Headlines News :
முகப்பு » , » "தேயிலை ஏற்றுமதி வருமானத்தின் நன்மை தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும்" - சதாசிவம்

"தேயிலை ஏற்றுமதி வருமானத்தின் நன்மை தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும்" - சதாசிவம்



தேயிலை ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலாவணி வருமானம் என்பனவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் நன்மைகள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் சென்றடைதல் வேண்டும் என்று மத்திய மாகாண சபையின் உறுப்பினர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சதாசிவம் மேலும் இங்கு உரையாற்றுகையில்;தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியற் போக்குகள் மோசமடைந்துள்ளன. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவர்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. ஒரு மாதத்தில் குறைந்தளவிலான வேலை நாட்களே இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. கூட்டு ஒப்பந்தத்திற்கேற்ப நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. கூட்டு ஒப்பந்தம் பெயரளவு ஒப்பந்தமாகியுள்ளது. கம்பனியினர் தொழிலாளர்களின் நலன் குறித்து கொஞ்சமும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. தொழிலாளர் நலன்களை புறந்தள்ளும் கம்பனியினர் ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வீடுகளில் இருந்து வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையும் கண்டிக்கத்தக்க விடயமாகும். இது தொடர்பில் சகல தரப்பினரும் தமது கண்டனத்தைத் தெரிவிக்க பின்நிற்கக் கூடாது.

2014 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் தேயிலை ஏற்றுமதியானது 7.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அந்நியச் செலாவணி வருமானமானது 18 வீதத்தினால் உயர்வடைந்துள்ளமையும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். எனினும் பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையை கொண்டு நடாத்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் இதன் நன்மைகள் சென்றடைதல் வேண்டும். கம்பனியினர் இலாபம் கிடைக்கும் போது மௌனமாக இருந்து வருகின்றனர். சிறிது சறுக்கல் ஏற்பட்டாலும் கூக்குரல் இடுகின்றனர்.
தோட்டக் குடியிருப்புகள் நீண்ட காலமாக பழுதுபார்க்கப்படாமல் உள்ளன. ஊதிய அதிகரிப்பினை இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவுகளை உரியவாறு வழங்குவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஊழியர் சேமலாப நிதிப் பணமும் சில தோட்டடங்களில் முறையாக வைப்பில் இடப்படாதுள்ளதாக தெரிய வருகிறது. எனவே, இந்நிலையில் தொழிலாளர்களின் மேம்பாடு தொடர்பாக கம்பனியினர் கவனம் செலுத்த வேண்டும். மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகளும் காத்திரமான பங்களிப்பினை தொழிலாளர் நலன் கருதி வழங்க வேண்டும் என்றார்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates