Headlines News :
முகப்பு » , , , » சாதியத்தையும் சுமந்துகொண்டு வளர்ந்த சிங்கள பௌத்தம்! (1915 கண்டி கலகம் – 8) - என்.சரவணன்

சாதியத்தையும் சுமந்துகொண்டு வளர்ந்த சிங்கள பௌத்தம்! (1915 கண்டி கலகம் – 8) - என்.சரவணன்


சிங்கள பௌத்த அடையாளம் உயிர்ப்பு பெற்று ஒரு கருத்தாக்கமாக வளர்ச்சிகொண்டதற்குப் பின்புலத்தில் நிகழ்ந்த வரலாற்றுக் காரணிகளை ஆராய்ந்துகொண்டு போது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகிறது. 

அந்த மறுமலர்ச்சி இயக்கம் உருவாவதற்கான சமூக வரலாற்றுக் காரணிகளில் அன்றைய சிங்கள சாதியமைப்பின் பாத்திரமும் தவிர்க்க இயலாத காரணிகளில் ஒன்றென்பதை சென்ற வாரம் பார்த்தோம்.

கண்டி ராஜ்ஜிய காலத்தில் கொவிகம சாதியினர் பேணிப் பாதுக்காக்கப்பட்ட அதேவேளை கொவிகம தவிர்ந்த சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினராக கணிக்கப்பட்டனர். பௌத்த மதம் சாதியத்தை ஏற்றுக்கொள்ளாத போதும் இலங்கையில் புத்த சாசனமானது இலங்கையின் சாதியமுறைக்கு இசைவாகவே நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பார் விக்டர் ஐவன்.

கண்டிராஜ்ஜியம் கைப்பற்றப்படுமுன்னர் கரையோர பிரதேசங்களில் 200 வருடங்களுக்கும் மேலாக காலனித்துவத்தினதும், கிறிஸ்தவ மிஷனரியினதும் ஆளுகைக்குள்ளேயே இருந்தது. அதுபோல அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய தொழில்முறைகளினால் அப்பிரதேச மக்கள்மத்தியில் படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் தோன்றினர். இவர்களில் பெரும்பாலானோர் கொவிகம சாதியைத் தவிர்ந்தவர்கள்.  தாம் பணத்தாலும், கல்வியாலும், செல்வாக்காலும் உயர்நிலையில் இருந்தபோதும் கொவிகம சாதியினரால் தாம் சமமாக மதிக்கப்படுவதில்லை என்கிற குறை இவர்களுக்கு நீடித்துக்ககொண்டே இருந்தது. 

ஆங்கிலேயர்கள் கண்டியையும் கைப்பற்றியதன் பின்னர் அவர்களுக்கு, முதலி, முகாந்திரம் போன்ற பட்டங்களை வழங்குவதற்கு கொவிகம சாதியினர் இடையூறு விளைவித்தனர். முதற் தடவையாக கராவ சாதியை சேர்ந்த ஜோறேன்ஸ் டி சொய்சாவுக்கு “வாசல முதலி” பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்ட போது, தேசாதிபதி ஏர்னெஸ்ட் டி சேரம் ஐ சந்தித்து கராவ சாதிக்கு வழங்கக்கூடாது என்று செல்வாக்குள்ள கொவிகம சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் தேசாதிபதி “வாசல முதலி”பட்டத்தை வழங்காமல் வெறும் முதலி பட்டத்தை வழங்கி நிலைமையை சமன் செய்த சம்பவமும் நிகழ்ந்தது. அதனை எதிர்த்து கொவிகம தவிர்ந்த கராவ, சலாகம, துராவ சாதியினர் தொடர்ச்சியாக தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிட்டனர். நிலப்பிரபுத்துவ அமைப்புமுறையின்போது  சிங்கள சாதியமைப்பில் எந்தெந்த சாதியினருக்கு எவையெல்லாம் தடை செய்யப்பட்டிருந்தது என்கிற நீண்ட தீண்டாமைப் பட்டியலே உள்ளது.

ஏற்கெனவே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய கொவிகம அல்லாதவர்கள் மீண்டும் பௌத்த மதத்துக்கு மாறி தம்மை சிங்கள பௌத்தர்களாக நிறுவ எத்தனித்த போக்கும் நிகழ்ந்தன. தமக்கான நிக்காயக்களை உருவாக்கி கரையோரப் பிரதேசங்களில் கொவிகம அல்லாதோரின் விகாரைகளும் உருவாக்கப்பட்டன. பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தூண்களாக ஆனார்கள் இவர்கள். தம்மை உறுதியான, தூய சிங்கள பௌத்தர்களாக காட்ட கொவிகம சாதியினரைவிட தீவிரமானவர்களாக காட்ட விளைந்தார்கள். கிறிஸ்தவ எதிர்ப்பு மதமும், கொவிகம எதிர்ப்பு சாதியமும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சிங்களவர்கள் மத்தியில் கௌரவமான ஒரு நிலையை உறுதிசெய்து கொள்வதற்கான அவர்களின் முயற்சிகளில் ஒன்றாக இந்திய சாதியமைப்பை ஆதாரம் காட்ட விளைந்தனர். அவர்கள் கண்ட தமிழர்களின் பின்புலம் சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது. இந்த சாதிகளைச் சேர்ந்த படித்த வகுப்பினரும், பிக்குமாரும் இது குறித்து நூல்களை எழுதினர். பௌத்த மறுமலர்ச்சியில் தலையாய பாத்திரத்தை வகித்த ஸ்ரீ சுமங்கள தேரர் ஆங்கிலத்தில் ஒரு சர்ச்சைக்குரிய நூலை எழுதினார். “Itihāsa (History) Collection of useful information concerning the natives of Ceylon as recorded in ancient history (1876)”. இந்த நூலுக்கு நிதியுதவியை செய்தவர் கராவ சாதியை சேர்ந்த கத்தோலிக்கரான சார்ல்ஸ் ஹென்றி.

இந்த நூலின் பிரகாரம் கராவ சாதி தென்னிந்தியாவிலிருந்து வந்த மீனவ சமூகத்தை சேர்ந்ததல்ல. இந்தியாவில் போர்களில் ஈடுபட்ட சத்திரிய வம்சத்தை சேர்ந்தவர்களே என்று நிறுவ முயன்றார். இந்த நூலால் கோபமுற்ற கொவிகம சாதியை சேர்ந்த டான் அரனோலிஸ்“kevatta vamsaya or the true history of the kareiyas and paravas disproving the statments made in the ithasa” என்கிற 37 பக்க நூலை வெளியிட்டார். அதில் கரையார், பரவர் ஆகிய இரு சாதியினரும் தென்னிந்திய மீனவ சாதியினரே என்று வாதிக்கிறார். சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கராவ சாதியைப் பற்றி வெளிவந்த அளவுக்கு வேறந்த சாதி குறித்தும் இலங்கையில் நூல்கள் வெளியானதில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

இத்தகைய விவாதங்கள் நூல்களின் வாயிலாக தொடர்ந்தும் நிகழ்ந்தன. சாதியம் பற்றிய விவாதங்கள் புலமைத்துவ விவாதங்களுக்குள் இப்படிதான் தள்ளப்பட்டன. ஆனாலும் கொவிகம தவிர்ந்த சாதியினர் தாம் கொவிகம சாதியை விட தாழ்வானவர்கள் அல்ல என்கிற விவாதத்துக்குள் இறங்கினார்களேயொழிய, சாதிய அமைப்புமுறையை எதிர்கின்ற வாதத்துக்குள் நுழையவில்லை. சாதியமைப்பின் அடிப்படை வருணாசிரம கோட்பாட்டின்படி பிராமணரே சாதியத்தில் உயர்ந்தவர்கள், சத்திரியர்களுக்கும் கீழ் நிலையில் தான் மூன்றாவதாக விவசாய “கொவிகம: சாதியும் இருக்கிறது என்கிற வாதத்துக்குள் நுழைந்தார்கள் அவர்கள். சலாகம, துராவ போன்ற சாதிகளும் தமது இணைச் சாதிகள் தான் என்று எழுதினார்கள் கராவ சாதியினர். ஆனால் இந்த விவாதத்துக்குள் நுழைந்த சலாகம சாதியினரோ தாம் பிராமணர்கள் என்றும் விஜயபாகு காலத்தில் அவருக்கு முடிசூட்டுவதற்காக வந்த பிராமணர்களே தாம் என்று வாதிட்டார்கள். மலைநாட்டு சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்த கொவிகம சாதியினர் இந்த போக்குக்குள் அகப்படவில்லை அவர்கள் கொவிகம சாதியை மேநிலையாக ஏற்றுக்கொண்ட சமூக அமைப்பில் வாழப் பழகிக்கொண்டார்கள்.

அரசாங்க தொழில்கள், பதவிகள், அரசியல் பிரதிநிதித்துவம் என்பனவற்றின் போதும் இந்த சாதிய பாரபட்சமும், சண்டைகளும் பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் எப்படி நிகழ்ந்தன என்பனவற்றுக்கு பல வரலாற்று சம்பவங்களை அறிந்திருப்பீர்கள். இந்த கட்டுரையில் அதனை விரிக்கத் தேவையில்லை.

இவ்வாறு சாதி ரீதியில் கொவிகம / கொவிகம அல்லாதோர் என்கிற இரு முகாம்களாக பிளவுபட்டு மோதிக்கொண்டிருந்தாலும் மதம் என்று வரும் போது கிறிஸ்தவ மதத்துக்கும் மிஷனரி சக்திகளுக்கும்  பௌத்தத்தை விட்டுகொடுக்கவுமில்லை. ஒன்றிணைய தயங்கியதுமில்லை.

சிங்கள பௌத்த அடையாளங்களுக்கு புத்துயிர்ப்பையும், புது வடிவத்தையும் கொடுப்பதற்கான எழுச்சி சாதியத்தையும் சேர்த்துக்கொண்டு தான் மேலெழுந்ததமை இந்த காலப்பகுதியில் காணக்கூடிய ஒரு முக்கிய அம்சம். சிங்கள பௌத்த + மேநிலை சாதி எது/யார் என்பதை நிறுவ முயலும் இந்த போராட்டத்தையும் கவனமாகவே நோக்க வேண்டியிருக்கிறது. சாதி - மதம் – இனம் ஆகியவை குறித்த தூய்மைவாத கண்ணோட்டம்; அவை பற்றிய போலிப் புனைவுகளையும், ஐதீகங்களையும் நிறுவுவதற்கு தள்ளப்பட்டது போல தான் ஏனைய இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சிக்கும் அதே புனைவுகளும், ஐதீகங்களும் கையிலெடுக்கப்பட்டன என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.

போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலகட்டத்தில் சுதேச மதங்களின் மீதான ஒடுக்குமுறையும், மிஷனரிகளின் மதப் பரப்புதலும் ஆங்கிலேய காலத்தில் தளர்ந்திருந்தது. எனவே கரையோரப் பிரதேசங்களில் பௌத்த மத ஸ்தலங்களை அமைப்பதற்கு சாதகமாக இருந்தது.

பௌத்த மத மறுமலர்ச்சியின் போது நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடலாம்

1. புதிய பௌத்த விகாரைகளை அமைத்து விஸ்தரித்தல்.
2. மிஷனரி கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவியது
3. தமது பௌத்த மத பிரச்சாரத்துக்கும், மிஷனரி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அச்சகங்களை உருவாக்கி பல நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுபிரசுரங்கள் போன்ற வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கியமை.

இலங்கையில் 1860இல் வெளியான முதலாவது சிங்கள பத்திரிகையான “லங்காலோக” பத்திரிகையை (இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது சிங்கள பத்திரிகை “லக்மிநிபஹான” (11.09.1862) என்றே பதிவுகளில் இருக்கின்றன.) வெளியிடுவதற்கான அச்சு இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்தவர்களில் ஒருவர் அன்றைய சீயம் நாட்டு (தாய்லாந்து) மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொவிகம சாதியல்லாதோருக்காக சீயம் நிக்காயவை தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர்.

பௌத்த மதத்தை மோசமாக சித்திரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட கத்தோலிக்க மிஷனரிகளை எதிர்த்து பதிலடி கொடுப்பதில் இரு பத்திரிகைகளும் ஈடுபட்டன. இந்த போக்கால் மிஷனரிமார் மட்டுமல்ல அன்றைய தேசாதிபதியும் அதிருப்தியடைந்தார். அன்றைய தேசாதிபதி ஜோர்ஜ் அண்டர்சன் குறிப்பிடும்போது “அவர்கள் பயன்படுத்தும் சொற்கள் அனைவரையும் ஆத்திரமூட்டி, எழுச்சியுறச்செய்கின்ற வன்முறை கலந்த மொழி.” என்றார்.

இந்த எரிச்சலடையும் போக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவாதத்தை உருவாக்கிற்று அதுவே இந்த சாதிய வேறுபாடுகளை சற்று தள்ளிவைத்துவிட்டு சிங்கள பௌத்தர்களாக ஒன்றிணையச் செய்தது. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வித்திட்டது.
(தொடரும்)

கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட சிங்கள சாதிகள் பற்றிய சுருக்க விளக்கம்

சாதி
சாதிக்குழு
விளக்கம்
கொவிகம
(வெள்ளாளர்)
ரதல
நிலப்பிரபுக்கள்
கொவி
விவசாயிகள்
பட்டி
கால்நடை வளர்ப்போர்
கராவ
மீனவ சமூகம் (கரையார் சமூகம்)
சலாகம
கருவா செய்கையில் ஈடுபடுவோர்
துராவ
கள் இறக்குவோர் (நளவர் சமூகம்)

உசாத்துணைக்கு பயன்படுத்தப்பட்ட நூல்கள்
  1. The story of Selestina Rodrigo (Mrs. Jeremias Dias) (SSA publication - 2013)
  2. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  3. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  4. උඩරට රාජධානිය, ලෝනා ශ්‍රීමතී දේවරාජා, (Colombo Lake house, 1977)
  5. Caste Conflict and Elite Formation. The Rise of a Karava Elite in Sri Lanka, 1500-1931 - Michael Roberts, (Cambridge University Press, 2007)
  6. සිංහල සමාජ සංවිධානය: මහනුවර යුගය - පීරිස්, රැල්ෆ්

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates