Headlines News :
முகப்பு » , » என் ஹீரோவுக்கு வயது நூறு ! - மல்லியப்புசந்தி திலகர்

என் ஹீரோவுக்கு வயது நூறு ! - மல்லியப்புசந்தி திலகர்இன்று மக்கள் கவிமணி ஸி.வி.வேலுப்பிள்ளை எனும் மாமனிதரின் 100 வது பிறந்ததினம்.

எனக்கு கல்வியில், கலை இலக்கியத்தில் அதிக ஆர்வத்தை எற்புடுத்தியது கல்லூரி நூலகத்திலும் பார்க்க ஒரு கவிஞனின் கல்லறை என்றுதான் நினைக்கிறேன். எங்கள் ஊர் பாதையேரத்தில் இருக்கும் அந்த கல்லறை சிறுவயதிலேயே ஆயிரம் விதைகளை என்னுள் விதைத்தது.

இலங்கை சுதந்திர நாடாளுமன்றத்தின் உறுப்பினர், நாடுபோற்றும் கவிஞன்- நாவலாசியர், ‘மாவலி’, ‘கதைஆகிய கலை, இலக்கிய அரசியல் ஏடுகளின் ஆசிரியர், அரசியல்வாதி - தொழிற்சங்கவாதி -இலக்கியவாதி எனும் பன்முக ஆளுமையான ஸி.வி. வேலுப்பிள்ளை பிறந்து வளர்ந்த மடகொம்பரை தோட்டம்தான் எங்கள் ஊர்.

ஸி.வி. 1914ஆம் ஆண்டு பிறந்து 1984ஆம் ஆண்டு மறைந்தவர். எழுபது வருடங்களே வாழ்ந்து மறைந்தாலும் எண்ணிலடங்கா இதயங்களில் வாழும் கவிஞர் அவர்.  ‘கூலிகள்என அழைக்கப்பட்ட தொழிலாளர்க்கு மலைநாட்டு மக்கள்எனும் மரியாதை மிகு முகவரி தந்த மாமனிதர் ஸி.வி.

மடகொம்பரை எனும் தேயிலைத் தோட்டத்து மண்ணில் பிறந்துதான் இந்த மகத்தான சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது அஸ்தி அடக்கப்பட்டிருக்கும் அந்த கல்லறைதான் எங்களுர் பாதையேரத்தில் இருக்கும் கல்லறை கங்காணி புதைகுழிஎன எங்கள் ஊர் மக்கள் அழைத்துவந்த இடம் இப்போது ஒரு கவிஞனின் கல்லறையாக மாறியிருக்கிறது.

அந்த கல்லறை என்னுள் விதைத்த ஆயிரம் விதைகள் அவ்வப்போது துளிர்விட்டு என்னைச் செப்பனிட்டு வந்துள்ளதை நான் உணர்கிறேன்.

என்வாழ்வில் இரண்டு அறைகள் பெரம் செல்வாக்கு செலுத்தியுள்ளன. ஓன்று அம்மாவின் கருவறை ! இரண்டாவது ஸிவியின் கல்லறை !. மடகொம்பரை மண்ணில்  பிறந்த பாக்கியம்பெற்ற என்னுள்  இங்கிருந்துதானே இத்தகைய ஆளுமை வெளிவந்திருக்கிறார்’  எனும் எழுச்சியுணர்வை விதைத்து ஸி.வி.யின் கல்லறை. அவரை நான் நேரில் கண்டதில்லை. ஆனால் அவர்தான் என் ஹீரோ…!

அவர் கற்ற மடகொம்பரை தோட்டப்பாடசாலையிலும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் (அவர் காலத்தில் காலத்தில் மெதஸ்டித கல்ல}ரி எனும் பெயரில் இயங்கியது) எனக்கு கல்வி பெறும் வாய்ப்பு கிடைத்தது. சிறுவயதில் ஸி.எஸ்.காந்தி எனும் ஆசிரியரிடம் ஆங்கில ரியு+சன் வகுப்புக்குச் செல்வேன். ஆவர் ஸி.வியின் உறவினர். அவர் வாழந்த வீடு ஸி.வி. பிறந்து வாழ்ந்த வீடு. ஆனால் நான் செல்லும் காலங்களில் பாழடைந்து கிடந்தது. அங்கு அமர்ந்து படித்த காலங்கள் என்றும் பசுமையாக நினைவிருக்கிறது.  ஒரு மரப்பெட்டியின் மீது கொப்பியை வைத்துத்தான் பாடம் எழுதுவோம். பின்னாளில் தெரிந்தது. அந்த மரப்பெட்டியின் உள்ளே இருந்தது ஸி.வி.யின் எழுத்துப்பொக்கிஷங்கள் என்பது.

ஸி.வி கொழும்பு நாலந்தா கல்லூரியில் மெட்ரிகுலேஷன் கற்றுத் தேந்ர்ந்துள்ளார் என்பதை எங்களுரில் பெருமையாக பேசுவார்கள். எங்களுக்கு அறிவுரை சொல்வோருக்கு அதுதான் மருந்து..

நானும் கொழும்புக்குப் போய் படிக்க வேண்டும்என சிறுவயதிலேயே கனவு காண்பேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று தோட்டத் தொழிலாளிகளான என் அம்மா, அப்பாவோடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டபோது (2001) எனது கனவு நனவாகியிருந்தது.

ஸிவி ஆசிரியனாகவே தொழில் தொடங்கியுள்ளார். (ஹட்டன் மெதடிஸ்ட் கல்லூரி, தலவாக்கலை சுமனமகா வித்தியாலயம், நுவரெலியா காமினி வத்தியாலயம்). பு+ண்டுலோயா நகரில் தாகூரின் பெயரில் கல்விக்கூடம் அமைத்து செயற்பட்டுள்ளார்.

1993 உயர்தரம் முடிவடைந்ததும் ஆசிரியனாகவே தொழில் தொடங்கினேன். ஹட்டன், மல்லியப்பு நகரில் லோயல் கல்வியகம்எனும் கல்விக்கூடத்தின் பொறுப்பாளனாகவும் ஆசிரியனாகவும் எழுவருடங்கள் பணியாற்றியுள்ளேன். அந்த நாளிலேயே தொழிலாளர் தேசிய சங்கத்துடன் தொடர்பு எற்பட்டது. அதன் தலைவராக இருந்த திரு.அய்யாத்துரை, மாத்தளை ரோகிணி எனும் எழுத்தாளர். ‘உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்எனும் மலையக தியாகிகள் பற்றிய நூலைத் தந்தவர். நாவல்களும் எழுதியுள்ளார்.

ஸி.வியுடன் அதிக நேரங்களை கலை, இலக்கிய, அரசியல், தொழிற்சங்க பணிகளில் செலவிட்டவர் மாத்தளை ரோகிணி.. அவருடனான தொடர்புகள் ஸி.வியின் படைப்புகளைத் தேடிப்படிக்கும் ஆர்வத்தைத் தந்தது. நான் பல காலம் தேடித்திரிந்த இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலேகவிதைத் தொகுப்பை வாசிக்க தந்தது அவர்தான். ஆனால் அது பாதி எரிந்த புத்தகம். எனக்கு அதனை மறுபதிப்பு செய்யும் ஆர்வம் வந்தது. பல ஆண்டுகள் முயற்சித்து 2007 ஆம் ஆண்டு செப்தெம்பர் 29 அம்மாவின் பெயரில் பாக்யா பதிப்பகம் என நிறுவி அதன் முதல் நூலாக இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலேஎனும்; ஸிவியின் புகழ்பெற்ற ஆங்கில நெடுங்கவிதையின் ஆங்கில மூலத்தையும் சக்தீ பால அய்யாவின் தமிழாக்கத்தையும் ஒன்றாகப் பதிப்பித்தேன். இன்று இணையத்தில் நீங்கள் படிக்கும் அந்த நூல்தான் என் பதிப்பகத்தின் முதல் வெளியீடு. ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு என் மாணவர்களை  மேடைக்கு அழைத்து இலவசமாக அள்ளிக்கொடுத்தேன். கூடவே நான் கவிதை எனும் பெயரில் கிறுக்கிய என் முதல் நூலான மல்லியப்புசந்திநூலும் அன்று வெளியிடப்பட்டது.

அய்யாத்துரை அவர்களுடனான உறவு ஸி.வி அவர்கள் பணியாற்றிய வி.கே வௌ;ளையன் அவர்கள் உருவாக்கிய தொழிலாளர் தேசிய சங்கம் பற்றியும் பல பதிவுகளைத் தந்தது. அடிக்கடி அங்கு சென்று வரும் எனது பழக்கம் 1993 முதலே என்னை அபிமானியாக்கியது. பின்னர் 2006ஆம் ஆண்டு முதல் ஆலோசகனாக்கியது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் மீளுருவாக்கத்தில் எனது பங்களிப்பு பற்றி அரசியல் தொழிற்சங்க தளத்தில் பலரும் அறிவர். இன்று முழுமையாக இல்லாதபோதும் என்னைப்பலரும் தொழிலாளர் தேசிய சங்கக்காரணகவே பலரும் பார்ப்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மறைப்பதற்கும் ஒன்றுமில்லை.

ஆனால், அந்த அமைப்போடு எனக்கு ஏற்பட்ட தொடர்புகளும் இருக்கும் தொடர்புகளும் என் ஹீரோவுக்கு இன்னுமொரு வரலாற்று முத்திரையை பதிவுச்செய்யும் வாய்ப்பினை எனக்கு வழங்கியிருக்கிறது.

ஆமாம்….! முத்திரையே தான். இலங்கை தபால் முத்திரையில் ஸிவியின் தலையுடன் நூற்றாண்டு நிறைவை பதிவு செய்யும் தபால் முத்திரைதொடர்பான வேலைகளில் முழு மூச்சாக ஈடுபட்டு எதிர்வரும் 21ஆம் திகதி ஹட்டனில் வெளியிடப்படவுள்ளது. இந்த நாட்களில் ஓய்வே இல்லை. ஓரிரு மணித்தியாலங்களே உறக்கம். அத்தனை வேலைப்பளு. எனினும் என் ஹீரோவின் முகத்தை முத்திரையில் காணும் ஆர்வத்தில் இருக்கிறேன். கைக்கு கிடைத்ததும் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறேன்.

இதுவொன்றும் பெரிய விடயமல்ல என யாரும் நினைக்கக்கூடும். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்த எழுந்த ஆளுமையினை மறைக்க முயலும் ஆதிக்க சக்திகளின் பல தடைகளையும் தாண்டி அரசியல்செய்தே இந்தப்பணியை நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. இந்தப்பணியில் நேரடியாகத் தலையிட்டு செயற்பட்டுக்கொண்டிருப்பவன் என்ற வகையில் இதன் பின்னாலுள்ள அழுத்தங்களை உணர்பவன் நான். எனது வேண்டுகோளை ஏற்று இந்தப்பணியில் ஒத்துழைத்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களுக்கு நன்றிகள்.

தகவம்அமைப்பினர் என்னை ஸி.வி நூற்றாண்டு நினைவுரையாற்ற அழைத்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயிருக்கவில்லை. இன்று அந்தனிஜீவா அவர்கள் ஒழுங்கு செய்திருக்கும் நிகழ்வை தொகுத்து வழங்கவுள்ளேன். ஏதிர்வரும் 21ஆம் திகதி தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் நானே நூற்றாண்டு விழாக் குழு பொறுப்பாளராகவிருந்து ஸி.வி நூற்றாண்டு விழாவைகொண்டாட உள்ளோம். அதில் வெளியிடப்பட்டுள்ள மாவலிஸி.வி சிறப்பிதழ் தயாரிப்புப் பணி என உறக்கத்தையும் விழுங்கிக்கொடிருக்கிறது. 28ம் திகதி ஸிவி நூற்றாண்டு நினைவுக் குழு நடாத்தவிருக்கும் நிகழ்ச்சியிலும் எனது பங்களிப்பு இருக்கும். நண்பர் கிங்ஸ்லி கோமஸ் தயாரித்துக்கொண்டிருக்கும் ஸி.வி.ஆவணப்படத்தில்என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய இன்று என்னிடம் வருவதாக சொல்லியிருக்கிறார்….

ஸி.வி எவ்வாறெல்லாம் என்னுள் வியாபித்து நிற்கிறார்;… மீண்டும் நினைவுக்கு வருகிறது
ஸி.வி ! நீங்கள்தான் என் ஹீரோ…!
எனக்கு இன்னமொரு கனவுண்டு,
நான் ஆங்கிலம் கற்ற ஸிவி வாழ்ந்த வீடு திட்டமிட்ட அடிப்படையில் தோட்ட உடைமையாக்கப்பட்ட சம்பவம் என் நெஞ்சில் பதிந்திருக்கும் மாறாத வடு. இது பற்றிய தகவம்நினைவுரையில் பதிவுசெய்துள்ளேன். கடடுரையிலும் பதிவு செய்வேன். என கனவையும் நிறைவு செய்வேன். விரைவில் அதே மடகொம்பரை மண்ணில் ஸிவி மணி மண்பம்எழும்பும் என நம்புகிறேன்.

எவ்வளவோ பண்ணிட்டோம்…. இதப்பண்ண மாட்டாமோ…..என்ன..?’


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates