Headlines News :
முகப்பு » , , , , » ஆர்தர் சி. கிளார்க்: அறிபுனை எழுத்துலகின் ஜாம்பவான் - என்.சரவணன்

ஆர்தர் சி. கிளார்க்: அறிபுனை எழுத்துலகின் ஜாம்பவான் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 25

ஆர்தர் சி. கிளார்க் (Arthur Charles Clarke 1917 - 2008) உலகின் தலைசிறந்த அறிபுனை எழுத்தாளராக அறியப்படுபவர். இங்கிலாந்தில் பிறந்து 50 ஆண்டுகளாக இலங்கையிலேயே வாழ்ந்து தனது கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்து விட்டு இலங்கையிலேயே மரணமெய்தியவர். இந்த ஆண்டு அவரது பிறந்த தின நூற்றாண்டு எட்டுகிறது. 

16.12.1917ஆம் ஆண்டு  கிளார்க் இங்கிலாந்தில் சொம்மர்செட் எனும் இடத்தில் பிறந்த தனது 13வது வயதிலேயே தந்தையை இழந்தவர். 4 குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் மூத்தவரான இவரின் தந்தை உழவராகவும், தாய் அஞ்சல் நிலையத்தில் தந்தி அனுப்புனராகவும் பணிபுரிந்தனர்.  சிறு வயதிலேயே கற்பனை வளம் நிறைந்த கிளார்க் வானியலில் மிகுந்த ஆர்வும் ஈடுபாடும் கொண்டவர். அவரது சிறு வயதில் அமெரிக்க அறிவியல் நூல்களை விரும்பி படித்துவருவார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடருமளவுக்கு குடும்ப வசதி போதாமையால் 19 வயதிலேயே கல்வித் திணைக்களத்தில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி விட்டார்.

17ஆவது வயதிலேயே இங்கிலாந்தின் கோள்களியல் கழகத்தில் சேர்ந்து பிற்காலங்களில் அதன் பொருளாளராகவும் பின்னர் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 2ஆம் உலக யுத்தக் காலத்தில் தனது பணியிலிருந்து விலகி ரோயல் வான் படையில் சேர்ந்து அங்கு இலத்திரனியல் துறையில் பயிற்சிபெற்று அத்துறையிலேயே பயிற்றுவிப்பாளரானார். இங்கிலாந்தில் அப்போது இருந்த அமெரிக்க தரைக் கட்டுப்பாட்டுப் ராடார் பிரிவில் பணியாற்றியதில் கிடைத்த அனுபவம் அவரை புதினங்கள் எழுதுவதிலிருந்து அறிவியல் விடயத்தில் ஆர்வம் கொள்ள வைத்தது. அங்கிருந்தும் விலகி லண்டன் கிங்க்ஸ் கல்லூரியில் இயற்பியல், கணக்கியல் துறையில் கற்று பின்னர் வானவியல் கற்கையை முடித்தார்.

இலங்கையரானார்
புதினங்களை எழுதுவதும் அதனை அறிவியலோடு இணைத்து எழுதும் “அறிபுனை” துறைக்குள் ஈடுபாடு காட்டத் தொடங்கிய அவர் “சயன்ஸ் எப்ஸ்ட்றேக்ட்” (Science Abstracts) எனும் சஞ்சிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். அந்தத் துறைதான் தனது கற்பனையையும், சிந்தனையையும், அறிவியல் ஆற்றலையும் ஒன்று சேர பிரயோகித்து எழுத போதுமான வாய்ப்பை வழங்கிற்று. 1951இல் அவர் முழு நேர எழுத்தாளரானார்.

1953இல் அவர் திருமணமாகி 10 ஆண்டுகளில் மணமுறிவு செய்துகொண்டார். தனது சிந்தனையையும், கற்பனையையும் எழுதத் தேர்ந்த அமைதியான இடமாக இலங்கையைத் தேர்வு செய்து 39 வருட தாய்நாட்டு வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு 1956 இலிருந்து வாழத் தொடங்கி விட்டார். 1962இல் அவர் போலியோ நோய்க்கு ஆளாகி பின்னர் தனது எஞ்சிய வாழ்க்கையை அவர் நாற்காலி வண்டிலிலேயே கழித்தார்.

கிளார்க் இருபதாம் நூற்றாண்டு அறிபுனை எழுத்துலகின் (science fiction writers) மூன்று திரிமூர்த்திகளில் ஒருவராகக் அறியப்படுகிறார். மற்ற இருவர்கள் ஐஸாக் அசிமாவ் (Isaac Asimov), ராபர்ட் ஹைன்லைன் (Robert Heinlein).

தகவல் பரிமாற்றத்துக்காக செயற்கைக்கோள்களை உச்ச அளவில் இன்று பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருகிற போதும் அந்த சிந்தனையின் பிதாமகராக அழைக்கப்படுபவர் கிளார்க் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி  உலகின் தகவல் பரிமாற்றத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாற்றலாம் என்கிற கோட்பாட்டினை அப்போதே, 40களிலேயே எதிர்வு கூறியவர் அவர்.

பூமியிலிருந்து பார்க்கும்பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதி எனப்படும் செயற்கைக்கோள்களை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை 1945-இல் முன்வைத்துவிட்டார் கிளார்க். எனவே அவரின் நினைவாக, (புவிநிலை வலயம் -Geostationary orbit) புவியிடமிருந்து மாறாச் சுற்றுப்பாதைகளை கிளார்க் வலயம் என்றும் அழைப்பர்.

மனித இனம் அழிந்துவிடும் எனும் கருத்தில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. மனித இனம் தப்பிப் பிழைத்திட வழியைக் கண்டு பிடித்து விடும் என்பதை உறுதியாக நம்புபவர். பிரபஞ்சம் பற்றிய அவரின் கற்பனைகளை விஞ்ஞான நோக்கில் முன்வைத்ததையே அவர் செய்தார்.

விண்வெளி, வேற்றுக்கிரக வாசிகள் போன்றன பற்றி அவர் ஏராளமான அறிபுனை கதைகளை ஆக்கியிருக்கிறார். அவற்றில் கணிசமானவை திரைப்படங்களாக வெளிவந்திருக்கின்றன. 

100 புத்தகங்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும், அறிவியல் கோட்பாட்டையுமே தமது எழுத்துத்துறைக்கு அதிகளவு பயன்படுத்தியவர். அவற்றில் பல தூரதிருஸ்டிமிக்க அறிவியல் எதிர்வுகூரல்கள். அவை வெறுமனே கற்பனையுடன் சுருங்கிவிடாது நடைமுறை சாத்தியமாக்கப்பட்டுள்ளன. அவை குறித்து ஆயிரக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கிளார்க்கின் சிறுகதைகளும், சில நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

1945ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வெளியான வயர்லஸ் வேர்ல்ட் என்கிற பத்திரிகையில் கிளார்க் எழுதிய கட்டுரையில் “பூமியின் குறித்த உயரத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோள்கள் சுற்றிவரும்” என்று எழுதினார்.

“சந்திரன் பூமியை சுற்றிவருவதைப் போல மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களும் ஒரு நாள் பூமியைச் சுற்றி வரும்” என்றார். இன்று உலக தொடர்பாடல் வலைப்பின்னலே செயற்கைக் கோள்களில் தங்கியிருக்கும் அளவுக்கு அந்த எதிர்வுகூறல் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாம் வாழும் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலும் மனிதனின் தலைவிதி விரிந்துள்ளது என்ற தூரநோக்குமிக்க கருத்தை  உறுதியாக முன்னிறுத்தியவர். 1968 இல் கிளார்க் எழுதிய 'எ ஸ்பேஸ் ஒடிசி' (A Space Odyssey) என்ற புதினமும் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட '2001: எ ஸ்பேஸ் ஒடிசி' என்ற திரைப்படமும் கிளார்க்கின் இந்தத் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகளாக உள்ளன. ஹொலிவூடின் தலையாய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. 1968ஆம் ஆண்டுக்கான 4 ஒஸ்கார் விருதுகளுக்காக அது தெரிவு செய்யப்பட்டது. சிறந்த திரைக்கதைக்கான விருதுக்கும், சிறந்த இயக்குனருக்கான விருதுக்காகவும் அந்த திரைப்படத்துக்காக கிளார்க் தெரிவாகியிருந்தார். அந்த நூலில் அவர் வெளியிட்டிருந்த தீர்க்கதரிசன எதிர்வுகூறல்களை தனியான பட்டியல்களாக பலரது ஆய்வுக்கட்டுரைகளில் வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த நூலில் எழுதிய எதிர்வுகூரல்களில் ஒன்று 2016 ஆம் ஆண்டு உலகத்தின் எல்லா பண நோட்டுகளும் செல்லுபடியற்றதாக ஆகி “மணி மெகாவாட்” (Megawatt Hour) புதிய பணமாகும்...” என்கிறார். இன்று பணப்புழக்கம் இலத்திரனியல் செயல்பாடாக ஆகியிருப்பதை ஏறத்தாள அரை நூற்றாண்டுக்கு முன்னரே அறிவித்திருக்கிறார் என்பது ஆச்சரியப்படுத்துகிறது. 2020இல் செயற்கை நுண்ணறிவு  (Artificial Intelligence) மனித அறிவை மேவும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடரான “ஸ்டார் ட்ரெக்” (Star Trek) உருவாவதற்கான கதைக்கருவுக்கு கிளார்க் 1964இல் எழுதிய “Profiles of the Future” என்கிற நூலையே ஆதாரமாக இருந்தது என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

கற்பனைகள் திரைப்படங்களாக
லெனார்ட் வுல்ப் எழுதிய “Village in the jungle” நூல் 1980இல் “பெத்தேகம” எனும் சிங்களத் திரைப்படமாக வெளிவந்த போது லெனார்ட் வுல்ப்பின் பாத்திரத்தில் (ஆங்கிலேய நீதிபதியாக) நடித்தவர் ஆதர் சீ கிளார்க்.

திரைப்படங்களாக வெளியான ஆதர் சீ கிளார்க்கின் கதைகள் பற்றிய பட்டியலை பிரபல  http://www.imdb.com இணையத்தளத்தில் காணலாம். மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  அவர் எழுதி வெளியான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுகளின் பட்டியலையும் அதில் காணலாம். 42 விவரணத் திரைப்படங்களில் அவர் பங்குபற்றியிருக்கிறார். அவற்றில் “Arthur C. Clarke: The Man Who Saw the Future” (ஆதர் சீ கிளார்க்: எதிர்காலத்தைக் கண்ட மனிதன்) என்கிற திரைப்படம் குறிப்பிடத்தக்கது. அவரது அண்டசாகச, வெற்று கிரக கதைகளை மையப்படுத்திய வீடியோ விளையாட்டுகள் ஆரம்பத்திலேயே வெளிவரத் தொடங்கிவிட்டன. 

1951 இல் கிளார்க் எழுதிய வேற்றுலக கண்டுபிடிப்பு (The Exploration of Space)  என்கிற நூல் பூமியிலிருந்து வேற்றுக் கிரகங்களுக்கான மனிதர்கள் பயணம் பற்றிய கற்பனைகளை உள்ளடக்கியது. ஆனால் 1969இல் சந்திரனில் மனிதன் கால்பதித்து அது சாத்தியமென உண்மையிலேயே நிரூபிக்கப்பட்டது. 1969 யூலை 20ஆம் திகதி அப்பொல்லோ விண்வெளி சந்திரனில் தரையிறங்குவதை அமெரிக்க CBS தொலைகாட்சியில் ஆர்தர் சீ கிளார்க்கு வர்ணனை வழங்கினார். சாதாரண மக்கள் சந்திரனுக்கு மட்டுமல்ல அதற்கப்பாலும் பயணிப்பார்கள் என்றும் எப்போதோ எழுதினார். வேற்றுக் கிரகவாசிகளின் சாத்தியப்பாடு குறித்த ஆய்வுகளுக்கு அவரது எழுத்துக்கள் நிறையவே தூண்டியிருக்கின்றன.

எப்போதும் சோராத வாசிப்புப் பழக்கமும், முறிவுறாத தேடலும், இடைவிடாத சிந்தனா திறனும் அவரது கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக விளங்கின.

கிளார்க் ஆழ்கடல் நீச்சலில் (Scuba diving) அனுபவமும் ஆர்வமும் மிக்கவர். அவரது போலியோ நோயினால் அதனை தொடர முடியாதிருந்தபோதும் ஹிக்கடுவவில் “ஆர்தர் சீ கிளார்க் முக்குளிப்பு பயிற்சியகம்” ஒன்றையும் இயக்கி வந்தார். சுனாமியின் போது அது முற்றாக அழிந்து போனது. சுனாமி அழிவின் போது இலங்கைக்கு உதவும்படி உலகம் முழுவதும் வேண்டினார்.

1957 ஆம் ஆண்டு அவர் எழுதிய “ஆழ எல்லை” (The deep range) என்கிற நூலில் அவர் இப்படி எழுதுகிறார்.

