Headlines News :
முகப்பு » » ஊவா தேர்தல் முடிவு உணர்த்துவதென்ன? - திருமலை நவம்

ஊவா தேர்தல் முடிவு உணர்த்துவதென்ன? - திருமலை நவம்



ஊவா மாகாணசபை தேர்தல் முடிவுகள் பற்றி பல்வேறு அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் கருத்துக்களும் கூறப்படும் நிலையில் இத்தேர்தல் முடிவுகள் அடுத்த வருடம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டியம் கூறும் தேர்தலாக கருதமுடியுமா என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கின்றது.

ஆளும் அரசாங்கமாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் நாங்கள் அமோக வெற்றி பெற்று எமது ஆட்சியின் ஸ்திரத்தன்மையை நிரூபித்துள்ளோம் என்று கூறுகி றார்கள். அதுமட்டுமன்றி எட்டு மாகாணங்க ளைக் கைப்பற்றி 58 வீத மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளதாக ஆளும் அரசாங்கத்தரப்பி னர் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை, ஊவா மாகாண சபைத்தேர்தலில் இரண்டாம் நிலை பெற்றிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி 17 வீதத்தால் சரிந்து விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்கு 11.3 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஆளும் அரசாங்கத்தின் அஸ்தமனம் ஆரம்பித்தமைக்கு அறிகுறி இது என ஐக்கிய தேசியக் கட்சியினர் பெருமிதமாகப் பேசிக் கொள்கிறார்கள்.

இவ்விருபக்க கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டதா அல்லது உண்மை நிலைகளைப் பிரதிபலிக்கின்றனவா என்பது பற்றியெல்லாம் விமர்சன முறையில் ஆராய்வது காலத்துக்கு பொருத்த மற்றது என தவிர்த்துக் கொண்டு எதிர்கால த்தில் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல் மற்றும் தேர்தல்களுக்கு ஊவா மாகாண சபைத் தேர்தல் என்ன முன்னுரையை எழுதி வைக்கப் போகிறது என்பது பற்றி ஆராய்வது பொருத்தமானதாக இருக்கும்.

இலங்கையிலுள்ள ஒன்பது மாகாண சபைகளிலும் மலையக மக்கள், சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் என்ற வேறுபட்ட சமூக இணைப்புக்களைக் கொண்ட ஒரு மாகாணசபையாகக் கருதப்படுவது ஊவா மாகாண சபையாகும்.
பதுளை மாவட்டம், மொனரா கலை மாவட்டம் என்ற இரு மாவட்டங்களையும் பதுளை ஹாலி – எல, வியலுவ, பரணகம, வெலிமடை, அப்புத்தளை, மகியங்கனை, பண்டாரவளை, பசறை, மொனராகலை, பிபிலை, வெல்லவாயா என்ற 12 தேர்தல் தொகுதிகளைக் கொண்டது ஊவா மாகாண சபை.
பல்லின மக்கள் வாழும் பதுளை மாவட்ட த்தில் கணிசமான தொகையினராக மலைய கத் தமிழர்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இதேபோன்று மொனரா கலை மாவட்டத்தை எடுத்து நோக்குவோமா யின் கணிசமான சிங்கள மக்களும் மலைய கத் தமிழர்களும் சிறியளவு முஸ்லிம் மக்க ளும் வாழ்ந்து வரும் மாவட்டமாகக் கருதப்படுகிறது.

மொத்தத்தில் பார்க்கப்போனால் மலையக மக்களும் சிங்கள மக்களும் கணிசமாகவும் முஸ்லிம் மக்கள் மூன்றாம் நிலைபெற்றுக் காணப்படும் ஒரு மாகாண சபையாக ஊவா மாகாணசபை காணப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைத்தேர்தலில் 32 ஆசனங்களை யும் 2 போனஸ் ஆசனங்களையும் உள்ள டக்கிய 34 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சு.முன்னணி 19 ஆசனங்களையும் ஐக்கியதேசியக் கட்சி 13 ஆசனங்களையும் ஜே.வி.பி. 02 ஆசனங்களையும் பெற்றிருக்கின்றன. இதனை அட்டவணையில் காட்ட முடியும்.

மேற்படி, புள்ளி விபரங்களும் அது பற்றிய ஆய்வும் சாதாரணமாக எல்லோராலும் அறியப்பட்ட விடயந்தான். ஆனால், இப்புள்ளி விபர சமிக்ஞையினூடாக அது எதிர் கால தேர்தல்கள் பற்றி என்ன சூட்சுமமான கருத்தை சொல்லமுனைகிறது என்பது பற்றியே கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இத்தேர்தல் முடிவுகளின்படி மத்திய அரசா ங்கத்தின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகி க்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட போதும் ஒரு ஆசனத்தையும் பெற முடியவில்லை அதேபோன்றே முன்னாள் இராணுவத்தளபதியான சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்கும் எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடி பிடித்துப் பார்க்கப்படும் தேர்தலாக ஊவா மாகாண சபை தேர்தல் நோக்கப்பட்ட நிலையில் ஆளும் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியென்ற இருகட்சிகளின் பல நிலையை பரிசோதித்துப்பார்க்கும் கள ஆய்வாக இத்தேர்தல் பாரக்கப்படுகிறது.

அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகள் ஆகியோரின் கருத்துப் படி பார்க்கின்ற போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு பாரிய பின்னடைவான நிலையொன்று உருவாகி வருகின்றது என்ற கருத்தும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தன்னை சுதாகரித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது. இவ்வாறான கருத்துக்கள் வெளிவந்த தேர்தல் முடிவு கள் அளிக்கப்ட்ட வாக்கு வீதங்கள் கடந்த கால ஒப்பீடுகள் அடிப்படையில் கூறப்படுபவையாகவே இருக் கின்றது என்று கூறலாம். கடந்த 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊவா மாகாணசபைத் தேர்தலில் 8.8.2009 72.39 வீத வாக்குகளைப் பெற்று 25 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இம்முறை தேர்தலில் 51.25 வீத வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் ஆறு ஆசனங்களை இழந்திருப்பதுடன் 21.14 வீத வாக்குகளை இழந்துள்ளது என்று சுட்டிக் காட்டப்படுகிறது. மறுபுறம் கடந்த தேர்தலில் 22.32 வீத வாக்குகள் மட்டுமே பெற்று 7 ஆசனங்கள மாத்திரம் பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி இம்முறை 40.24 வீத வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருப்பது மகத்தான முன்னேற்றமெனவும் புகழப்படுகிறது.

இத்துடன் இன்னுமொரு விடயத்தையும் அவதானிக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டு தேர்தலில் 2.53 வீத வாக்குக்களைப்பெற்று ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றிருந்த ஜே.வி. பியினர் இம்முறை 5.36 வீத வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளமை இன்னுமொரு வகையான இடைமுறிவு மாற்றமாகக் கருதப்படுகிறது. 2009 ஆம் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் முடிவுகள் புள்ளிவிபர ஒப்பீட்டு முறையில் சிறிது நோக்குவோம்.

ஒப்பீட்டு ரீதியில் இப்புள்ளி விபரங்கள் இரு பிரதான கட்சிகளுடைய மாற்றங்களைச்சுட்டிக் காட்டுவதாக இருந்தாலும் இந்த மாற்றங்களும் புள்ளி விபரத் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பற்றி ஆருடம் கூற முடியுமா என்பதும் விமர்சனத்துக்குரிய ஒரு விடயந்தான்.

பல்தேசிய சமூகம் வாழுகின்ற இலங்கை யில் 25 மாவட்டங்களிலும் 9 மாகாண சபைகளிலும் வாழுகின்ற மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், அபிலாஷைகள் தேசிய பற்று ஆளும் எதிர்க்கட்சிகள் மீது உள்ள அபிமானங்கள் யதார்த்த நிலைகள் போன்ற இன்னோரன்ன காரணிகள் அவர்களின் வாக்களிப்பை அல்லது ஆளும் அரசாங்கத் தெரிவை தீர்மானிக்கின்றன என்பதேயுண்மை.

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆறு ஜனாதிபதித் தேர்தலையும் 14 பாராளுமன்ற தேர்தல்களையும் பல உள்ளூராட்சித் தேர்தல்களையும் மாகாண சபைத்தேர்தல்களையும் கண்டிருக்கின்ற இலங்கை மக்களின் வாக்களிப்பு நிலைகள் எல்லாக் காலத்திலும் எல்லாத் தேர்தல்களிலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லையென்பதே பொதுவான உண்மையாகும். வளர்ச்சி கண்ட நாடுகளைப் போல் மக்களின் விருப்பங்களும் தீர்மானங்க ளும் மாறிமாறி நடந்திருக்கின்றன என்பதை தேர்தல் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

உதாரணமாக 1982 ஆம் 1988ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிப்பீடம் ஏறவைத்த மக்கள் 1994ஆம் 1999ஆம் ஆண்டுகளில் தமது முடிவுகளை மாற்றிக்கொண்டார்கள். 2005ஆம் 2010ஆம் ஆண்டுகளில் நிலைமை வேறுஒருவகைப்பட்டதாக இருந்தது. அதாவது 1994ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 2005வரை சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ.ஐ.முன்னணியின் பெயரிலான ஆட்சி 2005 ஆண்டு காலப் பகுதியில் இருந்து ஐக்கிய மக்கள் சு. கூட்டணியென மருவிக் கொண்டது.

தாய்க்கட்சியொன்றாக இருந்தாலும் காலத்துக்கு காலம் ஏற்பட்ட மாற்றங்கள் கூட்டணி சேர்க்கையில் பொதுசன ஐக்கிய முன்னணி ஐ.ம.சு.கூட்டணியாக மருவிக்கொண்டது.

தனி மனித ஆளுமைகள் தனிமனித வழிபாடுகள் இந்த மாற்றங்களுக்கான காரணங்களாக இருக்கலாம். எப்படியிருந்த போதிலும் மாற்றங்கள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத அத்தியாயங்களாக இருந்திருக்கின்றன என்பதை நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் எமக்கு எடுத்துரைக்கின்றன.

இப்புள்ளி விபரங்களின் படி கடந்த ஆறு ஜனாதிபதி தேர்தல்களின் முடிவுகளும் வெவ்வேறுப்பட்ட முடிவுகளைத் தந்திருக்கின்றன என்பது பொதுவான உண்மையாக இருந்தபோதிலும் 1994 ஆம் ஆண்டுமுதல் கடந்த 20 வருடகாலமாக ஒரேகட்சியின் ஆட்சியேஇருந்து வந்துள்ளது. ஆனால், அவற்றின் கூட்டுத்தன்மைகள் மாறி மாறி இருந்தபோதிலும் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்னும் தாய்நிலைக்கட்சியின் ஆட்சியே தொடர்ந்து இருந்துள்ளது.

இத்தகையதொரு தொடர் நிலை ஆட்சி நிலவி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் 7 ஆவது ஜனாதிபதித் தேர்தல் இலங்கை அரசியல் போக்கில் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய சாத்திய அசாத்திய நிலையினை ஊவா மாகாண சபைத்தேர்தல் கோடிட்டு காட்டுகின்றதா இல்லை ஆளும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஸ்திர நிலையை படம்போட்டுக் காட்டுகிறதா? என்பது பற்றி அரசியல் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இலங்கையின் அரசியல் அனுபவங்களைப் பார்க்கின்ற போது 1960 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை நீடித்த ஆட்சியை நடத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மீது ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். 1970 ஆம் இலங்கை மக்கள். இதேபோன்று 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மீது மாற்றமொன்று கொண்டு வரப்பட்டது. 1977 ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டுவரை அசைக்கமுடியாது என ஆட்சி செலுத்திய ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிப்பீடம் ஏறிக்கொண்டது. இவ்வாறு மாற்றமென்பது பொதுவானதாகவே இருந்துள்ளது.

இன்றைய இலங்கையின் அரசியல் போக் கைப் பொறுத்தவரை மாற்றத்தை வேண்டி நிற்கும் காரணிகளும் இருக்கின்றன. மாற்ற த்தை அனுமதிக்க மாட்டோமென்று கூறக்கூடிய காரணிகளும் இருக்கத்தான் செய்கின்றன இதில் எது பெரும்பான்மை பலம் கொண்டதாக இருக்கப் போகின்றதோ அதுவே 7 ஆவது ஜனாதிபதி தேர்தலை தீர்மானிக்கப்போகின்றது என்பதே யதார்த்தம்.

ஆட்சிமாற்றமொன்றை வேண்டி நிற்பதற் கான காரணிகளாக கருதப்படும் விடயங்க ளைச் சுருக்கமாகப் பார்ப்பின் அடிப்படை யான பொருளாதார பிரச்சினைகளாக சுட்டிக்காட்டப்படும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு பணவீக்கம் வருமான மட்ட வீழச்சி வேலையில்லா பிரச்சினை பொருளாதார வளர்ச்சி யின் பிரதேச சமமின்மை ஒருபக்க அரசியல் செல்வாக்குகள் குடும்பநிலை ஆதிக்கம் என்ற பலகாரணிகள் எடுத்துக்கூறப்படுகின் றன. மறுபுறம் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு சமூக நெருக்கடிகள் இன ஒடுக்குமுறைகளின் கெடுதி கள் என்ற இன்னோரன்ன காரணங்கள் நிரலி ட்டுக் காட்டப்படுகின்றன. இதேவேளை, சர்வதேச நெருக்கு நிலையென்ற வகையில் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்காமை இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால வெளிநாட்டுக்கொள்கையின் சாய்வு நிலை கள் போன்றன ஆளும் அரசாங்கத்தின் மீது சர்வதேச ரீதியான பின் கணிப்பைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

பொருளாதார மற்றும் இனச்சிக்கல் வெளிநாட்டு நம்பிக்கையீனங்கள் ஒரு அரசியல் மாற்றத்தை இலங்கையில் வேண்டி நிற்கின்றது என நிரல்படுத்திக் கூறப்பட்டாலும் ஆளும் அரசாங்கம் தொட ர்ந்து ஆட்சிப்பீடத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற தேசிய வாதமும் சர்வ தேச ஆதரவும் இன்றைய இலங்கையரசாங் கத்துக்கு இருக்கத்தான் செய்கின்றது.

சிங்கள தேசியம் ஆளும் அரசாங்கத்தின் மீது அளவற்ற பற்றுக்கோடு கொண்டவர் களாகவே காணப்படுகின்றார்கள். யுத்த வெற்றி, பௌத்த மேலாதிக்கம், சிங்கள அடி ப்படைவாதம் தொடர்ந்தும் இந்நாட்டில் காப்பாற்றப்பட வேண்டுமாயின் ஆளும் அரசாங்கத்தின் தொடர் ஆட்சிதக்க வைக் கப்பட வேண்டுமென்ற அதீத தீவிர வாதம் கொண்ட ஒருநிலையும் இலங்கையில் காணப்படத்தான் செய்கின்றது.

இதேபோன்றே சர்வதேச ரீதியாக சீனா, ரஷ்யா பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஜப் பான், மலேசியா போன்ற நாடுகளின் மறை முகமான ஆதரவு இருந்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்ற சக்திகளாக வெல்லப்போகின்றன அல்லது ஆட்சி மாற்றத்தை விரும்பாத காரணிகளா வெல்லப் போகின்றன என்பது பற்றி ஆரு டம் கூறுவது கடினம்.
நன்றி - வீரகேசரி 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates