Headlines News :
முகப்பு » » தேயிலைக் காணிகளை தொழிளார்களுக்கு வழங்கி லாபம் காணும் திட்டம் வெற்றியளிக்குமா ? - நுவரெலியா எஸ்.தியாகு

தேயிலைக் காணிகளை தொழிளார்களுக்கு வழங்கி லாபம் காணும் திட்டம் வெற்றியளிக்குமா ? - நுவரெலியா எஸ்.தியாகு


தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாகிவிட்டன.

இந்தக் காலப்பகுதியில் இவர்கள் பெற்றுக்கொண்ட நன்மைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். காலத்துக்குக் காலம் புதிய திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால், அதன்மூலம் பெருந்தோட்ட மக்கள் பயன் பெற்றனரா என்பது ஆராயப்படவேண்டிய விடயமாகும்.

இதுவரை இந்த மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை எதுவும் வழங்கப்படவில்லை. இதற்காக எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்தும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

எனவே, இந்த மக்களுக்கு எப்போதுதான் மீட்சி கிடைக்குமென்ற ஏக்கம் அனைவரது மத்தியிலும் உள்ளது.

இவ்வாறான நிலையில் பெருந்தோட்ட மக்களுக்கு புதிய திட்டம் ஒன்றை ஒரு பெருந்தோட்டக் கம்பனி அறிமுகப்படுத்தியுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
''பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பிறரை நம்பி தமது வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியாது. அவர்கள் தமது வருமானத்தை தாங்களே தீர்மானிக்கின்றவர்களாகவும், தங்கி நிற்கும் சமூகமாக இல்லாமல் சுயமாக வாழ்பவர்களாகவும் இருக்கவேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை எமது பெருந்தோட்டக் கம்பனி மேற்கொண்டு வருகின்றது.

அதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும்" என வலப்பனை மத்துரட்ட பெருந்தோட்டத் கம்பனியின் பொது முகாமையாளர் சுபாஷ் அபேவிக்கிரம தெரிவிக்கின்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2.5 ஏக்கர் தேயிலை காணிகளை வழங்கி, அதன் மூலம் பெறப்படும் தேயிலை கொழுந்தை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் கீழ் வரும் ஒரகொல்ல தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்று அண்மையில் மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் மாகுடுகலை கிளைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது வலப்பனை மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் சுபாஸ் அபேவிக்கிரம, சிரேஷ்ட குழு முகாமையாளர் சுனில் விஜேரட்ண உட்படப் பல தோட்ட அதிகாரிகளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த வலப்பனை மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின் பொது முகாமையாளர் சுபாஷ் அபேவிக்கிரம,

இன்று பல்வேறு காரணங்களால் பெருந்தோட்டக் கம்பனிகள் அனைத்தும் 4,400 மில்லியன் ரூபா நட்டத்தை அடைந்துள்ளன.

இதன் காரணமாக பெருந்தோட்டங்களை நடத்த முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் பொழுது எமது தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதற்கு உடனடியாக ஒரு மாற்றுத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

இல்லாவிட்டால் அதனை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்படலாம். அதன் காரணமாகவே நாம் இந்தப் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும். அவர்கள் தமது காணியில் உரிய முறையில் வேலை செய்தால் மாதாந்தம் நல்ல ஒரு வருமானத்தை பெற முடியும். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு 50,000 ரூபா மாதாந்த வருமானம் பெற்றவர்களும் இருக்கின்றார்கள். எனவே இதில் முழுக்க முழுக்க தொழிலாளர்களின் முயற்சியே தங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் தங்களால் முடிந்த காலம் வரை உழைக்க முடியும். வீட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டால் நல்ல வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இன்று தொழிலாளர்கள் தங்களுடைய எல்லாத் தேவைகளுக்கும் தோட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்திருக்க வேண்டிய ஒரு நிலை இருக்கின்றது. இதை ஓர் ஆரோக்கியமான விடயமாக நாங்கள் பார்க்கவில்லை. காரணம், எந்த ஒரு சமூகமும் முன்னேற்றமடைய வேண்டுமானால் அவர்கள் தன்னிச்சையாக, சுதந்திரமாக செயற்பட வேண்டும்.

நாங்கள் இதன்மூலம் கிராம முறை அமைப்பையே எதிர்பார்க்கின்றோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்தில் மரணாதார சங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் மாதாந்தம் 100 ரூபா சந்தாப்பணமாக சேர்க்கப்பட்டு மரணங்கள் நிகழ்கின்ற பொழுது அவர்களுக்கான ஒரு தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் எமது தோட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தை மீண்டும் செயற்படுத்த ஆரம்பித்துள்ளோம். இப்படி பல புதிய விடயங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

அது மட்டுமல்லாமல் தற்பொழுது நாம் வங்கிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருகின்றோம். மாதாந்தம் பெறுகின்ற வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பு கணக்கில் இட்டு அதனை குறித்த வயதின்பின்னர் பெற்றுக் கொள்ளும் திட்டம் தொடர்பாகவும், தொழிலாளர்களுக்கு காப்புறுதி ஒன்றை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் நாம் சில வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அங்கு விளக்கமளித்தார்.

இந்தத் திட்டம் தொடர்பாக தொழிலாளர்களிடம் கருத்துக்களை கேட்ட பொழுது அவர்கள் தெரிவித்த கருத்துக்களாவது

இந்த திட்டம் தற்பொழுது நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. இது ஐந்து வருடத்திற்கான ஒரு ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்பப்பட்டுள்ளது. அப்படியானால் ஐந்து வருடங்களின் பின்பு மீண்டும் இந்த காணிகள் எமக்கே வழங்கப்படுமா? என்ற ஒரு சந்தேகம் எமக்குள் ஏற்படுகின்றது. அதற்கான ஒரு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும். காரணம் இந்த காணிக்கு செலவுகள் அனைத்தையும் நாம் செய்ய வேண்டும். காணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின்பு ஜந்து வருடத்தில் வேறு யாருக்காவது கைமாற்றப்படுமாக இருந்தால் அது எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த திட்டத்தின் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அடுத்த வருடம் ஜூPன் மாதம் வரை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தற்பொழுது ஒருசிலர் நல்ல வருமானத்தை பெற்றாலும் மற்றவர்களுக்கு அந்த நிலை இல்லை. இந்த விடயத்தில் தொழிற்சங்கங்கள் தமது பங்களிப்பை முறையாக வழங்கவில்லை எனவும் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய திட்டத்தின்மூலம்; பெருந்தோட்ட கம்பனிகள் சொல்வது போல தொழிலாளர்களின் அனைத்து விடயங்களிலும் கவனம் செலுத்தப்படுமாக இருந்தால் அது வரவேற்கத்தக்க ஒருவிடயமாகும். பெருந்தோட்ட கம்பனிகள் கூட்டு ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள பல விடயங்களையே மறந்து செயற்படுகின்றனர். மேலும் இந்த ஜந்த வருட ஒப்பந்தத்தின் சட்டரீதியான நிலைப்பாடு என்ன?

எதிர்காலத்தில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் நிலைப்பாடு என்ன? தொழிலாளர்கள் நேரடியாக தோட்ட நிர்வாகத்துடன் தொடர்புகளை பேணும் ஒரு நிலை ஏற்படும் பட்சத்தில் தொழிற்சங்கங்கள் பலம் இழந்துவிடலாம். இதுவும் தொழிலாளர்களுக்கு ஒரு பாதிப்பாக அமைந்துவிடலாம். காரணம் தொழிற்சங்கங்கள் பலமாக செயற்பட்டால் மாத்திரமே பல விடயங்களை சாதிக்க முடியும்.

தொழிலாளர்களுக்கு இந்தத் திட்;டம் தொடர்பாக இன்னும் சரியானமுறையில் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதை அவர்களுடன் கலந்துரையாடுகின்ற பொழுது தெரியவந்தது. ஏனெனில் ஒருசில தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகள் பற்றைக் காடுகளாக இருக்கின்றன. அவற்றை சுத்தம் செய்து நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு குறித்த காலப்பகுதி தேவைப்படும். அப்படியானால் அதுவரை அவர்களின் வருமானத்தின் நிலை என்ன? ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவை இல்லாமல் போகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான மாற்றுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமா?

இந்த திட்டம் அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. உண்மையில் இந்த திட்டம் தொழிலாளர்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படுவதாக இருந்தால் இது வெளிப்படை தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். நன்மை தீமை தொடர்பாக தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெற வேண்டுமானால் தொழிலாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு பெறப்படவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்படுவதைவிட இந்த திட்டம் வெற்றி பெறுமாக இருந்தால் அது தொழிலாளர்களுக்கு பல வகைகளிலும் நன்மை பயக்கும்.

இதன் நன்மை தீமைகளை ஒரு சிறிது காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates