சாரல் நாடன் |
மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப்போகின்ற ஆய்வாளர்கள், விமர்சகர்கள் கால க்கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களின் பின்னர் சாரல் நாடன் யுகம் என்றும் கணிக்க வேண்டும் என்று மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் போத்திரெட்டி பல ஆண்டு களுக்கு முன் இலக்கிய உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருந்தார். கடந்த முதலாம் திகதி எம்மை விட்டு பிரிந்த சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்ப்பதை மலையக இலக்கிய வராலாற்றில் அவருக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும்.
அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி உருவாக்கிய சாரலின் திறமை கண்டு இரா.சிவலிங்கம் அவரை எஸ்.திருச்செந்தூரன் போன்ற ஆசிரியர்கள் ஊக்கப்படுத்தினர். 1960களில் எழுத்திலும், பேச்சிலும், கவிதைகளிலும் புதியதோர் ஆத்திகப் பரம்பரை மலைய கத்தில் உருவாகியது. சீற்றம் மிகுந்த அந்த இளந்தலைமுறையினரை பல்வேறு வகைகளிலும் சி.வி.வேலுப்பிள்ளை உற்சாகப்படுத்தினார். அப்பரம்பரையின் முன் னோடியான சாரல் நாடன் மலையகத்தின் மணிக்கொடி என்று அழைக்கப்பட்ட மலைமுரசு இதழில் எழுதினார். தினகரன் ஆசிரியராக பேராசிரியர் கைலாசபதி பொறுப்பேற்றவுடன் மண்வாசனை மிக்க படைப்புக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தார். மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையை எழுதத்தூண்டினார். அவரின் நடை சித்திரங்கள் தினகரனில் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து என்.எஸ்.எம். இராமையா, சாரல்நாடன் ஆகிய இருவரும் தமது ஆக்க இலக்கிய படைப்புக்களான சிறுகதைகளை எழுதினர்.
சாரல்நாடனின் 'எவளோ ஒருத்தியை'பிரசுரித்த பேராசிரியர், தம் கைப்பட கடிதம் எழுதி ஊக்கப்படுத்தினார். என்.எஸ்.எம்.இராமையாவும், சாரல்நாடனும் மலையக இலக்கியத்தின் நம்பிக்கைகள் என்று கைலாசபதி சி.வி.வேலுப்பிள்ளையிடம் கூறி மகிழ்ந்திருக்கின்றார். டாக்டர் நந்தி கனக செந்தில்நாதன் போன்றோரும் 'எவளோ ஒருத்தி' பற்றி பாராட்டினர்.
ஹைலன்ஸ் கல்லூரியின் முதல் பல்கலைக்கழக மாணவனாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தும் அவரால் தொடர, முடியவில்லை. கண்டி அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே கதை, கவிதை என்பதுடன் விமர்சனம், நாட்டார் இயல் என்று எழுதத் தொடங்கினார்.
அகில இலங்கையிலுமே தேயிலை ஆராய்ச்சி நிலையமும் பெருந்துறை நிர்வாகம் பற்றிய தேசிய நிர்வாகமும் நடத்திய தேர்வில் முதலாவதாக மதிப்பெண்கள் பெற்று தேயிலைத் தோட்டத்தொழிற்சாலையின் உயர் அதிகாரியாகத் தெரிவு செய்யப்பட்டார். எந்த தோட்ட மக்களைப்பற்றி எழுதினாரோ அந்த மக்களின் உழைப்பின் மகிமையை வெளிப்படுத்தும் தேயிலையை பதமாக உருவாக்கும் படைப்பாளியானார். இயந்திரங்களுக்கு மத்தியில் இயந்திரங்களைப் போன்று மனிதர்களுடன் தொழில் புரியும் தான், இயந்திரமயமாகி விடாமல் இருக்க இலக்கியத்திடம் தஞ்சம் புகுவதை நாளாந்தம் பழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றேன் என்று சாரல் குறிப்பிடுவார்.
கவிமணி சி.வி. யின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் 'சி.வி. சில சிந்தனைகள்' என்ற படைப்பைத் தந்தார். அவர் இறுதியாக எழுதிய நூலும் சி.வி. பற்றியதாக இருந்தது என்பது வியப்புக்குரியது. 'இலங்கை தமிழ் சுடர்மணிகள் 18' என்ற குமரன் புத்தக இல்லம் வெளியிட்ட, சி.வி வேலுப்பிள்ளை' என்ற சாரல்நாடன் எழுதிய நூல் வெளியீட்டு விழா கடந்த 12.07.2014இல் சங்கமம் கலை இலக்கிய ஒன்றியத்தால் அட்டனில் நடந்தது. இதுவே அமரரின் இறுதி இலக்கிய நிகழ்வாகும். வீரகேசரி 1962ஆம் ஆண்டு மலையக எழுத்தாளர்களுக்காக நடத்திய சிறுகதைப்போட்டியில் சாரல்நாடன் எழுதிய கால ஓட்டம் சிறுகதை இரண்டாம் இடத்தை பெற்றது. அதுமட்டுமன்றி, அநேக ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சி.வி. சில சிந்தனைகள், தேசபக்தன் கோ. நடேசய்யர், மலையக தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலைக்கொழுந்தி சிறுகதைகள், மலையகம் வளர்த்த தமிழ், பத்திரிகையாளர் நடேசய்யர், மலையகத்தமிழ் வரலாறு, பேரேட்டில் சில பக்கங்கள், பிணந்தின்னும் சாத்திரங் கள், மலையக இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும், இளைஞர் தளபதி இரா. சிவலிங்கம், சி.வி.வேலுப்பிள்ளை, இன்னொரு நூற்றாண்டுக்காய் ஆகிய நூல்களை சாரல் நாடன் எழுதியுள்ளார்.
அவரது படைப்புக்கள் அதிகமாக ஆய்வு இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன.
மலையக எழுத்தாளர்கள் எவரும் அதி கம் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைக ளில் அக்கறை காட்டினார் சாரல். அடுத்தவர்களின் கட்டுரைகளின் குறிப்புக்களை சேகரித்து எழுதுவதில் இவருக்கு விருப்பம் இல்லை. தகவல்கள் சரியானவையா ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை நேரில் தேடிப்பிடித்து விளக்கம் பெற விரும்பினார். தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தை சேகரிப்பது போல நூல் நிலையங்களை தேடிப் போனார். கொழும்பு தேசிய சுவடிக்கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தியோதய நூலகம் அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ நூலகம், நுவரெலியா நூலகம், போன்றவற்றில் அதிக நூல்களைத் தேடிப் படித்தார். தேசிய சுவடிக்கூடத்தில் பழம் பத்திரிகைகளையும் ஹன்சார்ட் போன்றவற்றையும் நுணுகி ஆராய்ந்தார். மாதக் கணக்கில் விடுமுறை எடுத்து ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் குறிப்புக்கள் சேகரித்தார். இதனால் தொழி லை விட நேர்ந்தது.
அவரது தேடலின் அற்புத அறுவடை தான் 'தேச பக்தன் கோ. நடேசய்யர்' என்ற மலையகத்தின் மாமனிதரைப் பற்றிய நூல். ஒரு காலத்தில் மலையகம் பற்றிய தகவல்களைப் பெற சி.வி.யிடம் தான் போவார்கள். அவர் இல்லாத கால கட்ட த்தை நிறைவு செய்தவர் சாரல். அவரது இடத்தை நிரப்ப கருத்துக்கெட்டிய வரை மலையகத்தில் எவரும் இல்லை என்பதே உண்மை நிலையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...