Headlines News :
முகப்பு » » பச்சை தேசத்தின் கனவுகள் : பதுளை மாவட்டம் - டி. புனிதராஜ், கே. நிசோன்

பச்சை தேசத்தின் கனவுகள் : பதுளை மாவட்டம் - டி. புனிதராஜ், கே. நிசோன்


பச்சைப் பசேலென்ற தேயிலை மலைகளுக்கிடையே இயற்கை தன் உச்சகட்ட அழகை பரிணமிக்கச் செய்துகொண்டிருக்கிறது.

ஊவா மாகாண சபை தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு மத்தியில் ஆயிரமாயிரம் கனவுகளோடு காத்திருக்கும் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வானுயர ஓங்கியிருக்கும் மலைகளில் ஏறியிறங்கி, இரத்தம் உறிஞ்சும் அட்டைகளை பொருட்படுத்தாமல் வியர்வை சிந்தி உழைக்கும் தமிழ்ச் சமூகம் மிக முக்கியமான தேர்தலுக்கு முகங்கொடுக்கப்போகிறது.

ஆம்! போலி முகங்கொண்டோரை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாக உழைக்கக் கூடிய தலைவர்களை தெரிவு செய்யும் தருணம் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்காக கிரேக், லியங்காவெல, கல்பொக்க, பூணாகலை, உடாஹென, கனவரெல்ல, ஊவாக்கெல, மடுல்சீமை, கல்உல்ல, குருவிகொல்ல, பட்டாவ

த்தை ஆகிய தோட்டப்பகுதிகளுக்குச் சென்றோம்.

சில தோட்டப்பகுதிகளிலுள்ள குடியிருப்புகளைப் பார்க்கையில் இன்னுமா இப்படியொரு சமூகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

அந்தளவுக்கு குடியிருப்புகள் மிக மோசமான நிலையில் உள்ளன. சுமார் 200 ஆண்டுகாலமாக அதே குடியிருப்புக்களில் வசித்து வரும் மக்கள் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

இன்னும் சில தோட்டக்குடியிருப்புக்கள் பெரும் மாற்றத்தை கண்டிருக்கின்றன. அங்கு அடிப்படை வசதிகள் பல செய்துகொடுக்கப்பட்டுள்ளன.

பூணாகலை கீழ்ப்பிரிவிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தைப் பார்க்கையில் இங்கிருந்து நாளைய தலைவர்கள் எப்படி உருவாகப்போகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது. தூசு படிந்து கதவு, யன்னல்கள் இல்லாமல் அது உடைந்திருக்கிறது. கொஞ்சம் மழை என்றாலும் எல்லா சிறார்களும் நனைந்துவிடுவார்கள் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

வறட்சி காரணமாக பல தோட்டப்பகுதிகளில் மாதமொன்றுக்கு 3 முதல் 12 நாட்களே வேலை வழங்கப்படுகின்றன. அதனால் பெரும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் மக்கள் கால்வயிறு, அரைவயிறு என உண்டு வாழ்கிறார்கள்.

"கடந்த மாதம் 12 நாள் வேலைதான் இருந்தது. மொத்த சம்பளத்தில் கழிவுகள் போக கிடைக்கும் குறைந்தபட்ச தேறிய சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவது சிரமமாக இருக்கிறது. எங்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தைக்கொண்டு வரக்கூடிய தமிழ்ப் பிரதிநிதி ஒருவரையே நாம் தேர்தலில் எதிர்பார்க்கிறோம் என்கிறார் கல்உல்ல தோட்டத்தில் தொழில்புரியும் 25 வயதுடைய கே.நிசோன் என்ற குடும்பஸ்தர்.

வறுமை காரணமாக அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் இந்த மாவட்டத்தின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வைக்கிறது.

அதிகமான தோட்டப்புறங்களில் ஆங்காங்கே சுற்றித்திரியும் சிறுவர்களை நாம் கண்டோம். அவர்களில் சிலர் பாடசாலை செல்வதில்லை என்பதையும் அறிந்துகொண்டோம்.

அவ்வாறான சிறுவர்களின் கல்வியில் பெற்றோர் போதிய அக்கறை காட்டுவதில்லை. மதுவுக்கும் வெற்றிலைக்கும் அடிமையான பெற்றோர் கல்வியினால் ஏற்படக்கூடிய நன்மை குறித்து சிந்திப்பதே இல்லை.

இந்த விடயத்தில் அரசியல் தலைவர்களை குறை சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். மக்கள் சுயமாகசிந்தித்து செயலாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கல்வி பயிலும் பட்டாவத்தை தமிழ் வித்தியாலய அதிபர் டி.புனிதராஜிடம் கேட்டோம்.

"பதுளை மாவட்ட பெருந்தோட்டப் பகுதிகளைப் பொறுத்தவரையில் கல்வி வளர்ச்சியை துரிதமாக ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே இதனை சாதகமாக்கிக்கொள்ள முடியும்.

தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தை உரிய முறையில் செலவிடுவதற்கான திட்டமிடல் குறைவாகவே இருக்கிறது. அதுவும் கல்வித்துறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எதிர்வரும் தேர்தலில் தமிழ்ப் பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்வதன் மூலம் கல்வித்துறை வளர்ச்சிக்கான மூலோபாயங்களை உருவாக்க முடியும். தமிழ் மக்கள் வாக்களிப்பதிலிருந்து விலகியிருக்காமல் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை தக்க வைப்பதற்காக கட்டாயமாக வாக்களிக்கவேண்டும்" என்றார்.

உண்மையில் தீர்க்கமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு.

மக்களுடைய தேவைகளை அறிந்து காத்திரமான திட்டங்களை முன்னெடுக்கக் கூடியவர்களை மக்கள் இனங்காண வேண்டும்.

குறுகிய காலத் திட்டமிடல்களை விட இன்னும் 10 ஆண்டுகளில், 20 ஆண்டுகளில் தமது பிரதேசத்தில் எவ்வாறான அபிருத்திகளை, மாற்றங்களை தமிழ்த் தலைவர்கள் ஏற்படுத்தப்போகிறார்கள்? அதற்கான திட்டம் அவர்களிடம் இருக்கிறதா எனக் கேட்க வேண்டும்.

வெறுமனே வீதி அபிவிருத்தியும் விளையாட்டு உபகரணங்கள், கூரைத்தகடுகள் வழங்குவது மாத்திரம் மக்களுக்கான சேவையாகி விடாது.

மக்களின் வாழ்வாதாரத்தில் சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அடிப்படை சார்ந்த அனைத்துத் துறைகள் குறித்து சிந்திக்கக் கூடிய, எதிர்கால சந்தியினரின் காத்திரமான இருப்பினை உறுதி செய்யக் கூடிய தலைவர்களை கண்டுகொள்ள வேண்டும்.

பதுளை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு தொழிற்சங்கங்களின் சார்பாக போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களுக்கு குறைவேயில்லை.

ஆதலால் வாக்குள் சிதறிப் போகக் கூடிய ஆபத்தான நிலையும் இந்தத் தேர்தலில் உண்டு என்பதை மக்கள் உணர வேண்டியது அவசியம்.

அத்தோடு தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது, விருப்பு வாக்குகளை எவ்வாறு வழங்குவது என்பதில் கவனம் செலுத்துவதினூடாக நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். அதனூடாக மேலுமொரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலை ஏற்படும்.

அதேபோன்று தேர்தலில் வெற்றிபெறும் தமிழ்ப் பிரதிநிதிகள் கட்சி, தொழிற்சங்க பேதங்கள் இன்றி சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டும்.

பூணாகலை கீழ்ப்பிரிவு தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை இங்கு நினைவுபடுத்துகிறோம்.

அதாவது தொழிற்சங்க பேதங்கள் காரணமாக அபிவிருத்திகள் இடம்பெறுவதில்லை என்றும் தொழிற்சங்க ரீதியாக பாகுபடுத்தப்படுவதால் ஏனையோருக்கு கிடைக்கும் நன்மைகள் தமக்குக் கிடைப்பதில்லை என்றும் குற்றம் சுமத்தினார்கள்.

இவ்வாறான செயற்பாடுகள் ஆரோக்கியமான அரசியலுக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் சவாலாகவே அமைந்து விடுகின்றன.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு உரிய தலைமைத்துவத்துடன் அவர்களை வழிநடத்த வேண்டிய பாரிய கடப்பாடு தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு.

நீண்டு நெடிதாக உயர்ந்திருக்கும் மலைகளை துப்புரவு செய்தவர்கள் இந்த மக்கள், அங்கு தேயிலையை விதைத்தவர்கள் எம்மவர்கள், மலைகளைக் குடைந்து வீதியமைத்தவர்கள் இவர்கள், உழைப்புக்காகவே தம் வாழ்நா அர்ப்பணித்து சுகங்களையும் துறந்து வாழ்பவர்கள்.

தமது அரசியல்பிரிவினைவாதங்களால் மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமாகிவிடக் கூடாது.இந்த பச்சைத்தேசத்து மக்களின் கனவுகள் ஏராளமிருக்கின்றன.

அவர்களுடைய கனவுகளை நனவாக்கி ஒவ்வொருவர் முகத்திலும் மலர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய தலைமையை மலையகம் இருகரம் கூப்பி வரவேற்கத் தயாராக இருக்கிறது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates