ஒவ்வொருவரின் வாழ்விலும் மாற்றம் என்பது இயற்கையானது. அது நன்மையானதாகவும் இருக்கலாம். அல்லது சுமையானதாகவும் இருக்கலாம். ஆனால் மலையக மக்களின் வாழ்வில் சுமை ஒன்றே நிரந்தமாக இருக்கின்றது.
நகர்புறங்களில் தமது பிள்ளைகளை சொகுசு கார்களில் அனுப்புவதா? வேன்களில் அனுப்புவதா அல்லது முச்சக்கர வண்டிகளில் அனுப்புதா என தீர்மானம் எடுக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் மலையகத்தில் சில பகுதிகளில் மாணவர்கள் எவ்வாறு சென்று கல்வி கற்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
குறிப்பாக மலையகங்களில் பெரும்பாலான பாடசாலைகள் நகர்புறங்களிலேயே இருக்கும். தோட்டபுறங்களில் இருக்கும் மாணவர்கள் பல கிலோ மீற்றர் நடந்துச் சென்றே கல்வி கற்று வருகின்றனர்.
வெயிலும் மழையுமே இவர்களுக்கு போராட்டமாக இருக்கும். ஆனால் இவர்களின் ஊர்களுக்கு பஸ்கள் சென்று பல வருடங்களாக இருக்கும். இதை அரசியல்வாதிகள் அறிந்தும் அறியாதவர்களாக காட்டிகொள்வார்கள்.
ஏன் என்றால் சுகபோகம் அனுபவிக்கும் அவர்களின் பிள்ளைகள் இப்பாடசாலைகளில் கல்வி கற்பது இல்லை.
அன்றாட வாழ்க்கை செலவுக்கே போராடும் இம் மக்கள் தமது பிள்ளைகளுக்கு 20 ரூபாவை கொடுத்து பஸ்ஸில் சென்று வா.. என்று ஆசையாக கூறுவதற்கு கூட அவர்களிடம் ஆசை இருக்காது. காரணம் அவர்களின் உழைப்பு உண்பதற்கே போதுமானதாக இருக்காது.
இவ்வாறான ஒரு பரிதாப சம்பவம் இறம்பொடை பகுதியில் பதிவானது.
நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 5 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
அண்மையில் வெதமுல்லையில் ஏற்பட்ட மண்சரிவின் போது இந்த தோட்டத்திற்கு செல்லும் பாதையும் சேதமாகியுள்ள நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாமல் பிரதேச மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாணவர்கள் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர். இவ்வாறு பாடசாலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் இடையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றினை மறித்து ஏறிச் சென்ற காட்சி எமது செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளது.
பல கனவுகளை சுமந்து கொண்டு நாளாந்தம் பாடசாலை செல்லும் இம்மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னும் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. மலையக்தில் நாளாந்தம் இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பல கஸ்டங்களை எதிநோக்கி வருகின்றனர்.
இந்த நிலமை இவ்வாறு தொடராத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...