இலங்கையில் சிங்கள பௌத்த தேச உருவாக்கம் எப்படி உருக்கொண்டது, எப்படி வியாபித்தது, எப்படி பலமாக நிலைநிறுத்திக்கொண்டது என்பதை அடையாளம் கண்டால் அதன் செல்நெறியை புரிந்து கொள்ளலாம். காலனித்துவ காலகட்டத்திலிருந்து இந்த வடிவத்தை கோர்த்து முன்வைக்க வேண்டியிருக்கிறது.
1505 இல் போர்த்துக்கேயர் இலங்கைக் கைப்பற்றியபோது இலங்கையில் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்ஜியங்களாக 3 ஆட்சிகள் இருந்தன. அதில் கோட்டை, கண்டி ஆகிய ராஜ்ஜியங்கள் சிங்கள பௌத்த ராஜ்ஜியங்களாகவும், யாழ்ப்பாணத்தில் தமிழ் – இந்து ராஜ்ஜியமும் ஆட்சிபுரிந்து வந்தன.
கோட்டை அரசின் உடைவுக்கு காரணமான விஜயபாகு படுகொலையும், அதனைத் தொடர்ந்து கோட்டை அரசு மூன்றாக பிளவடைந்ததும் நிகழாமல் இருந்திருந்தால் சிலவேளை போர்த்துக்கேயர் தமது நடவடிக்கைகளை வர்த்தகத்தோடு மட்டும் வரையறுத்திருக்கக்கூடும். விஜயபாகுவைக் கொன்றுவிட்டு மூன்று மகன்களும் கோட்டை அரசை பிரித்துக்கொண்டது மட்டுமன்றி ஒருவருக்கொருவர் கொண்ட பரஸ்பர சந்தேகத்தினால் மூத்த மகன் புவனேகபாகு போர்த்துக்கேயரின் உதவியை நாடியதனால் வந்த விளைவை இலங்கை அனுபவித்தது.
போர்த்துக்கேயர் இலங்கை வருமுன் சிங்களவர்கள் சிங்கள பௌத்தர்களாகவும், தமிழர்கள் தமிழ் இந்துக்களாகவும் மட்டுமே இருந்தார்கள். போர்த்துக்கேயரின் வருகையால் பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களும், இந்துக்கள் அல்லாத தமிழர்களும் தோற்றம்பெற்றனர்.
கண்டியை ஆண்ட கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ் – இந்து பின்னணியைக் கொண்டவர். சிங்களவர்களின் மன்னராக மட்டுமன்றி பௌத்த மத்தத்தை பலப்படுத்தவும், வளர்க்கவும் பெரும்பாடுபட்டவர் என்கிறது சிங்கள வரலாறுகள். ஆனால் கீர்த்திஸ்ரீ ராஜசிங்கன் இந்துமதத்தை கைவிடவில்லை என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.
போர்த்துக்கேயர் காலத்தில் இலங்கையில் கத்தோலிக்க மதமாற்றம் செய்யப்பட்ட சிங்கள, தமிழர்களின் எண்ணிக்கை குறித்த ஒல்லாந்தர்களின் பதிவேடுகளின்படி 1,20,000 என்கின்றன. அவ்வாறு மதமாற்றத்துக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் கரையோரப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே. இன்றைய நிலையில் கத்தோலிக்கர்களில் பெரும்பாலானோர் சிங்கள கராவ சாதியனரும், தமிழ் கரையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுமே என்பது நாம் அறிந்ததே. மொரட்டுவையிலிருந்து சிலாபம் வரையான கரையோர பிரதேசங்களில் வாழ்பவர்களில் பலர் கராவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் “கத்தோலிக்கர்கள்.” அதுபோல பாணந்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரப் பிரதேசங்களில் வாழும் கராவ சாதியினர் “பௌத்தர்களாக” இருப்பதையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆக, இலங்கையில் கிறிஸ்தவ விரோத பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தளம் என்பது சிங்கள - பௌத்த - கராவ சாதியினரிடம் தான் இருந்தது என்பது வரலாற்று உண்மை.
போர்த்துகேயர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த பகைமை மதம் சார்ந்தததல்ல. அது வர்த்தகம் சார்ந்ததே. போர்த்துக்கேயர் இலங்கையில் காலடி வைப்பதற்கு முன்னர் கரையோரப்பகுதிகளில் வியாபாரத்தில் செல்வாக்கு செலுத்தி வந்தவர்கள் அரேபிய முஸ்லிம்களே. போர்த்துக்கேயர் இலங்கையில் காலூன்றியதும் அவர்களால் கட்டப்பட்ட கொழும்பு கோட்டையை 1517 இல் தாக்குதல் நடத்த முன்னின்றவர்கள் முஸ்லிம்களே. அதன் பின்னர் போர்த்துக்கேயர் ஆட்சியில் இன்னல்களுக்கு உள்ளான முஸ்லிம்கள் கண்டி அரசிடம் தமக்கு தஞ்சம் கோரினர். அவ்வாறு வந்த முஸ்லிம் அகதிகளில் பலரை அப்போது தமது ஆட்சிக்கு உட்பட்டிருந்த மட்டகளப்பு கரையோர பிரதேசங்களில் குடியேற்றினார் அரசர்.
இலங்கையில் சிங்களவர்கள் மத்தியில் இருந்த சாதியை மறைத்துக் கொள்வதற்காக போர்த்துக்கேய பெயர்களை தமக்கு சூட்டிக்கொண்டார்கள். சில்வா, பெர்ணாண்டோ, பொன்சேகா, பெரேரா போன்ற பெயர்கள் போர்த்துகேயர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதே. கோட்டை அரசர் தர்மபால (1551-1597) மதமாற்றம் செய்துகொண்டு தொன் ஜுவன் தர்மபால என்று பெயர் மாற்றிக்கொண்டார். இலங்கையில் அரசாண்ட முதலாவது கத்தோலிக்க அரசர் அவர்.
எஸ்.டபிள்யு,ஆர்.டி.பண்டாரநாயக்கவின் தகப்பானாரின் பெயர் தொன் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க, முதலாவது பிரதமர் தொன் ஸ்டீவன் சேனநாயக்க, பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையாக கொண்டாடப்படும் தர்மபாலவின் தந்தை தொன் கரோலிஸ் ஹேவாவிதாரன. அதன் பின்னர் நவ யுகத்தில் ஜேவிபி தலைவரின் பெயர் தொன் நந்தசிறி விஜேவீர.
ஒல்லாந்தர் காலத்தில் பௌத்த, இந்து மதங்களை விட போர்த்துகேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கத்தோலிக்க மதத்தையே ஒடுக்கினார்கள். காலனித்துவ சக்திகளிலேயே போர்த்துகேயர்களின் காலத்தின் தான் அதிகளவு மத மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்டமுயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
1911இல் இலங்கையின் குடித்தொகை மதிப்பின்படி சிங்களவர்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 9%, தமிழர்களில் கிறிஸ்தவர்கள் 12%. கிறிஸ்தவ மத மாற்றத்துக்கு எதிரான எழுச்சி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களில் எழுந்ததில்லை. மாறாக ஆங்கிலேயர்களின் காலத்தில் தான் இந்த மத மாற்றத்துக்கு எதிரான சித்தாந்தம் வலிமை பெறத்தொடங்கியதுடன் அது ஒரு பேரியக்கமானது.
கண்டியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியபோது 1815இல் கண்டிப் பிரதானிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் 5வது சரத்தின் பிரகாரம் பௌத்தமதத்தை பாதுகாப்பதற்கும், தேசிய பண்பாட்டம்சங்களை பாதுகாப்பதற்கும் ஆங்கிலேய அரசு உறுதிபூண்டுள்ளது என்கிறது. அதன் படி பெருமளவு சந்தர்ப்பங்களில் ஆங்கிலேயர்கள் ஒப்பந்தத்தின்படி ஒழுகினாலும் சில சந்தர்ப்பங்களில் அதனை மீறினார்கள். 1818 ஆண்டு சீர்திருத்தத்தின் போது பிக்குகளுக்கு இருந்த அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டன. இது குறித்த சர்ச்சை பின்னர் முறைப்பாடு வரை சென்று பிக்குகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலுல் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இந்த நிலைமை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போக்கை வளர்த்துச் சென்றது. மேலும் பௌத்தம் உட்பட தேசிய மதங்கள் அனைத்தும் வெறும் மாயை, போலி என்கிற பிரசாரங்களை ஆங்கில மிஷனரி அமைப்புகள் பகிரங்கமாக முன்னெடுத்தன. அந்த மிஷனரி இயக்கங்கள் தமக்கான சொந்த அச்சகங்களைக் கொண்டிருந்தன. அவற்றைக் கொண்டு துண்டுபிரசுரங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கூடாக ஏனைய மதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தன.
நாட்டின் பாடசாலைகள் கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளாக இயங்கின. சேர் பொன்னம்பலம் இராமநாதன் அன்றைய புதிய தலைமுறை எதிர்நோக்கிய சிக்கல்களை இப்படி விபரிக்கிறார்.
“வேறு வழியின்றி இந்த பாடசாலையை நாடி வரும் பிள்ளைகளின் உளவியலை நயவஞ்சகமாக களவெடுக்கிறார்கள். வீட்டிலிருந்து புறப்படுமுன் நெற்றியில் திருநீர் பட்டையை பூசிக்கொண்டு கிளம்பும் பிள்ளை கிறிஸ்தவ பாடசாலை நெருங்கும்போது அதனை முழுவதும் அழித்துவிட்டு செல்கின்றனர். அதுபோல பாடசாலை முடிந்து வீடு திரும்பும்போது விபூதி பட்டையை பூசிக்கொள்வதை நான் கண்டிருக்கிறேன்.”
கிறிஸ்தவத்தை பின்பற்றுவோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளால் ஏனையோர் பாரபட்சத்துக்கு ஆளானார்கள். நீங்கள் பௌத்தரா, இந்துவா என்கிற கேள்விக்கு சிலர் “நான் அரசாங்க மதம்”என்று பதிலளித்திருந்ததை 1911 இன் குடித்தொகை மதிப்பீட்டில் ஈ.பி.டென்ஹம் தெரிவிக்கிறார். அப்படிப்பட்டவர்கள் தம்மை கிறிஸ்தவ பௌத்தர்கள் என்றோ, கிறிஸ்தவ இந்துக்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டுள்ளர்கள்.
காலனித்துவத்துக்கு எதிரான இந்த எதிர்வினை படிப்படியாக சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எப்படி உரமாக ஆனது? 19ஆம் நூற்றாண்டில் “பௌத்த மறுமலர்ச்சி”க்குத் தள்ளிய காரணிகள் எவை. ஒல்கொட்டின் வருகை, பாணந்துறை வாதம், கொட்டாஞ்சேனைக் கலவரம் என்பன 1915 கண்டிக் கலவரத்துக்கு வரலாற்று பின்புலத்தை எப்படி கொடுத்திருந்தது என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
(தொடரும்..)
(தொடரும்..)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...