Headlines News :
முகப்பு » » சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப்: மலையக மண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் - மல்லியப்புசந்தி திலகர்

சாகித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப்: மலையக மண்வாசனைக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரம் - மல்லியப்புசந்தி திலகர்


மலையக மக்கள் என இன்று பலராலும் நாகரிகமாக அறியப்படும், உழைக்கப்படும், விளிக்கப்படும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழரான இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான மலையக மக்கள் இலங்கை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டபோது இவ்வாறு நாகரிகமாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள் இல்லை. கூலிகள், கள்ளத்தோணிகள், வடக்கத்தியான்கள், இந்திய தொழிலாளர்கள், பெருந்தோட்ட இந்திய வம்சாவளியினர் என பலவாறு அழைக்கப்பட்டு இன்றும் இந்திய தமிழர் என சுட்டும் மரபு சட்டரீதியாக இருந்தாலும் பண்பாட்டு ரீதியாக இந்த மக்களை ‘மலையக மக்கள்’ என அழைக்கப்படும் மரபு ஓங்கி வளர்ந்துள்ளது.

மலையக அரசியல் தொழிற்சங்க வரலாறு ஆழமானது. இன்றைய மலையக மக்களின் இயக்கத்துக்கு இன்றியமையாத பல பணிகளை அரசியல், தொழிற்சங்கத் துறை ஆற்றியிருக்கிறது. அதேநேரம் இந்த ‘மலையக மக்கள்’ எனும் கருத்துருவாக்கத்தை பண்பாட்டு அடிப்படையில் வளர்த்தெடுப்பதற்கு மலையக இலக்கியத்துறை ஆற்றியுள்ள, ஆற்றிவரும் பங்களிப்பு மகத்தானது. கோ.நடேசய்யர் முன்வைத்த ‘நாம் இலங்கையர்’ என்ற மன எண்ணம் சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் படைப்புகள் ஊடாக ‘மலைநாட்டவர்’ என்று பரிமாணம் பெற்று, தோழர் இளஞ்செழியன், இர.சிவலிங்கம் போன்றோhpனால் ‘மலையக’ கருத்துருவாக்க வலுப்படுத்தப்பட்டது. 

இந்த சிந்தனையாளர்களின் கருத்துருவாக்கத்திற்கு உணர்வு கொடுத்தவர்கள் மலையக எழுத்தாளர்கள். அவர்கள் 1960களில் இயங்கத்தொடங்கிய ‘ஆத்திரப்பரம்பரையினர்’ என வரலாற்றில் பதிவாகின்றனர்.
அந்த ஆத்திரப்பரம்பரையைச் சேர்ந்த எழுத்தாளரே தெளிவத்தை ஜோசப். 1934 ஆம் ஆண்டு பிறந்து 1960 களில் எழுத்துலகில் நுழைந்து ஐம்பது வருடகாலம் தொடர்ச்சியாக எழுதி, இயங்கி வருபவர்.

ஆரம்ப காலங்களில் மலையக மக்களின் வாழ்வியலை, மாறாத மனம்கமழும் மண்வாசனையுடன் எழுதி வந்த இவர் பின்னைய நாட்களில் தலைநகர் நோக்கி இடம்பெயர்ந்தவராக,  யுத்தகாலத்தின்போதான தலைநகர் சிறுபான்மை மக்களின்  வாழ்வியல் அவலத்தை வேதனைகளை தமது படைப்புக்களில் வெளிப்படுத்தியவர்.

இந்த இருநிலை வியாபகம் மலையக எழுத்தாளர்களுள் தெளிவத்தை ஜோசப் ஒரு தனித்துவத்தையும் அவருக்கு ஒரு பன்மைத்துவத்தையும் ஏற்படுத்தியது. புனைவு இலக்கியம் மட்டுமல்லாது புனைவு சாரா இலக்கியத்திலும் அவர் தன்னை பதிவு செய்தார். இது தமிழக மற்றும் புலம்பெயர் சூழலில் தெளிவத்தை ஜோசப் அவர்களை பிரபலமாக்கியது. எழுத்தாளராக மேற்குலக நாடுகளிலும் தமிழகத்திலும் நன்கு அறியப்பட்டவராக மலையக இலக்கிய தளத்திலிருந்து, ஈழத்து இலக்கிய தளத்தில் இவரது ஆளுமை அடையாளம் கண்டது. இலங்கையின் பிராந்திய இலக்கியம் தவிர்ந்து சிங்கள இலக்கிய சூழலிலும் அறியப்பட்ட ஆளுமையாக இருக்கும் இவர் மலைநாட்டு எழுத்தாளர் மன்ற தலைவராக செயற்படும் அதேவேளை, சிங்கள தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார். 

இந்த நிலையிலேயே தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு இலங்கை அரசினால் வழங்கப்படும் அதி உயர் இலக்கிய விருதான சாகித்திய ரத்ணா (2014) விருது (இன்று 2014-09-03)   வழங்கப்படுகிறது. இதுவரை மல்லிகை ஆசிரியர், டொமினிக் ஜீவா, எம்.எம்.;சமீம், வரதர், சொக்கன், செங்கை ஆழியான், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் அருணாசலம், எழுத்தாளர் தெணியான் போன்ற ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆளுமைகளுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 
பதுளையை பிறப்பிடமாகக் கொண்ட, முற்போக்கு எழுத்தாளரான எம்.சமீம் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் மண்வாசனை கொண்ட எழுத்தாளர்கள் வரிசையில் முக்கிய மலையக படைப்பாளியாக விளங்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படும் சாகித்திய ரத்ணா விருது மலையக மக்களின் தேசிய அடையாளத்தை, மலையக இலக்கியத்தின் தனித்துவத்தை உணர்த்தும் ஒன்றாக அமைந்துள்ளது.

நமது மலையகம் அறிமுகவிழாவில் தெளிவத்தை ஜோசப் ஆற்றிய உரை காணொளியாக கீழே

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates