நாடு முழுவதும் மிகவும் சுர்ந்து
கவனித்துக் கொண்டிருந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது.
அபிவிருத்தியை காட்டி மக்களை வென்றுவிடலாம் என்று நினைத்த மஹிந்த ராஜபக்ஷ
அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியை ஊவா மாகாண மக்கள்
அளித்துள்ளனர் என்பதே உண்மை.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதிலும் வென்று தனது பதவி காலத்தை
மீண்டும் ஒருமுறை நீடித்துக் கொள்ளலாம் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பு
தேர்தல் முடுவுகள் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை வெற்றி
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை
மாவட்டத்தில் 9 ஆசனங்களையும் மொனராகலை மாவட்டத்தில் 8 ஆசனங்களையும் இரண்டு போனஸ்
ஆசனங்களையும் வென்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தம் 19 ஆசனங்களை
வென்று ஊவா மாகாணத்தில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு ஊவா
மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்திற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி
ஏற்பட்டுள்ளது. கடந்தமுறை 25 ஆசனங்களைப் பெற்று ஆட்சி அமைத்த ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு இம்முறை 19 ஆசனங்களை மட்டுமே வென்று 6 ஆசனங்களை இழந்த
நிலையில் ஆட்சி அமைக்கத் தகுதி பெற்றுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் கொன்று
குவிக்கப்பட்ட 2009 யுத்த வெற்றியை கோஷ ஆயுதமாக பயன்படுத்தி இனி தேர்தலில்
வெற்றிபெற முடியாது என்று தெளிவான செய்தியை ஊவா மக்கள் இந்தத் தேர்தல் முடிவுகள்
மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இனவாதம், ஊழல், மோசடி, தன்னிச்சையான ஆட்சி போன்றவற்றின் மூலம் ஊழல் நிரம்பிய அபிவிருத்தி, உழைப்பாளிகளின் வயிற்றில் அடித்தல், கடன்மேல் கடன்பட்டு குடும்ப ஆட்சியை உலகமயமாக்க நினைத்தல் போன்றவை
இனி நடக்காத காரியம்; என்பதை ஊவா மக்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஆக மொத்தத்தில் அரசாங்கத்திற்கு ஊவா
மாகாண மக்கள் வழங்கியுள்ளது எச்சரிக்கையுடன் கூடிய வெற்றியே தவிர ஆடம்பர வெற்றி
கிடையாது என்பதை அரசாங்கம் நன்கு உணர வேண்டும்.
எதிர்கட்சிகளின் எழுச்சி இம்முறை ஊவா மாகாண சபைத் தேர்தலில் எதிர்கட்சிகளான
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் அரசாங்கத்திற்கு சிம்ம
சொப்பனமாக விளங்கினார்கள் என்பதில் ஐயமில்லை. அரசாங்கத்தின் பலத்தை குறைக்க
ஜனநாயகக் கட்சியும் பங்கு வகித்தியுள்ளமை மறுக்க முடியாது. பதுளையில் 8 ஆசனங்களை
ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் வென்றதன் மூலம்
ஊவாவில் ஆளும் - எதிர் கட்சிகள் சமநிலை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம்
வாக்குகள் அடிப்படையில் நோக்கினால் ஆளும் தரப்பைவிட ஐதேக-ஜேவிபி இணைந்த எதிர்தரப்பு
9777 வாக்குகளைப் பெற்று பதுளையை வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம்.
கடந்தமுறை தேர்தலில் 129,144 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை மாத்திரம் வென்ற
ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 274,773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களை
வென்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு இம்முறை 6 ஆசனங்கள் அதிகம் கிடைத்துள்ளன.
கடந்த 2009 தேர்தலில் 14,639 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை வென்ற மக்கள் விடுதலை
முன்னணி இம்முறை 36,580 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.
ஊவா தேர்தலில் புதிதாக களமிறங்கிய சரத்
பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி 6076 வாக்குகளை பெற்றுள்ள போதும் ஆசனம் எதனையும்
வெல்லவில்லை.
ஊவா தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளின்
பிரதான பிரச்சார கோஷங்களாக ஊவாவில் வறுமை அதிகரிப்பு, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவின் செயற்திறனின்மை, ஊவாவில் குடும்ப ஆட்சி, ஊவாவில் பார்காரர்கள்
அரசியலில், ஊவா வறட்சி, அபிவிருத்தியில் ஊவா புறக்கணிப்பு, நாட்டில் ஊழல் ஆட்சி மாற்றம் அராஜக ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல இருந்த
நிலையில் ஊவா மாகாண மக்கள் அதனை ஏற்று வாக்களித்துள்ளதை ஜனநாயகத்திற்கு வலுசேர்த்துள்ளது.
பிளவுபட்டிருந்த ஐக்கிய தேசியக்
கட்சியின் பிரதான இரு தலைவர்களான ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஒன்றுசேர்ந்தமை மக்கள் விடுதலை
முன்னணியின் தலைமை மாற்றத்திற்கு பின்பு அக்கட்சியின் எழுச்சி , சரத் பொன்சேகா தரப்பினரின் அரசாங்க எதிர் பிரச்சாரம் போன்றவை எதிர்கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்க ஏதுவான
காரணிகளாக அமைந்தன. ஆக எதிர்வரும் தேர்தல்களிலும் எதிர்கட்சிகளின் எழுச்சி
மேலெழும் என்பதில் ஐயமில்லை.
தமிழர்களின் வாக்குகளால் வெற்றிக் கொடி
நாட்டிய அரசாங்கம்
ஊவா மாகாண சபைத் தேர்தலில் இந்த
அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற பிரதான கூட்டுத் தரப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியில் இணைந்து போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன காரணம் என்று
சொன்னால் அதனை மறுப்பதற்கு இல்லை. பதுளை மாவட்டத்தில் தமிழர்கள் செறிந்து வாழும்
பசறை, பண்டாரவளை, ஹப்புத்தளை போன்ற தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணி வெற்றிபெற்றது. பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்;ட தமிழ் வேட்பாளர்களான செந்தில் தொண்டமான் (இதொக), வடிவேல் சுரேஷ் (ஐமசுமு), ஆறுமுகம் கணேசமூர்த்தி
(இதொக) ஆகியோர் அதிக விருப்பு
வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதுடன் ஆறுமுகம் சிவலிங்கம் (இதொக), அரவிந்தகுமார் (மமமு), ராஜமாணிக்கம் (தொதேச) போன்றோர் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தின் வெற்றிக்கு
வித்திட்டனர். இதன்மூலம் 2009 ஊவா தேர்தலில் இரண்டாக
இருந்த தமிழர் பிரதிநிதித்துவம்
இம்முறை தேர்தல் முடிவுகள் மூலம் நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்கு
பிரதிநிதித்துவத்தை ஐந்தாக மாற்றிக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் உள்ளதை சொல்லியாக
வேண்டும். ஆக ஜனநாயக விரோத தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்ட போதும் தமிழ் மக்கள் தமிழர்கள் என்ற உணர்வில் ஒன்றிணைந்து
வாக்களித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் பிரதிநிதிகள் மற்றும்
அவர்கள் சார்ந்த கட்சி, தொழிற்சங்கங்களை ஊவா தமிழர்கள்
வலுவடையச் செய்துள்ளனர். மக்களின் இந்த உபகாரத்திற்கு ஊவா
மாகாணத் தமிழ் பிரதிநிதிகள் எவ்வாறு பிரதிஉபகாரம் செய்யப் போகிறார்கள் என்பதை
பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பேரம் பேசும் சக்தியை பயன்படுத்துமா
தமிழ் தலைமைகள்
இலங்கை தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால்
உள்ளுராட்சி, மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் சிறுபான்மை இனமாகிய தமிழ்,
முஸ்லிம் மக்கள் பிரதான பெரிய கட்சிகளின்
ஆட்டையை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை மறுக்க
முடியாது. அண்மையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் இருந்தது. அதேபோன்று 1994ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் ஆட்சி அமைக்க மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் இருந்துள்ளார்.
இப்படி இன்னும் பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே
போகலாம். இப்படியானதொரு சந்தர்ப்பம் அண்மையில் நடைபெற்ற மத்திய மாகாண சபைத் தேர்தலில்
வந்தது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு கண்டி (01), மாத்தளை (01)
மற்றும் நுவரெலியா (06) மாவட்டங்களில் 8
ஆசனங்கள் கிடைத்தன. தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் கிடைத்தன. மலையக மக்கள்
முன்னணிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. ஆக மூன்று கட்சிகளும் மத்திய மாகாணத்தில் 12
ஆசனங்களை வென்றன. ஆனால் இவர்களால் மத்திய மாகாணத்தில் திட்டமிட்டு பறிக்கப்பட்ட
தமிழ் கல்வி அமைச்சை மீளப் பெற முடியவில்லை. இதனால் நன்மை ஏற்பட்டுள்ளதென அரசியல்
நோக்கத்திற்காக பலர் கூறுகின்ற
போதும் முக்கியமான பல அதிகாரங்களை, தேவைகளை இழக்க நேரிட்டுள்ளதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
இந்த சாபக்கேடு இன்று மலையக மக்களின்
இரண்டாவது பெரும்பான்மை நிலமான பதுளையிலும் குடிகொண்டு விடுமோ என்ற அச்சம்
எழுந்துள்ளது. ஊவா தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அது ஐந்தாக மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஊவாவில் தமிழர்களின்
வாக்கு ஆளும் அரசாங்கத்தின் வீழ்ச்சியை பெருமளவு குறைத்துள்ளது. எனவே வரவாற்றில்
உள்ளது போன்று ஊவாவிலும் இம்முறை மலையக மக்கள் தீர்மானிக்கும் சக்தியாக
உருவெடுத்துள்ளனர்.
வரலாற்றில் இந்த தீர்மானிக்கும்
சக்தியை வைத்துக் கொண்டு மறைந்த தலைவர்கள் ஒருசில வெற்றிகளையே பெற்றுள்ளதுடன்
தோல்விகள் அல்லது பயன்படுத்தாமை அதிகமாகும். எனவே இதனை கருத்தில் எடுத்து மத்திய
மாகாணத்தில் விட்ட தமிழ் கல்வி அமைச்சு எனும் கோட்டையை ஊவாவில் பற்றிப்பிடிக்க
மலையக தலைமைகள் முன்வர வேண்டும். கட்சி, தொழிற்சங்க
பாகுபாடின்றி மலையக அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சைப்
பெற வேண்டும். பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இது ஒரு சாதாரண
காரியம் இல்லாவிடினும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சாதிக்க முடியும். ஊவாவில்
தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை அவர்களது தலைவர்கள் சரியான வகையில் பயன்படுத்துவார்களா
என பரீட்சித்துப் பார்ப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். வெற்றிக்களிப்பில்
துவண்டுவிடாது எழுச்சி கொண்டு ஊவாவிற்கு தமிழ் கல்வி அமைச்சைப் பெற்று மலையகத்தை
கல்வியில் முன்னேற்றுவதன் மூலம் சமூகத்தில் மலையக மக்களின் அந்தஸ்த்தை மேலும்
வலுவடையச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கட்டுரை மூலம் விடுத்து
வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தோல்வி கண்டவர்களுக்கு உட்சாகத்தை
ஊட்டி முடிக்கிறேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...