Headlines News :
முகப்பு » , , » இலங்கையின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில் தர்மபாலவின் வகிபாகம்! - என்.சரவணன்

இலங்கையின் அரசியல் திசைவழியை தீர்மானித்ததில் தர்மபாலவின் வகிபாகம்! - என்.சரவணன்

அனகாரிக்க தர்மபாலாவின் 150வது ஜனன நினைவு

(21.09.2014 தினக்குரலில்  வெளிவந்ததை நன்றியுடன் பகிர்கிறோம்) 

 “நினைவில் வைத்துக்கொள்,
என்றாவது வெள்ளையன் இந்த நாட்டை விட்டுவிட்டு போவான். அவர்களின் பிள்ளகளைப்போன்ற இருபது முப்பதாயிரம் கருப்பு வெள்ளையர்களை உருவாக்கிவிட்டுத்தான் அவர்கள் வெளியேறுவார்கள். அதன் பின்னர் இந்த நாட்டை ஆளப்போவது இந்த கருப்புவெள்ளையர்களே. அவர்கள் சிங்கள மொழியையும், சிங்கள பண்பாட்டையும் வெறுப்பார்கள். இனம், மதம், மொழி வேறுபாடு தேவையில்லை என அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு போதிப்பார்கள். தமிழர்களும், மரக்கல, ஹம்பயாக்களும், கொச்சிகளும், போறகாரன்கள் அனைவரும் ஒன்றே என கூறுவார்கள். இந்த நாடு அனைவருக்கும் உரியது என்பார்கள். அப்படிக்கூறி ஆங்கிலத்திலேயே அதிகாரம் செலுத்துவார்கள். விகாரைகளைச் சுற்றி தேவாலயங்களையும், சைவ ஆலயங்களையும் கட்டுவார்கள். நீங்களோ, உங்களுக்காக உங்களை விடுவிக்கும் ராஜகுமாரர்கள் பிறக்கும்வரை காத்திருப்பீர்கள். பிறக்கவிருக்கும் உங்கள் ராஜகுமாரர்களையும் கருவிலேயே அழித்துவிட இந்த “கருப்புவெள்ளையர்களால்” முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நமது பிக்குமார்களுக்கு அவர்கள் போதைமாத்திரை கொடுத்துவிடுவார்கள். அதன் பின்னர் உங்கள் பிள்ளைகள் கொட்டையுள்ள வாழைப்பழங்களை விழுங்கிவிட்டு மலம் கழிக்க முடியாமல் முக்கிக்கொண்டிருக்கும் குரங்குகளைப்போல ஆக வேண்டியுறும்.”

இதனை கூறியது பொதுபலசேனாவின் ஞானசார தேரவுமில்லை, நளின் டி சில்வாவுமில்லை, 1931 இல் அனகாரிக்க தர்மபால தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்பு இது. இந்த மேற்கோளை இனவாத தரப்பு எங்கெங்கும் வியாபகமாக பாவிப்பதைக் காணலாம். அனகாரிக்க தர்மபாலவுக்கும் ஞானசாரவுக்கும் இப்போது என்ன தொடர்பு என்கிறீர்களா. இந்த மேற்கோளை அடிப்படை கோஷமாக வைத்துத்தான் பொதுபல சேனா இயங்கி வருகிறது. அவர்களின் மேடைப்பேச்சுக்கள், துண்டுபிரசுரங்கள், நூல்கள், போஸ்டர்கள் நூல்கள் எல்லாவற்றிலும் சமீபகாலமாக அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள் இது.

தமிழ், சிங்கள பாடப் புத்தகங்களில் கூட இலங்கையின் பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாககாட்டப்படுபவர் அனகாரிக்க தர்மபால. இன்று நாடுமுழுதும் மதச் சிலைகளுக்கு அடுத்ததாக அனகாரிக்கவின் சிலைகளே அதிகம் உள்ளன.

வாழ்க்கை
1864ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று பிறந்தார். அவர் தனது 79 வது வயதில் 1933 ஏப்ரல் 29 இல் இறந்தார். அனகாரிக்க தர்மபால பௌத்த மறுமலர்ச்சியின் தந்தையாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் உயர்ந்த நிலையில் கொண்டாடப்படுபவர். ஆரம்ப கல்வியை கொட்டாஞ்சேனை சென்ட் பெனெடிக் கல்லூரியில் கற்றார். மணமுடிக்காமல் பௌத்தத்துக்காக முழுமையாக உழைக்கும் ஒருவரையே அனகாரிக்க எனப்படுகிறார். அந்த வகையில் தர்மபாலாவே முதலாவது அனகாரிக்க எனப்படுகிறார். பிக்குவைப்போல மஞ்சள் உடை தரித்தபோதும் அவர் ஒரு பிக்குவாக இருக்கவில்லை. தர்மபாலாவின் இயற்பெயர் டொன் டேவிட் ஹேவாவிதாரான. அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்து தன்னை பௌத்தராக அறிவித்துக்கொண்ட கேர்னல் ஒல்கொட் இலங்கையில் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதில் மிகப்பெரும் பங்காற்றியிருந்தார். தர்மபால அவரது பணிகளுக்கு உதவி புரிந்தார். பின்னர் தனது அந்நிய நாட்டு பெயராக இருந்த அவரது இயற்பெயரையும் தர்மபால (தர்மத்தின் காவலன்) என்று மாற்றிக்கொண்டார்.

1891இல் புத்தர் ஞானம் பெற்ற புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலுக்கு சென்று அங்கு புத்தர் இந்துக்கடவுளாக வணங்குவதையும் அது இந்துக்களின் சங்காராச்சரியார் மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததைக் கண்டு அதனை பௌத்தர்களின் கட்டுப்பாட்டில் கொணர்வதற்காக சட்ட ரீதியில் போராடிய பொது அதில் தோல்வி கண்டார். இந்திய சுதந்திரத்தின் பின் அந்த கோரிக்கை வெற்றிபெற்றது.

1892இல் தர்மபாலவால் தொடக்கப்பட்ட மகாபோதி எனும் ஆங்கில சஞ்சிகையை வாசித்தறிந்த உலகச் சமயங்களின் பாராளுமன்றம் 1893 ஆம் ஆண்டில் சிக்காகோவில் நடைபெற்ற மாநாட்டுக்கு தேரவாத புத்த சமயத்தில் சார்பாக அழைக்கப்பட்டார். இந்த மாநாட்டில் தான் சுவாமி விவேகானந்தரின் பிரசித்தி பெற்ற சிக்காகோ சொற்பொழிவும் நிகழ்ந்தது. அதே மாநாட்டில் அனகாரிக்க தர்மபாலாவின் சொற்பொழிவும் மிகவும் பிரசித்திபெற்றது. பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரச்சாரம் செய்து, பௌத்த விகாரைகளை நிறுவினார். இலங்கை முழுவதும் 110 பௌத்த பாடசாலைகளை நிறுவினார்.
புத்தர் முதன்முதலாக உபதேசம் செய்தததாக கருதப்படும் சாரநாத் பகுதியில் தர்மபால அமைத்த கோவிலில் 1933இல் பிக்குவாக ஆனார். அதே ஆண்டு அங்கேயே மரணமானார்.
சிக்காகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்ததருக்கு பின் வரிசையில் அனகாரிக
தூய சிங்கள பௌத்தம்
உலகம் முழுவதும் தேரவாத பௌத்தத்தை பரப்புவதிலும் நிலைநாட்டுவதிலும் பாரிய பங்களிப்பை செய்த தர்மபால; தூர நோக்கில் இலங்கை தூய சிங்கள பௌத்த நாடாக ஆக வேண்டும் என்பதற்காக அதிக சிரத்தை எடுத்துக்கொண்டார். அதற்காக பௌத்தர்களை இனவாத மனநிலைக்கு தூண்டினார். அதனை பௌத்தத்தின் பேரால் செய்தார். இன்றல்ல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நிறுவப்பட்ட வெறுப்புணர்ச்சி மேலிட்ட புனைவுகளை மேலதிக சேர்ப்புக்களுடன் புதுப்பித்து இன்று வலிமையாக நிறுவப்பட்டுள்ளது.

தனது பேச்சாலும், போதனைகளாலும், எழுத்தாலும் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெறுக்க கற்றுக்கொடுத்தவர் அவர்.
பின் அவர் வழிவந்தவர்களும் அவரின் போதனைகளை அவரின் வெறுப்புணர்ச்சியை தொடர்ச்சியாக தலைமுறைகளுக்கும் கடத்தி வந்திருக்கிறார்கள். அந்த வகை இனவாதத்தை மேலும் கவர்ச்சிகரமாக விரிவாக்கி, சித்தாந்தமயப்படுத்தி, ஜனரஞ்சகப்படுத்தி அதற்கு நிறுவன வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவையே இன்று இலங்கை தேசம் அனுபவிக்கிறது.
சிக்காகோ மாநாட்டின் போது சுவாமி விவேகானந்தருடன் அனகாரிக

இன்று இலங்கை என்பது சிங்கள பௌத்த நாடாக நிலைபெறச்செய்திருக்கிறது. அதன் அரசியலமைப்பு, கல்வியமைப்பு, சட்டம், நீதி, நிர்வாகத்துறை, முப்படை, என இனோரன்ன சகல அம்சங்களும் பேரினவாதமயப்பட்டிருப்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆக, நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அரச அனுசரணையும் சேர்ந்துகொள்ளும்போது மேலும் அது பலம்பெற்று பாசிசத்தை நோக்கி வீறுநடை போடுவது தான் இன்று நடைபெற்று வருகிறது.

காலா காலத்துக்கு இதற்கு பல சக்திகள் பேரினவாதத்தை முன்னகர்த்தி வந்திருக்கிறார்கள். அதன் நவீன தலைமை தான் இன்றைய “பொதுபல சேனா..” (பௌத்த அதிகாரப் படை/சேனை – சிவசேனை எகிற இந்து பாசிச அமைப்பு ஞாபகத்திற்கு வருகிறதா).

அனகாரிக்க தர்மபால ஆங்கிலேயர்களை விட அதிகமாக வெறுத்தது உள்நாட்டிலுள்ள ஏனைய இனத்தவர்களையே. தமிழர், மலையாளிகள், முஸ்லிம்கள், பறங்கியர் என அவரின் இனவெறுப்புணர்ச்சி என்பது இனவெறுப்போடு மட்டும் நிற்கவில்லை அது மோசமான மதவெறுப்பையும் இணைத்தே இருந்தது. ஆகவே தான் அவர் “சிங்கள கிறிஸ்தவர்களுக்கு” எதிராக அதிகமாக பிரச்சாரம் செய்தார்.

முஸ்லிம்களின் மீதான இனவாத பிரசாரத்தின் பின்னணி வர்த்தகத்தை மையப்படுத்தியே தொடங்கப்பட்டது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டியது. அனகாரிக்க தர்மபாலவின் தகப்பனார் எச்.டொன் கரோலிஸ் புறக்கோட்டையில் கடை நடத்திக்கொண்டிருந்தவர்.

புலால் உண்ணுவதை எதிர்த்து நாடளாவிய பிரசாரத்தின் போது அனகாரிக
இந்தியாவிலிருந்து இலங்கை வந்து ஏற்றுமதி வியாபாரம் செய்து ஆங்கிலேயர்களுடனும் பங்குதாரர்களாகி வளர்ந்துவந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான பகைமையை சிங்கள வியாபாரிகள் இனவாத ரீதியில் திசைதிருப்பினர். அதற்கு “மண்ணின் மைந்தர்”,“தேசபக்தி”, “சுதேசம்” போன்றவற்றையும் கருத்தேற்றி பரப்பினர். அனகாரிக்க தர்மபால இந்த “அந்நியவியாபாரிகளை” தென்னிந்திய தெருப்பொறுக்கிகள்” என்றே அழைத்தார். 

அவர் எழுதிய ஒரு குறிப்பில் இப்படி குறிப்பிடுகிறார்.
“அந்நியரான முககதியர் ஷைலோக்கிய வழிமுறைகளால் யூதர்கள் போன்று செல்வந்தர்களாக மாறினார்.... தென்னிந்திய முகமதியர் இலங்கைக்கு வந்து வியாபாரத்தில் எத்தகைய அனுபவமுமற்ற, உதாசீனம் செய்யப்பட்ட கிராமத்தவனைக் காண்கிறான். இதன் விளைவு முகமதியன் முன்னேறுகிறான். மண்ணின் மைந்தன்’ பின் தள்ளப்படுகிறான்...”
1915 ஆம் ஆண்டு கலவரம் முடிந்த பின் 15.06.1915இல் அவர் எழுதிய குறிப்பில் (தர்மபால கடிதங்கள் – குருகே வெளியீடு) இப்படி குறிப்பிடுகிறார்.

“...பிரித்தானியர்களுக்கு ஜெர்மானியர்கள் எவ்வாறோ சிங்களவர்களுக்கு முஸ்லிம்களும் அவ்வாறே. சிங்களவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் சமயத்தாலும், இனத்தாலும், மொழியாலும் அந்நியர்களே., பௌத்த சமயம் இல்லாவிடின் சிங்களவர்களுக்கு மரணமே மிச்சம். முழுத் தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதாரம், ஆன்மீகம் என்பனவே காரணங்கள்...”
ஒருபுறம் தர்மபாலாவின் “சிங்கள பௌத்தயா” இத்தகைய பிரசாரங்களை செய்ய அதற்கு நிகராக இன்னும் சில பத்திரிகைகளும் தமது பங்குக்கு முஸ்லிம் எதிர்ப்பை வெளியிட்டன. “சிங்கள ஜாத்தி” (சிங்கள இனம்) எனும் பத்திகை 

“...கரையோர முஸ்லிம்களிடமும், கொச்சியர்களிடமும், அந்நியர்களிடமும் கொடுக்கல் வாங்கல் வைத்திருக்க வேண்டாம்...” என்று எழுதியது.

அனகாரிக்க தர்மபால அன்று முஸ்லிம்களுக்கு எதிராக கூறியவற்றை இலங்கை வரலாற்றின் பல கால கட்டங்களில் பலராலும் மேற்கோள் காட்டப்பட்டு வந்துள்ளது. இறுதியாக இப்போது ஞானசார அந்த மேற்கோள்களை கையிலெடுத்துள்ளார்.

இன்றைய நவீன பௌத்த இனவாதப் போக்கின் இருப்புக்கு; அனகாரிக்க தர்மபாலாவை மீள உயிரிப்பிக்க வேண்டியுள்ளது. எனவே அவரது சிலைகள் புதிது புதிதாக முளைக்கின்றன. அவரது நூல்கள், அவரை பற்றிய நூல்கள் பல மடங்கு பல்கிப் பெருகுகின்றன. அவரது போதனைகள் ஊடக சந்தையில் நல்ல விலை போகின்றன. சிங்கள பௌத்த தனத்தை வெளிக்காட்ட சகல கட்சிகளுக்கும் அவரது சுலோகங்கள் தேவைப்படுகின்றன. இந்த மாதம் “அனகாரிக்க தர்மபால” என்கிற திரைப்படம் ஒன்றும் இந்த மாதம் 12ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதனை தயாரித்தவர் பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் என்பது கவனிக்கத்தக்கது.

1915 இல் 7 வருட சிறை
இலங்கையின் முதலாவது இனக்கலவரம் 1915ஆம் ஆண்டு கண்டியில் நிகழ்ந்தது. கலவரத்துக்கு காரணமாக இருந்தார்கள் என்று அன்றைய ஆங்கிலேய அரசு டீ.எஸ்.சேனநாயக்க, எஃப்.ஆர். சேனநாயகா உள்ளிட்ட பல சிங்களத் தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது நாமெல்லோரும் அறிவோம். அந்த கலவரத்தின் பின்னணியில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை புனைந்து  பரப்பியதில் முக்கிய பாத்திரம் வகித்தவர் அனகாரிக்க தர்மபால. இன்றைய இனவெறுப்பு மதவெறுப்பு அனைத்துக்கும் அத்திவாரமிட்டவர் என்றே கூறலாம்.

கலவரம் நடந்தபோது அனகாரிக்க தர்மபால இந்தியாவில் கல்கத்தாவில் இருந்தார். கலவரத்துக்கு காரணமானவர்களில் அனகாரிக்க தர்மபாலவும் ஒருவர் என்கிற குற்றத்தின் பேரில் அவரை 7 வருடங்களுக்கு வீட்டுச்சிறை செய்தனர். 1906இல் அவர் தொடக்கிய “சிங்கள பௌத்தயா” பத்திரிகையும் இனவாதம் பரப்பியதன் காரணமாக தடைசெய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏனைய சிங்கள அரசியல் தலைவர்களை பிரிட்டிஷ் அரசு விடுவித்தபோதும் அனகாரிக்க தர்மபாலாவை தண்டனையிலிருந்து விடுவிக்கவில்லை. தர்மபாலாவின் சகோதரர் எட்மன் ஹெவாவிதாரண யாழ்ப்பாண சிறையில் சிறைப்பட்டிருந்தபோது நோயுற்று மரணமானார்.

தர்மபாலவின் சுலோகமான “சிங்கள நாட்டை சிங்களவர்களே ஆள வேண்டும்” என்கிற தலைப்பில் அவர் 20.09.1911 அன்று “சிங்கள பௌத்தயா” பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரை முக்கிய ஒரு ஆதாரமாகக் கொள்ளப்பட்டது. சிங்களவரின் அராஜகத்தை நேரில் பார்த்த அன்றைய பிரிட்டிஸ் கவர்னர், கலவரத்தை அடக்கியதுமல்லாமல், கலவரத்தைத் தூண்டியதில் சிங்களவர்களின் பங்கு என்ன என்பது பற்றியும் கடுமையான அறிக்கையொன்றையும் மகாராணிக்கு சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கைக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த சிங்களத் தேசியவாதிகள், தங்கள் சார்பில் சேர். பொன் ராமநாதன் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை பிரித்தானியாவுக்கு அனுப்பி, முஸ்லிம்களே கலவரத்தை உண்டாக்கியவர்கள் என்ற தோற்றப்பாட்டையும் கருத்தையும் மகாராணியிடம் எடுத்துக் கூறி அவர்களை விடுவிப்பதற்கான ஆணையையும் பெற்றுக்கொண்டு வந்தது இன்னொரு கதை.

தர்மபால சித்தாந்தத்தின் வகிபாகம்
இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தமயமாக்கள் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு வயதைத் தாண்டிவிட்டது. சிங்கள பௌத்த பேரினவாத கருத்துக்களை ஆங்காங்கு இலங்கை வரலாற்றில் காணக்கிடைத்த போதும் அது சித்தாந்தமயப்படுத்தப்பட்டது ஒரு நூற்றாண்டுக்குள் தான். அது நிறுவனமயப்பட்டது அதன் பின்னர் தான். அதன் பின்னர் தான் சிங்கள பௌத்த அரசுருவாக்கம் அடைந்தது. சிங்கள பௌத்த பேரினவாத செயற்பாடுகளை சம்பவங்களாக இதன் வழி வரிசைப்படுத்தி, கோர்த்துப்பார்த்தால் இதன் தொடர்ச்சியையும் போக்கையும் எவராலும் இனங்கண்டுகொள்ள இயலும். அதன் நீட்சியாக இலங்கையின் இனப்பிரச்சினை, இனப்போராட்டம் வரை இட்டுச்சென்று ஈற்றில் சிறுபான்மை இனங்களும் மதங்களும் மோசமான முறையில் அடிமைப்படுத்தப்பட்டன.

ஆயினும் போரின் பின்னர் இலங்கையில் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு குறைந்தபட்சமாவது சமத்துவ நிலையை எட்டியதா. மாறாக, அது இன்னொரு வடிவத்துக்கும் இன்னொரு பரிமாணத்துக்கும் இட்டுச்சென்றிருக்கிறது. தமிழ் மக்களுடன் சேர்த்து இன்று முஸ்லிம் மக்களின் மீதும் மலையக மக்கள் மீதும் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது மோசமான இனவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இலங்கை தேசியம், பின்னர் சிங்கள தேசியவாதமாகவும், பின் இனவாதமாகவும், பேரினவாதமாகவும் பரிணாமமுற்று ஈற்றில் அது பாசிச வடிவத்தை எட்டிவருவதை அதற்கு சமீபமாக இருந்து கவனித்து வருகிறோம்.

காலத்துக்கு காலம் பல்வேறு இனவாத அமைப்புகள் “தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதிதாக தோன்றி” வந்திருக்கிறது. இது ஒரு சுழற்சிமுறையில் நிகழ்ந்துவந்திருக்கிறது. ஆனால் அதன் போக்கிலோ அதன் காத்திரத்திலோ, அதன் உறுதியிலோ எந்தவிதத்திலும் பலவீனப்பட்டதில்லை என்பதை நாம் குறிப்பாக கவனிக்க வேண்டும். மாறாக அது தன்னை புடம்போட்டு வளர்த்து மேலும் காத்திரமாக வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு முகங்களுடன் மேலும் மோசமான கோஷங்களுடன் வளர்தேடுக்கப்பட்டே வந்திருக்கிறது. 

அனகாரிக்க தர்மபாலவின் 149 வது ஆண்டு ஜனன நினைவை சென்ற வருடம் பொதுபல சேனா பெரிய அளவில் அனுஷ்டித்த போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும், வேலைத்திட்டங்களும் மிகவும் கவனிக்கத்தக்கவை. அதன் முழுமையை விரிவஞ்சி இங்கு தவிர்க்கிறேன். இன்றைய இனவாத நடவடிக்கைகள் எல்லாமே அனகாரிக்க தர்மபாலாவின் பெயரால், அவரின் நினைவால் சபதம் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. “சிங்களவர்களே விழித்தெழுங்கள்” என்கிற அவரது பிரசித்திபெற்ற கோஷம் சகல கூட்டங்களிலும் பாவிக்கப்படுகின்றன.

நாம் சிங்கள பௌத்த பேரினவாத அரசாட்சியின்கீழ் வாழப்பணிக்கப்பட்டவர்கள் என்ற அளவில் அரசின் நிகழ்ச்சிநிரலும் பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலும் சமாந்தரமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. தேவையான இடத்தில் கைகோர்த்துக்கொள்கின்றன. அரசின் ஆசீர்வாதத்துடன், மறைமுக ஆதரவுடன் அவை நிறைவேற்றப்படுகின்றன. 

அதனால் தான் கூறுகிறோம் இந்த சிங்கள பௌத்த பேரினவாதமென்பது ஓரிரவில் மாற்றியமைக்கூடியதல்ல. அது நீண்ட கால வேலைத்திட்டத்துக்குரியது. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த ஐதீகங்களையும், புனைவுகளையும் அரசியல் நீக்கம் செய்வதென்பது வெறும் சிவில் நடவடிக்கைகளுக்கூடாக மேற்கொள்ள முடியாதது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates