Headlines News :
முகப்பு » » தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரமும் சம்பந்தரின் பாராமுகமும் - ஜே.ஜி.ஸ்டீபன்

தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரமும் சம்பந்தரின் பாராமுகமும் - ஜே.ஜி.ஸ்டீபன்தமிழ் மக்களின் பிரச்சினைகள், குறிப்பாக வடக்கு,-கிழக்கு தமிழர்கள் எதிர்கொண்டுள்ள நீண்டகால சிக்கல்கள் அதற்கும் மேலாக நாடும் அரசாங்கமும் எதிர்கொண்டுள்ள தேசிய சர்வதேச மட்ட இடர்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ அல்லது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தரோ அலட்டிக்கொள்ளவில்லையே என்று இங்கு சுட்டிக்காட்டுவதை எவரும் தவறு என்று எண்ணிவிடக்கூடாது. 

ஒரு நாட்டின் ஆட்சியாளர்களை விட அல்லது அரசாங்கத்தை விட நாட்டு மக்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டும் பொறுப்பு எதிர்க்கட்சிக்கே அதிகமுண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல ஆசிய வலயத்தில் மாத்திரமல்ல அகிலத்திலும் இதுவே மரபாக இருந்து வருகிறது. 

தோட்டத் தொழிலாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு சமூகத்தினால் இன்று தேசியத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பு என்பது எட்டு மாதங்களாக மறுக்கப்பட்டு வருவதானது ஒரு தேசிய பிரச்சினையாக நோக்கப்படுதல் அவசியமாகிறது. 

நாட்டின் வருமானத்திலும் ஆட்சி அதிகாரத்திலும் எழுகின்ற தாக்கங்களிலும் கணிசமான பங்காளிகளாக இருந்து வருவோரே மேற்கூறப்படுகின்ற வகையிலான தோட்டத்தொழிலாளர்களாவர்.

எனினும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இழுபறி நிலைக்குள் தள்ளப்பட்டுக் கிடக்கும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் திட்டமிடப்பட்ட வகையில் கிடப்பில் போடப்பட்டும் இல்லாவிட்டால் அக்கறையீனமாக்கப்பட்டும் வருகின்ற நிலையில் அரசாங்கமும் அந்த மக்களை கைவிட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தரும் பொறுப்பற்ற வகையில் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு தவறியிருப்பது வேதனைக்குரியதாகும். 

நாட்டின் தேசியப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அரசாங்கம் எவ்வாறு தனது பங்களிப்பினை வழங்குகின்றதோ அதன் இரட்டிப்பு பங்களிப்பு எதிர்க்கட்சியினுடையதாக இருக்கவேண்டும். 

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை முன்வைத்தமை, அது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தமை, தேர்தல் பிரசாரக் காலத்தில் தலவாக்கலைத் தேர்தல் கூட்டத்தின் போது இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமை, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமை, ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மேற்கொண்டமை, இன்னும் கூறப்போனால் மலையக அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வந்த, வருகின்ற கருத்துக்கள், வாக்குறுதிகள், மலையக தொழிற்சங்கங்களின் வலியுறுத்தல்கள், முதலாளிமார் சம்மேளனத்தின் விடாப்பிடிகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இவ்விவகாரம் தொட்டுக்காட்டப்படாமை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் அறிந்திராதவர் அல்ல. "அனைத்தும் யாம் அறிவோம்" என்று கூறக்கூடிய ஒரு பெருமகராக சம்பந்தர் இருக்கிறார். 

அதேபோன்று மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பை ஈடுசெய்யும் வகையில் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்களுக்கு வெறும் ஆறாயிரம் ரூபா கொடுப்பனவே வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய பொருளாதார சூழலுக்குள் மேற்படி ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு என்பது அந்த இளைஞர்,- யுவதிகளை பச்சைத்தனமாக ஏமாற்றும் செயற்பாடாகும். அது மாத்திரமின்றி ஆறாயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறுகின்ற ஆசிரிய உதவியாளர் ஒருவரின் ஒரு மாதத்துக்கான செலவினத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் தன்மைகள் குறித்து சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்கில்லை. 

இதேவேளை, ஊவாமாகாண சபையினூடாக அந்த மாகாண சபைக்குட்பட்ட தமிழ்ப்பாடசாலைகளுக்கு உள்வாங்கப்பட்ட ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பத்தாயிரம் ரூபா என்ற மேலதிக கொடுப்பனவும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இக்கொடுப்பனவினை இழந்தவர்களின் மனோ நிலை குறித்து இங்கு சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

அதுமாத்திரமின்றி 3100 க்கும் மேற்பட்ட ஆசிரிய உதவியாளர்களை உள்வாங்குதல் எனும் செயற்திட்டத்தில் மேலும் 855 பேர் உள்வாங்கப்பட்டாதிருப்பதும் இது தொடர்பில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் அதாவது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அசட்டைத்தனமாக செயற்படுவது தொடர்பிலும் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருப்பதும் நல்லாட்சியிலும் தோட்டத்தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறை கூறியிருப்பதும் எதிர்க்கட்சித் தலைவர் அறியாத விடயமாக இருக்க வாய்ப்பில்லை. 

இத்தனை விடயங்களும் அறியப்படவில்லையெனக் கூறினால் அது வேடிக்கையிலும் வேடிக்கையாகிவிடும். 

அதேநேரம் இத்தனை விடயங்களும் அறிந்திருந்தும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் ஒரு வார்த்தையேனும் வெளிவிடாதிருப்பது ஏன் என்பது பாரிய கேள்வியாக இருக்கின்றது. அத்துடன் மலையக சமூகம் தொடர்பில் அக்கறையீனத்தை வெளிப்படுத்தி நிற்கிறதா என்றும் கேட்கத் தோன்றுகின்றது.

இல்லாவிட்டால் தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்வதற்கும் அவற்றைத் தீர்த்து வைப்பதற்கும் மலையகத் தலைமைகள் இருக்கின்றனவே என்ற காரணத்தைக் காட்டுவதற்கு விளையப்படுகிறதா என்று கேட்பதும் நியாயமே. 

சம்பந்தரை தலைமையாகக் கொண்டு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெறுமனே வடக்கிற்கும் –கிழக்கிற்கும் வரையறுக்கப்பட்ட கட்சியாக அமைந்துவிட்டால் மேற்கூறப்படுகின்ற காரணங்கள் ஏற்கக்கூடியதாக இருக்கலாம். 

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது வடக்கு- கிழக்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு விடவில்லை. இன்று அது இந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே இன்றைய இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியின் பொறுப்புணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தர் பாராளுமன்ற நிலையியற் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையும் பொலிஸார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தமையும் அதேநேரம் மேற்படி மாணவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும்படியும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் பாராளுமன்றத்தையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தியிருந்தது வரவேற்கக் கூடியதாக இருந்தது. 

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரின் இச்செயற்பாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

நிலைமைகள் இவ்வாறெல்லாம் இருக்கின்ற நிலையில் தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றோடு தொடர்புபட்டதான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட நலன்புரிவிடயங்கள் குறித்தும் ஆசிரிய உதவியாளர்களின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்பிலும் சம்பந்தன் மெளனம் காப்பது ஏன் என்று கேட்கத் தோன்றுகிறது. 

இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் அவர் தனது பொறுப்புக்களில் இருந்து விலகியவராக செயற்பட்டிருக்கவில்லை. தமிழ் இளைஞர்- யுவதிகள் கடத்தப்பட்டபோதும் கைது செய்யப்பட்ட போதும் அப்பாவித் தமிழ் மக்கள் மீது அடக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்ட போதும் அவர் குரல் கொடுத்திருந்தார். அதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய பிரதமர் தமது கடமைப் பொறுப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

அன்றைய சந்தர்ப்பத்தில் முன்னைய அமைச்சராக இருந்த ரிசாட் பதியுதீன் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உள்ளிட்டோரின் எதிர்ப்புகளையும் பரிகாசங்களையும் அவமதிப்புக்களையும் சகித்துக் கொண்டவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருந்தார். எனினும் நாடு??? மக்கள் என்ற ரீதியில் எதிர்க்கட்சியின் பொறுப்பும் கடமையும் கவலைக்கிடமாகியுள்ளது.

இந்நாட்டின் எதிர்க்கட்சியால் மலையக சமூகமும் அந்த சமூகத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வும் தேவைகளும் அவர்களது அபிலாசைகளும் குறிப்பிட்டுக் கூறுவதாயின் அவர்களது வாழ்வாதார நிலமை, நிலவரம் தொடர்பிலும் பாராமுகம் காட்டப்படுவது ஏற்கத்தகும் விடயமல்ல.

பிரதான எதிர்க்கட்சியொன்றின் இத்தகைய பாராமுக செயற்பாடானது வடக்கு ,கிழக்கு தமிழர்கள் என்றும் மலையக தமிழர்கள் என்றும் ஒருவித பிரித்தாளுகைக்குள் கையாளப்பட்டு வருகின்றதாக அமைந்து விட்டதோ என்றும் சந்தேகிக்க தோன்றுகிறது.

தேர்தல் காலத்து ஊடக விவாதப் போர்க்களம் சூடேறியிருந்த காலகட்டத்தில் தமிழகத்தின் ஊடக நிறுவனங்களில் ஒன்று இலங்கையில் சில தமிழ்த்தலைவர்கள் மஹிந்த அணிக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் கடுமையாக சாடியிருந்தன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிராபா கணேசன் மற்றும் மத்திய மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ராம் ஆகியோருடன் ஸ்கைப் வகையிலான தொழில்நுட்ப வசதியுடனான நேரடிக் கலந்து உரையாடலை மேற்கொண்டிருந்த மேற்கூறப்பட்ட அந்த இந்திய தொலைக்காட்சி நிறுவனம் மஹிந்த அணிக்கு ஆதரவு அளித்தமை தவறு என்ற ரீதியில் கருத்துக்களை முன்வைத்திருந்தது. அத்துடன் பிரபா கணேசனுடைய கருத்துக்களையோ அல்லது ராமின் வாதங்களையோ அந்நிறுவனம் செவிமடுப்பதற்கு விளையவில்லை.

இவ்வாறு இலங்கையின் தேர்தல்கள் தொடர்பிலும் இங்குள்ள தமிழ் அரசியல் தலைமைகள் யாருக்கு ஆதரவினை வழங்க வேண்டும், யாரைத் தவிர்க்க வேண்டும் என்ற வற்புறுத்தலை திணிப்பதற்கு முனைகின்ற இத்தகைய ஊடக நிறுவனங்கள் இலங்கையிலே மலையகம் என்றதொரு பிரதேச பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றவர்களான இந்திய வம்சாவளியினராக இருக்ககூடிய ஒரு சமூகத்தினர் பொருளாதார, வாழ்வாதார, அடிப்படை சுகாதார முறைமைகளுக்குக் புறகணிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் இங்குள்ள அரசியல் தலைமைகளின் இழுத்தடிப்பு, ஏமாற்றல், பாராமுகம் ஆகியவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தாரின் விடிவு தொடர்பிலும் இத்தகைய ஊடகங்கள் அறியாதிருப்பதும் புரியாதிருப்பதும் விந்தையானது தான்.

எவ்வாறிருப்பினும் மலையகத் தலைமைகளால் தேர்தல் காலத்தில் காட்டப்பட்டு வந்த அக்கறை தற்போது மழுங்கடிக்கப்பட்டுள்ளது. வாக்குகளைக் குறிவைத்தவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். மலையகத் தலைமைகளைப் பொறுத்தவரையில் அவ்வப்போது நிகழ்வுகளில் தோன்றும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆறுதல் கூறிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிட்டது. பாரளுமன்றத் தேர்தலும் முடிந்துவிட்டது. இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல்கள் வரையிலும் இந்நிலை இழுத்துச் செல்லப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

எப்படி இருப்பினும் ஆயிரம் ரூபா அதிகரிப்பு என்பது சாத்தியப்படாத விடயமாகும். அதுமாத்திரமின்றி முதலாளிமார் சம்மேளனமும் சம்பள அதிகரிப்புக்கு இணங்கிவரப் போவது கிடையாது. அப்படியானால் சம்பள அதிகரிப்பு என்பது அம்போ நிலைதான். 

இந்நிலைகளை கருத்திற்கொண்டும் அதனை சரிசெய்வதை இலக்காகக் கொண்டும் பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்படுமானால் அது வரவேற்கக்கூடியதாக இருக்கும். மலையக சமுகத்தின்பேரில் இருக்கும். பொறுப்பிலிருந்து சம்பந்தரும் விலகிநின்று விட முடியாது.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates