இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒரு பிரதான விடயமாக பேசப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவை கொண்டுவந்துள்ள தீர்மானம் தொடர்பில் சர்வகட்சி மாநாடு நடைபெறுகின்றது. ஆனால், மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னும் முழுமையாக உள்நாட்டிலேயே விசாரிக்கப்படவில்லை. அன்று குடியுரிமை பறிக்கப்பட்டது முதல் இன்றைய எல்லை மீள் நிர்ணயம் வரை நாம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகின்றோம். அரச பொது நிர்வாகத்தில் கூட மலையக மக்கள் முழுமையாக இன்னும் உள்வாங்கப்படவில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் இவர்களது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. எனவே மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய தனியான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அவசியம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையின் தீர்மானம் மற்றும் கலப்பு முறை விசாரணைகள் குறித்து ஆராயும் சர்வகட்சி மாநாடு நேற்று முன்தினம் (17ஃ11ஃ2015) ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் இடம்பெற்ற கூட்டத்தின் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த கூட்டத்தில் கட்சிகள் எழுத்து மூலமாக தமது ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் சமர்ப்பித்திருந்த நிலையில், மலையக மக்கள் சார்பான தங்களது கட்சியின் கோரிக்கையை முன்வைத்து கருத்து தெரிவித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் எம.திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்.
இந்த சர்வகட்சி மாநாட்டுத் தொடர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து ஆராய்வதனை முன்னிறுத்தி நடைபெற்றாலும் இதன் ஆணிவேராக இருப்பது இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். எனவே இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். நாங்கள் மலையக கட்சி என்ற வகையில் எமது 20 அம்ச கோரிக்கைகள் ஆலோசனைகள் அடங்கிய எழுத்து மூல ஆவணத்தை சர்வகட்சி மாநாட்டு அவைக்கு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம்.
இந்த நாட்டில் இனப்பிரச்சினை ஒரு பிரதான விடயமாக உள்ள போதும் தேசிய இனம் என்ற வகையில் இந்திய தமிழர் என அழைக்கப்படுகின்ற மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. நாட்டில் எனைய இனங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலையில் பாதிப்புக்கு உள்ளான மக்களாக இவர்கள் உள்ளனர். தற்போதைய கோரிக்கையான கலப்புமுறை விசாரணை பற்றிய கட்சிகள் பல்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. வெவ்;வேறு காலப்பகுதியில் இருந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் 1985 ல் இருந்து விசாரணைகள் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. ஆனால், எம்மை பொறுத்தவரை உள்நாட்டு விசாரணைகளிலேயே நாங்கள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படவில்லை. இலங்கை சுதந்திரமடைந்தபோது எங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டது முதல் இப்போது வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள எல்லை மீள் நிர்ணயம் வரை மலையக மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நாடாளாவிய ரீதியில் பாரிய விசாரணைகளை நடாத்தியது. அதில் மலையக மக்கள் பிரச்சினைகள் குறித்து பலர் சாட்சியம் அளித்திருந்தனர். முடிவில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கையை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்தது. ஆனால் அதில் மலையக மக்கள் குறித்து இரண்டு வசனங்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் அவர்களின் அபிவிருத்தி குறித்த இரண்டு வசனங்களாகும்.
மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் உண்டு என்பது இன்னும் தேசிய மட்டத்திலேயே புரிந்துகொள்ளப்படவில்லை. இன்னும் தோட்டப்பகுதி மக்கள் முழுமையாக அரச பொது நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படவில்லை. 1972 ஆம் ஆண்டு வரை பிரித்தானியர்களின் தோட்ட முகாமையிலும் தற்போது பிராந்திய தனியார் கம்பனிகளின் முகாமையிலுமே இந்த மக்கள் நிர்வகிக்கப்படுகின்றனர். உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுள் பல மலையக இளைஞர்கள் அடங்குகின்றனர். இவர்கள் கைதானமைக்கு பிரதான காரணம் மொழிப்பிரச்சினையே.
தும்பரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை சந்திக்க அண்மையில் சென்றிருந்தேன். அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணமோ அல்லது தாங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தோ தங்களுக்கு விளக்கம் இல்லாமல் உள்ளனர். இறுதி யுதத்ததில் சரணடைந்ததாக சொல்லும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தும்பரை சிறையில் அடைக்கப்படுள்ளார். அவரைச் சுற்றி மலையக இளைஞர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய குழப்;பகரமான பல சூழ்நிலைகள் மலையக மக்களை சுற்றி நிகழ்ந்து கொண்டிருககின்றன.
எனவே இந்த நாட்டில் தேசிய இனம் என்ற வகையில் மிகவும் பின்தங்கி இருக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அவசியம் எனும் கோரிக்கையை தொழிலாளர் தேசிய முன்னணி அரசியல் கட்சி என்ற வகையில் முன்வைக்கின்றது. இதனை நாங்கள் எமது 20 அம்ச எழுத்து மூல ஆவணத்திலும் முன்வைத்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...