கொஸ்லந்தை மீரியபெத்த தோட்டத்தில்
கடந்த வருடம் ஏற்பட்ட மண்சரிவு பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து
29.10.2015 அன்று காலை மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மண்சரிவு ஏற்பட்ட பிரதேசத்தில் ஒன்றுகூடிய
உறவுகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதோடு, மௌன அஞ்சலியும் செலுத்தினார்கள். தாம் பிறந்து வளர்ந்த இடத்திலேயே
தமது சொந்தங்களை மண்ணுக்கு இரையாக்கி விட்டு அவர்களின் முகங்களை பார்க்க முடியாத
நிலைமைக்கு ஆளாகிவிட்ட சோகத்தை நினைத்து உறவினர்கள் கதறியபடி அந்த மண்ணின் மீதே
உட்கார்ந்து விட்ட காட்சி கல்லையும் கரைத்திருக்கும். அன்றைய தினம் காலை வேளையில்
குறித்த இடத்திற்குச்சென்ற உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவ்விடத்தை அண்மித்த உடனேயே
தலையிலடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்து விட்டனர்.
ஒரு சிலர் தமது உறவினர்களின் படங்களை
எடுத்து வந்திருந்தனர். அதை தமது குடியிருப்புகள் இருந்த இடத்தில் வைத்து கற்பூரம்
ஏற்றினர். பின்னர் அவர்களின்ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க பிரார்த்தித்தனர். மறுபுறம்
இதில் எல்லாம் பங்கு கொள்ளாது எல்லா நம்பிக்கைகளையும் இழந்து விட்ட சிலர் அந்த
மண்ணில் ஆங்காங்கே அமர்ந்து மௌனித்திருந்தனர் எனினும் அவர்களின் மௌனங்களை மீறி
குமுறல் கண்ணீராக வெளிபட்டது. வயதான மூதாட்டி ஒருவர் தான் வசித்து வந்த வீட்டின்
முன்பாக இழந்து விட்ட சொந்தங்களை நினைத்து அழுது புரண்ட நிலையில் அவரது உறவினர்
அவரை ஆறுதல் படுத்தி அழைத்துச்சென்றார்.
சம்பவம் இடம்பெற்று சரியாக ஒரு வருடம்
கழித்து அந்த இடத்தின் மண்ணில் காலடி வைத்ததும் இத்தனை நாட்களாக மனதில் அடக்கி
வைத்திருந்த சோகம் அனைவருக்கும் அவர்களை அறியாமலேயே குமுறலாக வெடித்து சிதறியது.
குடும்பம் ,பிள்ளைகள் ,பேரப்பிள்ளைகள் என எல்லாவற்றையும் அனுபவித்து
விட்டு, இளம் வயது பிள்ளைகளை இந்த அனர்த்தத்தில்
பறிகொடுத்து விட்டு இருக்கும் மூதாட்டிகளின் புலம்பல்களை வர்ணிக்க முடியாது. இவை
எல்லாவற்றையும் விட அனர்த்தத்தில் தரை மட்டமாகிப்போன ஆலயங்களின் எச்சமாக இருக்கும்
ஐயனார் சிலையின் முன்பாகவும் கற்பூரம் கொளுத்தப்பட்டது.
கண்முன்னே தன்னை காலங்காலமாக
வணங்கி வந்த மக்கள், மண்ணுக்குள்
புதைந்ததை பார்த்துக்கொண்டிருந்ததற்கா அல்லது எல்லா உயிர்களையும் காவு கொள்ளாது
பலரை பாதுகாத்ததற்கா இந்த கற்பூரம் என்பது யாருக்குத்தெரியும்? இறை நம்பிக்கையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி இந்த
மண்ணில் காலடி வைத்து இறுதியில் இந்த மண்ணுக்கே இரையாகிப்போன இந்த பாட்டாளி மக்களின்
வரலாற்றில் இந்த சோகங்கள் குறிப்புகளாக மட்டுமா இருக்கப்போகின்றன? என்ற கேள்வி எழுகிறது.மண்ணுக்குள்
புதைந்து போன சொந்தங்கள் இங்குள்ள செடி, கொடி, மரங்களிலும், கற்குவியல்களிலும் ஆத்மாவாய் அமர்ந்திருந்து
மௌனமாய் அழுத சத்தம் மட்டும் எவருக்கும் கேட்டிருக்காது. இனியும் எவருக்கும்
கேட்கப்போவதில்லை.
முகநூல் வழியாக பெற்றுக்கொண்டது
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...