இந்த பேட்டி 09 ஓகஸ்ட் அன்று சிரச தொலைக்காட்சியில் “முஹுனட்ட முஹுன” (நேருக்கு நேர்) என்கிற நிகழ்ச்சியில் ஏறத்தாழ இரண்டரை மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட நேர்காணல் இது. பேட்டிகள் அளிப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்த பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ சமீபகாலமாக ஊடகங்களில் அதிகம் காணத்தொடங்கியுள்ளார். அதுவும் குறிப்பாக சிங்கள ஊடகங்களில் அப்பாவி போன்ற தோற்றத்தோடும், தேர்ந்த அரசியல் ஞானமும் தூரநோக்கு உள்ளவரைப்போன்றும் காட்டிக்கொள்வதைக் காணலாம். இந்த பேட்டியில் தான் ஜனாதிபதி அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என்கிற பிரகடனத்தையும் முதலில் வைத்தார். ஆனால் அந்தப் பிரகடனம் தவிர்த்து இந்த பேட்டியில் கூறப்பட்ட பல முக்கிய விடயங்கள் ஊடகங்களில் வெளிவரவில்லை. தகவல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்த நேர்காணலின் உள்ளடக்கம் முக்கியமானவை. இது பேட்டியின் 25 வீதமும் இல்லை. விரிவஞ்சி முழு பேட்டியையும் இங்கு மொழிபெயர்க்காவிட்டாலும் முக்கிய விடயங்கள் இங்கு சுருக்கித் தரப்படுகின்றன.
இந்த பேட்டியை முழுமையாக சிங்கள சமூகத்தில் காட்டப்படும்போது மூளைச்சலவைக்கு உள்ளாவது திண்ணம். ஏறத்தாழ கோட்டபாயவின் மீது பொதுவாக முன்வைக்கப்படும் அனைத்துக்கேள்விகளுக்கும் மிகத்தந்திரமாகவும், ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் பதிலளிக்கப்படுகிறது. யுத்த வெற்றி, நாட்டின் அபிவிருத்தி என்பவற்றில் தனது மாபெரும் பாத்திரத்தை நாசூக்காக பார்வையாளரின் தலையில் ஏற்றிவிடுகிறார். கோட்டே தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார் என்ற சலசலப்பு கடந்த ஜூன் மாதம் நிலவியது. ஆனால் அடுத்த மாதமே இந்த பேட்டியின் மூலம் தனது பிரவேசத்தை உறுதி செய்துள்ளார் என்றே நம்பலாம். கோட்டே தொகுதியில் இடம்பெற்றுவரும் துரித அபிவிருத்தி, கோத்தபாயவின் நேரடி அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன கவனிக்கத்தக்கது.
மகிந்த ராஜபக்ச 3வது தடவை ஜனாதிபதித் தேர்தலில் அரசிலமைப்பின் பிரகாரம் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் நானே அடிப்படை உரிமை வழக்கு தொடர்ந்து நீதிமன்றில் வாதாடுவேன் என்று முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்திருந்தார். எந்த விலை கொடுத்தும் இந்த சிக்கலை தீர்ப்பதற்கான முஸ்தீபுகள் அரசாங்க தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் ஒரு மாற்று வழியாக கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டுவருவதுடன். அதற்கான முன்தயாரிப்புகளும் நடந்து வருவதாக தெரிகிறது.
சென்ற தேர்தல் காலங்களில் சிங்கள பௌத்த உணர்வை பங்கு போட இருந்த சக்திகள் அனைத்தும் இம்முறை தன்னகத்தே குவித்திருக்கும் அரசாங்கம்; போதாக்குறைக்கு பொதுபல சேனா போன்ற அமைப்புகளை சிங்கள பௌத்த ஏகபோக உரிமையை கைப்பற்றுவதற்கு பயன்படுத்தி வருவதாகக் கொள்ளலாம். மிஞ்சியிருக்கும் “போர்வெற்றியுணர்வு”க்கு மேலதிகமாக இந்த சிங்கள பௌத்த உணர்வே அரசாங்கத்தின் இருப்பையும் தேர்தல் வெற்றியையும் பாதுகாக்கும் என்று நம்புவதாக தெரிகிறது. அரசாங்கத்திடம் இருக்கும் இறுதிச் துரும்புச் சீட்டாக கோத்தபாயவை பயன்படுத்துவதற்கான கதையாடல் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மேலதிகமாக சிறுபான்மையினரின் வாக்குகளை திரட்டுவதற்கான வியூகங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனான சந்திப்புக்காக மனோ கணேசனை தூது விட்டதும் இதன் அங்கமே. பசுந்தோல் போர்த்திய புலியாக இனி அரசியல் களத்தில் இறங்கவிருக்கும் கோத்தபாயவை காணப்போகிறோம் என்பது மட்டும் நிச்சயம். இந்த பேட்டி அந்த வகையில் கவனிக்கத்தக்கது.
------------
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் புலிகளை தோற்கடித்த பின்னர் வெளிநாடுகள் கூறின புலிகளை தோற்கடித்தால் மாத்திரம் போதாது மீண்டும் அது தலைதூக்கியே ஆகும் என்று.
சரணடைந்த 12,800 பேருக்கு புனர்வாழ்வளித்துள்ளோம். ஆனால் அவர்கள் பழைய எண்ணங்களில் இருந்து எந்தளவு விடுபட்டு இருக்கிறார்களா என்பது தெரியாது. ஆனால் புலிகள் இயக்கத்தில் வெவ்வேறு பதவிகளில் இருந்தவர்கள் சிலர் கணிசமான அளவு அந்த மனநிலையிலிருந்து விடுபட்டும் இருக்கிறார்கள். சரணடையாது தப்பிச்சென்றவர்கள் பலர் உலகில் பரந்துபட்டு இருக்கிறார்கள். புலிகளின் பலமான வலையமைப்பு இன்றும் இருக்கிறது. புலிகள் தோற்றபோது அவர்களால் புதைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்களை நாங்கள் கைப்பற்றினோம். ஆனால் இன்னமும் அவ்வாறான ஆயுதங்கள் இருப்பதாக நம்புகிறோம். அவ்வாறு புதைக்கப்பட்டிருப்பவற்றை அறிந்தவர்களும் தமிழ் சமூகத்தில் இருக்கிறார்கள்.
புகலிடத்தில் இருப்பவர்கள் இனவாதத்தையும், பயங்கரவாதத்தையும் ஊக்குவித்து வருகிறார்கள். அதில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த நிலைமைகளின்படி புலிகள் மீள புனரமைக்கப்பட்டு வெளிவர முடியும். 80 களில் நடந்தவற்றைப் பாருங்கள் குறுகிய காலத்தில் எப்படி வளர்ச்சியுற்று கிழக்கில் பாதிவரை கைப்பற்றி ஆட்சிசெய்தாதார்கள் என்று. இப்போது குறுகிய காலத்தில் அது நிகழ வாய்ப்பு உண்டு. எப்படி... ஆயுதங்கள் இருக்கின்றன, பயிற்றப்பட்டோர் இருக்கிறார்கள். புதிதாக கருத்தாக்கத்தை விதைக்க தேவையில்லை அது ஏற்கனவே சமூகத்தில் விதைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான சித்தாந்தம் பேணப்பட்டு வருகிறது. சர்வதேச ஆதரவை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கு முன் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் இருக்கவில்லையே. இப்போது அவர்களுக்கு மாகாணசபை இருக்கிறது. அந்த மக்களே அவர்களைத் தெரிவு செய்கிறார்கள்...
அரசியல் பேசுபவர்கள் அபிவிருத்தி பணிகளை செய்துகொண்டு அவர்களது வேலையை செய்யட்டும் ஆனால் இராணுவம் நாங்கள் எதையும் மறந்து விட்டு செயல்பட முடியாது. எனவே தான் வெளிநாடுகள் புலிகள் இயக்கம் மீள வரும் என்று கூறியிருந்தும் இந்த ஐந்து வருடங்களின் பின்னும் எதுவும் நடக்காதபடி பேணி வருகிறோம். பல நுணுக்கமான வழிகளை கையாண்டோம். நாங்கள் எங்கள் புலனாய்வுப் பிரிவை மிக நுணுக்கமாக வழிநடத்தினோம். இராணுவத்துக்கு யுத்தம் செய்ய வேண்டிய வேலை இப்போது இல்லையல்லவா. எனவே புலனாய்வு பிரிவை விரிவாக்கினோம். அது போல இராணுவத்தை வேறும் பல பணிகளில் ஈடுபடுத்தினோம். மக்களோடு மக்களாக சேர்ந்து பணியாற்ற வைத்தோம். இது ஒரு வகையில் winning heart and mind நடவடிக்கையும் கூட.....
புலிகளோ அல்லது எந்தவொரு பயங்கரவாத இயக்கமோ இராணுவ ரீதியில் தலைதூக்க முடியாத வகையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அப்படிஇருந்தும் அதற்கான முயற்சிகள் நடந்தன... எங்கள் புலனாய்வுப்பிரிவின் ஆற்றலாலும் இராணுவத்தினரது திறமையாலும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். ஏன் இன்னமும் இராணுவத்தை அங்கு வைத்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். அதை அவர்கள் கேட்க வேண்டியதில்லை. இராணுவத்தைப் பற்றி குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்...
நான் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் முதன் முதலில் பணிக்கமர்த்தப்பட்டது பலாலியில் தான் அப்போது 100 பேர் தான் முகாமில் இருந்தோம். இன்று இந்த முகாம் சிறிது சிறிதாக விரிவாக்கப்பட்டு அதன் பின்னர் குடாநாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்ட ஒன்றைப்போல ஆனது. சிவிலியன்களுக்கு எந்தளவு விட்டுக்கொடுக்க முடியுமோ அந்தளவு முற்பட்டிருக்கிறோம். அதேவேளை ஒன்றை மறக்கக்கூடாது; அந்த பலாலி பகுதியில் அரச காணிகள் ஏராளமாக உள்ளது. விமானத்தளத்துக்கு சொந்தமான இடம், இராணுவ முகாமுக்கு சொந்தமான நிலம், துறைமுகத்துக்கு உரித்தான நிலம் , சிமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான நிலம் என அரச நிலங்கள் உள்ளன. அது போக சிவிலியன்களின் நிலத்தையும் எடுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் இராணுவ மூலோபாய ரீதியில் அது தேவைப்பட்டது. அனாவசியமாக நாங்கள் அந்த நிலங்களை எடுக்கவில்லை. முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களிலும் நாங்கள் அரசுக்கு சொந்தமான காணிகளைத்தான் இராணுவ முகாம்களுக்களின் பாவனைக்கு உட்படுத்தியுள்ளோம். மிகக் குறைந்தளவு எண்ணிக்கையான தனியாரின் காணிகளை பாவிக்க நேரிட்டபோது அவர்களுக்கு தேவையான உரிய நட்டஈட்டுத்தொகையை கொடுத்திருக்கிறோம். அதிகளவான தனியார் நிலங்களைப் பறித்திருந்தால் தற்போதுள்ள ஆர்ப்பாட்டங்களை விட பெரிய அளவில் எதிர்ப்பில் ஈடுபட்டிருப்பார்கள். அப்படியில்லையே. வெறும் அரசியம் லாபத்துக்காக சில சக்திகளின் தூண்டுதலினாலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சிறிய அளவில் நடக்கின்றன.
இவற்றை சட்ட ரீதியில் எப்படி எதிர்கொள்கிறீர்கள்...
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியில் தான் மேற்கொள்கிறோம். காணிகளின் சொந்தக்காரர்களுக்கு நட்டஈடு வழங்கியிருக்கிறோம். பல காணிகளின் சொந்தக்காரர்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் நாட்ட ஈடு வழங்கியிருக்கிறோம். அகதிகளானவர்களுக்கு வேறு இடங்களில் காணிகளையும் வழங்கி, வீடு கட்டுவதற்கு பணமும் வழங்கியுள்ளோம். மிகுதி இடங்களில் நாங்கள் கவனமாக உரியவர்களை குடியேற்றுகிறோம். நாங்கள் எவ்வளவு நியாயமாக நடந்துகொண்டிருக்கிறோம் என்பதையிட்டு எவரும் கதைப்பதில்லை.
தீர்வு என்பது புலிகளின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அல்லவே. இந்த நாட்டை துண்டாடும் தீர்வை அவர்கள் எங்களிடம் எதிர்பார்க்க முடியாது. எஞ்சிய தேவைகளை ஜனாதிபதியுடன் இணைந்து நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இராணுவத்தை விவசாயத்திலும், வீதி திருத்துவதற்கும் வேறு பல சிறிய வேலைகளிலும் ஈடுபடுத்தி வருவது குறித்து.
யுத்தத்தின் பின் இராணுவ ஒழுக்கத்தை பேண வேண்டியிருக்கிறது. யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் தினசரி பயிற்சியில் ஈடுபடுத்தப்படவேண்டும். விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்படவேண்டும். ஒழுக்கத்தை பாதுகாக்க வேண்டும், அதைவிட அவர்களை சும்மா வைத்திருக்க முடியாது. அவர்களை ஏதாவது கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். பயிற்சிபெற்ற இளம் பிரிவினர் ஒரே முகாமில், அதுவும் செய்வதற்கு ஒன்றும் இல்லையென்றால் அங்கு சர்ச்சைகள் உருவாகிவிடும் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. இன்று இராணுவம் புகுந்து பல தீய செயல்களை செய்கின்றன என்கிற குற்றச்சாட்டு இல்லாததற்கு இந்த வழிமுறை தான் காரணம். உலகில் பல நாடுகளில் அவ்வாறு இடம்பெறுகின்றன.. இங்கு இல்லை.
முன்னாள் இராணுவ அதிகாரிகளை இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்துவது குறித்த குற்றச்சாட்டு
முன்னால் அமெரிக்க இராணுவ அதிகாரி கொலின்பவள் ஓய்வு பெற்றதன் பின்னர் சிவில் சேவைக்கு வந்தார். முன்னால் நமது இராணுவத்தளபதி ஓய்வு பெற்ற பின் சாதாரண சிவில் நடவடிக்களில் ஈடுபடவில்லையா... அதெல்லாம் பிரச்சினை இல்லையென்றால் இது மட்டும் பிழையாவது எப்படி.
சமீபகாலமாக பொலிசாரால் அதிகரித்து வரும் எதேச்சதிகாரம் குறித்து
யுத்த காலத்தில் பெரும்பாலான பொலிசாரை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஈடுபடுத்தியிருந்தோம். அவர்களுக்கு இராணுவ பயிற்சியும், ஆயுத பயிற்சியும் வழங்கி பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்காக ஈடுபடுத்தப்பட்டார்கள். யுத்தம் முடிந்ததும் அவர்கள் மீண்டும் தெற்குக்கு கொணரப்பட்டபோது அவர்களுக்கு இயல்பான பொலிஸ் பயிற்சியை மீண்டும் வழங்க நேரிட்டது. யுத்தகாலத்தில் ஏற்பட்ட விளைவு இது. இவ்வாறான மன நிலையை மாற்றுவது இலேசானதல்ல...
அளுத்கம பேருவல பிரச்சினையில் பொலிசாரால் தடுத்திருக்கலாம் என்கிற குற்றச்சாட்டு குறித்து...
பொலிஸ் தரப்பு போதிய அளவு தமது கடமையை ஆற்றியதால் தான் இந்த நிலைமை இந்தளவிலாவது கட்டுப்பாட்டுக்குள் கொணரக்கூடியதாக இருந்தது என்பதை மறந்து விடக்கூடாது.
ஆனால் ரத்துபஸ் சம்பவத்தில் உடனடியாகவே இராணுவம் ஈடுபடுத்தப்பட்டதல்லவா
பொலிஸ் அதிகாரிகள் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை உதவி தேவை என்கிற கோரிக்கை வைக்கப்படும் போது தான் மேலதிக இராணுவ உதவி அனுப்பப்படும். அப்படித்தான் ரத்துபஸ் சம்பவத்தில் இராணுவம் அனுப்பட்டது. கட்டுநாயக்க சம்பவத்திலும் அப்படித்தான். தொம்பே பகுதியில் நிகழ்ந்ததும் அப்படித்தான். அழுத்கமவிலும் முதலில் பொலிஸ், பின்னர் விசேட அதிரடிப்படை, அதன் பின்னர் தான் இராணுவம். இராணுவம் என்பது இறுதியாக பாவிக்கப்படவேண்டியது.
இந்த அளுத்கம பேருவல சம்பவத்தை தொடர்ந்து உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு; மதத்தை முன்னிறுத்தி செயற்படும் சில சக்திகளுக்கு உங்கள் ஆசீர்வாதமும், அனுசரணையும் இருக்கிறது என்பது...?
இந்த குற்றச்சாட்டில் எந்த அடிப்படை தர்க்கமும் கிடையாது என்பது இந்த நாட்டின் நிலைமையை சரியாக புரிந்துகொண்டவர்களுக்குத் தெரியும். இந்த நாட்டில் எந்தளவு விலைகொடுத்து இந்த நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டியிருக்கிறோம். எனவே அதனை பாதுகாப்பது நமது கடமையாகிறது. பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தரப்பை அழைத்து நாங்கள் கதைத்திருக்கிறோம். கடந்த சில வருடங்களாக ஹலால் மற்றும் இன்னும் பல விடயங்கள் குறித்து நிறைய அவர்களோடு உரையாடியிருக்கிறோம். ஏனைய நாடுகளைப் பாருங்கள். நமக்கெல்லாம் ஆலோசனை சொல்லும் அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது சிறிய நாடு என்பதால் உடனடியாக நமக்கு எதிராக இதனை பாவிக்க பல சக்திகள் முயல்கின்றன.
மிகவும் பலமான இராணுவமும், பொலிசும், புலனாய்வுப்பிரிவும் இருந்து கூட போதைப்பொருள் கடத்தலோடு சம்பந்தப்பட்ட பல முக்கிய பிரமுகர்கள் தப்பவைக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி.
யுத்தகாலத்தில் நமது கவனமெல்லாம் யுத்தத்தை வெல்வதில் தான் குறியாக இருந்தது. அப்போதெல்லாம் ‘வெலே சுதா’, ‘ஐஸ் மஞ்சு’, ‘கிம்புலாஎல குணா’ போன்றோர் இருந்தார்கள். இப்போது அவர்கள் எவரும் நாட்டிலேயே இல்லை. அவர்கள் தஞ்சமடைந்துள்ள நாட்டு போலிசாரோடு அவர்களைப் பிடிப்பதற்காக நாங்கள் நெருக்கமாக பணியாற்றிவருகிறோம். ஏற்கெனவே பலரை கைது செய்துள்ளோம். சில நாடுகள் உதவி செய்கின்றன. குமரன் பத்மநாதனை எங்களிடம் ஒப்படைக்க மலேசியா ஒத்துழைத்தது. குமரன் பத்மநாதன் போன்ற பல புலிப் பயங்கரவாத தலைவர்கள் இன்னமும் பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். அவர்களை ஒப்படைக்க சுவிட்சர்லாந்து எங்களுக்கு உதவுகிறதா? பிரான்ஸ் எங்களுக்கு ஒத்துழைக்கிறதா. நோர்வே உதவுகிறதா. எங்களுக்கு தெரியும் விநாயகன் எங்கே இருக்கிறார் என்று. பாதர் இம்மானுவேல் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் எமக்கு ஒத்துழைப்பதில்லை.
ஐஸ் மஞ்சு, கிம்புலா எல குணா போன்றோரின் புகைப்படம், அவர்களின் தொலைபேசி அழைப்பு விபரங்கள் என்பவற்றை இந்தியாவுக்கு நாங்கள் வழங்கியிருக்கிறோம். அவர்களின் ஒத்தாசை அவசியம்.
சமீபகாலமாக பல பாதாளஉலக சம்பவங்களில் T56 ரக தன்னியக்க துப்பாக்கிகள் பாவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்று அர்த்தம் கொள்ளலாமா.
இங்கே தான் நீங்கள் தவறு விடுகிறீர்கள். இந்த T56 துப்பாக்கிகள் எப்படி சமூகமயப்பட்டது. புலிகள் தெற்கை குழப்புவதற்காக அவற்றை விற்பனை செய்தார்கள். புலிகளில் இருந்து வெளியில் வந்தவர்களும் விற்றார்கள். ஆனால் இன்று அவற்றில் பலவற்றை இல்லாமல் செய்திருக்கிறோம். நாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப் போனால் “வெள்ளை வேன்” வருகிறது என்கிறார்கள். “தூக்கினார்கள்” என்கிறார்கள்.
இறுதியாக...
கடந்தகால இருண்ட யுகத்தை மறந்துவிடக்கூடாது... பல வருடக்கணக்கில் அதனை அனுபவித்தவர்கள் நாங்கள் அந்த வரலாற்றை ஒரு போதும் மறந்துவிடாதீர்கள். மீண்டும் அப்படியொரு இருண்ட நிலைமை இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.
நன்றி - தினக்குரல் 14.09.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...