Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டப் பகுதிகளில் தாய் மரண வீதத்தை குறைத்தல்

பெருந்தோட்டப் பகுதிகளில் தாய் மரண வீதத்தை குறைத்தல்


மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் தாய் மரண வீதத்தை குறைக்க துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கருத்தை கம்பளை போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி  நவாஸ் ஜிப்ரி விடுத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. தாய்  சிசு  நலன்பேணல் தொடர்பான கருத்தரங்கில் இதனைத் தெரிவித்திருக்கும்  அவர், தாய் மரண வீதத்தை பூச்சிய மட்டத்துக்கு கொண்டுவருவது தொடர்பாக சுகாதாரத்துறை அமைப்புகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தோட்டப்புறங்களில்  இடம்பெற்று வரும் தாய்மார்  மரணங்கள் சவாலாக அமைந்திருப்பதாக  குறிப்பிட்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு  புள்ளி விபரத்தின் பிரகாரம் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும் போது தாய்மார் மரணங்களின் எண்ணிக்கை  35 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் பார்க்கும் போது தாய் மரண வீதம் குறைவடைந்து செல்வது ஆரோக்கியமான அறிகுறியாக தென்படுகின்ற போதும் பெருந்தோட்டப் பகுதிகளில் ஒப்பீட்டளவில்  அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த  10 வருடங்களில்  90 சதவீதம் தாய்மார் மரணமடைவது பெருந்தோட்டப் பகுதிகளிலேயே  சம்பவித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டம் அவசியம் என்பதை  மருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டியிருக்கிறார். 

 பிரசவத்தின் போது தாய்மார் மரணமடைவதற்கு நேரடியான ,
 மறைமுகமான பல்வேறு காரணங்கள் உள்ளன.  பிரசவம் தொடர்பான சிக்கல்கள், பிரசவித்தலின் போதான பிரச்சினைகள் போன்றவை பொதுவானவையாகும். 2014 இல்  பிரசவத்தின் போது தாய்மார் மரணமடைவதற்கு முக்கிய காரணம் அதிகளவு குருதிப்பெருக்கே என்று உலக சுகாதார அமைய அறிக்கைகள் கூறுகின்றன. குருதிப் பெருக்கினால்  27 % மும் நோய்த்தொற்றால்  11 % மும் பாதுகாப்பற்ற கருச்சிதைவால் 11 % மும் பிரசவக் காலத்தின் வேறான உயர் இரத்த அழுத்தத்தால்  14 % மும் பிரசவிப்பதன் போதான இடையூறுகளால்  9 % மும்  இரத்தம் உறைதலால்  3% மும் உடலில் ஏற்கனவே இருந்துவரும் பிரச்சினைகளால்  28 % மும் மற்றும் மலேரியா, குருதிச் சோகை, இதயநோய்  போன்ற மறைமுகமான காரணிகளாலும்  தாய்மார் மரணங்கள் பிரசவ காலத்தில் சம்பவிக்கின்றன. 

இவற்றை விட சமூக ரீதியான காரணிகளும் முக்கிய காரணியாக விளங்குகின்றது. வருமானம்  அதாவது குடும்ப பொருளாதார நிலைமையும் இங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்துகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் பெண்களில் அதிக எண்ணிக்கையானோர் குறைந்தளவு ஊதியத்தைப் பெற்று வருவதுடன் அதிகளவு குடும்ப பாரத்தையும் சுமக்கின்றனர். தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணிபுரிவதுடன் பின்னர் வீட்டு வேலைகளில் ஈடுபடவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. பெருந்தோட்டப் பகுதிகளில் ஆண்கள் அதிகளவுக்கு மதுப் பழக்கத்துக்கு ஆளாகி இருப்பதால் குடும்பத்தின்  பொருளாதாரத் தேவைகளை அதாவது குடும்பப் பாரத்தை பெரும்பாலும் பெண்களே சுமக்கின்றனர். இதனால் போசாக்கான உணவுகள் கிடைப்பதில்லை. பிரசவ காலத்தின் போது தேவைப்படும் ஆரோக்கியமான உ ணவு கிடைப்பதும் போதாமல் இருப்பதுடன் வேலைப்பளு, மன அழுத்தம்  என்பனவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   ஏற்கனவே பலவீனமான நிலைமை இருக்கும் போது பிரசவ காலத்தில் தேவைப்படும் போஷாக்கு கிடைக்காதமையும் பிரசவ கால மரண ஆபத்தை தோற்றுவிக்கிறது.  

 ஐ.நா. சனத்தொகை நிதியத்தின்  2010 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம்  வளர்ந்துவரும் நாடுகளில் தாய் மரண வீதம் உப  சுகாதார பிராந்தியத்திலும் தெற்காசியாவிலுமே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெருந்தோட்டப் பகுதிகளிலேயே தாய்மார் மரண வீதம் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அப்பகுதிகளின் தாய்மார் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது தொடர்பாக அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டும்.  அப் பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற சுகாதாரத் துறை நிபுணர்களை அதிகளவில் ஈடுபடுத்தி தாய்மாருக்கு விழிப்புணர்வூட்டுவதுடன் உரிய 
சிகிச்சைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுகாதாரப் பராமரிப்பு, குடும்பநலத் திட்டங்கள், அவசர சிகிச்சை நிலையங்கள் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும். யாவற்றுக்கும் மேலாக பெருந்தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை சுகாதார வசதிகள், தொழில் வாய்ப்புகள், கல்வி வசதிகளை மேம்படுத்துவதன் மூலம்  அவர்களின் வாழ்க்கைத் தரத்தை நாட்டின் ஏனைய  பிராந்தியங்களுக்கு சமாந்தரமாக உயர்த்தும் போது தாய் மரண வீதம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். 

ஐ.நா.வின் புத்தாயிரமாமாண்டு  அபிவிருத்தி இலக்கில் ஐந்தாவதாக இருப்பது தாய்மார் மரணவீதத்தை  1990 2015 காலப் பகுதிக்குள் உலகில்  மூன்றிலொன்றாக குறைத்தல் ஆகும். அரசாங்கம் இந்த இலக்கை எட்டுவதற்கு அதிகளவு நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளும் அதே சமயம் உள்ளூராட்சி நிர்வாகங்களும் இதில் கூடிய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நிறையுணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், பிரசவ காலத்தில் தாய்மாருக்கான அனுகூலங்களை அதிகரித்தல் போன்றவை  அவசியத் தேவையாக காணப்படுகின்றன. 1998 இன் பின்னர் ஒரு சில பெருந்தோட்டங்களைத் தவிர ஏனையவை தனியார் துறையினராலேயே நிர்வகிக்கப்படுகின்றன. இதனால் பெருந்தோட்டப் பகுதியின் சுகாதார நலன்புரி சேவைகளில் அதிகளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அரச மருத்துவமனைகளுக்குச் செல்வதாயின் தாய்மார் அதிகளவு தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலைமையும் காணப்படுகிறது.   இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் அவசர சிகிச்சை மற்றும் பராமரிப்பு நிலையங்களை நிறுவி அங்கு போதிய மருத்துவர்களையும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தாய் மரணவீதத்தை பூச்சியமாக்கும் இலக்கை எட்ட முடியும்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates