாகங்களுடனும், அரசுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு தீர்வு கண்டு வந்திருக்கிறார்.

இலங்கை வர்த்தக ஊழியர் சங்கம் ஒரு சமயத்தில் 35,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சங்கமாக இருந்தது. இவ்வூழியர்களின் சந்தாப் பணத்தால் உருவாக்கப்பட்ட பிரமாண்டமான தொழிற்சங்க கட்டடம் கொள்ளுப்பிட்டி 22ஆம் ஒழுங்கையில் கம்பீரமாக இருக்கின்றது. வெளிநாட்டு உதவியின்றி, வங்கி கடனின்றி 59 பர்ச்சஸ் காணியில் உரிமைக்காக அர்ப்பணிப்போடு போராடிய தொழிலாளர்களின் சொத்தாக அது திகழ்கின்றது. தற்போதைய ஜானாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட முன்னர் இத் தொழிற்சங்கத்தில் அங்கத்தவராக இருந்திருக்கிறார். ஆனால் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தை இதுவரை காலம் எந்தவொரு கட்சியையும் ஆதரித்து நிற்காத ஒரே தொழிற்சங்கமாக தொடர்ந்து பேணி வந்திருக்கிறார்.
அவரது தொழிற்சங்கத்தால் அவருக்காக சிலல வருடங்களுக்கு முன்னர் அவரது பழைய காருக்கு பதிலாக புதிய Volkswagen கார் ஒன்றினை பாவனைக்காக கொடுக்கப்பட்டபோதும் அவர் அதனை மறுத்துவிட்டு இறுதிவரை அந்த பழைய காரையே பயன்படுத்தி வந்தார். சமீப காலம் வரை அவரே காரை ஓட்டக்கூடியவராக இருந்தார். அவரின் ஒரேயொரு விருப்பத்துக்குரிய பொழுதுபோக்கு DVD திரைப்படம் பார்ப்பது. தனது சேகரிப்பில் 300க்கும்  மேற்பட்ட உலகப்புகழ்பெற்ற திரைப்படங்கள் இருப்பதாக ஒரு பேட்டியொன்றில் குறிப்பிடுகிறார். அவரது அலுவலக கடமைகளுக்காக இந்த வயதிலும் கணினி பயன்பாட்டை தானே மேற்கொள்ளுமளவுக்கு உறுதியாகவே சமீபகாலம் வரை இருந்திருக்கிறார்.

1971 கிளர்ச்சி
1971இல் நிகழ்ந்த ஜே.வி.பி கிளர்ச்சி அன்றைய சிறிமா அரசாங்கத்தால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு பல இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள். பல நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்கள். அந்த வழக்கில் பாலா தம்பு சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்டார். அதன் பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜே.வி.பி. இளைஞர்களின் விடுதலைக்காக இலவசமாக தொடர்ந்தும் வாதாடி பலரை விடுவித்தும், பலரை தண்டனைக்குறைப்பையும் பண்ணச் செய்தார்.

71 கிளர்ச்சி நிகழ்ந்தது 5ம் திகதி அதற்க்கு முன் தினம் இரவு ஜே.வி.பி யின் சார்பில் சனத் மற்றும் குமநாயக்க ஆகியோர் பாலாதம்புவை சந்தித்தார்கள். ஜே.வி.பி க்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தினால் ஒரு வேலைநிறுத்தத்தை குறுகிய கால அறிவித்தலில் மேற்கொள்ள முடியுமா என்பாத்து குறித்தே அந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. குமநாயக்க குறிப்பிட்ட விளக்கங்களின் அடிப்படையில் ஜே.வி.பி கைக் குண்டுகளை தயாரித்து வருவது குறித்து பாலா தம்புவின் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர்களின் தயாரிப்பு வேலைகள் அனைத்துமே பிழையான வடிவத்தில் இருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார். பெப்ரவரி 27 அன்று ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் விஜேவீர ஆற்றிய உரை குறித்தும் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். நியாயமான காரணங்களின்றி தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்த முடியாது என்றும் புரட்சியொன்று ஏற்பட்டால் அது நிச்சயமாக சாத்தியமற்றுப் போகும் என்றும் அவர்களிடம் கருத்து வெளியிட்டார்.
71 கிளர்ச்சி குறித்து சிலுமின பேட்டியில் கூறும்போது “..விஜேவீரவிடம் தீவிரமும் புரட்சிகர உணர்வும் இருந்த போதும் ஒரு சரியான மார்க்சிஸ்டாக இருக்கவில்லை. மார்க்ஸ் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியே பேசினார். இவர்கள் “ஒடுக்கப்படும் வர்க்கம்” குறித்தே பேசினார்கள். 71 கிளர்ச்சி என்பதை இளைஞர்களின் புரட்சியாக என்னால் பார்க்கமுடியவில்லை. அது சிறுவர்களின் புரட்சி...” என்கிறார்.

தொழிலாளர் சாசனம்
சந்திரிகா அரசாங்கத்தின் போது தொழிலாளர்களுக்கென “தொழிலாளர் சாசனம்” ஒன்றை கொணர்வதற்கான தயாரிப்பு வேலைகள் நடந்தன. இந்த சாசனத்தை வரைவதில் முக்கிய பங்காற்றியவர் பாலா தம்பு அவர்கள். அரச தரப்பில் இதற்கு பொறுப்பாக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதியும், அப்போதைய தொழில் அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ. 1970 இல் பாராளுமன்றத்துக்கு முதன்முறையாக தெரிவாகும்வரை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் நூலகப்பொறுப்பாளராக தொழில்புரிந்துவந்தார் மகிந்த ராஜபக்ஷ. அப்போது அவர் இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்கிறார். அந்த பின்னணி காரணமாக தொழிலாளர் சாசனத்தை உருவாக்கி அமுல்படுத்த மகிந்த ராஜபக்ஷ போதிய அளவு அக்கறை காட்டுவார் என்று நம்பினார். ஆனால் அது கிடப்பில் போடப்பட்டது. 1996இல் தொழிலாளர் சாசனம் வெளியிடப்பட்டது. ஆனால் அதனை பாராளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததனால் சந்திரிகா அரசாங்கம் அமுல்படுத்த முடியாதபடி செய்துவிட்டது என அரசியல் சாட்டுக்கள் கூறப்பட்டது.

ஆனால் மகிந்தவே நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவானபின் அந்த சாசனத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கலாம் என்று பாலா தம்புவிடம் ஆதங்கம் இருந்தது. அதுவும்போக சந்திரிகா அரசாங்கத்தில் கூட இல்லாத மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பாராளுமன்றத்தில் தற்போது இருக்கிறது. ஆனால் முதலாளிமார் சம்மேளனம் சந்திரிகா அரசாங்கத்தின் போது இருந்ததை விட மகிந்த அரசாங்கத்தில் மேலும் வலுவுற்றிருக்கிறது என்பது அவருக்கு தெரியும். முதலாளிமார் சம்மேளனம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் விளைவாகவே இன்று வரை அந்த தொழிலாளர் சாசனம் முற்றுமுழுதாக கிடப்பில் வீசப்பட்ட நிலையில் இருக்கிறது. பாலா தம்பு அவர்கள் கடந்த 20 வருடங்களாக மே தினத்தின் போது இந்த தொழிலாளர் சாசனத்தை அமுலுக்கு கொணரும்படி கோஷமெழுப்பி வருவதுடன் அந்த கோரிக்கையை இடைவிடாது வலியுறுத்திவரும் ஒரேயொரு தொழிற்சங்கவாதியும் அவர்தான் என்று தைரியமாகக் கூறலாம்.

தொழிற்சங்கவாதி, இடதுசாரி, வழக்கறிஞர், மனித உரிமையாளர், பெண்ணுரிமையாளர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார். இலங்கையின் வரலாற்றில் நீண்ட தொழிற்சங்க அனுபவம் ஓய்ந்தது. எந்த ஒரு அரசாங்கங்களுடன் இணைத்துக்கொள்ளாத, அரசாங்கத்துடனும் சமரசம் செய்துகொள்ளாத முன்னுதாரண தொழிலாளர் வர்க்க தலைவர் மறைந்துவிட்டார். 

பல வேலை நிறுத்தங்கள் ஓய்ந்தன – தோழர் பாலா தம்பு  இன்றுதான் ஓய்ந்தார்.

CMU வின் சில குறிப்பிடத்தக்க வேலைநிறுத்தங்களாக இவற்றைக் குறிப்பிடலாம்.
1949 – 55 தொழிலாளர்கள் Plate நிறுவனத்துக்கு எதிரான வேலைநிறுத்தம் (இதுவே CMU வின் முதலாவது வேலைநிறுத்தம்)
1959 – Times of ceylon வேலைநிறுத்தம்
1959 – பேர வீடு வேலைநிறுத்தம்
1963/64 – ப்ரூக் பொன்ட் வேலைநிறுத்தம்
1964 – மாபெரும் துறைமுக வேலைநிறுத்தம்
1965 – Browns வேலைநிறுத்தம்
1966 – இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன வேலைநிறுத்தம்
1966 – லக்கி இண்டஸ்றீஸ்
1969 – kalurata associated motorways வேலைநிறுத்தம்
1975 – இலங்கை உர கூட்டுத்தாபன வேலைநிறுத்தம்
1980 – ஜூலை வேலைநிறுத்தம்
1982 – யாழ் பரந்தன் இராசாயன கூட்டுத்தாபன வேலைநிறுத்தம்

வாசிப்புக்கான பரிந்துரை
International Trotskyism, 1929-1985: A Documented Analysis of the Movement


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates