காலனித்துவத்துக்கு எதிரான எதிர்வினை படிப்படியாக சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எப்படி உரமாக ஆனது? 19ஆம் நூற்றாண்டில் “பௌத்த மறுமலர்ச்சி”க்குத் தள்ளிய காரணிகள் எவை. ஒல்கொட்டின் வருகை, பாணந்துறை வாதம், கொட்டாஞ்சேனைக் கலவரம் என்பன 1915 கண்டிக் கலவரத்துக்கு வரலாற்று பின்புலத்தை எப்படி கொடுத்திருந்தது என்பதை நாம் இனி பார்ப்போம்.
பிரித்தானியர் மேற்கொண்ட கிறிஸ்தவ மத மாற்ற நடவடிக்கைகளை எதிர்த்து மிகெட்டுவத்த குணானந்த தேரரும், ஹிக்கடுவ சுமங்கல தேரரும் தொடக்கிய ‘பௌத்த மறுமலர்ச்சி இயக்கம்” படிப்படியாக அந்நிய மதப்பிரிவினருக்கும், இனப்பிரிவிவனருக்கும் எதிரான கருத்துநிலையை வளர்த்தது. இந்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு ஏதுவான சில சமூக, வரலாற்றுக் காரணிகளை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுத்தவர்கள் தாம்; “கொவிகம சாதியை சேர்ந்தவர்களாக இல்லாவிடினும் இழிவானவர்கள் அல்ல” என்கிற அன்றைய பிரபல முழக்கம் ஏக காலத்தில் போராட்டமாக உருவெடுத்தது. இலங்கையிள் காலனித்துவம் அறிமுகப்படுத்திய பொருளாதார மாற்றத்துக்கூடாக புதிய வர்க்கங்கள் தோற்றம் பெற்றதுடன் சிங்கள சாதியமைப்பு அதன் பண்பிலும் வடிவிலும் மாற்றம் கண்டது. குறிப்பாக விட புதிதாக ஏற்பட்ட தொழில் முறைகளாலும், அதனூடு உருவான வர்க்க ஊடாட்டத்துக்கு ஊடாகவும் சாதிய நடைமுறையில் மாற்றம் கண்டது. நிலத்தை வைத்திருக்கும் கொவிகம சாதியினரின் செல்வாக்கும் மாற்றம் கண்டது. நாட்டில் ஏற்பட்ட வேகமான முதலாளித்து பரிவர்த்தனையால் நிலச்சுவாந்தர்கள் போன்றோர் அருகிப் போய் அதற்குப் பதிலாக உழைப்பை விற்கும் தொழிலாளரும், வேறு உற்பத்தியில் ஈடுபடும் முதலாளிகளும் அந்த இடத்தை நிரப்பினார்கள். நிலத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்த சமூக உறவுகள் வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கினர்.
1901இல் இலங்கையில் உள்ளூர் தோட்ட உரிமையாளர்களில் 75 வீதத்தினர் சிங்களவர்கள். அந்த சிங்களவர்களில் 57 வீதமானோர் கராவ சாதியினர்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தோற்றம் இந்த பின்னணியிலேயே தொடங்குகிறது. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தலைமையை ஏற்று நடத்தியவர்கள் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த கராவ, சலாகம, துராவ ஆகிய சாதியினரே. போர்த்துக்கேயர் காலத்திலிருந்தே கிறிஸ்தவ மதமாற்றத்திற்கூடாகவும், தேசிய மதங்களின் மீதான அடக்குமுறைகளாலும் பௌத்த மத நடவடிக்கைகள் வீழ்ச்சியுற்றிருந்தது. அதேவேளை மலைநாட்டு சிங்களவர்கள் மத்தியில் பௌத்தம் தழைத்தோங்கியிருந்ததன் காரணம் காலனித்துவத்தால் 3 நூற்றாண்டுகளாக கண்டி கைப்பற்றப்படவிலை என்பதும், அந்த காலப்பகுதியில் பௌத்த மதத்தை கண்டி அரசர்கள் தொடர்ச்சியாக பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பதும் தான்.
இதனை தெளிவுபடுத்த ஒரு உபகதைக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கண்டியை ஆண்ட தமிழ் மன்னன்) பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் அளப்பரியது. அதுபோல கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் கொவிகம சாதிக்கு சார்பான தீர்மானங்களை எப்போதும் எடுத்துவந்தவர் என்பதும் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவுறுத்துகின்றன. கண்டி மல்வத்து, அஸ்கிரிய ஆகிய இரண்டு விகாரைகளை மையப்படுத்தி இரண்டு பிரதான பௌத்த நிகாயக்களை அமைத்து நாட்டிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளும் இந்த நிகாயாக்களின் பரிபாலனத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. இவை இரண்டிற்கும் கீழ் பௌத்த துறவிகளாக நியமிக்கப்படுபவர்கள் கொவிகம சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
சிங்கள பௌத்தர்களில் கொவிகம அல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கராவ, சலாகம, துராவ சாதியினர் எமாற்றமுற்றதுடன் தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். துறவறம் பூண்டிருந்த சில பிக்குமார் நிலப்பிரபுக்கள், உயர் சாதியினர் இருக்குமிடங்களில் தமது பழக்கதோசத்தால் தமது சீருடையையும் கழற்றிவிட்டு பாதம் பணிந்து வணங்கியிருக்கிறார்கள். சில பிக்குமார் நடனம், பறையடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. இந்த பின்னணியில் தான் குறித்த சட்டத்தை மன்னர் கொண்டு வந்தார் என்கின்றன குறிப்புகள். சாதி மேலாதிக்க கொவிகம சாதியினருக்கு இது வாய்ப்பாகப் போனது.
கொவிகம அல்லாதோர் அந்த சட்டம் குறித்து தமது கவலையை தெரிவித்ததுடன், அவர்களின் முறைப்பாடுகளும் மன்னரை சேர்ந்தன. ஒன்றும் நடக்கவில்லை. எனவே அந்த மூன்று சாதியினரும் சேர்ந்து 1772 இல் தாமே இரண்டு இடங்களில் துறவற நிகழ்வை ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை மலைநாட்டு பௌத்த பெரியார்களிடமிருந்தோ, மக்கள் மத்தியிலோ எந்த மதிப்பும் கிடைக்கவில்லை.
துறவறத்துக்குள் நுழைந்த பிக்குகளுக்கு “உபசம்பதா” என்கிற துறவற நிகழ்வு மிக முக்கியம். அதன் பின்னர் தான் உத்தியோகபூர்வமான நிலைக்கு அவர்கள் உயர்த்தப்படுவார்கள். அதனை இரண்டு நிகாயக்களும் மறுத்த நிலையில் இந்த மூன்று சாதியினரும் பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் (சீயம்) 1799-1813 காலப்பகுதியில் பல தடவைகள் சென்று அங்கு துறவற நிகழ்வை நடத்தி விட்டு வந்தார்கள். அதற்கான செலவுகளை சலாகம சாதியை சேர்ந்த வர்த்தகர்கள் ஒழுங்கு செய்து கொடுத்தார்கள்.
ஞானவிமலதிஸ்ஸ தேரர் “உபசம்பதா” செய்துகொண்டு அந்த பிக்கு பரம்பரையின் தலைமைப் பதவிக்கு பர்மா அரசர் நியமித்திருப்பதாக ஒரு கடிதத்தைக் கொண்டு வந்ததுடன் மல்வத்து பீடத்தின் சங்க நாயக்கருக்கும் ஆங்கில தேசாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவை எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை. கண்டியைச் சேர்ந்த நிக்காயக்கள் இப்படி ஒரு புதிய நிக்காய தோற்றம் பெறுவதில் அதிருப்தியுற்றிருந்தனர். கண்டி கைப்பற்றப்படாத காலத்தில் கூட சங்க நாயக்கர்களுக்கும் ஆங்கில தேசாதிபதிக்குமிடையில் அன்று நட்பு இருந்தது என்று டொய்லியின் நாட்குறிப்பில் இருக்கிறது. எனவே அன்றைய தேசாதிபதி பிரவுன்றிக்கு ஊடாக புதிய நிக்காய தோற்றம் பெற முடியாதவாறு தடை செய்தனர்.
தேசாதிபதியின் இந்த தடையை எதிர்த்து அப்போது களுத்துறை முதல் மாத்தறை வரையிலான கருவா தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலார்கள் (சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள்) வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக அந்தத் தடையை தேசாதிபதி நீக்கியிருக்கிறார். இந்த விபரங்கள் விரிவாக மிகெட்டிவத்த குணானந்த தேரரின் சுயசரிதத்தில் (கொடகே வெளியீடு) விபரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் வடக்கு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சைவக் கோவில்கள் தடைசெய்யப்பட்டு இருந்ததைப்போல பௌத்த விகாரைகளிலும் நிலைமை இருந்திருக்கிறது.
இந்த நிலமைகளைத் தொடர்ந்து கொவிகம சாதி அல்லாதோருக்கான நிக்காய “சீயம் நிக்காய” தொடங்கப்பட்டது. பிக்குகளின் சங்க சபைகளுக்குள் இருக்கும் சாதியத்துக்கு எதிராக போராடிய பிக்குகளின் கதைகள் கூட ஏராளமாக இருக்கின்றன. 1810 இல் பாணந்துறையிலுள்ள கல்கொட பௌத்த விகாரையில் நடக்கும் நிகழ்வுகளில் கொவிகம சாதியினருக்கு ஒருபுறமும் ஏனைய சாதியினருக்கு மறுபுறமும் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலைமையை எதிர்த்து கராவ சாதியச் சேர்ந்த 18 வெளியேறி தமக்கான சொந்த விகாரையை அமைத்துக்கொண்டனர். அந்த விகாரை இன்றும் பாணந்துரையில் ரன்கொத் விகாரை என்கிற பெயரில் இருக்கிறது.
கொவிகம அல்லாதோருக்கான நிக்காய ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கரையோரப்பகுதிகளில் கொவிகம சாதி அல்லாதோரால் புதிய விகாரைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுக்கு கராவ, சலாகம, துராவ சாதிகளைச் சேர்ந்த தனவந்தர்கள் உதவினார்கள். அந்த விகாரைகள் சாதிபேதமற்று இயங்கத்தொடங்கிற்று.
போர்த்துக்கேய, ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலங்களில் கொழும்பில் ஒரு விகாரை கூட இருந்ததில்லை. கொழும்புக்கு வடக்கில் 10 மைல்களுக்கப்பால் இருந்த களனி விகாரை, கொழும்பிலிருந்து 8 மைல்களுக்கப்பால் இரத்மலானையிலுள்ள விகாரையுமே கிட்டிய விகாரைகளாக இருந்தன.
ஆக இந்த சாதியினர் நேரடியாகவே ஆங்கிலேயர்களின் நெருக்கடிகளை அடிக்கடி எதிர்கொள்ள நேரிட்டன. ஆங்கில கத்தோலிக்கர்களையும் உள்ளூர் சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. 1883 இல் இலங்கையின் முதலாவது மதக் கலவரமான கொட்டாஞ்சேனைக் கலவரம் இந்த பின்னணியிலேயே உருவானது. இந்த சூழலில் கராவ, சலாகம, துராவ சாதியினரின் எழுச்சி குறித்து அலட்சியம் செய்ய முடியாது. இந்த சூழலில் எதிர்கொள்ளும் போக்கு பாணந்துறை விவாதமாகவும், பௌத்த மறுமலர்ச்சி இயக்கமாகவும் எப்படி தோற்றம் பெற்றன அவை எப்படி தமிழர், முஸ்லிம்களுக்கும் எதிராகவும் காலப்போக்கில் உருவெடுத்தன என்பதை இனி பார்ப்போம்.
கட்டுரையில் வரும் சாதியினர் பற்றிய சுருக்க விளக்கம்
சாதி
|
சாதிக்குழு
|
விளக்கம்
|
கொவிகம
(வெள்ளாளர்)
|
ரதல
|
நிலப்பிரபுக்கள்
|
கொவி
|
விவசாயிகள்
|
|
பட்டி
|
கால்நடை வளர்ப்போர்
|
|
கராவ
|
மீனவ சமூகம் (கரையார் சமூகம்)
|
|
சலாகம
|
கருவா செய்கையில் ஈடுபடுவோர்
|
|
துராவ
|
கள் இறக்குவோர் (நளவர் சமூகம்)
|
உசாத்துணைக்கு பயன்படுத்தப்பட்ட நூல்கள்
- The story of Selestina Rodrigo (Mrs. Jeremias Dias) (SSA publication - 2013)
- පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
- මොහොට්ටිවත්තේ ශ්රී ගුණානන්ද අපදානය - විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
- උඩරට රාජධානිය, ලෝනා ශ්රීමතී දේවරාජා, (Colombo Lake house, 1977)
- Caste Conflict and Elite Formation. The Rise of a Karava Elite in Sri Lanka, 1500-1931 - Michael Roberts, (Cambridge University Press, 2007)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...