மலையக இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும் பன்முக ஆளுமையுமாக திகழ்ந்தவருமான சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் 100வது ஜனனதினம் செப்தெம்பர் 14 ஆம் திகதி. சி.வி நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜுன் மாதத்திலேயே தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) அமைப்பினர் சி.வி நினைவுரை நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
எனினும் அவரது பிறந்த நாள் அன்றே அதன் தொடக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலுடன் மலையக கலை இலக்கிய பேரவையின் சார்பில் 'சி.வி நூற்றாண்டு குழுவினை அமைத்து' தொடக்கவிழாவினை முன்னின்று நடாத்தினார் அதன் செயலாளரான அந்தனிஜீவா.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சி.வியின் உருவப்படத்திற்கு அவரது புதல்வியார் திருமதி. ஜீன் விமலசூரிய ஈகைச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தினார். கோ.நடேசய்யர் முதல் சி.வி உள்ளிட்ட அண்மையில் காலமான தொழிற்சங்கவாதி பாலாதம்பு வரையான அனைத்து மறைந்த ஆளுமைகளுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தபட்டது. புரவலர் ஹாசிம் உமர் சிவியின் பதிவுகள் அடங்கிய நியு செஞ்சுரி புக் ஹவுஸின் வைரவிழா கட்டுரைத் தொகுப்பை தமிழ்ச்சங்க செயலாளர் தம்புசிவா அவர்களுக்கு வழங்கிவைத்தார். சாரல்நாடன் எழுதிய சி.வி. வேலுப்பிள்ளை எனும் குமரன் இல்லத்தின் வெளியீட்டை இலக்கிய ஆர்வலர் எச்.எச்.விக்கிரமசிங்க சிவியின் மகளுக்கு வழங்கிவைத்தார்.
நினைவுக்குழுவின் தலைவரான பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தொடக்கவுரை வழங்கினார். சி.வியின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து பேராசிரியர் தனது தொடக்கவுரையில் கருத்துரைத்தார்.
சி.வி- வாழ்வும் பணிகளும் எனும் தலைப்பில் அந்தனிஜீவா நினைவுரை நிகழ்த்தினார். 'சி.வியுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்புகளே கொழும்பில் பிறந்த என்னை மலையகம் நோக்கி அழைத்துச் சென்றது. நாட்டார் பாடல்கள் முதல் தாகூரின் ஆங்கிலக் கவிதைகள் வரையான இலக்கியத்தில் ஆழமான அறிவும் புலமையும் மிக்கவராக சி.வி.திகழ்ந்தார்.
மலையக நாட்டார் பாடல்களை அதே மெட்டில் பாடக்கூடிய சி.வி அவற்றை இலங்கை வானொலியில் இசையமைத்து பாடி ஒலிப்பதிவு செய்யும் நிகழ்ச்சியொன்றில் இசையமைப்பாளர் முத்துசாமி போட்ட மெட்டு மக்களின் மெட்டில் இருந்து மாறுபடுவதாகக் கூறி ஒலிப்பதிவையே நிறுத்தச் சொல்லிவிட்டார். அந்தளவுக்கு அதில் ஈடுபாடு உடையவர். சி.வியை விமர்சிக்க வரும் இளம் தலைமுறையினர் சிவி பற்றிய குறிப்புக்களைக் கொண்டு அவரை விமர்சிக்காமல் சிவியின் படைப்புக்களைப் படித்து விமர்சனம் செய்ய முன்வரவேண்டும். சிவியின் எழுத்துக்களைப் படிக்காதவர்கள் அவரை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள்' எனவும் தனதுரையில் விழாவுக்கு தலைமை வகித்த பி.பிதேவராஜ் அவர்கள் சிவியின் தேயிலைத் தோட்டத்திலே எனும் கவிதை நூலை இலக்கிய ரசனையோடு, பல உலக இலக்கியங்களோடு ஒப்பிட்டு அற்புதமான உரையை வழங்கினார்.
'சக்தீ பால அய்யாவின் மொழிபெயர்ப்பு சிறந்தது எனினும் சிவியின் உண்மையான வீச்சு வெளிப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் சக்தீயின் மொழிபெயர்ப்புதான் நமக்கு சிவியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றைய தலைமுறையினர் நவின கவிதை வடிவத்தில் அந்த நூலை மீளவும் மொழிபெயர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அந்தக விதையில் இழையோடும் ஆவல்நிறைந்த சோககீதம் அவ்வாறே வெளிப்படவேண்டும். கவிதையுள்ளம் மென்மையானது.அது சோகத்தை வெளிப்படுத்தும். ஆனால் வெளிப்படுத்துகிறவிதம் ஆளுக்கு ஆள் வேறுபடும். சிவி ஆங்கிலத்தில் எழுதியள்ள வெளிபபாடு தமிழில் அவ்வாறே கொண்டு வரப்படவேண்டும்' என தெரிவித்தார். பி.பி தேவராஜ் அவர்கள் குறிப்பிட்ட எவன்
அடுத்தவருக்காக அழுகிறானோ அவன் கவிஞன். எவன் அழிகிறானோ அவன் தமிழன் போன்ற பிரயோகங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. தொழிலாளர் தேசிய சங்கத்தின் முயற்சியில் சிவி வேலுப்பிள்ளைக்கு முத்திரை வெளியிடுவது ஒரு வரலாற்றுச்சாதனை. அதனை முயற்சித்து செய்திருக்கும் மல்லியப்புசந்தி திலகர் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவர் திகாம்பரம் ஆகியோர் மிகந்த பாராட்டுக்குரியவர்கள் எனவும் தெரிவித்தார்.
சிவியின் மகள் சுருக்கமாக நன்றியுரை வழங்கினார். வழமைபோன்றே பல்வேறு தகவல்களுடன் சிவியின் கவிதை வரிகளையும் இணைத்து வாசித்து நிகழ்ச்சியினை மல்லியப்புசந்தி திலகர் தொகுத்தளித்தார். கூடவே சிவியின் தேயிலைத் தோட்டதிலே இரண்டாம் பதிப்பின்போது மொழிபெயர்ப்பு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளையும் நினைவு கூர்ந்தார். நவீனவடிவ மொழியெபர்ப்பு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதனை வெளியிடவும் தனது பாக்யா பதிப்பகம் தயாராக இருப்பதாகவும் உறுதி வழங்கினார்.
மக்கள் கவிமணி என எல்லோரும் சிவியை அழைக்கிறோம். கொழும்புத் தமிழ்ச்சங்க மேடையில் முன்னாள் தினகரன் ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன் தலைமையில் பேராசிரியர் கைலாசபதி முன்னிலையில் சிவி வேலுப்பிள்ளை அவர்களுக்கு 'மக்கள் கவிமணி' பட்டம் வழங்கிய மலையகக் கலை இலக்கிய பேரவையும், அதன் செயலாளர் அந்தனிஜீவா அவர்களும் அதே தமிழ்ச்சங்க மண்டபத்தில் சிவி நூற்றாண்டு தொடக்கவிழாவை நடாத்தியமை பொருத்தமாகவம் சிறப்பாகவும் அமைந்தது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...