Headlines News :
முகப்பு » » வலுவிழந்துவரும் தொழிற்சங்கங்கள் - என்னென்ஸி

வலுவிழந்துவரும் தொழிற்சங்கங்கள் - என்னென்ஸி


தொழிலாளர் சக்தியும் தொழிற்சங்கங்களும் தற்போது பெருந்தோட்டக் கம்பனிகளிடம் அல்லது தோட்ட முதலாளிகளிடம் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றன. தொழிற்சங்கங்களின் எந்தவொரு கோரிக்கையையும் தோட்டக் கம்பனிகள் ஏற்றுக்கொள்ளாத நிலையும் உதாசீனம் செய்யும் நிலையும் காணப்படுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

முன்னரெல்லாம் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கும் கம்பனிகள், அக்கோரிக்கைகளை தாமதிக்காமல் நிறைவேற்றுவது, ஏதாவது இழுபறி ஏற்பட்டால் குறுகிய கால அவகாசத்திற்குள் அதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பதனையும் வழக்கமாக கொண்டிருந்தன.

ஆனால் தற்போது நடப்பது என்ன ? தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கண்டுகொள்வதில்லை. எது வேண்டுமானாலும் செய்யுங்கள். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற போக்கை முதலாளிமார் சம்மேளனம் கடைப்பிடித்து வருகின்றது.

அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களையும் கூட தோட்டக்கம்பனிகள் மதிப்பதில்லை. அவர்கள் என்ன போராட்டங்கள் செய்தாலும் சரி, வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்தாலும் சரி தோட்ட நிர்வாகங்கள் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இதற்கு உதாரணமாக இந்த வருடத்தில் இடம்பெற வேண்டிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் சம்பள உயர்வு இழுத்தடிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம்.

2013–2015ஆண்டு காலப்பகுதிக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காலாவதியானது. 2015 மார்ச் 31 ஆம் திகதி காலாவதியான கூட்டு ஒப்பந்தத்துக்குப் பதிலாக புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2015 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் இந்தக் கூட்டு ஒப்பந்தத்தினூடாகவே தீர்மானிக்கப்படுகின்றன. எனவே கூட்டு ஒப்பந்தம் குறித்த காலத்தில் செய்து கொள்வது கட்டாயமானது. இல்லையெனில் அதனால் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் நலன்புரி விடயங்களே பாதிப்படையும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஒவ்வொரு கூட்டு ஒப்பந்த காலத்தின் போது ஆரவாரம், பிரச்சினைகளின்றி செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் இம்முறை அவ்வாறு செய்து கொள்ளப்படவில்லை. 7 1/2 மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும் இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நீண்ட காலமாக ஒப்பந்தம் பின்போடப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும். அதாவது இதற்கு முன் இதுபோன்று காலம் கடத்தப்படவில்லை.

2013 – 2015 கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்கப்போவதாக இ.தொ.கா. அறிவித்திருந்தது. இதனை சில தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் பின்னர் அந்த கோரிக்கைக்கு ஆதரவை வழங்கின.

பொதுத் தேர்தல் சமயத்தில் பிரசார நடவடிக்கையின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட 1000 ரூபா பெற்றுத்தரப்படுமென்று கூறியிருந்தார். இன்னும் அரசின் முக்கியஸ்தர்களும் கூட இது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். முதலாளிமார் சம்மேளனத்துக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் சுமார் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று விட்டன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலைப்பாட்டில் முதலாளிமார் சம்மேளனம் உறுதியுடன் இருக்கின்றது.

இதேவேளை தமது கோரிக்கைகளிலிருந்து பின்வாங்க முடியாமலும் வேறு தொகைக்கு பேரம் பேச முடியாத நிலையிலும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. 1000 ரூபா கோரிக்கை தோற்கடிக்கப்பட்டால் அதனால் ஏற்படப்போகும் பாதிப்பை கணக்கில் வைத்தே இந்த தொழிற்சங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
எனவே, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாததொரு நிலையில் இந்த தொழிற்சங்கங்கள் இருக்கின்றன.

இதேவேளை, தொழிற்சங்கங்களுக்கு அப்பால் தொழிலாளர்கள் சுயமாக பல இடங்களில் போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இம்மாத முற்பகுதியில் கொட்டகலை அக்கரப்பத்தனை பொகவந்தலாவ நுவரெலியா பகுதி தோட்டங்களில் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினர்.

தொழிற்சங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் கூட சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா. அரசில் இல்லை. ஆனால் இ.தே.தோ. தொ. சங்கம் அரச சார்பு கட்சியாகும்.
தவிர கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத பிரதான தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன அரசின் பிரதான பங்காளி கட்சிகளாக இருக்கின்றன. இந்த கட்சிகள் அரசுக்கு அழுத்தத்தை கொடுத்து சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டுமென்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த சங்கங்கள் அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முன்வர வேண்டும்.

ஆனால் அவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே!

தொழிற்சங்கங்களிடையே ஒற்றுமை இருந்தால் அல்லது பொதுவான கோரிக்கைகளில் ஒன்றுபட்டு செயற்பட்டால் எந்தவொரு பிரச்சினையையும் இலகுவாக வெற்றி கொள்ள முடியும். இன்று தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமையில்லை. ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத நிலைமையே காணப்படுகின்றது.

மறைந்த இ.தொ.கா. தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளையும் கோரிக்கைகளையும் வென்றெடுத்தார். காரணம் அவருக்கு மக்கள் பலம் இருந்தது. பொதுவான கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டன. வெற்றியும் பெற்றன.

இன்று நடப்பதென்ன ? நான் பெரியவனா? நீ பெரியவனா? என்னிடந்தான் நீ வரவேண்டும் உன்னிடம் நான் வரமுடியாது என்று ஒருவருக்கொருவர் ஈகோவுடன் செயற்படுகின்றனர்.

இந்த தொழிற்சங்க தொழிற்சங்க தலைவர்களின் பலவீனத்தை அரசாங்கம் முதலாளிமார் சம்மேளனம் அமைச்சர்கள் அதிகாரிகள் தோட்ட கமிட்டி தலைவர்கள் என அனைவரும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். எனவே தொழிற்சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க முன்வருகின்றார்களில்லை.

தோட்ட தொழிலாளரைப் பொறுத்தவரை தமது கோரிக்கைகளுக்காக தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக முதலில் போராடுவார்கள். பின்னர் சில தினங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். எத்தனை நாட்கள் தான் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்? மாத சம்பளமா பெறுகின்றார்கள். இல்லைதானே ஒரு நாள் வேலை இழந்தால் அன்று சம்பளம் இல்லை. ஐந்து  ஆறு நாட்கள் வேலை இழந்தால் என்னவாகும் ? பொறுத்து பார்த்து விட்டு வேலைக்கு திரும்பி விடுவார்கள்.

அதையேதான் தொழிற்சங்கங்களும் கையாளுகின்றன. இவை யாவும் தோட்ட கம்பனிகளுக்கு நன்றாகவே தெரியும். அதேவேளை அரசாங்கத்துக்கு கூட மலையக தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் எவ்வாறு கையாள்வது என்பது புரியும். எனவே ஒவ்வொரு தரப்பும் தமக்கென ஒரு வழியில் பயணிக்கின்றன. இவர்களிடம் சிக்கிக்கொண்டு தவிப்பவர்கள் தொழிலாளர்கள்தான்.

தொழிற்சங்கங்கள் மலையக அரசியல்வாதிகள் ஒன்றுபடாமல் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளாத வரையில் மலையகத் தோட்ட தொழிலாளர்களுக்கு விமோசனம் என்பதே கிடையாது என்பதே உண்மை.
இதனை உணர்ந்து தொழிலாளர்கள் சுயமாக சிந்தித்து எழுச்சி பெற வேண்டும். அதன் மூலமே அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates