மீரியபெத்தையில் பாதிப்புற்ற மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படவில்லை அல்லது முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் கடந்தவாரங்கயில் முன்வைக்கப்பட்டன. ஒரு சில ஊடகங்கள் ஊடாக விழுமியங்களையும் மீறிய நிலையில் செய்திகளை ஒளிபரப்பியிருந்தன.
ஊடகம் பக்கம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என சொல்லப்படும் அதேவேளை ஊடகங்களும் மக்கள் பிரதிநிதிகளே என்பதை மறந்துவிடக்கூடாது. வாக்குகளினால் தெரிவாகும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களின் பிரச்சினைகளை கருத்துக்களை வெளிப்பமுத்துவதனுாடாக அவர்களின் தேவைகளை பெற்றுக்கொடுக்கவும் ஊடகங்கள் முன்வரவேண்டும். எனவே ஊடகங்களும் பிரதிநிதிகளே. துரதிஷ்டவசமாக சில ஊடகங்கள் மக்களின் பிரதிநிதிகளாக அல்லாமல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவும் சில ஊடகங்கள் மக்களின் பிரதிநிதிகளாகவும் செயற்படுவதனால் மக்களின் பிரதிநிதிகளாகவும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் செயற்படுவதனால் மக்களின் அவலத்தை ஏலத்தில் விடும் நிலையாக செய்திகளையும் தகவல்களையும் ஒளிபரப்புவதை அவதானிக்க முடிகின்றது.
எது எவ்வாறாயினும் மீரியபெத்தையில் பாதிப்புற்ற மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறெனில் இந்த வீடமைப்பு விடயத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்பது பற்றிய விரிவான விளக்கத்தை ஊடகங்கள் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.
தோட்டப்பகுதிகளில் ”வீடமைப்பு” என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய விடயமாகும். ஏனெனில் அந்த மக்கள் லயன் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில தோட்டங்களில் இரட்டை வீடுகள் (Twin Quarters) எனப்படும் முறை ”ஜனவசம” காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை லயத்து வாழ்க்கை முறைமைக்கு மாற்றீடானதாகவோ அல்லது போதுமானதாகவோ அமையவில்லை. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் 1972-1992 காலப்பகுதி. இந்த காலப்பகுதியிலேயே அரசாங்கம் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட யாக்கம் எனும் இரண்டு அரச நிறுவனங்களின் ஊடாக தோட்டங்களை நிர்வகித்த காலமாகும். அதற்கு முன்பும் பின்பும் பெரும்பாலான தோட்டங்கள் தனியார் கம்பனிகள் வசமே இருந்து வந்துள்ளது. 200 வருடங்களை எட்டப்போகும் தேயிலைத் தொழில் துறையும் அதன் பின்னணியில் உள்ள சமூகமும் வெறும் 20 வருடங்களே அரச நிர்வாக கட்டமைப்புக்குள் இயங்கிவந்துள்ளன. தொழில் நிர்வாகம் மட்டுமல்ல சமூக நிர்வாகமும் கூட தனியார் வசம் இருந்தமையும் தற்போதும் அத்தகைய நிலைமை இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இந்த நிலையில் 1992ஆம் ஆண்டு மீண்டும் தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நீண்டகால குத்தகை அடிப்படையில் உள்நாட்டு கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1972க்கு முதல் காலனித்துவ பிரித்தானிய தலையீட்டுடன் இயங்கிவந்த கம்பனிகள் தற்போது உள்நாட்டு பிராந்திய பெருந்தோட்ட யாக்கம் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இவை பிராந்திய கம்பனிகளால் இயங்கப்படும் தோட்டங்களை விட மோசமான நிலையில் உள்ளன.
1992ஆம் ஆண்டுக்கு முன்னாதாக தொழிலாளர்களின் சேமநல விடயங்களை கவனிப்பதற்கு இருந்த சட்டங்களின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை கவனிப்பதற்கு என உருவாக்கப்பட்டதே ட்ரஸ்ட் எனப்படும் மனிதவள அபிவிருத்தி நிதியம். இது பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளினால் நடைமுறைச் செலவீனங்களுக்கான நிதியீட்டங்கள் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகின்ற நிறுவனமாகும். இதில் திறைசேரி அங்கத்தவர் ஒருவரும் இரண்டு தொழிற்சங்க பிரதிநிதிகளும் இயக்குனர் சபை அங்கத்தவர்களாக இடம்பெறுவதோடு நிறைவேற்று அதிகாரமுள்ள இயக்குனர்களாக பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகளே கைத்தொழில் அமைச்சரினால் பரிந்துரைக்கப்படும் ஒருவர் நியமிக்கப்படுவார். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாகப்பட்டதன் பின்னர் அந்த அமைச்சரினால் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் அனுசரனையுடனேயே நிதியத்தின் தலைவரை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் அனுசரனையுடனேயே நிதியத்தின் தலைவரை நியமிக்கும் நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. இந்தத் தலைவர் பதவி நிறைவேற்று அதிகாரமுடையது அல்ல.
இந்த பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம் தனது நடத்துகைக்கான செலவுகளை பிராந்திய கம்பனிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள அதில் மேற் கொள்ளப்படும் வீடமைப்பு, உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதியின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலமே பெற்றுக்கொள்கின்றது. மேலதிகமாக அரச தோட்ட உட்கட்டமைப்பு செயற்பாடுகளை தங்களுக்கூடாக செய்துகொள்கின்றன. பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் எனப்படும் இந்த TRUST இன் பணிகள் மகா மனிதநேய மக்கள் தொண்டுபோல பார்க்கப்பட்டாலும் இதன் பின்னணி இத்தகையதுதான். இது தோட்ட மக்களை தொடர்ந்தும் தனியாரின் பிடியில் வைத்திருக்கும் இறுக்கமான ஒரு கட்டமைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த ட்ரஸ்ட் உருவாக்கப்பட்ட 1992 காலப்பகுதியில் இருந்து 2014 ஆண்டு வரையான காலப்பகுதியில் 25007 வீடுகளே கட்டப்பட்டுள்ளதாக ட்ரஸ்ட் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆக 22 வருடங்களில் 25007 வீடுகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் எல்லாமே தனிவீடுகள் அல்ல. மறைந்த அமைச்சர் மலையக மக்கள் முன்னணி தலைவர் பெ.சந்திரசேகரன் தோட்டப்பகுதி வீடமைப்புக்கு பொறுப்பாக இருந்த காலத்தில்தான் தனிவீடுகளை அமைப்பதில் அதிக அக்கறை காட்டியிருந்தார். இன்று நடைபெறுவது போல 7 பேர்ச் காணி, 550 சதுர அடி, என குறித்த நியம அடிப்படையில் இந்த தனிவீடுகள் அமையாத போதும் பெருந்தோட்ட மக்களுக்கு தனி வீடுகள் எனும் எண்ணக்கரு அவரால் சாத்தியமாயிற்று என்பதை நன்றியுடன் நினைவு கூறல் வேண்டும். அவை தவிர ஏனையவை மாடி லயங்களாகவும், இரட்டை வீடுகளாகவுமே அமையப்பெற்றன. ஒரு சில பகுதிகளில் தனிவீடுகளாகவும் அமைந்தன. எனவே குழப்பகரமான, நியமங்கள் எதுமற்ற இந்த 25007 வீடுகளுக்கும் ட்ரஸ்ட் Trust வைத்திருக்கும் பெயர் UNITS அதாவது ”அலகுகள்” என்பதாகும். எனவே மலையக மக்களின் வாழ்விடத் தேவை தனிவீடுகளாக அமைகின்றபோது அவர்களுக்கு ”அலகுகள்” எனும் அமைப்பை 22 வருடங்களாக 25007 பெற்றுக்கொடுத்த அமைச்சர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும்தான் 100 நாள் வேலைத்திட்டத்தில் 75 வீடுகளைக் கட்டவில்லை என கொக்கரித்து நிற்கின்றனர். மறுபுறம் 300 வீடுகள் 100 நாள் வேலைத்திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளமையை காணத் தவறுகின்றனர்.