“இது 2050ஆம் ஆண்டு. இப்போது கடவுளைப் போதிக்கும் சகல மதங்களும் காலாவதியாகின்றன. பௌத்தத்துடன் போட்டியிட்ட ஏனைய மதங்களும் வெற்றிபெறவில்லை. பலவீனமடைந்தன. இனிமேலும் மனிதகுலத்தை ஆசுவாசப்படுத்தக் கூடிய ஒரே மார்க்கமாக பௌத்தம் நிலைபெறுகிறது.” இந்த கருத்து பல மதத்தவர்களுக்கும் கடுப்பை ஏற்படுத்திய போதும் இலங்கை பௌத்தர்களை குளிரச் செய்தது என்பது உண்மையே. 

முதல் வர்ண திரைப்படம் – “ரன்முதுதுவ”
கிளார்க் இலங்கையில் வாழ தீர்மானித்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் ஆழ்கடல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திட்டங்களே.

1956 ஆம் ஆண்டு ஆர்தர் சி. கிளார்க் தனது நண்பர்களான மைக் வில்சன், ரொட்னி ஜோங்கல்ஸ் ஆகியோரின் உதவியுடன் திருக்கோணேஸ்வரக் கடலினடியில் செய்த ஆராய்ச்சியின் பயனாக 3000 வருடங்களுக்கும் மேற்பட்ட மிகப் பழமை வாய்ந்த ஆலயம் கடலுக்கடியில் இருப்பதைக் கண்டுபிடித்தார். கோவிலின் தூண்களும், பிரமாண்டமான மணிகளும், விளக்குகளும், கோயிலின் தளங்களும் தெரிவதை உறுதிப்படுத்தினார். அதுமட்டுமன்றி அந்த பகுதியில் இருக்கும் நீரோட்டம் குறித்தும் பல குறிப்புகளை எழுதினார். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாக்கும் பல திட்டங்களை ஆதர சீ கிளார்க்கின் யோசனைகளின் காரணமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.


அந்த ஆழ்கடலில் இராவணன் வணங்கியதாக கருதப்படும் சுயம்புலிங்கத்தை  மைக் வில்சன் கண்டெடுத்தார். இந்த விபரங்களை பற்றி ஆதர் சீ கிளார்க் எழுதிய “The Reefs of Taprobane” (இலங்கையின் ஆழ்கடல்) என்கிற நூல் என்கிற நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது. இந்த ஆய்வுகளை மேலும் விஸ்தரிப்பதற்கு அவர்களிடம் போதிய பணம் இருக்கவில்லை எனவே ஒரு திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்தனர். அதன் விளைவு தான் “ரன் முது துவ” என்கிற பெயரில் 1960 இல் ஒரு சிங்கள மொழி திரைப்படத்தை உருவாக்கினர். ஆதர் சீ கிளார்க்கும்  மற்றும் சேஷா பலியக்கார என்கிற சிங்கள தயாரிப்பாளரும் அதனைத் தயாரிக்க அவரின் நண்பர் மைக் வில்சன் இயக்கினார். காமினி பொன்சேகா, ஜோ அபேவிக்கிரம போன்ற பிரபல நடிகர்கள் நடித்த மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். அதுமட்டுமன்றி சிங்கள சினிமாவின் முக்கிய திருப்பம் அது. இலங்கையின் முதலாவது வர்ண திரைப்படமும் அது தான். அதை தயாரித்தவர் ஆதர் சீ கிளார்க்.

திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வருமானமும் அவர்களுக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி அவர்கள் திருகோணமலை இராவணன் வெட்டு பகுதியைச் சூழ ஆள் கடலில் தமது ஆய்வை தொடர்ந்தனர். மேலும் பல உண்மைகளை அறிந்தனர். அவர் புதைந்துபோயிருந்த கோவில் பொருட்களை வெளிக்கொணர்ந்த அடுத்ததடுத்த நாட்களில் அவர் போலியோ நோய்க்கு இலக்காகி சக்கர நாற்காலியின் துணையிலேயே வாழ் நாள் முழுதும்  கழித்தார். பின்னர் தாம் அறிந்தவற்றை “The Treasure of the Great Reef” (மாபெரும் ஆழ்கடல் புதையல்) என்கிற பெயரில் இன்னொரு நூலையும் எழுதி அதை ஒரு விவரணத் திரைப்படமாகவும் கிளார்க் உருவாக்கினார். 

1989 இல் இங்கிலாந்து மகாராணியின் பிறந்த தினத்தின் போது “பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் கட்டளைத் தளபதி” ( Commander of the Order of the British Empire (CBE)) என்கிற உயரிய விருது கிளார்க்குக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு உலக விண்வெளிப் பல்கலைக்கழகத்தின் முதன்மை வேந்தராக பதவி கிடைத்தது. 1979 – 2002 வரை இலங்கையில் கொழும்பு மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்தார். அவர் கையால் பட்டம் பெற்ற பட்டதாரிகள் இன்னமும் அதனை தமது பெரும்பேறாக பெருமைகொள்கின்றனர். விஞ்ஞானத்துக்கான இவரின் சேவையை பாராட்டி 2000ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் உயரிய பட்டமான 'நயிட்' பட்டம் வழங்கி கௌரவித்தார். 1994ஆம் ஆண்டு சர்வதேச நோபல் சமாதானப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


இலங்கையில் அவருக்கு 1986 இல் வித்யாஜோதி ஜனாதிபதி விருதும், 2005ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா விருதும் அதே ஆண்டு “ஸ்ரீலங்காபிமணி” என்கிற உயரிய அரச விருதும் வழங்கப்பட்டது.

அவரது இறுதிக் காலத்தில் பாலியல் துஷ்பிரயோக அவதூறு குற்றச்சாட்டை சுமத்தி கிளார்க்கின் பெயருக்கு களங்கம் விளைவித்த ஊடகங்கள் அவரிடம் பின்னர் தமது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

அவருக்கு கிடைத்த பரிசுப் பணத்தைக் கொண்டு அவர் ஆதர் சீ கிளார்க் நிலையத்தை இலங்கையில் (கட்டுபெத்தவில்) உருவாக்கி நவீன விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக அதனை கையளித்தார். இன்று அது விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயக்கபடுகிறது.

1990களின் இறுதியில் அவர் தனது தலைமயிர் இழைகளை விண்வெளியில் சேர்ப்பிப்பதற்காக ஆராய்ச்சி நிறுவனமொன்றுக்கு (AERO Astro Corporation) வழங்கியிருந்தார். மில்லியன் வருடங்களுக்குப் பின்னராயினும் ஒரு சூப்பர் நாகரிகம் தோன்றுகையில் அவர்களுக்கு இது கிடைத்து நவீன மரபியல் ஆய்வு முயற்சிக்கு உதவக் கூடும் என்று நம்பினார்.


“விடைபெறுகிறேன்”
2007ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கிளார்க் தான் சீக்கிரம் இறக்கப்போவதை அறிந்திருந்தார். அந்த ஆண்டு தனது 90வது வயது பிறந்த நாளின் போது தனது அபிமானிகளுக்கும், மாணவர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் “விடைபெறுகிறேன்” (Good bye) என்று வீடியோ ஒலிப்பதிவின் மூலம் வெளிப்படுத்தினார். தனது பிறந்த நாள் செய்தியாக இனமோதல் வன்முறைகளினால் அல்லலுறும் இலங்கைத்தீவில் நிரந்தர சமாதானம் மலரவேண்டுமென்பதே தனது இறுதி ஆசைகளில் ஒன்று என்று தனது ஆதங்கத்தினை வெளியிட்டிருந்தார். அவரின் அந்த இறுதி பிறந்த நாள் விழாவின் போது சிறப்பு அதிதியாக வந்தவர் 1965 ஆம் ஆண்டு முதன் முதலில் விண்வெளியில் இறங்கி நடந்த புகழ்பெற்ற ரஷ்ய வானியல் விஞ்ஞானியான டாக்டர் அலெக்சி லியோனொவ். கிளார்க் அதற்கு முன்னர் அவரது “ஒடிஸ்ஸி” நூலை லியோனொவுக்குத் தான் அர்ப்பணித்திருந்தார்.


அதன் பின் ஒரு சில மாதங்களிலேயே; உலகின் நவீன வளர்ச்சியை மெய்ப்பிப்பதற்காக தனது கற்பனைகளை வழங்கிய அவர் தனது கனவுகளை 19.03.2008 அன்று நிறுத்திக்கொண்டார். அவரது போலியோ நோயினால் ஏற்கெனவே பக்கவிளைவாக இருந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொழும்பில் மரணமானார். இலங்கை வழக்கப்படி அவரின் இறுதி விருப்பப்படி மதச்சார்பற்ற ரீதியில் அவர் வழியனுப்பப்பட்டார். இலங்கைக்கு தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துவதில் அதீத பிரயத்தனம் செய்த அவருக்காக சகல தொலைக்காட்சி, மற்றும் வானொலிச் சேவைகள் 3 நிமிடங்கள் அமைதியாக நிறுத்தி கௌரவம் செலுத்தின. 



Share this post :

+ comments + 1 comments

3:46 PM

Very use full essay about Dr.Arthur Charles Clarke

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates