மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த இளந் தலைமுறையினரின்
ஆற்றலை வெளிக்கொணர்வதற்காகவும் மலையக சமூகத்தில் தொழிற்பயிற்சி பெற்றவர்களை உருவாக்கவும்
மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் முயற்சியினால் பல எதிர்ப்புக்களுக்கும் தடைகளுக்கும்
மத்தியில் உருவாக்கப்பட்ட ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அதன் தாற்பரியத்திலிருந்தும்
குறிக்கோள்களிலிருந்தும் விலகி இன்று ஏனோ தானோ என்ற நிலைப்பாட்டைக்கொண்டு காலத்தை
கடத்திக் கொண்டிருப்பதற்கான காரணமென்ன? கடந்த காலங்களில் மிகவும் சிறந்த முறையில் இயங்கி பல இளைஞர் யுவதிகளை
பயிற்றுவித்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த இந்த நிலையம் இன்று அசமந்தமாக
செயற்படுவதற்கு யார் பொறுப்பு?
மலையகத்தில் பல பாடசாலைகளை நிறுவி பிள்ளைகளுக்கு
வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் புகட்டினால் போதாது. அவர்கள் பாடசாலையை விட்டு விலகிய
பின் தங்களுக்கேற்றவாறு ஒரு தொழிலை பெற்றுக்கொண்டு பெற்றோருக்கு சுமையாக இல்லாமல்
வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டு செல்ல வேண்டுமென்ற தலைவர் தொண்டமானின் உயரிய சிந்தனையின்
பிரதிபலிப்பே இத்தொழிற்பயிற்சி நிலையம். மலையகத்தில் படித்த அத்தனை இளைஞர் யுவதிகளுக்கும்
அரசாங்க உத்தியோகமோ ஆசிரியர் தொழிலோ அல்லது ஆசனத்தில் அமர்ந்தபடி செய்யும் வேலையோ
கிடைக்கும் என்றோ எதிர்பார்க்க முடியாது.
இதை அன்றே உணர்ந்தவர்தான் அமரர் தொண்டமான்.
அதற்கு உகந்த பரிகாரம் இவ்விளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குவதுதான் என்று
முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். பல வெளிநாட்டு தலைவர்களை அணுகி
பேச்சுவார்த்தை நடத்தினார்.
இறுதியாக நோர்வே அரசாங்கம் கட்டட நிர்மாணத்திற்கான
நிதி உதவியை வழங்க உடன்பட்டது. இந்தியா உள்ளக தளபாடங்களையும் பயிற்சிக்கான இயந்திர
உபகரணங்களையும் வழங்குவதாக உறுதியளித்தது.
இந்த அடிப்படையில் நோர்வேயின் 'நொராட் நிறுவனம்' வழங்கிய 130 மில்லியனுக்கும் அதிகமான தொகையைக் கொண்ட கட்டட நிர்மாணம் சகல வசதிகளுடனான
ஒரு பூரணமான தொழிற்பயிற்சி கல்லூரியாக உருவானது.
இந்நிலையம் ஆரம்பித்து முதல் இரண்டு
வருடங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கியது. பின்னர் அதன் நிர்வாகம்
தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மீண்டும் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, 2007 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமான்
ஞாபகார்த்த மன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டு இன்று வரை இயங்கி வருகின்றது.
இக்காலப்பகுதியில் இளைஞர் வலுவூட்டல்
மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு, இக்கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்
மொழியில் தொழில் போதனையை அளிக்கக்கூடிய ஆசிரியர்களை தந்துதவுமாறு இந்தியாவிடம்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்கிய இந்தியா, ஏழு போதனாசிரியர்களை சுழற்சி அடிப்படையில்
கொடுத்துதவ ஒப்புக் கொண்டது. இக்கல்லூரி 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி பதினைந்து தொழிற்பயிற்சி நெறிகளை உள்ளடக்கியதாக இந்திய
உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரஸாத், நோர்வே நாட்டு தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இக்கல்லூரியின் குறிக்கோள்களாக பிரகடனப்படுத்தப்பட்ட சரத்துக்கள் பின்வருமாறு:
1. நவீன வேலை
உலக தேவைகளுக்கான தொழில் துறைகளில் பெருந்தோட்ட இளைஞர்களுக்கான தகைமை சார் பயிற்சி
தேவைகளை மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குவதன் மூலம் வருடாந்தம் 500 இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக
நிறைவு செய்தல்.
2. சுயாதீனமான
வாழ்க்கைக்கான மாற்றத்தினை பெருந்தோட்ட இளைஞர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான
தொழிற்பயிற்சி, தொழில்
வாய்ப்பு என்பவற்றிற்கான முயற்சிகளை ஊக்குவித்தல்.
3. தொழிற்பயிற்சிக்கும்
தொழிற்சந்தைக்கும் இடையிலான தொடர்பினை ஸ்தாபித்தல், வலுப்படுத்தல் மூலமாக இளைஞர்கள் வருமானம் பெறுவதற்கும் வளமான வாழ்க்கையை
அமைத்துக் கொள்ளவும் வழிகாட்டல்.
இக்கல்லூரி பலமுறை நிதிப்பற்றாக்குறையாலும்
வேறு சில நிர்வாக சிக்கலாலும் மூடப்பட்டிருந்தது. இதனால் பாதிப்புக்குள்ளானவர்கள்
மாணவர்களும் அங்கு கடமையாற்றும் உள்நாட்டு போதனாசிரியர்களும், சேவையாளர்களு மேயாகும்.
பொதுமக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட
ஒரு திட்டம் அதை உருவாக்கிய தலைவரின் மறைவுக்குப்பின் கவனிப்பாரற்றிருப்பது
ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தோடு, அத்திட்டம் வாழையடி வாழையாக வளர்ந்து எதிர்காலத்தவர்களுக்கும் பயன்படுவதாக
அமைய வேண்டும்.
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையமும்
வாழையடி வாழையாக வளர வேண்டிய ஒரு திட்டமேயாகும்.
சம்பந்தப்பட்டவர்கள் இதைக்கருத்தில்கொண்டு
செயலாற்ற வேண்டும் என்று மலையக மக்கள் எதிர்பார்க் கிறார்கள்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...