- இலங்கையில் தற்போது மாத்தளை, கண்டி, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தேயிலைச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
- 2030ஆண்டளவில் மத்திய மலைநாட்டின் பெரும்பகுதி மத்திய சுற்றாடல் பாதுகாப்புப் பகுதியாக வரையறுக்கப்பட்டு இயற்கை வளமிக்க பகுதிகளாக மாற்றப்படவிருக்கின்றன.
- அதேவேளை, தேயிலைப் பயிர்ச்செய்கை மத்திய மலைநாட்டைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளான காலி,மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களுக்குள் மட்டுப்படுத்தப்படவிருகின்றன.
"மலையகம் என்பது எங்களது உயிர் மூச்சு'' என்கின்றோம். நூற்றாண்டுகளுக்கு மேலாக வளர்த்தெடுக்கப்பட்ட தனித்து வமான மலையக பண்பாடுகளின் இரு ப்பிடமே தேயிலை, இறப்பர் தோட்டங்கள்தான் என்று பெருமை பாராட்டுகின் றோம். மலையகத்தின் பண்புசார் பற்றிய கணிசமான பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மூன்று நான்கு தலைமுறையினராக மலையகத்தில் வாழ்ந்து அதற்கே உரிய தனித்துவமான பண்பாடுகளை அடுத்து வரும் சந்ததியின ரும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் ஏராளமானோர் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
இருப்பினும், அடுத்து வரும் 20 ஆண்டு களில் மலையகத்தில் மேற்கொள்ளப்பட விருக்கும் மாற்றங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு எவ்வாறு துணை போகும் என்பது பற்றிய சில குறிப்புகளை வழங்குவது இக்கட்டுரையின் பிரதான இலக்காகும்.
ஒரு புறம் கம்பனிகளுக்கு சொந்தமான தேயிலை பெருந்தோட்டங்களின் உற்பத்தி கணிசமாக வீழ்ச்சியடைந்து செல்கின்றன. கம்பனிகள் இலங்கையின் மொத்த தேயி லை உற்பத்தியில் 30 வீதத்திற்கும் குறைவா கவே உற்பத்தி செய்கின்றன. மறுபுறம், கம் பனி தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையையும் வெகுவாக சரிந்து விட்டது. 1990களில் பெருந்தோட்ட ங்களில் சுமார் 500,000 பேர் வரையில் பதிவு செய்து கொண்ட நிரந்தர தொழில்புரிபவர்களாக காணப்பட்டோரின் எண்ணி க்கை 40 வீதமாக வீழ்ச்சியடைந்து தற்போது 230,000பேராகக் காணப்படுகின்றனர். கணிசமான இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வேறு வேலைக்கு புறப்பட்டு விட்ட னர். தோட்டங்கள் ஆரம்பித்து 180 வருடங்களாகியும் பெரும்பாலான தொழிலாளர்கள் அதே லயன் குடியிருப்புக்களிலேயே இரு க்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் யாவரும் நினைப்பது போல பெருந்தோட்டங்களில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான முயற்சியும் தொழிலாள ர்களின் சமூக நலன்களை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களும், லயன் குடியிருப்பு களை மாற்றி மனிதர்கள் வாழக்கூடிய சாதாரண வீடுகளில் தொழிலாளர்கள் வசிப்பதற்கான தேசிய திட்டடங்கள் வரையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் நடந்தேறியிருப்பதோ மற்று மொரு அபிவிருத்தி திட்டமாகும். இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்தி வல்லுனர்களைக் கொண்டு 2010ஆம் ஆண்டில் 30வருட தேசிய அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளது. இத்திட்டத்தின் தலைப்பு National Physical Planning Policy And Plan 2010 –2030ஆகும். இத்திட்டத் தின் மூலம் 2030ஆம் ஆண்டளவில் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் என்ற நிலைக்கு கொண்டு வருவதே இலக்காகும். நாட்டில்லுள்ள இயற்கை வளங்கள், கடல்வழிப் போக்குவரத்து, இலங்கையின் அமைவிடம் போன்றவற்றின் பின்னணியில் மக்களில் அதிகமானவர்களை அறிவுமிக்க தொழிற்படையினராக மாற்று வதன் மூலம் இவ்விலக்கினை அடையலாம் என்பது இத்திட்டத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நிதியினை வருடாந்த வரவு – செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்படும் நிதியில் இருந்து செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தில் சுமார் 20 நகரங்களும், 13 மீன்பிடித் துறைமுகங்களும், புதிய விமான நிலையங்கள், மீன் உற்பத்தி நிலையங்கள், அதிக வேக பாதைகள், Metro Regions, பாதுகாப்பான வலயங்கள், சூழல் பாதுகாப்பு வலயங்கள் என்று 15க்கு மேற்பட்ட திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மலையக பிரதேசம் இயற்கை சூழலை தக்க வைத்துக்கொள்ளும் பகுதி யாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என எடு த்துரைக்கப்பட்டுள்ளது.
தெற்கே சிங்கராஜவனம், கிழக்கே வெலிமடை மேட்டு நிலம், வடக்கே நக்கிள்ஸ் உட்பட்ட பிரதேசங்கள் இயற்கை அனர்த் தங்களால் பாதிக்கும் பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டு அதன் இயற்கைத் தன்மையை எவ்வாறு பாதுகாக்க லாம் என்று காத்திரமான ஆலோசனைக ளும் வழங்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்டவாறு இயற்கை சூழலை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறை செய்யப்பட்ட பகுதியிலேயே பெருமள விலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்குள்ள தேயிலை, இறப்பர் தொழில்களில் பெற்றுக் கொள்ளும் நாளாந்த வருமானத்தையே நம்பியுள்ளனர். (குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ரூபா 450/).
இந்த தேசிய திட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றர் (சுமார் 1000அடி) மேற்பட்ட மலைப்பாங்கான பிரதேசங்கள் (sensitive area), தூய்மையான பிரதேசங்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன. இதைவிட 1500 மீற்றர், சுமார் 4500 அடிக ளுக்கு மேற்பட்ட மலைநாட்டு பிரதேசத் தில் காடுகள் வளர்த்தல் மூலமாக இலங்கையில் பிரதான நீரேந்து வடிகால்களை பாதுகாப்பதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.
இப்பிரதேசங்களில் கால்நடை வளர்க்கக்கூடிய இடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடங்களும் எந்தெந்த இடங்களில் இருக்க வேண்டும் என்றும் அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளன. இத்திட்டம் முழுமையாக நிறைவுறும் 2030ஆம் ஆண்டில் மலையகப் பகுதிகள் இயற்கை மரங்களைக் கொண்டு காடுகளாக காணப்பட வேண்டும். பொருத்தமான புற்றரைகள் காணப்படும் இடங்களில் பால் பண்ணை அபிவிருத்தி வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த இயற்கை வனப்பினை பார்வையிடவும் அதனை உல்லாசமாக பார்த்து இரசிப்பதற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உலாவி வரும் பிரதேசமாகக் காணப்பட வேண்டும். மேலும் பொருத்தமான இடங்களில் நீர் மின்சாரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பிரதேசமாகவும் காணப்பட வேண்டும் என் பது இத்தேசிய திட்டத்தின் எதிர்பார்ப்பா கும்.
இத்திட்டத்தில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியமான விடயம் உற்பத்தித்திறனற்ற தேயிலைச் செடிகளை அகற்றி இலாபம் தரக்கூடிய தேயிலைச் செடிகளில் இருந்து மட்டும் பய னைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ப தும் இத் திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.
உண்மையில் மலையகத்தில் குறிப்பாக, பெருந்தோட்டக் கம்பனிகளிடம் காணப்ப டும் தேயிலைக் காணிகளில் (120,000 ஹெக்டெயர்) 65 வீதமான தேயிலைச் செடிகள் மிகப்பழமையான செடிகளாகும். இவற்றில் அதிகமானவை பிரித்தானியர்களால் முதன் முதல் நடப்பட்ட தேயிலைச் செடிகளாகும். இச் செடிகளுக்கு இப்போது 125 வருடங்களுக்கு மேற்பட்ட வயதாகும். இச் செடிகள் இத்திட்டத்தின் கீழ் பறித்தெடுக்கப்படலாம்.
இரண்டாவதாக, இங்குள்ள வயது முதிர்ந்த தேயிலை செடிகளை பிடுங்கி எடுத்ததன் பின்பு அதன் உற்பத்தியை நம்பி வாழ்ந்திருக்கும் தொழிலாளர்களும் அவ்விடங்களில் இருப்பது அர்த்தமற்ற விடயமாகும். பயனற்ற தேயிலையை பிடுங்கும் போது, தனது வாழ்வையும் வனப்பையும் அர்ப்பணித்த அந்தத் தொழிலாளர்களும் வேருடன் பிடுங்கி எறியப்படுவார்கள்.
தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான வேறு காரணங்களும் உடந்தையாகக் காணப்படும். அவற்றில் ஒன்று அவர்கள் வாழ்ந்த வீடுகள் மற்றுமொரு விடயம் குறைந்த வருமானம். ஏற்றுக் கொள்ளத்தக்கதான குடியிருப்பும் இல்லை. வருமானமும் இல்லை. தொழில் செய்யும் தேவையும் இல்லை என்ற நிலைவரத்தில் 'மலையகம்' நமது மண்வாசனை 'மலையக பண்பாடு' போன்ற எல்லா விருப்புகளுக் கும் சோதனை மிகுந்த காலமாக மாற்றமடையலாம்.
மேலே குறிப்பிட்டது போல உருவாக்கப்பட்ட தேசிய பௌதிக திட்டத்தில் மலையக மக்களின் வாழ்விடத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. இத்தேசிய திட்டம் தீர்க்கமாக அங்கீகரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் திட்டமாகும். இந்நிலையில் சுமார் 900,000 பேராக மலையக தேயிலை, இறப்பர் தோட்டங்களில் அதன் தொழில்களில் தங்கியிருப்பவர்களின் மேம்பாட்டிற்கு என்னென்ன யோசனைகளை முன்வைக்கலாம் என்பதையும் யாவரும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றில் பின்வருவனவற்றை முன்வைக்கப்படும் யோசனைகளில் ஒன்றாகக் கொள்ள முடியும்.
1.தேசிய திட்டத்தின்படி மலையகப் பகுதிகளில் உருவாக்கப்படும் உயர் விளைவு தரக்கூடிய தேயிலைக் காணிகளில் எவ்வாறு தொழில்புரிவது.
2.அங்கு உருவாக்கப்படக்கூடிய பால் பண்ணை அபிவிருத்தி, காடு வளர்ப்பு, உல்லாசப் பயணத்துறை போன்றவற்றில் நாம் எவ்வாறு பங்காளர்களாவது.
3.தோட்டங்கள் தவிர்ந்த நகரங்களில், கிராமங்களில் வளர்ந்துள்ள தொழில்களில் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது.
4.இருக்கின்ற அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி பொருத்தமான நிலைத்து நின்றிருக்கக் கூடிய பொருளாதார ஈடுபாட்டுடன் சொந்தமான குடியிருப்புகளை எவ் வாறு பெற்றுக் கொள்வது.
5. படித்த இளைஞர்கள் வெளியிடங்களில் வேலைக்கு செல்வதற்கு தகுதியான வகையில் மேலும் தொழிற்பயிற்சி நிலைய ங்களை அமைத்து அதில் பெருமளவு தொழிலாளர்களது பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சி அளிப்பது.
இவை தவிர, மேலும் பல நல்ல ஆலோ சனைகளை முன்வைக்கும் முகமாக பொரு த்தமான கருத்திட்டங்கள் இடம் பெறுவது அவசியமாகும். இவ்வாறான செயற்பாடுகளூடாக சமூகத்தில் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படுவதை எதிர்பார்க்கலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...