Headlines News :
முகப்பு » » மலையகமே உன் கதி இது தானா..? - பசறையூரான் ஜோர்ஜ் ஸ்டீபன்

மலையகமே உன் கதி இது தானா..? - பசறையூரான் ஜோர்ஜ் ஸ்டீபன்


எண்ணங்களாலே இறைவன்தானே...
பொன் வண்ணங்களாலே
வரைந்துவிட்டானே....
வண்ண வண்ணத் தோட்டங்கள்
கண்ணாலே....
எந் நாளும் நிலையாகும்
எழில் கொஞ்சும் மலையகமே....

என ஈழத்துப் பாடகராம் வி.முத்தழகு வினால் வர்ணித்து ரசித்து ருசித்து அனுபவிக்கக்கூடிய வகையில் பாடிவைக்கப்பட்டது. அவ்வாறு பாடப்பட்டு எடுத்துரைக்கப்பட்ட ஓர் நிலப்பரப்புத்தான் ஆங்கில வார்த்தையிலே அப்கன்றி எனக்கூறப்படுகின்ற மலையக மண் ஆகும்.
எழில்கொஞ்சும் மலையகம் என்று வர்ணிக்கப்பட்டாலும் கூட மலையகமே உன் கதி இதுதானா என்று எண்ணி மனதைப்புண்பட வைக்கும் காட்சிகளும் தென்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

இற்றைக்கு சுமார் 200 வருடங்களை எட்டுகின்ற நிலையில் கூலித்தொழிலாளர்களாய் அழைத்துவரப்பட்ட ஒரு சமூகம் தான் இந்திய வம்சாவளி என்ற நாமத்தை பட்டையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் மலையக தொழிலாளர் சமூகமாகும்.

அரசாங்கமும் சரி அரசியல்வாதிகளும் சரி அப்படி இல்லாவிட்டால் வர்த்தக ஜாம்பவான்களும் சரி எவர் அல்லது எந்தத்தரப்பினர் என்ன கூறினாலும் அன்றும் இன்றும் அதாவது இன்றைய 21ஆம் நூற்றாண்டின் நிலையிலும் இந்நாட்டின் பொருளாதாரச் சுமையை மலையக சமூகம் தனது தலையிலும் தோளிலும் முதுகிலும் சுமந்து கொண்டிருக்கின்றது என்று கூறினால் அது பொய்த்து விடப்போவதில்லை.

வெற்றுக்காலுடன் சுற்றித்திரிந்து கட்டாந்தரையில் காற்சட்டையுடன் உட்கார்ந்து கல்வி கற்ற காலம் வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால் கால் நடைகளை கட்டுவதற்கு மாத்திரமே ஒதுக்கி வைக்கப்பட்டதாய் எண்ணுகின்ற அளவில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் இன்னுமே மாற்றம் பெறவில்லையே என்பது தான் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதும் மலையக அரசியலின் தலைமைகளையும் இந்நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்தையும் நொந்துகொள்ளக் கூடியதுமான காரணியாக அமைந்திருக்கின்றது.

கடல் நடுவே கல்யாணம் செய்வதற்கும் விண்வெளியிலே வீடு கட்டுவதற்கும் என உலகம் முன்னேறிக் கொண்டிருக்கின்ற இன்றைய கால எல்லையில் அபிவிருத்தி என்ற பயணப்பாதையில் எமது நாடும்தான் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் மலையக சமூகம் குறிப்பாக இந்திய வம்சாவளி என நாமம் பொறிக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புகள் இப்படியானவையா என எண்ணும் அளவிலும் சம்பந்தப்பட்ட அனைத்துத்தரப்பினரும் வெட்கித்தலைகுனியும் அளவிலும் இந்த கட்டுரையின் நடுவே காட்சியளிக்கின்ற தோட்டத்தொழிலாளர் குடியிருப்புகள் சுட்டி நிற்கின்றன.
அப்படியானால் இந்த மலையக சமூகம் இன்றைய நூற்றாண்டல் எங்கே பயணித்துக் கொண்டிருக்கின்றது அல்லது அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது என்று எழுகின்ற கேள்விகளுக்கும் விடை காண முடியாதிருக்கின்றது.

200 வருட கால உழைப்பாளிகளாய் இருந்து வரும் தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு மாத்திரமின்றி அவர்களின் இரத்தத்துடன் கலந்த உயிரும் உறிஞ்சப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும் அவர்களுக்கான கல்வி சுகாதாரம் வாழ்விடம் உள்ளிட்ட மிக மிக அத்தியாவசியம் என்ற தேவைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற விடயங்களைப்பற்றி சிந்திப்பதற்கு இங்கு தவற விடப்பட்டிருக்கின்றது.

மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்து சொகுசு காரில் ஏற்றிச் செல்வது போன்று இன்றைய மலையக மக்களின் நிலைமை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அது மாத்திரமன்றி உண்மை நிலைமைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட முடியும்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டை ஆரம்பித்து வைப்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் (சார்ள்ஸ் பிலிப் ஆர்த்தர் ஜோர்ஜ்) மலையகத்தின் நுவரெலியாவின் லபுக்கலே எனும் தோட்டத்திற்கும் விஜயம் செய்திருந்தார். அவரது மலையகத்துக்கான விஜயத்தின்போது தோட்டத்தொழிலாளர்களின் உண்மை நிலைமை மூடி மறைக்கப்பட்டு விட்டது.

பட்டாடை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு எந்தவொரு பெண் தோட்டத்தொழிலாளியும் பணியாற்றுவது கிடையாது. வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து குளவியிடம் கொட்டுண்டு பாம்புகள் உள்ள விஷ ஜந்துக்களின் அபாயத்துக்கும் மத்தியில் பெருந்தோட்ட மற்றும் தனியார் சிறுதோட்ட கம்பனிகள், நிர்வாகம், அதிகாரிகள் ஆகிய தரப்புக்களின் அதிகாரத் தொனிகளுக்கு மத்தியில் கூலிகளாய் பார்க்கப்படுவோரே இந்தத் தோட்டத்தொழிலாளிகள்.

ஆனால் கூலிகளாய் ஆக்கப்படுவதற்கு முழுக்காரணமாய் இருந்த பிரித்தானியரின் கண்முன்னாலேயே தமது சமூகம் பட்டாடை உடுத்து தேயிலைக்கொழுந்து பறிப்பதைப்போன்று படம் பிடித்துக் காட்டப்பட்டிருப்பதுதான் மூடி மறைப்பு என்று மேலே கூறப்பட்டதற்கான விளக்கமாகும்.

200 வருட காலமாய் கூலி என்ற வரையறைக்குள் வைக்கப்பட்டுள்ள தோட்டத்தொழிலாளர்களின் நிலைமையை காலத்துக்கேற்ப மாற்றியமைப்பதற்கான திராணி இன்னும் எந்த தரப்பினரிடமும் காணப்படவில்லை என்பதுதான் விந்தையானதாகும். அவர்கள் பெறுகின்ற நாட்கூலியை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அதிகரித்துக்கொள்ளும் வகையில் சொற்ப அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதே தவிர 200 வருட உழைப்பாளிகளாகவும் இந்நாட்டின் பொருளாதார பங்காளிகளாகவும் காணப்படுகின்ற தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனையற்ற நிலைமை காணப்படுகிறது. மாதச்சம்பளம் என்ற வரையறை சுகாதார வசதிகளுடன் தன்னிறைவு, காணக்கூடிய குடியிருப்புகள் கல்வி, சுகாதாரத் தேவைகள், தகவல் தொழில்நுட்ப தேவைப்பாடுகள், போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என்பவை குறித்து சிந்திப்பதாய் இல்லை.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் கூறி வைக்க வேண்டியுள்ளது. அநேகமான சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு வகையில் மலையக மக்களுக்காய் ஒரு சில நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு சிலர் முன்வருகின்ற போதிலும் அதனால் குறித்த தரப்பினருக்கு பெயர் கிடைத்து விடுமோ அல்லது மக்கள் செல்வாக்கு அதிகரித்து விடுமோ என்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களாய் நல்ல பல காரியங்களையும் அநாவசிய விமர்சனத்துக்குள்ளாக்கி வருகின்றதையும் இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
மலையகம் மீள வேண்டும் என்றும் தமது சமூகம் மீட்சி பெற வேண்டும் என்று மேடைகளில் கூச்சலிட்டு விட்டு மறைமுகமாக சதி நடவடிக்கைகளில் இறங்குவது தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பில் சந்தாவைப் பெற்றுக்கொண்டு அவர்களது வாக்குகளால் அரியணை ஏறியிருப்பவர்கள் தொழிலாளர்களுக்கு செய்கின்ற மகா துரோகமாகும்.

யார் குத்தினால் என்ன நெல் அரிசியாகி அது பயன்பெற்றால் சரி என்ற நல்லெண்ணம் கொண்ட மலையக அரசியலை காண்பது அரிதாகி வருகின்றது. பிழைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என்கின்ற போதும் மக்களைச் சென்றடையும் நன்மைகளை விமர்சனத்தின் மூலம் பாதிப்படையச் செய்வது சமூகத்துரோகம் ஆகும்.

மலையகத்தலைமைகள் மீதும் அரசியல்வாதிகள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு அவர்களே காரண கர்த்தாக்களாகின்றனர். இங்கு காட்டப்படுகின்ற புகைப்படங்களில் நாகஸ்தன்ன மற்றும் மெத மஹா நுவர பகுதியில் அமைந்துள்ள உட்செய்ட் ஆகிய தோட்டங்களில் அமைந்துள்ள தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்புகளாகும்.

இது போன்று மலையகத்தில் ஏராளம். பாவப்பட்ட ஜென்மம் என்று கூறுவார்களே அது இங்குதான் பொருத்தமாகின்றது. மந்தை வளர்ப்புக்குக்கூட பொருத்தமில்லாத இந்த குடியிருப்புக்களில் தான் தேர்தல்களின் போது வாக்களிக்கின்றவர்களும் நாட்டின் பொருளாதார சுமையைத்தன் தோள்களிலும் முதுகிலும் தலையிலும் சுமந்து நிற்கின்றவர்களுமான தோட்டத்தொழிலாளிகளும் அவர் களது மனைவி, பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதனை நினைக்கையில் நேரில் பார்க்கையில் வெட்கக்கேடாய் தெரியவில்லையா? என்று நம்மை நாமே கேட்டுப்பார்க்க வேண்டியுள்ளது. மனச்சாட்சியுள்ளவர்கள் இது குறித்து சிந்திப்பார்களேயானால் அது பெரிய புண்ணியமாய் ஆகிப்போகும் என்பது இங்கு வாழ்கின்ற அல்லது காலத்தை கடத்துகின்ற மக்களின் பேரவாவாக இருக்கின்றது.

மேலே குறிப்பிட்டது போன்று இவ்வாறான பகுதிகளில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர் என்று கூறுவதிலும் பார்க்க தாம் மண்ணுக்குள் போகும் வரையிலும் காலத்தைக்கடத்த வேண்டுமே என்ற ரீதியில் ஏதோ ஜீவிக்கின்றனர் என்று கூறுவதே பொருத்தமாகின்றது.

அபிவிருத்தி என்பது இன்று நகரங்களையும் கிராமங்களையும் மாத்திரமே வரையறுத்து நிற்கிறது. அவ்வாறான அபிவிருத்தியின் பயன் இங்கு கூறப்படுகின்ற சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களிலும் தாக்கம் செலுத்த வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறான பகுதிகளுக்கு விஜயம் செய்வதையே விரும்பத்தகாத செயல் என நினைக்கின்ற அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் படையெடுப்பதும் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதும் வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அரசியல்வாதிகளின் வார்த்தைகளை வேதவாக்காக நினைக்கின்ற தோட்டத்தொழிலாளர்கள் மேற்கண்டவாறு நம்பி ஏமாறுகின்றனர்.

தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத இந்த ஜீவன்கள் தமது பிள்ளைகளது தேவைகளையும் மண்ணோடு மண்ணாக்கி செத்துமடிகின்றனர் என்பதுதான் வேதனை யானது.

எனவே அரசாங்கத்தின் அபிவிருத்தி தோட்டத்தொழிலாளர்களையும் எட்டிப் பார்க்க வேண்டும். நவீன காலத்துக்கு ஏற்ற வகையிலான வீட்டு வசதிகள், அடிப்படை வசதிகள், வீதிப்போக்குவரத்து, வாழ்க் கைத்தர மேம்பாடு, சம அந்தஸ்து, ஏற்ற தாழ்வின்றிய நோக்கு, ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மதிப்பளித்தல், வெளிப்படைத் தன்மை உள்ளிட்ட காரணிகள் அனைத்தும் தோட்டத்தொழிலாளர்களாலும் உணரப் பட்டு அனுபவிக்கின்ற காலம் கனிந்தால் மாத்திரமே அபிவிருத்திக்கான அர்த்தம் நிலையானதாகும்.நாகஸ்தன்ன போன்ற தோட்டங்கள் தன்னிறைவு காணாத வரையில் மலையகத்தினதும்நாட்டினதும் அபிவிருத்தி என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்து விடாது. இவ்விடயத்தில் மலை யகத் தலைமைகள் தமது கண்களை விழித்துப்பார்க்க வேண்டும் என்பதையும் இந்த கட்டுரை சுட்டிக்காட்ட விளைகிறது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates