இம்மாதம் இருபதாம் திகதி முழு இலங்கைத்
தேசமும் எதிர்பார்த்திருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளன.
ஊவா மாகாண சபைத் தேர்தல் வழமை போன்று ஒரு மாகாண சபைத் தேர்தல் தான். ஆனாலும் அத்
தேர்தல் தொடர்பில் அரசியல் சக்தியை மக்கள் அதிகம் எதிர்பார்த்த வண்ணமுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டில் நடந்து முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது இருபத்தி
ஐந்து (25) ஆசனங்களைக் கைப்பற்றி மக்களின் பேராதரவுடன்
பலமானதொரு மாகாண சபை ஆட்சியை அமைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்கனவே தனக்கு கிடைத்த பெரும்பான்மை பலத்தை இம்முறை
இடம்பெறும் தேர்தலில் தக்க வைத்துக்கொள்ளுமா ? என்ற பெரும் கேள்வியை எல்லா ஊடகங்களும் பலமாக எழுப்புவதைக் காணலாம்.
இந்நிலையில் இத் தேர்தல் மும்முனைப் போட்டியாக மாறி விட்டது.
ஆளும் கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும்
கூட நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி இந்நாட்டில் மூன்றாவது
அரசியல் சக்தியாக மாறியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இவைகளுக்கிடையிலான
ஆடுகளமாக ஊவா மாகாண சபை தேர்தல் மாறி விட்டது.
தற்போதுள்ள ஆளும் கட்சியைப் பொறுத்த
மட்டில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றுக்கான ஒரு முன்னோடித் தேர்தலாகவும் ஆளும் அரசாங்கத்தின்
செல்வாக்கை நாடி பிடித்துப் பார்க்கும் ஒரு பரீட்சைக் களமாகவும் இத் தேர்தலை
பார்க்க முடியும்.
ஐக்கிய தேசியக் கட்சியை (U.N.P)
பொறுத்தமட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இருபத்து
நான்கு (24) தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்
தோற்றுப் போன அக் கட்சி தனது இறுதி மூச்சுக்காக இத் தேர்தலை பயன்படுத்துகின்றது.
அதுவும் இறுதிக் கட்டத்தில் சஜித் பிரேமதாஸவுக்கு
பிரதித் தலைவர் என்ற கிரீடத்தை சூட்டி ஆளும் கட்சியை தோற்கடித்து அரசியல் அதிகாரத்தைப்
பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாக ஊவா மாகாண சபைத் தேர்தலை அரசியல் ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த
காலங்களில் அரசியல் பின்னடைவைச் சந்தித்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தற்போது
அனுர குமார திஸாநாயக்க தலைமையில் புத்தாக்கம் பெற்று இத் தேர்தலில் குறிப்பிடத்தக்க
ஆசனங்களைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இவை யாவற்றுக்கும் மேலாக பதுளை
மாவட்டம் கணிசமான மலையக மக்களின் வாக்குகளைக் கொண்ட ஒரு தேர்தல் மாவட்டமாகும். ஜனாதிபதி
தலைமையிலான அரசாங்கம் இம் மாவட்டத்திலுள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளில் பெரும்பகுதியை
கைப்பற்றினால் மாத்திரமே பெரும்பான்மை பலத்துடன் மாகாண சபை ஆட்சியைப் பிடிக்க
முடியும்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அரசியல்
கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் அரசுடன் இருந்தாலும் இந்த ஆளும் அரசுடன்
இருந்து செயற்படும் சிங்கள பௌத்த கடும் போக்குவாதிகளின் நடவடிக்கைகள் தொடர்பில்
சிறுபான்மையின மக்கள் அச்சமும் கவலையும் அடைந்துள்ள நிலையில் சிறுபான்மை மக்களின்
வாக்குகள் வெற்றிலைச் சின்னத்திற்குப் போய்ச்சேருமா?
அரசாங்கமோ வரிந்து கட்டிக்கொண்டு
தோட்டப் பகுதி வாழ் மக்களின் வாக்குகளை அள்ளி எடுப்பதற்காக அபிவிருத்தி வேலைத்
திட்டங்களை முன்னெடுத்து பெரும் தொகை நிதியை அபிவிருத்திக்காக அள்ளி இறைத்துக்
கொண்டு தோட்டப் பகுதி மக்களின் வாக்குகளை வாரிச் சுருட்டிக் கொள்ள முனைகின்றது.
சில நேரங்களில் அரசின் இந்த செயற்பாடுகள்
அரசில் இருக்கும் மலையக கட்சி மூலம் அரசாங்கத்திற்கு அனுகூலங்களை வழங்கக்கூடும்.
ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட்டம்
தேர்தல் வன்முறைக் களமாக மாற்றம் பெற்றுள்ளது. குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின்
(ஜே.வி.பி) தேர்தல் நடவடிக்கைகள் அதன் மேடைப்பேச்சுக்கள் மக்களை அதிகம் ஈர்க்கவே
செய்கின்றன. அதிலும் குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊவா மாகாண
முதலமைச்சர் வேட்பாளரின் செல்வாக்கை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சவாலுக்கு
உட்படுத்தி வருவதையும் காணலாம்.
அரசின் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர் தோல்விகள் மீது அவநம்பிக்கை கொண்டவர்கள், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பக்கம் சாய்வதாக தெரிகின்றது.
தேர்தல் ஆய்வாளர்களின் கருத்துப்படி மக்கள் விடுதலை முன்னணிக்கு மூன்று அல்லது
நான்கு ஆசனங்கள் கிட்டும் என்ற பலத்த அனுமானம் உள்ளது.
முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்த மட்டில்
முப்பத்து ஒன்பதாயிரம் (39,000) வாக்குகளை அச்சமூகம்
கொண்டுள்ள போதிலும் 2004 ற்குப் பின்னர்
ஊவா மாகாண சபையில் ஒரு பிரதிநிதித்துவம் கூட முஸ்லிம்களை வந்தடையவில்லை.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு உடன்பாட்டின் மூலம் துஆ
கட்சியில் தமது ஆதரவாளர்களை வேட்பாளர்களாக களமிறக்கியுள்ள போதிலும் அது எந்தளவுக்கு
அண்மைக்கால சம்பவங்களால் அரசின் மீது கோபமுற்றுள்ள முஸ்லிம் வாக்காளர்களின் கவனத்தை
ஈர்க்கும் என்பதை திட்ட வட்டமாக கூற முடியாது.
ஆளும் அரசின் மீது கோபமும் அதிருப்தியும்
கொண்டுள்ள முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு போக கூடாது என்பதற்காக
ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் இவ்விரு அமைச்சர்களும் ஆளும் அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு
அமைய ஆடுகின்ற ஒரு நாடகமாக துஆ கட்சி வேட்பாளர்களை இறக்கியுள்ளதென்ற குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம்.
இதேவேளை, முஸ்லிம் வாக்காளர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் அரசின்
கோபம் கூடும் என்பதற்காக மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி) வாக்களித்தால்
என்ன என்று சிந்திக்கும் நிலை உள்ளது.
இவை ஒரு புறமிருக்க, ஜனாதிபதியே நேரடியாக பிரசார பணியில் ஈடுபடும் அளவுக்கு ஊவா மாகாண சபை
தேர்தல் ஒரு திருப்பு முனையாக மாறியுள்ளது.
நீதியான நேர்மையான சுதந்திரமான தேர்தல்
ஒன்றை அரசு நடத்தாது என கண்டனங்கள் எழுந்துள்ள சூழ்நிலையில் அரசானது தனது சகல அதிகாரங்களையும்
வளங்களையும் பயன்படுத்தி வெற்றிக்கனியை தமதாக்கிக் கொண்டாலும் கணிசமான வாக்கு
சரிவை ஆளும் கட்சி சந்திக்க வேண்டி ஏற்படும். அத்துடன் 2015இல் ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக் ஷ எதிர்கொள்வதில் சரியான சமிக்ஞையை
இத்தேர்தல் அரசுக்கு வழங்கும்.
தேர்தல் முடிவுகள் மாறுதலாக வந்தால்
அரசு ஆட்சியின் உச்சியில் இருந்து படிப்படியாக இறங்கும் காலம் நெருங்கி விட்டதென்பதை
அடையாளப்படுத்தும்.
மறுபக்கம் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை
இன்னும் மக்கள் மயப்படுத்தி சிங்கள பெரும்பான்மை வாக்குகளை கவருகின்ற ஒரு வேலைத்திட்டத்திற்கு
உடனடியாக இறங்கும் சமிக்ஞையை இத்தேர்தல் நிச்சயம் வழங்கும்.
ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கும்
சட்டவாட்சிக்கும் தேர்தல் ஆணைக்குழுவை பயன்படுத்துவதற்கும் ஊவா மாகாண சபைத்தேர்தல்
உண்மை யான வழிகாட்டுதலை வழங்கும்.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனக்கோலங்கள் அரசின் மீது அவர்கள் கொண்டுள்ள
பார்வைகள் இத்தேர்தல் மூலம் நிச்சயமாக வெளிச்சத்திற்கு வரும்.
பாரிய அபிவிருத்தி திட்டங்களின்
முன்னெடுப்பு அது பற்றிய பிரமை உண்மையாக சிங்கள மக்களை அரசின் பக்கம் வசப்படுத்தி
வைத்துள்ளதா அல்லது வறுமை, ஏழ்மை என்பவற்றை
போக்குவதற்கு அரசு பதில் சொல்ல வில்லை. அடக்கு முறை குடும்ப ஆட்சி இவைகளை மக்கள்
ஏற்கிறார்களா? இல்லையா? என்பதை நாம் அறியும் நாள் இம்மாதம் இருபதாம் திகதியாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...