Headlines News :
முகப்பு » » ஆசிரிய உதவியாளர் பதவியின் மூலமாக சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகின்றது - துரைசாமி நடராஜா

ஆசிரிய உதவியாளர் பதவியின் மூலமாக சமூக பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகின்றது - துரைசாமி நடராஜா


பெருந்தோட்ட தமிழ்மொழி மூலப்பாடசாலைகளில் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை குறித்த அறிவுறுத்தல் கடந்த 08ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் வெளியாகியிருந்தன. இவ்வாறு ஆட்சேர்க்கப்படும் ஆசிரிய உதவியாளர்கள் முதல் நியமனத் திகதியில் இருந்து ஐந்து வருடங்களினுள் தாம் நியமனம் பெறும் பாடத்துடன் தொடர்புறும் வண்ணம் கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆசிரியர் பயிற்சியினை அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும். பல்கலைக்கழகமொன்றில்/ உயர்கல்வி நிறுவனமொன்றில் குறித்த பாடத்திற்கான பட்டம் ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டியதுடன் அவ் ஆசிரியர் பயிற்சி அல்லது பட்டம் செல்லுபடியாகும் திகதி முதல் அவர் இலங்கை ஆசிரியர் சேவையின் 2ஆம் வகுப்பின் தரம் ஒன்றிற்கு உள்ளீர்க்கப்பட்டு சேவையில் உறுதிப்படுத்தப்படுவார் என்றும் வர்த்தமானி அறிவித்தல் வலியுறுத்தியது.

மேலும் ஐந்து வருடங்களினுள் குறிப்பிட்ட தகைமைகளை பூரணப்படுத்த தவறும் ஆசிரிய உதவியாளர்களது சேவை முடிவுறுத்தப்படும் என்றும் ஆசிரிய உதவியாளர்களாக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு அனைத்து படிகளும் உள்ளடங்கலாக மாதம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் வர்த்தமானி வலியுறுத்தியது.
இந்நிலையில் ஆசிரிய உதவியாளர் நியமனம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ள கொடுப்பனவு குறித்து வாத பிரதிவாதங்கள் மேலோங்கிய வண்ணம் உள்ளன. நாள் ஒன்றுக்கு 200ரூபாய் கொடுப்பனவு முறையிலான ஆசிரிய உதவியாளர் நியமனம் மலையகத்தில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு தேவையா? என்று மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன்,வேலுகுமார் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 2007இல் பெருந்தோட்டப் பகுதியில் உயர்தரம் சித்தி பெற்ற மூவாயிரத்து 179 பேருக்கு ஆசிரிய சேவையில் தரம் மூன்று இரண்டு என்ற அடிப்படையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

அவர்களின் அடிப்படைச் சம்பளமும் 13 ஆயிரம் ரூபாவாக இருந்தது. ஆனால் தற்போதைய ஆசிரியர் உதவியாளர் நியமனம் அவ்வாறு அமையாதுள்ளது கேள்விக்குறியாகும். ஒரு சிலரின் அரை வேக்காடான சிந்தனை மற்றும் சுயநலப்போக்கு என்பனவே இவ்வாறு பெருந்தோட்டப்பகுதியில் உயர்தரத்தில் சித்தி பெற்றவர்களை தரம் தாழ்த்தும் வகையில் நியமனம் ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாகியுள்ளது. மலையகத்தில் மனத்திருப்தியுடன் ஆசிரிய தொழிலை மேற்கொள்ளும் வகையில் நியமனம் வழங்கப்பட வேண்டும். சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் பெருந்தோட்டப்பகுதியில் உயர்தரம் சித்தி பெற்றவர்களுக்கு போட்டிப்பரீட்சை சித்தியின் அடிப்படையில் ஆசிரியர் சேவை தரம் மூன்று இரண்டுக்கு உள்வாங்கும் வகையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் மத்திய மாகாண முதலமைச்சர் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும் எஸ். ஸ்ரீதரன், வேலுகுமார் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.

கணபதி கனகராஜ்
மத்திய மாகாண சபை உறுப்பினர்
இது தொடர்பில் இ.தொ.கா. வைச்சேர்ந்த மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கூறுகையில்;
ஆசிரியர் உதவியாளர் பதவியை அவமானமாக கருதுபவர்கள் விண்ணப்பிக்குமாறு எவரும் நிர்ப்பந்திக்கவில்லை. மலையகத்தில் படித்த இளைஞர், யுவதிகளின் வாழ்க்கையோடு விளையாடாமல் ஆசிரிய உதவியாளர்களை கெளரவப்படுத்துவதற்காக ஆறாயிரம் ரூபாவிற்கு அதிகமான கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தால் அதனை இ.தொ.கா. பாராட்டி கெளரவிக்கும். மேலும், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலுகுமாரும் ஸ்ரீதரனும் தமக்கு திராணி இருந்தால் இந்த இளைஞர்களிடம் போய் தாம் அவமானப்பதவியாகக் கருதும் ஆசிரியர் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று பகிரங்கமாக சொல்ல முடியுமா என்று சவால் விடுத்திருக்கின்றார்.

இதற்கிடையில் இலங்கை ஆசிரிய சங்கங்களும் ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில் தமது அதிருப்தியினை வலியுறுத்தி இருக்கின்றன. மலையகத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு பரீட்சை நடத்தி அதன் மூலம் இலங்கை ஆசிரியர் தரம் மூன்று இரண்டிற்கு உள்வாங்க முடியும். இதனை செய்யாது 6,000 ரூபாய் கொடுப்பனவில் ஆசிரியர் உதவியாளர்களை நியமிப்பதன் நோக்கம் என்னவென்று விளங்கவில்லை. இது ஆசிரியர் சேவை யாப்புக்கு முரணானதும் கூடவாகும். இது முற்று முழுதான தவறான செயற்பாடு. அரசியல் இலாபம் பார்க்காது மாணவர்களின் கல்வி குறித்து சிந்தித்து செயற்படுமாறு கோருகின்றோம் என்று சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ஆசிரியர் உதவியாளர் நியமனம் குறித்த சர்ச்சைகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கல்வியியலாளர் விரிவுரையாளர் ,அரசியல்வாதிகள் மற்றும் விண்ணப்பதாரிகளிடம் ஆசிரியர் உதவியாளர் நியமனம் குறித்து தத்தமது நிலைப்பாட்டை மேலும் விளக்குமாறு வினவினேன். இந்நிலையில் கேசரிக்காக அவர்கள் தெரிவித்த கருத்துக்களை கீழே தொகுத்துத் தருகின்றேன்.

பி.இராஜதுரை
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
பிரதித் தலைவர் தொழிலாளர் தேசிய சங்கம்
மலையகத்தில் வேலையில்லாது இருக்கும் இளைஞர், யுவதிகளின் நலன்கருதி தொழில்வாய்ப்பு ஒன்றினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஆசிரிய உதவியாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கதாகும். ஆனால் தொழில் வாய்ப்பு சந்தையில் ஏனையவர்களுக்கு என்னென்ன உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். எனினும் ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவு நியாயமானதல்ல. அத்தோடு குறிப்பிட்ட ஐந்து வருடங்களினுள் குறிப்பிட்ட தகைமைகளை பூரணப்படுத்த தவறும் ஆசிரிய உதவியாளர்களது சேவை முடிவுறுத்தப்படும் என்பதும் நியாயமற்றதாகும்.

மலையகத்தில் படித்தவர்களுக்கு தொழில் வழங்குவதற்கான ஒரே ஒரு தொழிற் சந்தை ஆசிரியர்துறை மட்டும்தானா? இந்த நாட்டில் எத்தனையோ அமைச்சர்கள் இருக்கின்றார்கள் அவர்களது அமைச்சின் கீழ் எத்தனையோ தொழில்வாய்ப்புகள் உள்ளன. இந்த தொழில்கள் எல்லாம் யாருக்கு வழங்கப்படுகின்றது? பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கால்நடை அபிவிருத்தி அமைச்சு என்பனவற்றின் கீழ் பல நிறுவனங்கள் வருகின்றன. இவற்றுக்கு கீழேயான தொழில்வாய்ப்புக்கு என்ன ஆகின்றது. மலையக இளைஞர், யுவதிகளுக்கு ஏன் இவற்றில் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர் தொழில் என்பது மகோன்னதமானது எதிர்கால நாட்டின் தலைவர்களை உருவாக்கும் மிகப்பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே, ஆசிரியத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அல்லது உதவியாளர்களுக்கு உரிய கெளரவம் வழங்கப்படுதல் வேண்டும். உரிய பயிற்சியின் பின்னர் ஆசிரியர்கள் உள்வாங்கப்படுதல் வேண்டும்.

நியமனம் வழங்கப்படுவது மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கா அல்லது கற்பித்தல் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்காகவா என்பதனையும் உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆசிரிய உதவியாளர்கள் மாணவர்களையும் பார்த்துக் கொண்டு ஐந்து வருடத்தில் தாமும் கற்பது என்பது இருவேறு நோக்கங்களைக் கொண்டது ஒரே வகுப்பறையில் இருவருக்கும் இருவேறு சிந்தனைகள். ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பயணம் இங்கே கருத்தொருமித்து செல்லாமல் வேறுபடுகின்றது. இதனால் வகுப்பறைக் கற்பித்தலின் சாத்தியப்பாடு கேள்விக்குறியாகின்றது.

ஆசிரிய வெற்றிடங்கள் திரட்டப்பட்ட கால கட்டத்திற்கும் தற்போதைய நிலைமைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில பாடசாலைகளில் தற்போது வெற்றிடங்கள் அதிகரித்துள்ளன அல்லது குறைந்துள்ளன பாடத்துறை சார்ந்த ஆசிரியர்கள் தொடர்பிலும் வேறுபாட்டுத்தன்மையினை காணக்கூடியதாக உள்ளது எனவே முன்னைய வெற்றிடங்களை கருத்திற் கொண்டு தற்போது நடவடிக்கைகளை முன்னெடுப்பது சாத்தியமானதாக தெரியவில்லை. இதனால் பல சிக்கல்கள் மேலெழும்பும்.

ஆசிரிய உதவியாளர்கள் தொடர்பில் பிழையான அணுகு முறைகளை கையாளுவதென்பது மலையகத்தை படுபாதாள நிலைக்கு இட்டுச் செல்வதற்கு ஒப்பானதாகும். பல்வேறு தொழிற்றுறையை சார்ந்தவர்களும் இன்று அதிகளவிலான சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இந்நிலையில் ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் என்ற சம்பளம் போதுமானதாக இருக்குமா? சம்பந்தப்பட்ட குடும்பத்தில்தான் ஆசிரிய உதவியாளர்களுக்கு உரிய மதிப்பிருக்குமா? மலையக இளைஞர் யுவதிகள் இப்போது ஏதேனும் ஒரு வருவாய் தரும் தொழிலை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த தொழிலை விட்டுவிட்டுத்தான் இப்போது ஆசிரிய உதவியாளர் தொழிலுக்கே வரப்போகின்றனர். கொழும்பில் கடையில் தொழில் புரிபவர்கள் கூட பதினைந்து அல்லது இருபதாயிரம் ரூபாவை மாதாந்த ஊதியமாக பெற்றுக்கொள்கின்றனர். இந்நிலையில் தொழிலை விட்டுவிட்டு ஆசிரிய உதவியாளர்களாக முன்வரும் இளைஞர் ,யுவதிகள் பாரிய பொருளாதார சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும்.
குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் நிலையில் தொழிலின் மீது அக்கறை ஏற்படாது. இது யதார்த்தமாகும். ஒரு தொழிலின் மகத்துவம் அவன் வாங்கும் சம்பளத்தின் மூலம் புலப்படுகின்றது என்பதனையும் மறுப்பதற்கில்லை. தொழிலுக்கு ஏற்ற வகையில் நடை உடை உள்ளிட்ட பல விடயங்களை மாற்றிக்கொள்ள நியாயமான சம்பளம் தேவை. சம்பளம் அடிப்படை, குறைந்த சம்பளம் வழங்கப்படுவது ஆளுமையை பாதிக்கும். அத்தோடு தகைமையை பூரணப்படுத்தாதவர்கள் வேலை இழக்கும் சந்தர்ப்பத்தில் பாரிய சமூகப்பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.

திருமதி சாந்தினி சந்திரசேகரன்
தலைவி மலையக மக்கள் முன்னணி
ஆசிரியர் உதவியாளர் நியமனம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் எனது பொதுவான கருத்தின்படி இத்தகைய உதவியாளர் நியமனம் வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் பட்டதாரிகள் பலர் தொழில்வாய்ப்பு இல்லாத நிலையில் கோஷமெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் படித்துவிட்டு பல வருடங்களாக தொழில் வாய்ப்பு இல்லாது இருக்கும் மலையகத்தின் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் என்பது ஒரு வரப்பிரசாதமாக அமையும். இளைஞர் யுவதிகள் ஆசிரிய உதவியாளர் வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தமது அறிவினை மேலும் விருத்தி செய்து கொள்ளவும் சமூகப்பணியினை முன்னெடுத்துச் செல்லவும் முடியும். ஆசிரிய உதவியாளர் தொழிலின் போக்கினையும் சம்பள நிலைமைகளையும் எதிர்காலத்தில் சீர்தூக்கிப்பார்த்து சரியான முடிவினை மேற்கொள்ளவும் முடியும். அதைவிடுத்து எடுத்த எடுப்பில் வேண்டாம் என்கிற மாமியார் கால்பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்ற நோக்கில் கருத்துக்களை தெரிவிக்க முற்படுதல் கூடாது.

எஸ். சதாசிவம்
தலைவர் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
மத்திய மாகாண சபையின் உறுப்பினர்
ஆசிரிய உதவியாளர் நியமனம் என்பது தேர்தலை மையமாக வைத்து மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இருக்கக்கூடாது தகைமையுள்ளவர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு இந்நியமனம் வழங்கப்பட வேண்டும். மலையக இளைஞர் யுவதிகள் பலர் இன்று வேலை இல்லாத நிலையில் விரக்தியுடன் இருந்து வருகின்றார்கள். இந்நிலையில் ஆசிரிய உதவியாளர் நியமனத்தின் ஊடாக உரிய நன்மைகளை அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் மேற்கொள்ளவும் பெற்றுக்கொடுக்கவும் வேண்டும்.
கல்வி ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு அத்திபாரமாகும். மத்திய மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு தற்போது பறிபோயுள்ளது. இந்நிலையில் கல்வி அபிவிருத்தி குறித்து பேசுகின்றவர்கள் ஆசிரியர் உதவியாளர் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஆசிரியர் உதவியாளர் என்ற நிலையை மாற்றி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். மலையக மக்களை ஏமாற்ற முனைதல் கூடாது.

எஸ்.அருள்சாமி
உப தலைவர் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ்
மலையகத்தில் பன்னிரண்டாயிரத்துக்கு அதிகமானவர்கள் உயர்கல்வி கற்றுள்ளவர்களாக தற்போது உள்ளனர். அவர்களுக்கு இன்று எவ்விதமான தொழிலும் கிடையாது அரசாங்க தொழிலுக்கான தகைமை இப்போது அதிகரித்துள்ளது. பட்டதாரிகள் டிப்ளோமா தாரிகள் என்று தகைமைகள் உயர்வடைந்து கொண்டு செல்கின்றன.

இந்நிலையில் இ.தொ.கா. தனது பேரம் பேசும் சக்தியினைப் பயன்படுத்தி மூவாயிரம் ஆசிரிய உதவியாளர் நியமனங்களை பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கென்று ஆறாயிரம் ரூபாய் அளவிலான கொடுப்பனவும் வழங்கப்பட உள்ளது.

குறிப்பிட்ட ஐந்து வருட காலத்தில் பட்டதாரியாகவோ அல்லது பயிற்றப்பட்டவராகவோ ஆசிரிய உதவியாளர்கள் தமது தகைமைகளை உயர்த்திக் கொண்டு முன்னேறுவர். இதனால் பல நன்மைகள் ஏற்படுவதற்கு இடமுண்டு யதார்த்த வாதிகள், படித்தவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். க.பொ.த உயர்தரம் பயின்றுவிட்டு கடைகளிலும் ஆடைத்தொழிற்சாலைகளிலும் அடிமை வாழ்க்கை வாழ்வதனைக் காட்டிலும் ஆசிரிய உதவியாளராக தனது வீட்டுச் சூழலில் கடமையாற்றுவது என்பது மேலானதாகும். நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் இளைஞர், யுவதிகள் சமூக மற்றும் கலாசார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருவதும் தெரிந்த விடயமாகும். எனவே, ஆசிரிய உதவியாளர் தொழிலை பெற்றுக்கொள்வதன் ஊடாக இளைஞர், யுவதிகளின் சமூகப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது அது மாத்திரம் அல்லாமல் ஆசிரியர் என்ற அந்தஸ்தும் அங்கீகாரமும் கிடைக்கின்றது.

ஆசிரியர் உதவியாளர் நியமனம் என்பது ஐந்து வருடத்தில் தகைமையை பூர்த்தி செய்து ஆசிரியர் நியமனத்தை ஒருவர் பெற்றுக்கொள்ள அத்திபாரமும் உந்து சக்தியும் ஆகும். எனினும் அரசியலும் யதார்த்தமும் தெரியாதவர்கள் இந்நியமனத்தை கூட அரசியல் முகத்தோடு பார்ப்பவர்கள் குழம்பிய குட்டையில் இலாபம் தேட முற்படுவார்களாவர். இது இவர்களின் சிறுபிள்ளைத்தனத்தையே வெளிப்படுத்துகின்றது. அரசியலில் கற்றுக்குட்டிகளான இவர்கள் இ.தொ.கா. வின் சிறப்பான செயற்பாடுகளைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இ.தொ.கா. வின் நடவடிக்கைகளை பாராட்டாமல் விமர்சிப்பது சிலரின் கையாலாகாத் தனத்தையே வெளிப்படுத்துகின்றது. அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கும் கையாலாகாத அரசியல்வாதிகள் இ.தொ.கா. வை விட மேலான சேவைகளை பெற்றுக் கொடுப்பார்களேயானால் மலையக மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் அவர்கள் பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்.இ.தொ.கா. மலையக மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டு செயற்படுகின்றது. இளைஞர் சமுதாயம் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றது நாங்களும் அவர்களை மதிக்கின்றோம். என்ன தடைகள் வந்த போதும் இ.தொ.கா உறுதியுடன் இந்த நியமனத்தை மலையக இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுக்கொடுத்தே தீரும்.

திருமதி. சோபனா தேவி இராஜேந்திரன்
சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனை
பல்கலைக்கழகம்
ஆசிரிய உதவியாளர் நியமனம் என்பது பாடசாலைகளுக்கு ஒரு வளமாகும். மாணவர்களுக்கு இதனால் பல நன்மைகள் ஏற்படும் எனவே உண்மையாக நான் ஆசிரிய உதவியாளர் நியமனத்தை வரவேற்கின்றேன். 3179 ஆசிரியர் நியமனத்தின் போது பாடத்துறை தொடர்பாக பல பிரச்சினைகள் மேலெழுந்தன. குறிப்பாக மாணவர்களின் பாடத்திறன் கருத்திற் கொள்ளப்படவில்லை. கணிதத்தில் திறமைமிக்க விண்ணப்பதாரிகளுக்கு ஆங்கில ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இத்தகைய பாடத்துறை சார் குளறுபடிகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, இம்முறை ஆசிரிய உதவியாளர் பாடத்துறை தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும். மனித மூலதனம் அல்லது விண்ணப்பதாரிகளின் தகைமைகளை வைத்து நோக்கும் போது ஏனைய துறைகளில் இந்த தகைமையுடன் நியமனம் பெற்றுக்கொள்பவர்களுக்கு கணிசமான சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் ஆசிரிய உதவியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவு போதுமானதல்ல. ஆறாயிரம் ரூபாய் போதாது. இக்கொடுப்பனவுடன் அவர்கள் திருப்தியாக வேலை செய்ய மாட்டார்கள் சுய தேவையை பூர்த்தி செய்யவும் இக்கொடுப்பனவு போதாது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூட இன்று அதிக சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
மனித முதலீட்டின் அடிப்படையில் மிகவும் குறைந்த கொடுப்பனவை ஆசிரிய உதவியாளர்கள் பெற வேண்டியுள்ளது. ஆசிரிய உதவியாளர் தொழிலை குறைத்து எடை போடுவதற்கு இது உந்து சக்தியாக அமையும். சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் விதிகளுக்கமைய ஒரு நாளைக்கு வழங்கக்கூடிய சம்பளம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கூலி மட்டம் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். இதேவேளை ஆறாயிரம் ரூபாய் கொடுப்பனவை வாங்கிக் கொண்டு ஆசிரிய உதவியாளர்கள் உயர்கல்வியைத் தொடர்வதும் சிரமமான காரியமாகும். எனவே கொடுப்பனவு தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது.

எம். நேசமணி
ஓய்வுபெற்ற கல்வியியலாளர் ஹட்டன்
ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பில்வாத பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனைப்போன்றே முன்னர் 3179 ஆசிரியர் நியமனத்தின் போதும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனினும் 3179 ஆசிரியர்கள் வருமானம், கல்வி உட்பட பல துறைகளிலும் இப்போது சிறந்து விளங்குவதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஆறாயிரம் ரூபாய் என்பது ஒரு சாதாரணமான கொடுப்பனவாக இருந்த போதிலும் கூட இவர்கள் நிரந்தர நியமனத்தைப் பெற்றுக்கொண்டதும் அதிகமான சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
அதிலும் குறிப்பிட்ட கால எல்லையைக் காட்டிலும் முன்னதாகவே ஆசிரிய உதவியாளர்கள் நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகவே உள்ளன. இதற்கான அழுத்தத்தையே நாம் கொடுக்க வேண்டும்.முறையான பயிற்சிகள் ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். முறையற்ற பயிற்சிகள் கல்வி அபிவிருத்தியை ஏற்படுத்தாது பெருந்தோட்டபாடசாலைகளுக்கான ஆசிரியர் பயிற்சியின் போது (PSEDP) அவ்வாசிரியர்களுக்கு மாதாந்தம் ஐநூறு ரூபாவே கொடுப்பனவாக வழங்கப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
உங்களுக்கும் இதில் நேரடியாக அனுபவமுள்ளது என்று எண்ணுகின்றேன். இன்று அவர்களின் பல்துறைசார் வளர்ச்சி உள்ளது. விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் அவசியமாகும்.

எஸ். செல்வமதி (விண்ணப்பதாரி)
நான் படித்து விட்டு நீண்ட காலம்தொழில் இல்லாது வீட்டில் இருந்தேன்.இந்நிலையில் ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு எங்களின் தொழில் இல்லாத பிரச்சினையை தீர்த்து வைக்கும். ஆசிரிய உதவியாளர் என்ற நியமனத்தைப் பெற்றுக் கொண்டு சிரேஷ்ட ஆசிரியர்களிடம் நிறைய அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இத்தகைய அனுபவங்கள் நிரந்தர ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியுடன் கலந்து பேசி இந்நியமனத்தை பெற்றுக்கொள்ள வழிவகுத்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்கதாகும் விண்ணப்பதாரிகள் சார்பில் நான் அவருக்கும் சிரேஷ்ட இ.தொ.கா. உறுப்பினர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று நாங்கள் வருமானம் இல்லாது வீட்டில் இருக்கின்றோம். எனவே, ஆறாயிரம் ரூபாய் கிடைப்பது ஒரு வகையில் எங்களுக்கு உதவியேயாகும்.எதிர்காலத்தில் கூறப்பட்ட, படி நாம் எமது தகைமையை வளர்த்துக்கொண்டு நிரந்தர ஆசிரியர் நியமனத்தைப் பெற உறுதியுடன் செயற்படுவோம். எங்களுக்கு நல்லவாய்ப்பு கிடைத்துள்ளது. இ.தொ.கா மலையக இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பு கருதி அர்ப்பணிப்புடன் செயற்படுவது பாராட்டத்தக்கது என்றார்.இவ்வாறாக பலரும் தங்களது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினார்கள். உண்மையில் ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சிக்காலம், கொடுப்பனவு ,தகைமைப் பூர்த்தி போன்ற விடயங்களில் அதிருப்தி நிலை காணப்படுகின்றது. இவ் அதிருப்தியை அரசுடன் கலந்து பேசி ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டுமே தவிர ஆளுக்கு ஆள் கட்சிக்கு கட்சி விமர்சனம் செய்வதால் பயன் ஏதுமில்லை. தொழில் இல்லாத வலி இளைஞர், யுவதிகளுக்கு நன்றாக தெரியும். எதற்கெடுத்தாலும் விமர்சிப்பவர்களுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை. மூவாயிரம் ஆசிரிய உதவியாளர் நியமனம் என்பது மலையகத்துக்கு ஒரு வரப்பிரசாதமே. குறைகளை பெரிதுபடுத்தாது நிறைவுக்கு இட்டுச்செல்லும் வழி வகைகள் குறித்து சிந்திப்போம். அரசியல் தொழிற்சங்க வாதிகள் ஆளுக்கு ஆள் அறிக்கைகளை விட்டு அசிங்கப்படுத்துவதோடு மலையகத்தையும் அசிங்கப்படுத்தி விடாதீர்கள்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates