Headlines News :
முகப்பு » » கொழுந்து பறிக்கும் பெண்களின் "தேத்தண்ணி" - பா. திருஞானம்

கொழுந்து பறிக்கும் பெண்களின் "தேத்தண்ணி" - பா. திருஞானம்


மலையக பெருந்தோட்ட மக்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளில் ஒவ்வொரு செயற்பாட்டிலும் ஒரு அர்த்தம் இருப்பதுடன், அதில் சமூகம் சார்ந்த பிரதிபலிப்பையும் ஒற்றுமையையும் காணமுடியும். அதை உணராதவர்களும், புரிந்து கொள்ளாதவர்களும் அதை கொச்சைப்படுத்தி மலையக மக்களை ஏளனம் செய்யும் நிலை தற்போது அதிகரித்து வருகின்றது. மலையக மக்களை பொறுத்தவரையில் தமக்கென கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். எளிமையான, நிம்மதியான, நோயற்ற வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இருந்தும் இவர்களைக் கொண்டு இலாபம் பெறுபவர்களே இவர்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆரம்பக் காலங்களில் இவர்கள் பல்வேறுபட்ட விடயங்களில் பின்தள்ளப்பட்ட நிலையில் இருந்தாலும் தற்போது அத்தடைகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டு முன்னேறி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அவ்வாறான விடயங்களில் ஒன்றுதான் மனதை நெகிழ வைக்கும் வகையிலான கொழுந்து பறிக்கும் பெண்களின் தேநீர் (தேத்தண்ணி) பருகும் நேரம். பொதுவாக தோட்டங்கள் தோறும் “தேத்தண்ணி” (தேநீர்) நேரம் காலை 10.00 மணிக்கு தேயிலை கொழுந்து நிறுவை முடிவுற்றதும் இடம்பெறுகிறது. காலை 7, 8 மணிக்கு பெண்கள் தேயிலை மலைகளுக்கு வேலைக்கு போகும்போது காலை உணவை எடுத்துச் செல்வர். கொழுந்து பறிக்கும் பெண்களில் ஒருவர் தேயிலை மலையிலேயே தண்ணீர் சுடவைத்து தேத்தண்ணி ஊற்றுவார். இதற்கான தேயிலை தூள் தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படும். கொழுந்து நிறுவை முடிந்ததும் தேத்தண்ணியை அனைத்து பெண்களும் எடுத்துக் கொண்டு ஒரே இடத்தில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை அனைவருடனும், பகிர்ந்து உண்பதுடன் (தேநீரையும்). தேத்தண்ணியையும் பருகுவர்.

இச் சந்தர்ப்பத்தில் வறுமையின் காரணமாக உணவு கொண்டு வராதவர்களுக்கு அனைவரும் உணவு வழங்குவர். இது வறுமையான தொழிலாளர்களுக்கு பாரிய உதவியாக இருக்கின்றது. சிறிது நேரம் கதைத்துக் கொண்டு, நகைச்சுவையான கதைகள் கூறி சிரித்தும் மகிழ்வர். தங்களது கஷ்டங்களையும், பிரச்சினைகளையும் அங்கு சக தொழிலாளர்களிடம் பேசி தீர்த்தும் கொள்வர். சில கொடுக்கல் வாங்கல்கள், பொருட்கள் விற்பனை என்பனவும் அங்கு நடைபெறும்.

அந்த வகையில் தோட்டத் தொழிலாளர்களின் தேத்தண்ணி நேரம் முக்கியமானதும் ஆறுதலான நேரமாகவும் கருதப்படுகிறது. அத்துடன், கொழுந்து பறிக்கும் பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு பஞ்சாயத்தாகவும் உள்ளது. இவ்வாறான இந்த தேத்தண்ணி நேரம் ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சில பிரதேசங்களில் கிராமங்களிலுள்ள சிங்களப் பெண்களும் தோட்டங்களில் கொழுந்து பறிப்பர். அவர்களிடம் இதுதொடர்பில் வினவியபோது, இவ்வேலை எங்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது. நாங்கள் வீட்டிலிருந்து வரும்போது காலை மற்றும் பகல் உணவுகளை கொண்டு வருவோம். அதை தனியாக உண்ணாமல் இங்கு அனைவரும் ஒன்றாக இருந்து இன, மத, மொழி பேதமின்றி பகிர்ந்து உண்போம்.

எங்களிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் இவர்களுடன் இணைந்து தமிழ் பேசவும் கற்றுக் கொண்டோம். அதேபோல் தோட்ட மக்கள் சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டார்கள். நாங்கள் கிராமத்தில் விளையும் பொருட்களை இங்குள்ள தோட்ட மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வோம். அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். பணத்தை தங்களுக்கு கிடைக்கும்போது கொடுப்பார்கள். சிலதை அன்பளிப்பாகவும் வழங்குவோம் என்று கூறினர்.

உண்மையிலேயே இவர்களின் இச் செயற்பாடு மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது இன ஒற்றுமை உட்பட உதவி செய்யும் மனப்பான்மை பாமர மக்களிடையே சிறந்து காணப்படுகின்றது. இவ்வாறான தன்மை இந்த நாட்டில் வாழும் அனைவரிடத்தும் காணப்படுமானால், எந்தப் பிரச்சினையும் தோன்றாது. ஒரு சிறிய விடயமாக இருந்தாலும் சமூகத்திற்கு ஒரு சிறந்த படிப்பினையையும் எடுத்துக்கூறுகின்றது. இது மலையக மக்களிடம் காணப்படும் ஒரு சிறந்த பண்பாகும்.

இதுபோன்ற செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை யல்ல. போற்றுவதற்குரியது. அதை கொச்சைப் படுத்தக் கூடாது. இதனை சிந்தித்துப் பார்த்தால் இதிலுள்ள உண்மைகளும், தத்துவங்களும் புரியும்.
இதுபோன்ற சம்பவம் ஒன்றை அண்மையில் புஸ்ஸல்லாவ டெல்டா பழைய தோட்ட பிரிவில் காணக்கூடியதாக இருந்தது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates