ஊவா மாகாண சபைக்கான தேர்தலுக்கான நாள் நெருங்கிவிட்டது. பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதான இம்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது இருப்பை, உரிமையை, தேவைகளை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக சிந்தித்து வாக்களிக்க போகின்றார்களா அல்லது கடந்த காலங்களைப் போன்று பிளவுபட்டு நின்று தமது வாழ்வுரிமைக்கு ஆதாரமாகவுள்ள அரசியலுரிமையை விற்பனை செய்யப் போகின்றார்களா என்று நாடு முழுவதுமுள்ள தமிழ் மக்கள் பீதியடைந்த நிலையிலுள்ளனர்.
ஏனெனில், ஊவா மாகாணத்தில் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளும் அரசியல் பிரதிநிதித்துவங்கள் அம்மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களது மட்டுமல்ல நாடு முழுவதும் வாழும் தமிழ் மக்களது இருப்பையும், அரசியல் உரிமையையும் உறுதிப்படுத்தும் ஒன்று என்பதை ஊவா மாகாணதமிழ் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணர்ந்து கொள்ள வேண்டும். ஊவா மாகாணத்தின் குறிப்பாக பதுளை மாவட்டத்தின் கடந்தகால தேர்தல்களும் அவற்றின் முடிவுகளும் ஆராய்வின் போது அச்சமூட்டுவையாயுள்ளன.
இலங்கையில் முதலாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது இன்றைய பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று தமிழர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் சந்தர்ப்பம் இருந்தது. அப்பொதுத் தேர்தலில் பண்டாரவளைத் தொகுதியிலிருந்து நடராஜாவும் , பதுளை இரட்டை அங்கத்தவர் தொகுதியிலிருந்து சுப்பையாவும் தெரிவு செய்யப்பட்டனர். ஆனால், தமிழர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்த அப்புத்தளைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு தமிழர்கள் தேர்தலில் போட்டியிட்டு தமிழர் வாக்குகளைப் பிரித்து சிதைத்ததால் அத்தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளில் அதாவது தமிழர்கள் நால்வரும் பெற்ற வாக்குகளில் மூன்றிலொன்றுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை இனத்தவர் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனதுடன் இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமை மற்றும் குடியுரிமைகளைப் பறிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையும் வரலாறு.
தமிழர்களின் ஒற்றுமையின்மை, இணைந்து செயற்படும் பக்குவமின்மை தமிழர் பிரதிநிதித்துவ இழப்புக்கு மட்டுமல்ல அடிப்படை உரிமைக்கே ஆப்பு வைத்தது. இந்நிலை இனியும் தொடரத்தான் வேண்டுமா? தற்போதைய ஊவா மாகாண சபைத் தேர்தல் கள நிலவரத்தை நோக்கும் போது தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் அரசியல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தெளிவாகவே புலப்படுகின்றது. கடந்த கால வரலாற்றை மறந்தமையாலோ, தெரியாமையினாலோ தமிழர்கள் தேர்தல் களத்தில் இறங்கி தமிழ்ப் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கவோ, இல்லாதொழிக்கவோ முன்வந்துள்ளனர் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு அமைச்சுப் பதவியோ, பிரதியமைச்சர் பதவியோ அல்லது ஆலோசகர் பதிவியோ மலையக இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அது மலையக இந்திய வம்சாவளித் தமிழருக்கு கிடைத்த பெரும்பாக்கியமாக, கௌரவமாக, அங்கீகாரமாக சித்திரிக்கப்படுகின்றது. ருசித்து ரசிக்கப்படுவதாக் காணமுடிகின்றது. இது நாய்க்கு அதன் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த திருடனால் போடப்பட்ட வெறும் எலும்புக்கு ஒப்பானது. பசியைப் போக்கவோ, ருசித்து அனுபவிக்கவோ முடியாத எலும்பை நாய் கடித்துக் கடித்து தனது கவனத்தை அதிலேயே இருத்திக்கொள்ள திருடன் தனது தொழிலை கச்சிதமாகச் செய்துகொள்ள வழியுள்ளது.
இவற்றை சிந்தித்து உணரும் ஆற்றல் இருந்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நடைமுறையில் நாம் காண்பதும் அதுவாகவேயுள்ளது. ஊவா மாகாணம் இலங்கையிலேயே வறுமையான மாகாணம் என்று கூறப்படுகின்றது. அவ்வாறான நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளரின் நிலை மாகாணத்தின் ஏனைய சமூகங்களை விட தாழ்ந்ததாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. உண்மைநிலை அதுவேயாகும். கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பர். அதுபோல பதுளை மாவட்டத்திலுள்ள பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளில் தமிழ்மொழிக்கும் நிர்வாக உரிமை வழங்கப்பட்டு பதினைந்து ஆண்டுகளாகின்றன. அந்த சட்டபூர்வமான அடிப்படையான மொழியுரிமையைத் தமிழ் மக்கள் அனுபவிக்க எந்தவொரு வழியும் செய்யப்படவில்லை. இதுபற்றி மாகாணத்தில் அரசியல் செய்யும் எவரும் கவனம் செலுத்தி உரிமையை நிலைநிறுத்த எதுவும் செய்ததாக பதிவேதும் இல்லை.
தமிழ் மக்கள் சனத்தொகையில் கால்பங்கினராக வாழும் பதுளை மாவட்டத்தில் ஒரு தரமான, சகல வசதிகளும் கொண்ட கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தர வகுப்பில் கலை, கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளும் உள்ள தமிழ்ப் பாடசாலை இல்லையென்ற உண்மையை மறைக்கமுடியாது. மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்திலுள்ள பசறை தமிழ் தேசிய பாடசாலை சகல வசதிகளும் கொண்ட வளமான அல்லது வளங்கள் வழங்கப்பட்ட பாடசாலை இல்லையென்பது அரசியல் செய்வோரின் அவதானத்திற்கு ஏன் வரவில்லை?
தமிழ் மக்கள் வாழும் பெருந்தோட்டங்களுக்கான வீதிகளின் நிலை என்ன? தரமென்ன? அவர்களுக்கான சுகாதார, குடிநீர், மின்சார வசதிகள் மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்குள்ளது போன்று இல்லை. புறக்கணிப்புக்காளாகியுள்ளமை புரிந்துகொள்ளப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மின்சாரம், தொழில் உட்பட பல்வேறு தேவைகள் போதிய அளவில் பெற்றுக்கொள்ள முடியாது. அவலப்படும் தமிழர் சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய அரசியல் பிரதிநிதித்துவங்களையும் நம்மவரே சிதைக்கப் பாடுபடுவது சமூகத் துரோகமே என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
தற்போதைய பாராளுமன்றத்திற்கு முந்திய பாராளுமன்றத்தில் இரண்டு தமிழர்கள் பிரதிநிதிகளாயிருந்தனர். ஆனால் இன்று ஒருவர் கூட இல்லை. தமிழர்கள் பல பிரிவுகளாகப் போட்டியிட்டதால், தமிழர் வாக்குகளைச் சிதைத்ததால் இந்த கேவல நிலை ஏற்பட்டுள்ளது. லுணுகலை பிரதேச சபை எல்லைக்குள் அறுதிப்பெரும்பான்மையினராகத் தமிழர்களே உள்ள நிலையில், தமிழர்களின் வாக்குகள் சிதைக்கப்படுவதால் உரிய பிரதிநிதித்துவங்கள் இழக்கப்படுகின்றன. நிர்வாக அதிகாரம் கைநழுவிப் போகின்றது. இந்த உண்மை, யதார்த்த நிலையை புரியாத அப்பாவிகளாக அரசியல் வியாபாரத்தில் ஈடுபடுவோர் உள்ளனர். ஆம் அரசியல் வியாபாரமாகிவிட்டது. அரசியல்வாதிகள் விலைபோய்விட்ட நிலை வெளிப்படுகின்றது.
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் முக்கிய அணிகள் இரண்டில் ஒன்றில் ஆறு தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் ஆறு பேரும் நான்கு திசைகளில் தமிழர்களது வாக்குகளைப் பிளவுபடுத்தி, சிதைப்பதில் கண்ணும் கருத்துமாயுள்ளமை தெரிகின்றது. தமது வெற்றியை விட மற்றைய தமிழனது வெற்றியைத் தடுத்து தோல்வியடையச் செய்வதிலேயே கவனம் செலுத்துவதை பேச்சுகள் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. மலையக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக, அவர்களது உரிமைகளுக்காக களமிறங்கிப் போராடும் நமது மலையகத் தமிழ் அரசியல்வாதிகளிடமும் அரசியல் கட்சிகளிடமும் ஒரு நியாயமான கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். மலையகத் தமிழ் மக்களுக்காக கண்ணீர் வடிக்கும், கதறி அழும் உங்களில் எத்தனை பேர் மாத்தறை, காலி, களுத்துறை, குருநாகல், மொனராகலை போன்ற மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்ட தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்றீர்கள்? பாடுபடுகின்றீர்கள்?
நுவரெலியாவிலும் பதுளையிலும் போதிய வாக்குப்பலம் தமிழர்களுக்குள்ளதால் அதைச் சிதைக்க தப்பித்தவறி ஓரிரு பிரதிநிதித்துவங்கள் கிடைத்தால் அதை அனுபவிக்க, பேரம் பேசி இலாபம் பெற எத்தனிக்கும் உங்களில் எத்தனை பேர் வாக்குப்பல மற்றவர்களாகப் பல மாவட்டங்களில் பரந்துவாழும் நம்மவர்களை, தமிழர்களைப் பற்றிச் சிந்திக்கின்றீர்கள்? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் என்றால் அதற்கு துணிந்து பதிலளிக்கும் ஆற்றல் உள்ளவர் யார்? ஒரு பிரதியமைச்சர், ஒரு ஆலோசகர் ,
ஒரு அமைச்சர் இதற்காக சோரம் போகும் விலைபோகும் சமூகமாக மலையகத் தமிழர் கேவலப்பட, கேவலப்படுத்தப்படக்கூடாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. சமூகத்தை மதிப்பிறக்கம் செய்து மாற்றார் சோரம் போகும் சமூகமாக நோக்கும் நிலையிலிருந்து விடுபட வேண்டும், விடுவிக்க வேண்டும்.
இந்த நிலையிலே ஊவா மாகாணத்தின் குறிப்பாக பதுளை மாவட்டத்தின் தமிழ் மக்கள் ஒருமுகமாக சிந்தித்து தமிழர் பிரதிநிதித்துவத்தின் தேவையை உணர்ந்து, புரிந்து வாக்களிக்க வேண்டும். ஒரே அணியில் ஒரு சின்னத்தில் ஒற்றுமையாகச் செயற்படக்கூடிய மூன்று தமிழர்களை அடையாளங்கண்டு தாம் தெரிவு செய்த சின்னத்திற்கு ஒரு புள்ளடியையும் அதே சின்னத்தின் கீழ் போட்டியிடும் மூன்று தமிழர்களை தெரிவு செய்து அவர்களது இலக்கங்களுக்கு ஒவ்வொன்றாக மூன்று புள்ளடிகளையும் இட்டு தமிழர் பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்ய வேண்டும்.
தவறாது, தயங்காது, போலிகளை நம்பி மோசம் போகாது சமூக நலனை மட்டுமே முன்னிறுத்தி வாக்களிக்க தமிழர் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அரசியல் அரங்கில் தமிழர் தலைநிமிர உதவும் சமூகப் பொறுப்பு ஊவா மாகாண தமிழர்களுக்கு வாய்த்துள்ளது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தாமும் பெருமையடைந்து தமிழர் சமூகத்தையும் பெருமைப்பட வழிவகுக்க வேண்டும். நாடளாவிய ரீதியிலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவேயுள்ளது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...