Line எனப்படும் லயங்களுக்கு மாற்றீடாக மக்கள் தனிவீட்டைக் கோரினார்களே தவிர Units எனப்படும் இன்னுமொரு புதுவடிவத்தைக் கோரவில்லை. இந்த 22 வருடகாலப் பகுதியில் ”அலகுகளை” நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்களாக (Implementing Agent) ட்ரஸ்ட் நிறுவனம் இருந்து வந்துள்ள நிலையில் மீரியபெத்தை பாதிப்புற்ற மக்களுக்கு வீடுகள் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவராக, நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA- Urban Development Authority) வந்து சேர்ந்தது எவ்வாறு என யாரும் கேள்வி கேட்காமை வருந்தத்தக்கது. இதுவரை எந்தவொரு ஊடகமும் இந்தக் கேள்வியை முன்வைக்கவில்லை. அந்த வினா தெளிவாக முன்வைக்கப்படுமிடத்து பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில் முறையான அரச நிர்வாகம் இல்லை என்பதைத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். தனியாரின் தலையீடும் ஆதிக்கமும் உள்ள ட்ரஸ்ட் நிறுவனத்திற்கு மாற்றான புதிய அரச அதிகாரமுள்ள திட்ட நடைமுறைப்படுத்தல் முகவரின் அவசியம் உணரப்படும். அது ஒரு அதிகார சபையாகவும் அமையலாம். 2005 ஆம் ஆண்டு மகிந்த சிந்தனையின் கீழ் அத்தகையதொரு அதிகார சபையை நிறுவும் யோசனை விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மகிந்த சிந்தனை அமுலில் இருந்த 2005-2014 வரையான காலப்பகுதியில் தோட்டப்பகுதி வீடமைப்புக்கோ அல்லது உட்கட்டமைப்புக்கோ பொறுப்பாக இருந்த அமைச்சர்கள் இது குறித்து எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் முறையான அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்கப்படவில்லை என்பதற்கு மீரியபெத்தை மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நியமிக்கப்பட்டதன் மூலம் வெளிப்படுத்த முன்வர வேண்டும். இதன் பின்னணியையும் அதன் அரசியல் நோக்கத்தையும் ஊடகங்கள் வெளிப்படுத்த முன்வர வேண்டும். மீரியபெத்தை மண்சரிவு இடம்பெற்றது 2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் இறுதி. அதேநேரம் 2015 ஜனவரி 8ல் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டது. எனவே 2014 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தங்களது ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியை மேற்கொண்டது. இந்த நிகழ்ச்சி நிரலுக்கு அகப்பட்ட விடயம்தான் மீரியபெத்தை மக்களுக்கான வீடமைப்பு. எனவே அவர்களின் அவசர அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டபய தனது பொறுப்பில் இருந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியை வைத்துக்கொண்டு வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொறுப்பை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் அதன் நிர்மாணிக்கும் பொறுப்பை இராணுவத்தினருக்கும் வழங்கினார். இன்றும் கூட இந்த இரண்டு நிறுவனங்களே அதனை முன்னெடுத்து வருகின்றன. தோட்டப் பகுதி வீடமைப்பு விடயத்தில் அனுபவமுள்ள ட்ரஸ்ட் நிறுவனம் இந்த கட்டுமாணப் பணிகளில் உள்வாங்கப் படவில்லை. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஒரு பகுதியாக மறைமுகமாக இயங்கிய தோட்ட உட்கட்டமைப்பு (பிரதி) அமைச்சும் இதில் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.
எப்படியோ கடந்த ஆண்டு இறுதியில், தோட்ட நிர்வாகத்துடனோ அல்லது தோட்டப்பகுதி வீடமைப்புக்கோ எவ்வித தொடர்புமில்லாத நகர அபிவிருத்தி சபையிடமும் (UDA) இலங்கை இராணுவத்தின் நிர்மாணப்பிரிவிடமும் மீரியபெத்தையில் பாதிப்புற்ற மக்களுக்கு வீடுகட்டும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இதில் மூலப்பபொருள் கொள்வனவுப் பொறுப்புக்கு. நிதிவழங்கல் முதலான விடயங்களில் பதுளை மாவட்ட செயலகமும் இணைத்துக்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பின் பேரில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால் பூனாகலை தோட்டத்தில் மாகந்த எனும் பிரிவில் 75 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மாக்கந்த பிரிவு மீரியபெத்தை மண்சரிவு இடம்பெற்ற தோட்டத்தின் மலைக்கு மறுபக்கத்தில் அமைந்துள்ள இடம். பாதுப்பற்ற மக்கள் தாம் தற்காலிக முகாம் பக்கத்திலேயே வீடுகளைக் கோரவில்லை. தாங்கள் தொழில் செய்வதற்கு வசதியாக மீரியபெத்தைக்கு அண்மித்த அதேநேரம் பாதுகாப்பான இடத்திலேயே வீடுகளைக் கோரினர். தவிரவும் 2006 முதல் அனர்த்த ஆபத்து பிரதேசமாக அடையாளம் காணப்பட்ட மீரியபெத்தை மக்களுக்கு மீரியபெத்தைக்கு அண்மித்த பிரதேசத்திலேயே சில இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுமார் 18 வீடுகள் கடனடிப்படையில்முழுவதும் பாதியுமாக கட்டப்பட்டுள்ளது. அதனை முன்னெடுத்தது ட்ரஸ்ட் நிறுவனமாகும். இந்த நிலையில் 75 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவதற்கு எந்த அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டது என்பதை யாரும் அறியார்.
எது எவ்வாறெனினும் 2014 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்ட மாக்கந்த தோட்ட பிரதேசத்தில் வீடமைப்பு பணிகள் ஏதும் ஆரம்பிக்கப்படவில்லை. ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நாட்டப்பட்ட அடிக்கல் மகிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்தததோடு முற்றாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் தான் 2015 ஜனவரியில் மீளவும் உருவாக்கப்பட்ட பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மீரியபெத்தை மக்களின் வீடமைப்பு குறித்து கவனம் செலுத்தியிருந்தார். (UDA) எனப்படும் நகர அபிவிருத்தி அதிகார சபை பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் ஒரு நிறுவனமல்ல. எனினும் அவர்களையும், இராணுவத்தினரையும், பதுளை மாவட்ட செயலாளரையும் அழைத்து தனது அமைச்சிலே பல சுற்று கலந்துரையாடல்களை நடாத்தி மீண்டும் வீடமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இந்த நேரத்தில் அதுவரை பதுளை மாவட்ட செயலாளராகவிருந்தவர் இடமாற்றலுக்கு உள்ளாக நுவரெலியா மாவட்ட செயலாளரே பதுளை மாவட்ட பதில் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே 30 மில்லியன் ரூபாநிதியினை இந்த திட்டத்துக்காக ஒதுக்கியிருந்ததன் காரணமாக தொடர்நதும் UDA மூலமாகவே இந்த வீடமைப்புத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. அதனை மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்கும் ஒரு பிணைப்பும் செய்யப்பட்டிருந்தது.
அதேநேரம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீரியபெத்தை தமது வீடமைப்புக்காக தெரிவு செய்த இடம் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப அமையவில்லை என தெரிவித்தனர். மாக்கந்த தோட்டப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் தங்களது பாரம்பரிய மீரியபெத்தை பிரதேசத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும் தோட்டத்தில் வேலை செய்யும் பகுதியினரைத் தவிர பெரும்பாலானவர்கள் கொஸ்லாந்தை நகரை அண்டி தொழில் செய்யும்போது அந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுவதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அதேநேரம் தாங்கள் பண்டாரவளை நகருடன் தமது புதிய தொடர்புகளை ஏற்படுத்த வேண்டி வருவதனையும் சுட்டிக்காட்டினர். முகாமிலும் முகாமுக்கு வெளியேயும் வாழும் பாதிப்புற்ற அந்த மக்களின் கோரிக்கை ஒருமித்த குரலாக அமைந்தது. எனவே புதிய இடத்தினை தெரிவு செய்யும் தேவை ஏற்பட்டது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தனது அமைச்சு அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து இப்போதைய நிர்மாணப்பணிகள் இடம்பெறும் ”மக்கள்தெனிய” எனும் தோட்டப்பிரிவுக்கு செல்லும் பகுதி தெரிவு செய்யப்பட்டது. இதன்போது தோட்டப்பிரிவுக்கு செல்லும் பகுதி தெரிவு செய்யப்பட்டது. இதன்போது தோட்ட அதிகாரிகளும், தேசிய கட்டட ஆய்வு நிறுவன அதிகாரிகள், பெருந்தோட்டக் கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் சார்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர் வே.உருத்திரதீபன், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எம்.வாமதேவன், அப்போதைய இணைப்புச் செயலாளர் எம்.திலகராஜ் (கட்டுரையாளர்) பிரதேச அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் பாதிப்புற்று முகாமில் இருக்கும் மக்களில் இருந்து தெரிவு செய்யப்ட்ட ஐந்து பிரதிநிதிகள் என எல்லோருமாக இணைந்து கொஸ்லாந்தை பிரதேசத்தை அண்டிய பல மலைகளில் ஏறி, இறங்கி மக்கள்தெனிய சந்தியில் உள்ள புதிய இடம் தெரிவு செய்யப்பட்டது. மக்கள் விரும்பினாலும் கூட கொஸ்லாந்தை நகருக்கு அண்மித்த இரண்டு பிரதேசங்களை தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் பரிந்துரைக்காததன் காரணமாகவே சற்று தொலைவில் உள்ள அதேநேரம் மண்சரிவு பாதிப்பு இல்லாத போக்குவரத்து தொடர்புள்ள கொஸ்லாந்தை – பூனாகலை பாதையின் அருகாமையில் மக்கள்தெனிய எனும் இடம் தெரிவானது. இந்த பிரதேசம் காட்டு யானைகள் நடமாடக்கூடிய இடம் என எச்சரிக்கையிருந்த போதும், அந்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்று இருப்பதும், அந்த பிரதேசத்தை கடந்தே பூனாகலை மக்கள்தெனிய தோட்டப்பிரிவும் உள்ளதையும் சுட்டிக்காட்டி புதிய இடத்தை மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்டனர். உடனடியாக கடந்த மார்ச் மாதமளவில் வீடமைப்புக்கான களத்தயாரிப்பு பணிகள் ஆரம்பமாயின.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...