Headlines News :
முகப்பு » , , , » அறிந்த கதைகளும் அறியாத தகவல்களும்: “உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல் நூல்” - என்.சரவணன்

அறிந்த கதைகளும் அறியாத தகவல்களும்: “உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல் நூல்” - என்.சரவணன்


எரிக் சுல்ஹைம்

கடந்த 2 ஆம் திகதியன்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட “To End a Civil War: Norway's Peace Engagement with Sri Lanka” (உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொணர்தல்: ) என்கிற நூல் ஒரு முக்கியமான நூல். சிறிய எழுத்துகளைக் கொண்ட 550பக்கங்களுடன் பல தகவல்களை உள்ளடக்கிய இந்த நூலை எழுதியவர் மார்க் சால்டர் (Mark Salter). 

மார்க் சால்டர் இந்த நூலின் முதலாவது வெளியீட்டை ஏற்கெனவே கடந்த ஒக்டோபர் மாதம் 15 அன்று லண்டனில் வெளியிட்டுவிட்டார். Mark Salter இந்த நூலுக்காக கையாண்ட பல தகவல்கள்; மூலத் தகவல்களை உள்ளடக்கியது என்பதால் மிகவும் முக்கியத்துவமுடையது. குறிப்பாக எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் மற்றும் முக்கிய பலருடன் நட்புடையவர். இவர்கள் பொதுவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளியிடாத தகவல்கள் கூட இந்த நூலுக்காக பகிர்ந்திருப்பதை அறியக்கூடியதாக இருக்கிறது. 

மார்க் இங்கிலாந்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், ஆய்வாளர், பிபிசி சேவையில் பலவருடகாலம் ஐரோப்பா, ஆப்பிரிக்க மற்றும் தென்னாசிய விவகாரங்கள் தொடர்பாக இயங்கி வந்தவர். இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் செய்தவர்.

உள்நாட்டு போரொன்றை முடிவுக்கு கொணர்வதற்கான சமாதான முயற்சியை மேற்கொள்ளும் ஏற்பாட்டாளர் என்கிற பாத்திரத்தை மேற்கொள்வதில் உள்ள கடுமையான அனுபவங்கள் குறித்து தெளிவான விபரங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இடியப்பச் சிக்கலின் தன்மையைக் கவனமாக கையாள்வதற்காக கொடுக்கப்பட்ட விலை குறித்து பேசப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட சகலரின் பாத்திரம் குறித்தும் இதுவரை வெளிவராத பல தகவல்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

பல நூல்கள், கட்டுரைகள், இணையத்தளங்கள், போன்றவை இந்த நூலுக்காக கையாளப்பட்டிருக்கிறது. அதேவேளை பல நூற்றுக்கணக்கானவர்கள் நேர்காணப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பலர் இந்த பேச்சுவார்த்தையுடன் நேரடி சம்பந்தப்பட்டவர்கள். அது போக நேர்காணப்பட்ட இலங்கையர்களில் 15 பேர் சிங்களவர்கள் என்றும் 3 பேர் தமிழர்கள் (அதிலும் ஒருவர் பாக்கியசோதி சரவணமுத்து) என்றும் அந்த நூலில் உள்ள பட்டியலிலிருந்து தெரியவருகிறது.

எரிக் சுல்ஹைமின் உரை

சுல்ஹைம் உரை
கூட்டத்தில் முன்னைய அரசாங்கங்களைப் பற்றி பெருமளவு விமரச்னங்களை முன்வைத்த சுல்ஹைம் புலிகள் குறித்தும் விமர்சிக்கத் தவறவில்லை.

“ஆரம்பத்திலேயே பிரபாகரன் சமஸ்டியை ஏற்றுக்கொண்டிருந்தால் பாரிய அழிவுகளை தவிர்த்திருக்கலாம். ஒஸ்லோவில் வைத்து அன்டன் பாலசிங்கம் சமஸ்டியை ஏற்றுகொண்ட போதும் பிரபாகரன் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அத்துடன் அன்டன் பாலசிங்கமும் கீழிறக்கப்பட்டார். அதன் பின்னர் சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் பலம் புலிகளிடம் இருக்கவில்லை. அரசியல் ரீதியில் புலிகள் தனிமைப்பட்டது. பிழையான முடிவுகளால் சிதைந்துகொண்டிருந்தது புலிகள் அமைப்பு. பலருக்கும் பிரபாகரனை அணுகுவது முடியாமல் போனது. அதற்காக நன்றி கூறினார்கள் இலங்கை அரசியல் தலைவர்கள். முஸ்லிம் தலைமைகளை சந்திக்க மறுத்தார்,  ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திக்க மறுத்தார். ஓரிரு தடவைகள் ஜப்பான் பிரதிநிதிகளை சந்தித்தார். மற்றும்படி அவர் சில தமிழர்களை சந்தித்தார். அல்லது நோர்வேஜியர்களை சந்தித்தார்.
தனிமைப்பட்ட அவர் இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேசம் என்பன என்ன கருதுகிறது என்பது பற்றி கிஞ்சித்தும் அறியாது இருந்தார். இப்படி தொடர்ந்தால் நிலைமைகள் மோசமாகும் என்று நான் மீண்டும் மீண்டும் பிரபாகரனுக்கு  சுட்டிக்காட்டினேன். பின்னர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யும் முடிவை உறுதியாக எடுத்தது. அதனை தடுக்க நான் முயற்சித்தேன். லார்சன் என்னுடன் கூறியபோது மன்னியுங்கள் எரிக் நான் தான் இந்த முடிவை மாற்றுவதற்காக இறுதிவரை ஒற்றை ஆளாக இருந்தேன். நான் தனித்து ஒன்றும் பண்ண முடியாது என்றார். இப்படி நடக்கும் என்பது தெரிந்திருந்தது. நான் பிரபாகரனிடம் எத்தனையோ தடவை கூறியிருந்தேன். தமக்கெதிரான உலக அரசியல் சூழல் குறித்த சரியான கணிப்பு அவரிடம் இருக்கவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றின் தடையும் சமாதான பேச்சுவார்த்தைக்கு பாரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்தின.
இலங்கைக்கு அருகாமையில் இருக்கும் ஒரே ஒரு நாடு இந்தியா. இந்தியா தவிர்க்க முடியாத நாடு. பிரபாகரன் விட்ட மகாதவறுகளில் ஒன்று ராஜீவ் காந்தியை கொன்றது. நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் நீங்கள் மெக்சிகோவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பவராக இருந்தால் தயவுசெய்து அமெரிக்க ஜனாதிபதியைக் கொன்று விடாதீர்கள்.
இறுதி யுத்தம் நிகழ்ந்த காலச் சூழலில் உலகில் பல நிகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றன. வாஷிங்டனின் நிகழ்ச்சிநிரலில் முதல் 50 விவகாரங்களுக்குள் கூட இலங்கை முக்கியத்துவம் பெறவில்லை. எனவே இலங்கையில் நிகழ்ந்த கொடுமைகள் அன்று முக்கியத்துவம் பெறவில்லை.”
ஆய்வாளர்  இசலின் 

இசலின் விமர்சனம்

இந்த கூட்டத்தில் நூலின் உள்ளடக்கம் குறித்து கடும் விமர்சனங்களையும் ஆழமான கேள்விகளையும் முன் வைத்தவர் இசலின் பிரீடளுன்ட் (Iselin Frydenlund). அவர் ஒரு சிறந்த நோர்வேஜிய ஆய்வாளர். குறிப்பாக பௌத்த பயங்கரவாதம், தேசியவாதம் குறித்த ஆய்வுகளில் ஆழமுள்ளவர். இலங்கை, மியன்மார் நாடுகளில் பௌத்த மத சக்திகளின் பயங்கரவாத போக்கு குறித்து பல ஆய்வுகளை எழுதியவர். இலங்கைக்கும் பல தடவைகள் விஜயம் செய்தவர். நோர்வேயில் இவை குறித்து பல கூட்டங்களை நடத்தியவர்.

“இலங்கை யுத்தம் பக்கசார்பான வெற்றியை வழங்கியதில் பௌத்த மதத்தின் பாத்திரம் என்ன என்பது பற்றி சற்றும் இந்த நூல் ஆய்வு செய்யவில்லை, அதைப் பொருட்படுத்தவுமில்லை" என்று பகிரங்கமாக விமர்சித்தார் இசலின். நோர்வே மத்தியஸ்தர்களின் தோல்வியில் பாரிய பங்கு அதற்குண்டு என்று விமர்சித்தார். அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்ட எரிக் சுல்ஹைம் “நாங்கள் விட்ட பெருந்தவறு அது” என்று கூட்டத்தில் கூறியபோது முதற்தடவையாக இப்படி ஒரு சுயவிமர்சனத்தை நோர்வே தரப்பில் வெளியிட்டிருப்பதை ஆச்சரியமாகவே பார்த்தேன்.

1997-2009 காலப்பகுதியில் நோர்வேயின் சமாதான செயற்பாடுகள் குறித்து நோர்வே செய்த சுயவிசாரணையின் போது (Evaluation of Norwegian peace efforts in Sri Lanka, 1997-2009) அந்த விசாரணை குழுவின் தலைவரிடம் நான் சமாதான முயற்சியின்போது சிங்கள பௌத்த பேரினவாதம் குறித்த அசட்டையான போக்கு குறித்து பல விடயங்களை குறிப்பிட்டிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு பார்வையை இசலின் முன் வைத்திருக்கிறார்.

இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தை குறித்து எரிக் சுல்ஹைம் எழுதிய நூல் வெளிவருவதாக ஆரம்பத்தில் ஒரு புரளி சமூக வலைத்தளங்களிலும், சில இணைய ஊடகங்களிலும் காணப்பட்டன. ஆனால் அது உண்மையல்ல. அப்படி ஒரு நூலை எரிக் சுல்ஹைம் எழுதிகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இதில் இன்னொரு சுவாரசியமான கதையுமுண்டு. எரிக் சுல்ஹைம் இலங்கை மீது ஆர்வம் காட்டத் தொடங்கியதே ஒரு நூலை உருவாக்கும் முயற்சிக்காக இலங்கை வந்திருந்தபோது தான்.

மார்க் (Mark Salter), எரிக் சுல்ஹைம் (Erik Solheim)

எரிக் சுல்ஹைமின் நுழைவு
நோர்வேயின் சோஷலிச இடதுசாரிக் கட்சியின் தலைவராக (1987 – 1997) எரிக் சுல்ஹைம் சில ஆண்டுகளாக இருந்தார் என்பது பலருக்குத் தெரியும். அந்த கட்சியின் தலைவர் பதவியிலிருந்து 1997இல் விலகிய சுல்ஹைம் தனது அரசியல் அனுபவம் குறித்து ஒரு நூலை வெளியிடும் உத்தேசத்துடன் வெளிநாடொன்றுக்கு செல்ல முடிவு செய்கிறார். அப்போது சுல்ஹைம்மின் நண்பரான ஆர்ன பியோடோர்ப் இலங்கைக்கு வந்து ஆறுதலாக அந்த பணியை மேற்கொள்ளும்படி அழைக்கிறார்.  ஆர்ன பியோடோர்ப் இலங்கையில் பல ஆண்டுகாலமாக பல்வேறு நோர்வேஜிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தவர். இலங்கையில் சீநோர், வேர்ல்ட் வீவ், யங் ஏசியா டெலிவிஷன் போன்ற நிறுவனங்களின் பின்னணியிலும் முக்கிய பங்காற்றியவர். பொதுபல சேனாவின் ஞானசார தேரோ, டிலந்த பெரேரா,  நோர்வேக்கு அழைத்து சென்றவரும் அவர் தான்.

எரிக் சுல்ஹைம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் பல அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் பியோடோர்ப். இந்த சந்திப்புகள் அரசியல் உரையாடல்கள் சுல்ஹைமை இன்னொரு அரசியல் ஆர்வத்துக்குள் தள்ளிற்று. தென்னிலங்கையில் ஜேவிபியின் அரசியலும், வடக்கு கிழக்கில் நடந்துகொண்டிருந்த தமிழர்களின் போராட்டம் குறித்த தேடல்களிலும் அக்கறை காட்டத் தொடங்கினார். 1998இல் நோர்வே திரும்பும் சுல்ஹைம் தனது கட்சிக்குள் பாரிய பிளவுகளை எதிர்கொள்கிறார். அதிலிருந்து மீண்டு தனது அக்கறையை இலங்கையின் பக்கம் திருப்புகிறார். நோர்வேயின் பாராளுமன்றக் குழுவொன்று இலங்கை விஜயம் செய்தபோது எரிக் சுல்ஹைமையும் அழைத்துச் சென்று உத்தியோகபூர்வமான அரசியல் சந்திப்புகளில் ஈடுபடுகின்றது.

அதனைத் தொடர்ந்து பாரிஸ் லாச்சப்பலுக்கருகில்  இருந்த விடுதலைபுலிகளின் அலுவலகமொன்றில் சுல்ஹைம் முதல் தடவை விடுதலைப்புலிகளை அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கிறார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து நோர்வேயில் உள்ள விடுதலைப்  புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான ராஜன் செல்லையா எரிக் சுல்ஹைமை சந்தித்து உரையாடுகிறார். அந்த உரையாடலில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துவர வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பாலசிங்கம் ஒருவரே சமாதானத்தை முன்னெடுப்பதற்கான முக்கிய நபர். அவர் அந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஐரோப்பாவுக்கு வரவழைத்தாக வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். இந்த சம்பவம் எப்படி நிறைவேறுகிறது, அதனைத் தொடர்ந்து பாலசிங்கத்தின் சிறுநீரக அறுவைசிகிச்சை போன்றன நோர்வேயை பேச்சுவார்த்தைக்குள் எப்படி இழுத்தது என்பதாக அந்த கதை பல பாத்திரங்களின் பெயர்களுடன் விலாவாரியாக தொடர்கிறது. (பக்கம் 31-33)

நூலில் சுல்ஹைம்மின் கருத்து
எரிக் சுல்ஹைம் இந்த நூலில் குறிப்பிட்ட சிலவற்றின் சாராம்ச குறிப்புகளாக இவற்றைக் குறிப்பிடலாம்.
1998வரை இந்தியா கூட விடுதலைப் புலிகளை ஒரு போதும் அழிக்க முடியாது என்றே உறுதியாக நம்பிவந்தது. இந்திய தேசிய பாதுகாப்பு முன்னாள் ஆலோசகர் எம்.கே. நாராயணன் பலமுறை என்னிடம் அப்படி கூறியிருந்தார். ஆனால் 1998இல் முதன் முறையாக இந்தியாவுக்கு அந்த நம்பிக்கை தகர்ந்தது மாத்திரமல்ல புலிகளை அழிப்பதற்கு ஆதரவளிக்க முன்வந்தது. இலங்கைப் படையினர் கிளிநொச்சியை நெருங்கிக்கொண்டிருக்கும் போது இனி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் முற்றாகவே தகர்ந்துவிட்டதை உணர்ந்தேன்.
தீவிர சிங்கள தேசியவாதிகள் என்னை இன்று வரை தாக்கி வருகிறார்கள். அதுபோல தமிழர்கள் மறுபுறம் பிரபாகரனின் சாவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டித் தாக்குகின்றனர்... இந்த முழு காலத்திலும் பிரபாகரனை அதிமான தடவைகள் சந்தித்த ஒரே நபர் நான் தான். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களுக்கு நீதியுடன் உள்நாட்டுக்குள் சுயாட்சி வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். சமஷ்டி கோரிக்கை என்பது நியாயமான கோரிக்கை. இந்த கருத்துக்காக நான் சிங்கள சக்திகளால் தாக்கப்படுகிறேன். மறுபுறம் தமிழ் தரப்புகள் என்னை ஒருபோதும் நன்றியுடன் அணுகியதில்லை.
சிங்கள தேசியவாத சக்திகளை கையாள்வதற்காக அடிக்கடி கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து எடுத்துரைத்தோம். சமாதான முயற்சியின் எதிர்ப்பாளர்களின் தளமாக அவர்கள் இருந்தார்கள். அவர்களின் கருத்துகளையும் கவனமாக செவிமடுத்தோம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பின்னர் நாங்கள் அவர்களை சந்திப்பதை சந்திரிகாவும் ரணிலும் விரும்பவில்லை.
பிரதான சமாதானத் தூதுவராக எரிக் சுல்ஹைம் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பின்னணியில் இயங்கி வந்திருக்கிறார். இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் தரப்பு, மற்றும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் என பல தரப்புக்கும் தகவல்களை கொண்டு சென்று சேர்ப்பதிலும், அவர்களை சரிகட்டுவதற்கான பணியையும் செய்திருப்பவர். அந்த சக்திகளை இணைத்த வலைப்பின்னலை உயர் இராஜதந்திர தரத்துடன் பேணியவரும் அவரே. அவர் ஒருவரே இந்த சமாதானத்தினதும் யுத்தத்தினதும் பலமான சாட்சி. எனவே சமாதான காலத்திலும், யுத்தம் தொடங்கிய காலத்திலும், யுத்தம் முடிவடைந்த பின்னும் கூட எரிக் சுல்ஹைமின் கருத்துக்களை சகல தரப்புகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றன. இலங்கை ஊடகங்கள் பல நோர்வே பற்றிய பல புனைவுகளை பரப்பியதில் நோர்வேக்கு ஏற்பட்ட அவப்பெயர் சமாதானத்தையும் பாதிக்கவே செய்தன. அவர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடும் கருத்துக்களைக் கூட திரித்து பரப்பப்பட்ட அனுபவத்தின் காரணமாக இலங்கை ஊடகங்களுக்கு கருத்து கூறுவதை தவிர்த்தோ, குறைத்தோ வந்தனர். சர்வதேச ஊடகங்களில் உள்ள நம்பிக்கை அவர்களுக்கு இலங்கை ஊடங்களில் இல்லை என்பது குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல.

இந்த நூல் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இலங்கையில் யுத்தம், சமாதான பேச்சுவார்த்தை என்பவற்றுடன் தொடர்புடைய பலரின் உட்கதைகளும், உபகதைகளும் நிறையவே உள்ளடங்கியிருக்கிறது.
உத்தியோகபூர்வமாக நேரடியாக மத்தியஸ்த பாத்திரம் வகித்த நோர்வே தரப்பினரின் கருத்துகளும், வாக்குமூலங்களும் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக நேரடி மத்தியஸ்த பாத்திரம் வகித்த எரிக் சுல்ஹைம், வீதார் ஹெல்கீசன் போன்றோரின் நேரடி வழிகாட்டுதலின் பேரிலும், மேற்பார்வையின் பேரிலும் எழுதப்பட்டிருக்கிறது.
இதுவரை நோர்வே தரப்பு வெளியிடாத பல தகவல்கள், தரவுகள் உள்ளடங்கியிருகின்றன. நாம் அறிந்த சம்பவங்கள், ஆனால் அறியாத தகவல்கள் பல வெளியிடப்பட்டிருக்கின்றன.
மத்தியஸ்தம் வகிப்பதில் சம்பந்தப்பட்ட நோர்வே அரசின் நிதியில் இந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இறுதி யுத்தம் குறித்த விடயங்கள் அதிகம் சுருக்கப்பட்டுவிட்டதாக தோணுகிறது. இந்த நூலின் உள்ளடக்கம் பற்றிய விரிவான விமர்சனம் தமிழில் வரவேண்டும்.

நோர்வே இலங்கை மட்டுமன்றி கௌதமாலா, மாலி, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல்-பாலஸ்தீன், சூடான், கிழக்கு தீமோர் போன்ற நாடுகளில் சமாதான தூதில் ஈடுபட்ட அனுபவமுடையது. செல்வந்த நாடு என்பதும், பிராந்திய அரசியல் நலன்கள் இல்லாத நாடு என்கிற வகையிலும், காலனித்துவ ஆர்வமில்லாத நாடு என்கிற வகையிலும், சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கும் நாடு என்கிற பெயரும் சமாதான தூதுவர் என்கிற அந்தஸ்தை எட்டியிருக்கிறது. நோர்வே முன்னெடுத்த முயற்சிகளில் கணிசமான நாடுகளில் தோல்வியை கண்டிருக்கிறது. குறிப்பாக பாலஸ்தீன பேச்சுவார்த்தை தோல்வி குறித்து பலத்த விமர்சனம் ஏற்கெனவே உண்டு. இந்த நிலையில் இலங்கை அனுபவம் பலத்த அடியே. இலங்கை அனுபவம் எச்சரிக்கை உணர்வையும், தேக்க நிலையையும் நோர்வேக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை உலகின் நிகழ்ச்சி நிரலில் மாத்திரமல்ல, நோர்வேயின் நிகழ்ச்சிநிரலில் இருந்தும் காணாமல் போய் சில வருடங்கள் ஆகிவிட்டன என்கிற உண்மையை நாம் புரிந்துகொள்ளவேண்டும். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் போர்குற்ற விசாரணை விடயத்தில் தமிழர்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை தொடர்ச்சியாக எடுத்து வருவதைத் தவிர இலங்கை விவகாரம் நோர்வேயின் அக்கறைக்கு உட்பட்ட விடயம் அல்ல.

இந்த நூலில் உள்ள தகவல்கள் பல நோர்வே தரப்புக்கு சாதகமான கதைகளால் தொகுக்கப்பட்ட ஒரு நூல் என்கிற விமர்சனமும் கூட எழலாம். ஆனால் இந்த நூல் இன்னும் பல நூல்களுக்கான கதவுகளைத் திறந்திருக்கிறது என்று நம்பலாம். இதில் உள்ள பல கதைகள் இன்னும் பல உபகதைகளை வெளிக்கொணர வழிதிறந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates