Headlines News :
முகப்பு » » ஊவா சிவில் சமூகத்திடம் தங்கியுள்ள தமிழ் மக்களின் அதிகபட்ச மாகாண பிரதிநிதித்துவம் - பெ.முத்துலிங்கம்

ஊவா சிவில் சமூகத்திடம் தங்கியுள்ள தமிழ் மக்களின் அதிகபட்ச மாகாண பிரதிநிதித்துவம் - பெ.முத்துலிங்கம்

பெ.முத்துலிங்கம்
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் நாட்டின் எதிர்கால அரசியல் செல்நெறிகையைத் தீர்மானிக்கும் காரணியாக அமையவுள்ளதாகக் கருதப்படுகின்றது. நாட்டின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெறுமாயின் நாட்டின் அரசியல் செல்நெறிகையில் பாரிய மாற்றம் குறுகிய காலத்தில் ஏற்படலாம். அவ்வாறு நடைபெறாது ஆளும் கட்சியினர் ஊவா மாகாண சபையை கைப்பற்றினால் ஆளும் கட்சியே மீண்டும் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றலாம். எனவே ஊவா மாகாணசபைத்தேர்தல் முடிவுகள் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு பலப்பரீட்சையாகும். இதனால் இரண்டு கட்சிகளும் தேர்தல் வியூகத்தை நன்கு வகுத்து தற்போது ஊவா மாகாணத்தில் களமிறங்கியுள்ளன.

ஆளும் கட்சியைச் சார்ந்த அனைத்து அமைச்சர்கள்பாராளுமன்ற உறுப்பினர்கள்ஏனைய மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஊவா மாகாணத்தில் வாக்குகளை திரட்டுவதற்காகக் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேபோல் எதிர்க்கட்சியினரும் தமது உட்கட்சி மோதல்களை ஓரங்கட்டி தமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களை ஊவ மாகாணத்தில் களமிறக்கியுள்ளனர்.

ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரை சிங்கள மக்களது வாக்கு பலத்திற்கு அடுத்ததாக தமிழ் மக்களே பெரும்பான்மை வாக்குப் பலத்தைக் கொண்டிருக்கின்றனர். இதற்கடுத்ததாக தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் கொண்டுள்ளனர். இம்மக்களது வாக்குகளும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வெற்றியில் தாக்கம் செலுத்தும்சக்தியாக இருக்கின்றன. கட்சியின் வெற்றியை மட்டுமல்லாதுகட்சியின் பிரதான வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விடயத்திலும் இவ்வாக்குகள் தாக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளன. இதனால் இக்கட்சிகள் தமது கட்சிகளில் இரு தமிழ் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து மூன்றாவது விருப்பு வாக்கினை சிங்கள வேட்பாளருக்கு வழங் கும் உபாயத்தை வழமைபோல் கடைப்பிடிக்க முனைந்தன. இவ்வியூகத்திற்குப் பலியாகாது தமிழ் மக்களது கட்சிகளும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களது கட்சிகளும் தமது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்வதற்கான வியூகத்தினை வகுக்கும் முயற்சியில் மாகாணசபையை கலைத்தவுடன் ஈடுபட்டன. தமிழ் பேசும் முஸ்லிம் மக்களது சிவில் சமூகம் மேற்கொண்ட நிர்ப்பந்தத்தின் விளைவாக குறைந்த வாக்குகளைக்கொண்ட முஸ்லிம் கட்சிகள் ஓன்றிணைந்து ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் உபாயத்தை கடைப்பிடித்துள்ளன.

ஊவா தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக தொழிற்சங்க கட்சிகள் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதாயின் தமிழ் மக்களது பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் மூன்று வேட்பாளர்களுக்கு இடமொதுக்கும்படி கோரின. ஆரம்பத்தில் இரு பெரும்பான்மைக்கட்சிகளும் இக்கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்தன. ஈற்றில் ஆளும் கட்சியினர் தம்முடன் இணைந்து போட்டியிடும் நான்கு கட்சிகளுக்கு ஆறு வேட்பாளர் வாய்ப்பினை அளித்தது. எதிர்க்கட்சி ஆரம்பத்திலேயே மூன்று வேட்பாளர்களுக்கான வாய்ப்பினை வழங்க இணக்கம் தெரிவித்தப்போதிலும் ஈற்றில் நான்கு தமிழ் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.

இதேவேளைஊவா மக்களின் அதிக பட்ச பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணி ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்ததுடன் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. மலையக தமிழ் மக்களது தொழிற்சங்கஅரசியற் கட்சிகளினது இச்செயற்பாடுகள் பாரிய உந்துதலாகத் தென்பட்டபோதிலும் நடைமுறை செயற்பாடுகள் நேர் எதிராகவே காணப்படுகின்றன. ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள நான்கு தமிழ் தொழிற்சங்கக் கட்சிகள் ஆறு வேட்பாளர்களுக்கான வாய்ப்பினைப் பெற்றுள்ளபோதிலும் போட்டியிடும் தொழிற்சங்க கட்சிகளில் ஒன்று தமது மூன்று வேட்பாளர்களில் ஒரு வேட்பாளருக்கு மட்டும் முக்கியத்துவமளித்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றது. ஏனைய மூன்று கட்சிகளில் இரண்டு கட்சிகள்இருவேட்பாளர்களுக்காக ஒருங்கிணைந்து பிரசாரத்தை மேற்கொள்வதுடன் பிறிதொரு கட்சி தனித்து தமது வேட்பாளருக்காக வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது. மறுபுறம் எதிர்க்கட்சியில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் இருவர் ஒன்றாகவும்ஏனைய இருவர் தனித்தும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தத்தமது வேட்பாளர்களின் வெற்றியினை உறுதி செய்வதற்காக இவ்வாறான செயற்பாட்டில் மலையக தொழிற்சங்க கட்சிகள் ஈடுபடுவதானது எதனை நிகழவிடாது தடுக்க முனைந்தனவோ அதற்கு சாதகமாகவே இவற்றின் செயற்பாடுகள் அமைகின்றன.

மலையக தொழிற்சங்க கட்சிகளின் இச்செயற்பாட்டின் காரணமாக ஊவா தமிழ் மக்களின் மாகாணசபை பிரதிநிதித்துவம் குறைவடையும் வாய்ப்பே அதிகமாகக் காணப்படுகின்றது. நாட்டின் தேர்தல் வரலாற்றினை நோக்கின் பல சந்தர்ப்பங்களின் கட்சிகளின் செயற்பாட்டை சிவில் சமூகம் மறுதலித்து தமது அபிலாசையை பாதுகாப்பதில் வெற்றி கண்டுள்ளன. நாட்டின் பெரும்பான்மை மக்கள் பல தேர்தல்களில் இவ்வாறு செயற்பட்டுள்ளதுடன் நடந்து முடிந்த சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் மலையக தமிழ் சிவில் சமூகம் இவ்வாறு செயற்பட்டுள்ளது.

சப்ரகமுவ தேர்தலின்போது பெரும்பான்மைக் கட்சிகள் வழமைபோல் பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி கோரின. இக்கோரிக்கைக்கு ஆதரவாக சில மலையக கட்சிகள் செயற்பட்டன. ஆனால் சப்ரகமுவ சிவில் சமூகம் இதனை மறுதலித்து தமிழ் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கும்படி சப்ரகமுவ தமிழ் மக்களை கோரியதுடன்தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரத்தை மேற்கொண்டு வெற்றியும் கண்டது. சப்ரகமுவவில் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டபோதிலும் மாகாணசபை வரலாற்றில் முதன்முறையாக தமிழ் மக்கள் துணிந்து தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை தெரிவுசெய்து கொண்டனர். இதேபோல் மத்திய மாகாண சபை தேர்தலின்போது கண்டி மாவட்டத்தில் இரு பெரும்பான்மைக் கட்சிகளைச் சார்ந்த தமிழ் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதில் கண்டி தமிழ் சிவில் சமூகம் வெற்றிகண்டது.

சப்ரகமுவவில் போன்று ஊவா மாகாணசபை தேர்தலிலும் பெரும்பான்மை கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு திரட்டும் செயற்பாட்டில் சில தமிழ் பிரமுகர்கள் செயற்படுகின்றனர். இதேவேளைபோட்டியிடும் தொழிற்சங்க கட்சிகள் மத்தியில் காணப்படும் முரண்பாடுகளும் இதற்கு வலு சேர்ப்பதாக அமைகின்றன.

ஊவா சிவில் சமூகம் இவ் அபாயத்தை அடையாளம் காண வேண்டும். ஊவா சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள்அரச ஊழியர்கள்ஆசிரியர்கள்தொழிற்சங்க பிரதிநிதிகள்இளஞர்கள்யுவதிகள்தொழிலாளர் தலைவர்கள்தலைவிகள் மற்றும் நகர்ப்புறத்தில் தொழிற்புரியும் இளைஞர் யுவதிகள் அனைவரும் ஒன்றிணைந்து இவ் அபாயத்திலிருந்து ஊவா தமிழ் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

சிங்கள வேட்பாளர்கள் மற்றும் பெரும்பான்மை கட்சிகள் வழங்கும் கையூட்டல்களுக்கு பலியாகி பெரும்பான்மை வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்களாயின் ஊவா தமிழ் மக்கள் அதிகபட்ச பிரதிநிதித்துவத்தை இழப்பது திண்ணம். எனவேதொழிற்சங்க கட்சிகள் கைவிட்டுள்ள இவ்வரலாற்றுத் தேவையை ஊவா சிவில் சமூகம் தம் கையில் எடுத்து இவ்வரலாற்றுத் தேவையை பூர்த்தி செய்ய முன்வரவேண்டும்.

நன்றி - வீரகேசரி



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates