Headlines News :
முகப்பு » » கற்பாறை உருண்டுவரும் கவனம் 3 - மல்லியப்புசந்தி திலகர்

கற்பாறை உருண்டுவரும் கவனம் 3 - மல்லியப்புசந்தி திலகர்

மீரியபெத்தை மண்சரிவை முன்னிறுத்திய ஒருபதிவு

பொதுத் தேர்தலுக்கு முன்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அமரர் கே.வேலாயுதம், அப்போதைய ஊவா முதலமைச்சர் ஹரிண் பெர்னாண்டோ, மாகாண அமைச்சர் வடிவேல் சுரேஷ் என பலரினதும் பங்களிப்பில் மக்கள்தெனியவில் ”மீரியபெத்தை மீளெழுச்சி கிராம” த்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.  தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாயமில்லாத பிரதேசம் என குறித்த பிரதேசத்தை தெரிவு செய்ததது.  ஆனால் அந்த பிரதேசம் எதிர்பாராத வகையிலான சிறுபாறைகளைக் கொண்ட பிரதேசமாக அமைந்தது.  அவற்றை அகற்றி வீடமைப்புத் தளமாக மாற்றுவதில் பாரிய நெருக்கடி நேர்ந்தது.  எதிர்பார்த்த செலவை விட இதற்கு அதிகமான செலவு நேர்ந்ததும் இதற்காக விவை மனுகோரலைச் (Tender) செய்ய வேண்டிய நிலைக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை வந்தது.  இதனால் களத்தயாரிப்பு பணி தாமதமாகவே, கட்டம் கட்டமாகவே வீடமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.  அதன்படியே முதலாவது கட்டமாக வீடமைப்பு நிலம் தயாரான முதல் 15 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இதற்கிடையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் இடர் முகாமைத்துவ பிரதி அமைச்சராக பதுளை மாவட்ட எம்.பி லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவானதோடு அவர் மகியங்கணை பிரதேசத்திலும் மண்சரிவு இடம் பெற்றுள்ளதாகவும் அங்கும் வீடுகள் அமைக்கப்படல் வேண்டும் எனவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர அவரது பணிப்பின் பேரில் இந்த விடயங்களை ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டது.  இந்தக் குழுவின் உறுப்பினரான அப்போதைய பிரதி  லக்ஷமன் செனவிரத்ன அமைச்சர் மீரியபெத்தை போன்ற வீடமைப்பு மகியங்கணை பிரதேசத்திற்கும் தேவை என்றும் அவை இவற்றை இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு கீழ் கொண்டு வருதல் வேண்டும் என்றும் அறிக்கை சமர்ப்பித்து இடர் முகாமைத்துவ அமைச்சரான எம்.எச்.எம.பௌசி ஊடாக அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.  ஏற்கனவே புரிந்துணர்வு அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்த பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சுக்கு இது ஒரு தடையாக மாறியது.  உண்மையில் தடை போடப்பட்டது.  இதில் தலையிட்டவர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதைக் கொண்டு இதன் அரசியலை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.  இதற்கு மலையக கட்சி ஒன்றின் பின்புலமும் இருந்தது.  அவர்கள் பதுளை மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி செல்வாக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனம் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் நிலைமையைப் புரிந்து கொண்ட பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் மீரியபெத்தை மக்களுக்கு வீட்டுத்திட்டம் கிடைப்பதை மேலும் உறுதிப்படுத்த மக்கள்தெனிய பிரதேசத்தில் கட்டப்படும் வீடுகள் அந்த மக்களையே சென்று சேர வேண்டும், இதில் குளறுபடிகள் வரக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு அந்த மக்களுக்கு ”பசுமை பூமி” காணி உறுதிப்பத்திரங்களை வழங்கிவைக்கும் யோசனையை முன்வைத்தார்.  அதன் முக்கியத்துவத்தை உயர்ந்த அப்போதைய பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் அதற்கு  பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.  இதனால்தான் பசறையில் நடைபெற்ற காணியுறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வில் வழங்காமல்                      மீரியபெத்தை மக்களுக்கான காணி உறுதிகள் தலாவக்கலையில் நடைபெற்ற நிகழ்வில் மே மாதம் வழங்கப்பட்டது.  இதனை சில ஊடகங்கள் அரசியல் நோக்கம் என குறிப்பிட்டிருந்தது.  இதில் எந்த நியாயமுமில்லை.  அமைச்சர் திகாம்பரம் அவர்களோ அல்லது அவரது கட்சி பிரதிநிதியோ பதுளையில் போட்டியிடும் எண்ணத்தில் இருக்கவுமில்லை போட்டியிடவுமில்லை.  ஆனால், மீரியபெத்தையில் பாதிப்புற்ற மக்களுக்கு என உருவாக்கப்பட்ட திட்டம் இனவாத மற்றும் அரசியல் காரண அடிப்படையில் கைமாற்றத்திற்கு உள்ளாகும் அபாயத்தினை தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.  பசுமை பூமி காணி உரித்து முழுமையான ஒன்று அல்ல என்பதற்கு அப்பால் அந்த 75 வீடுகளும் பாதிப்புற்ற மக்களுக்கே சென்று சேரவேண்டியவை எனும் உறுதிப்பாட்டை தந்திருக்கும் ஒரே ஆவணம் இந்த பசுமை பூமி காணியுறுதிகள் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மாத்திரமே.  இதனைத் தெளிவாக புரிந்துகொள்ளல் வேண்டும்.

பொதுத் தேர்தலுக்கு பின்னர் அமைச்சரவை மாற்றத்தின் போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு- மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு என விரிவாக்கப்பட்டுள்ளது.  எனினும் மீரியபெத்தை தோட்டப்பகுதி வீடமைப்பாக அமைந்தபோதும் அது தொடர்ந்தும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழேயே நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.  காரணம் அதன் கீழ் பல மில்லியன் நிதி பறிமாறப்பட்டுள்ளது.  இதனை நிறுவன மாற்றம் செய்ய முனைந்தால் இந்த நிதி மாற்றல் குறித்த ஆவணப் பரிமாற்றங்களுக்கு பல மாத காலம் செல்லலாம்.  எனவே தொடர்ச்சியாக நகர அபிவிருத்தி அதிகார சபையே மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் திகாம்பரம் தான் மீரியபெத்தை அடிக்கல் நாட்டிய பிறகு அடிக்கல் நாட்டப்பட்ட 300 விடுகளையும் பூர்த்தி செய்து தற்போது மக்களிடம் கையளித்து வருகிறார்.  அதேநேரம் மீரியபெத்தை வீடமைப்பு தன்னிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டால் மூன்று மாத காலத்திற்குள் அதனைச் செய்து முடிப்பதாக அமைச்சரவைக்கு அறிவித்தார்.  எனினும் மீண்டும் இதில் மாற்றங்களைச் செய்து இழுத்தடிப்பு செய்யாது இடர் முகாமைத்துவ அமைச்சு தொடர்புபட்டிருக்கும் நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த பணியை முன்னெடுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.  இதனை இடர் முகாமைத்துவ அமைச்சர் ஊடக சந்திப்பின் ஊடாக உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் இந்தப் பிரச்சினையை ஆளும் கட்சி குழுக்கூட்டத்தில் பிரதமரிடம் எடுத்துரைத்திருந்தார்.  சில ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் இந்த விடயத்தை திரிபுபடுத்துகின்றன.  எனவே இதற்கு உறுதியான திர்மானத்தையும் எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.  இதற்கு பதிலளித்த பிரதமர் ஏற்கனவே இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர் திகாம்பரத்துடன் இணைந்து இந்த பணிகளை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மறுபுறம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களினால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணை மூலம் இந்த மீரியபெத்தை வீடமைப்பு விடயம் பேசப்பட்டுள்ளது.  அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா (கட்டுரையாளர்) தாமதத்தின் பின்னணியையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் முன்வைத்தனர்.  பதிலளித்து உரையாற்றிய இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தமது அமைச்சு எந்த விதத்திலும் வீடமைப்பு விடயத்திற்கு பொறுப்பில்லை என கூறினாலும், இந்த அமைச்சினை தான் பொறுப்பேற்பதற்கு முன்பதாக இந்த வீடமைப்பு திட்டம் தமது அமைச்சுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு உள்ளாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு வீட்டுத்திட்டத்தை நிர்மானித்த முடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.  இந்த உறுதிமொழியினை நாடாளுமன்றத்தில் வழங்கச் செய்தது தமிழ் முற்போக்கு கூட்டணியே என்பதை இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
தேசிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டு இராணுத்தினரால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் இந்தத்திட்டத்தில் மாகாண சபையோ அதன் அமைச்சரோ எவ்வித அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.  வெறும் ஊடக அறிக்கைகள் மூலம் தாங்கள் ஏதோ சாதித்து விட்டதாக கூற விளைவது அரசியல் வங்குரோத்து நிலைமையாகும்.  அமைச்சரவை, ஆளும்கட்சிக் குழுக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஆகியன மூலம் மீரியபெத்தை மீள் எழுச்சி கிராமத்தினை கட்டியெழுப்பும் வேளை பிரேரணை ஆகியன மூலம் மீரியபெத்தை மீள் எழுச்சி கிராமத்தினை கட்டியெழுப்பும் பணிக்கு போதுமானதும் பொருத்தமானதுமான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது  இங்கு வலியுறுத்தப்படுகின்றது.  இதனை தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புடன் நிறைவேற்றும்.

இத்தகைய குளறுபடிகளுக்கு பின்னால் உள்ள ஒரு உண்மை தோட்டப் பகுதிகளிலே வீடுகளை அமைப்பதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கும் அமைச்சு (இப்போது) நிறுவப்பட்டிருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தக் கூடிய நிறுவனம் ஒன்று உறுதியானதாக இல்லை என்பது உண்மையாகும்.  மறைந்த அமைச்சர் பெ.சந்திரசேகரன் தனி வீட்டுத் திட்டத்தை ஆரம்பித்த போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு அலகினை தனது அமைச்சின் கீழ் இணைத்துக்கொண்டு பணியாற்றியுள்ளார்.  அது நிரந்தரமானதாக இருக்கவில்லை.  அமைச்சு மாற்றங்கள் வரும்போது அவை மீளவும் இயங்கவில்லை.  அதன்பின்னர் தேச நிர்மாண அபிவிருத்தி அமைச்சின் கீழ் தோட்ட உட்கட்டமைப்பு ஒரு பிரதியமைச்சு நிலையில் (மறைமுக) இருந்தபோது பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் (ட்ரஸ்ட்) வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கிறது.  மீண்டும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தான் மீரியபெத்தை வீடமைப்புத் திட்டத்தை செய்ய தயார் என அறிக்கை விட்டுள்ளார்.  இந்த சந்தர்ப்பத்தில் மலையகத் தோட்டப் பகுதிகளில் ஆங்காங்கே அரைவாசி நிலையில் கட்டி குறைநிலையில் வைக்கப்பட்டுள்ள நுாற்றுக்கணக்கான வீடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  இதன் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபை கட்டிய வீ்டுகளும், ட்ரஸ்ட் கட்டிய வீடுகளும் அடங்குகின்றன.  தொழிலாளிகளிடம் கடனை அறவிட்டுள்ள அதேநேரம் அந்த வீடுகளை அந்த மக்களுக்கு ஒப்படைக்காத அப்போதைய அமைச்சர்கள் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாக உள்ளனர்.  இது பற்றிய விரிவான நடவடிக்கை எடுக்க மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

எது எவ்வாறாயினும் மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்குவதற்கான அதிகார சபை ஒன்றின் அவசியத்தை இந்த மீரியபெத்தை வீடமைப்புத் திட்ட தாமதங்கள் உணர்த்தியுள்ளன.  அதற்கான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இவ்வாறு முறையான திட்டமிடல்கள் மூலம் உரிய நிறுவனங்கள் ஊடாக வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படாது அரசியல் காரணங்கள் அடிப்படையில் அவற்றை முன்னெடுக்க முனைவது மலையக மக்களுக்கான உரிமைகளை பந்தாடுகின்ற நடவடிக்கையாகவே அமையும்.  ஏனெனில் மண்சரிவு போன்ற ஆபத்துகள் தொடர்ந்து நிகழும் அபாயம் மலையகத்தில் நிலவுகின்றது.  அப்போதெல்லாம் வீடமைப்பு அதிகாரமற்ற இடர் முகாமைத்துவ அமைச்சில் வீடமைப்பு தேவைக்காக மலையக மக்கள் தங்கியிருக்க முடியாது.  தங்கியிருக்கவும் கூடாது என்பதனை உணர வேண்டும்.  இதுபோன்ற விடயங்களில் குறுகிய அரசியல் நோக்கம் கைவிடப்படல் வேண்டும்.  மலையகத்தில் மண்சரிவு குறித்த எச்சரிக்கை வாசகமான “கற்பாறை உருண்டு வரும் கவனம்“ எனும் வாசகம் நமக்கு பல்வேறு அர்த்தங்களை புகட்டி நிற்கின்றது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates