Headlines News :
முகப்பு » » கற்பாறை உருண்டுவரும் கவனம் 1 - மல்லியப்புசந்தி திலகர்

கற்பாறை உருண்டுவரும் கவனம் 1 - மல்லியப்புசந்தி திலகர்

மீரியபெத்தை மண்சரிவை முன்னிறுத்திய ஒருபதிவு

மீரியபெத்தை மண்சரிவு இடம்பெற்று சரியாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.  அந்த மக்களின் இழப்பு மலையகத்தின் அவலத்தை முழு உலகத்திற்கும் எடுத்துச் சென்றது.  அதேநேரம் மீரியபெத்தை மண்சரிவுதான் மலையக மக்களைத்தாக்கிய முதலாவது மண்சரிவும் அல்ல.

நான் பிறந்து வளர்ந்த நுவரெலியா மாவட்டத்தில் அமைந்த மடகொம்பரை தோட்டம் மற்றும் மடகும்பர சிங்கள கிராமம், துணுக்கேதெணிய, கொஸ்கபத்தன போன்ற பிரதேசங்கள் அடங்கிய தலவாக்கலை – பூண்டுலோயா 704ம் இலக்க விதியில் ஒரு வித்தியாசமான வரவேற்பு பெயர்ப்பலகையை பார்த்துப் பழகியவன்.  பூண்டுலோயாவில் இருந்து வரும் போது கயப்புகலை தோட்ட எல்லையிலும் அந்த வரவேற்பு பலகை அமைந்திருக்கும்.  அதில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகம் இதுதான் “கற்பாறை உருண்டு வரும் கவனம்“.  இன்று மடக்கொம்பரை பிரதேசத்தின் நிலைமையும் நிரந்தர நிலையும் இதுவாகிப்போயுள்ளது.

இன்றும் கூட லயத்துச்சுவரில் அரைவாசிக்கு மேல் நீர் நிரம்பியிருக்க அதிலிருந்து படுக்கையை ஓரடி பின்னால் தள்ளி விரித்துக்கொண்டு கண்ணுறங்கியும் காலை எழுந்தவுடன் அழகாக அமைந்துள்ள அந்த பின்பக்க பீதுருதலாகலை மலைச்சரிவை அச்சத்துடன் பார்த்து கண்விழிக்கும் அனுபவமும் உள்ள நான், மலையக சமூக, கலை, இலக்கிய, பண்பாட்டு, அரசியல் செயற்பாட்டாளனாக மீரியபெத்தை அவலத்தில் இருந்துதான் மீட்சிக்காக மேற்கொண்ட முயற்சிகளையும் முன்னிறுத்திப் பார்ப்பதே இந்த பதிவின் நோக்கமாகவுள்ளது.

மீரியபெத்தை அமைந்தள்ள அதே ஹல்துமுல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெரகல எனும் பிரதேசம் ஐம்பது வருடங்களுக்கு மேலாக அவ்வப்போது மண்சரிவு அபாயங்களைக் கண்டுவரும் பிரதேசமாகும்.  உதாரணமாக குறிப்பிட்டால் மலையகச் சூழலில் மாத்திரம் அல்லாது இலங்கை மட்டத்தில் பரவலாக அறியப்படும் மலையகக் கல்வியாளர்களில் ஒருவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகராக தற்போது பணியாற்றும் முன்னாள் அமைச்சு செயலாளரும், நிதி திட்டமிடல் திணைக்களத்தில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவருமான எம்.வாமதேவன் அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப்பட்டப் படிப்பு மாணவனாக இருந்த 1966 காலப்பகுதியில் தனது தந்தையையும், சகோதரிகளையும் ஒரேடியாக இழந்தவர்.  இன்றும் கூட பதுளை பக்கம் பயணிக்கும் போதெல்லாம் பதுளை – கொழும்பு வீதியில் பெரகல சந்திக்கு அண்மையாக இந்து ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் இருந்து சுமார் 50 மீற்றர் துாரத்தில் இறங்கி அந்த அவலம் நடந்த இடத்தில் தனது உறவுகளுக்காக அஞ்சல் செலுத்துவதை திரு.எம்.வாமதேவன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பதை நான் அறிவேன்.

கண்டி மாவட்டத்தில் புசல்லாவை பிரதேசத்தில் “இரட்டைப்பாதை“ எனும் இடத்தில் இடம்பெற்ற மண்சரிவு பல உயிர்கள் இதற்கு முன்னர் காவு கொடுக்கப்பட்டுள்ளது.  மாத்தளை பிரதேசத்தில் கந்தேநுவர பிரதேசத்தில் பிட்டகந்த தோட்டத்தில் 1982 ஆம் ஆண்டில் மண்சரிவு ஏற்பட்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன நேரடியாகவே அங்கு விஜயம் செய்ததாக அங்கு வாழும் மக்கள் கூறுகிறார்கள்.  அதே இடத்தில் 2013 டிசம்பர் மாதம் ஏற்பட்ட மண்சரிவு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி கடந்த இரண்டு வருடங்களாக மழை பெய்தால் பாடசாலைக்கும், தொழிற்சாலைக்கும் ஓடிவந்து தஞ்சம் அடைவதும் பின்னர் தமது லயங்களுக்கு திரும்புவதுமென 80 குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அதே மாத்தளை மாவட்டத்தில் ரோட்லா எனப்படுகின்ற தோட்டத்து நிலையையும் இவ்வாறானதே.  அக்கரப்பத்தனை – ஹட்டன் போடைஸ் வழியில் அமைந்துள்ள டொரிங்டன் எனும் தோட்டத்தில் எம்.எச் டிவிஷன் என சொல்லப்படுகின்ற “கட்டம்மான் தொர“ தோட்டம் இதோ இன்னொரு மீரியபெத்தை எனும் நிலைமையில் உள்ளது.  ஐந்து நிமிடம் அங்கு நின்று ஆய்வு செய்வதற்கே அச்சம் கொள்ளத்தக்கவகையிலான ஆபத்து நிறைந்த பிரதேசமாக இதனை நான் பார்க்கிறேன்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பதாக ரம்பொடை பிரதேசத்தில் கயிறுகட்டி எனும் தோட்டத்தில் பாரிய மண்சரிவு இடம்பெற்றது.

இங்கே குறிப்பிட்டவை சில உதாரணங்களே.  இது போல பல மண்சரிவு அபாய பிரதேசங்கள் மலையகப்பிரதேசங்களில் காணப்படுகின்றன.  பதுளை மாவட்டம் அதில் முதன்மை இடத்தில் உள்ளது.  அதே போல நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மொனராகலை மாவட்டங்கள் இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

இந்த சூழ்நிலையில் இயற்கை அச்ச உணர்வுடன் வாழும் நிலைமை மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  ஒரு காலத்தில் இன வன்முறையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வது என பயந்து வாழ்ந்த மக்கள் தற்போது இயற்கை அச்ச உணர்வுடன் வாழவேண்டியதன் அச்சத்தை மீரியபெத்தை அவலம் அதிகப்படுத்தியுள்ளது.  மீரியபெத்தை அவலம் பெரிதாகவும் அதேநேரம் சர்வதேச கவனத்தைப் பெற்றதாகவும் அமைந்துவிட்டது.  மலையக மக்களின் லயன் குடியிருப்பு முறை மாற்றப்படவேண்டும் என சதா காலமும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த போதும் மீரியபெத்தை அவலம்தான் தனி வீட்டுக் கோரிக்கையை அழுத்தத்துடன் முன்வைத்தது.  அந்த வகையில் அந்த மக்களின் இழப்பு ஒரு எழுச்சியையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது எனலாம்.

இந்த கட்டத்தில்தான் மீரியபெத்தை மக்களுக்கு இன்னும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டியுள்ளது.  மீரியபெத்தை மக்களுக்காக எழுபத்தைந்து வீடுகள் அமைக்கும் பணி பூனாகலை தோட்டத்தில் மக்கள்தெனிய எனும் இடத்தில் மந்த கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, மீரியபெத்தை அல்லாத மண்சரிவு ஆபத்து நிறைந்த பிரதேசங்கள் என அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் வீடுகள் கட்டப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் இங்கு நினைவு படுத்த வேண்டியுள்ளது.

மீரியபெத்தை சம்பவம் இடம்பெற்ற அதே காலப்பகுதியில் அதற்கு அண்மித்ததாக விஹாரகல தோட்டத்தில் அதிக ஆபத்து பிரதேசமாக அடையாளம் காணப்பட்டு வெளியேறப்பட்ட எட்டு குடும்பங்களுக்கான வீடுகள் தற்போது ஹப்புத்தளை – வெளிமடை வீதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  மீரியபெத்தையில் பாதிப்புற்ற மாணவர்களை அவல மனநிலையில் இருந்து மீட்கும் பயிற்சி செயலமர்வுகளை எனது வழிகாட்டலில் முன்னெடுத்தபோது ஹல்துமுல்லை தமிழ் மகா வித்தியாலயத்தில் அகதிகளாக தங்க வைக்கப்பட்டிருந்த விஹாரகல தோட்ட மக்களை அடையாளம் கண்டதோடு, இரண்டு மாதங்களின் பின்னர் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் இணைப்புச் செயலாளர் என்ற பதவி நிலையுடன் அவர்களுக்கு எட்டு வீடுகளை ஒதுக்கிக் கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

அதே போல பதுளை மாவட்டத்திலேயே எல்ல, நிவ்போர்க் எனும் தோட்டத்தில் ஏற்கனவே பலமுறை மண்சரிவுக்கு உள்ளான பிரதேசத்தில் அதற்கு பிறகு நிர்மாணிக்கப்பட்ட சில வீடுகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கையின் பேரில் அதிக ஆபத்து உள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தேசிய கட்டட ஆய்வு நிறுவன பரிந்துரைப்புடன் அங்கு 43 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கைளிக்க தயார் நிலையிலுள்ளன.  மேலும் கண்டி மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக மண்சரிவு ஆபத்திற்கு உட்பட்ட பிரதேசமான மாத்தளை பிரதேசத்தில் 20 வீடுகள்  அடையாளம் காணப்பட்டு கட்டி முடிக்கப்பட்டள்ளன.  மாத்தளை பிரதேசத்தில் பிட்டகந்த தோட்டத்தில் (மேலே குறிப்பிட்ட) 20 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  கேகாலை மாவட்டத்தில் ஆட்லா எனும் தோட்டத்தில் மிகவும் ஆபத்தான மண்சரிவு பிரதேசம் என அடையாளம் காணபட்டு 20 வீடுகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தோட்ட நிர்வாகம் 12 வீடுகளுக்கே காணி ஒதுக்கிய நிலையில் முறுகலுக்கு மத்தியில் 12 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.  இரத்தினபுரி பிரதேசத்தில் தொலஸ்வல தோட்டத்தில் 30 வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிறைவு கட்டத்தை அடைந்துள்ளன.  நுவரெலியா மாவட்டத்தில் மொக்கா தோட்டத்தில் 24 வீடுகள் கட்டப்பட்டு “நடேசய்யர் புரமாக”வும், சாமிமலை மின்னா தோட்டத்தில் 10 வீடுகள் அமைக்கப்பட்டு ”மீனாட்சியம்மை புரமாக”வும் லெட்புருக் தோட்டத்தில் 5 வீடுகள் அமைக்கப்பட்டு சுந்தரம் புரமாகவும், கொட்டகலை பிரதேசத்தில் யுலிபீல்ட் வெலிங்டன் தோட்டத்தில்  17 வீடுகள் அமைக்கப்பட்டு வெள்ளையன் புரமாகவும் மக்களிடம் கையளிக்கப்பட்டன.  அதேநேரம் டொரிங்டன் தோட்டத்தில் (கல்மதுரை) 23 வீடுகளும், தலாவக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் 34 வீடுகளும் நுவரெலியா ராகலை வீதியில் கொண்கோடியா தோட்டத்தில் 20 வீடுகளும் அமைக்கப்பட்டு நிறைவு கட்டத்தை அடைந்துள்ளன.  இவை அனைத்தும் மண்சரிவு ஆபத்து நிறைந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டத் திட்டங்கள் என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அதேநேரம் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக பொறுபேற்ற பழனி திகாம்பரம் அவர்கள்  மீரியபெத்தைக்கு அடிக்கல் நாட்டிய பிறகே ஏனைய பிரதேசங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும் என உறுதியாக இருந்து அந்த பணியை மேற்கொண்டிருந்தார்.  மட்டுமல்லாது மீரியபெத்தை மக்களுக்காக ஏற்கனவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் பூனாகலை மயானப்பிரதேசத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட பிரதேசம் மக்கள் விருப்புக்கு மாறானது என்பதை அறிந்துகொண்ட அமைச்சர் அவரின் இணைப்புச் செயலாளராக பணியாற்றிய என்னையும் ஆலோசகராகவுள்ள எம்.வாமதேவன் அவர்களையும் களத்திற்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தார்.  நாங்கள் களத்திற்கு சென்று மக்களைச் சந்தித்து அறிக்கை தயாரித்தது மட்டமல்லாது அன்றைய தினமே தேசிய கட்டட ஆய்வு நிறுவன அதிகாரிகள் இருவரையும், தோட்ட முகாமையாளர்கள் இருவரையும் மீரியபெத்தையில் பாதிப்புற்ற மக்களின் பிரதிநிதிகளாக ஐவரையும் அழைத்துக் கொண்டு அந்த பிரதேசத்தில் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் ஏறி இறங்கி, தேசிய கட்டட ஆய்வு நிறுவன ஆய்வாளர்களின் பரிந்துரைக்கு ஏற்ப தெரிவு செய்த இடமே இன்று வீடுகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ”மக்கள்தெனிய” பிரதேசமாகும். இந்த களத்தெரிவில் எம்முடன் ஊவா மாகாண சபை உறுப்பினர் உருத்திரதீபன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க உபதலைவரும் பதுளை மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ராஜமாணிக்கம் உள்ளிட்ட பிரதேச சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இடத்தில் பழனி திகாம்பரத்தின் முன்னெடுப்பில் தற்போது அமரராகிவிட்ட ராஜாங்க அமைச்சராகவிருந்த கே.வேலாயுதம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன், ஊவா மாகாண சபை முதலமைச்சராகவிருந்த ஹரிண் பெர்னாண்டோ, மாகாண சபை உறுப்பினராகவிருந்த வடிவேல் சுரேஷ் (பா.உ) ஆகியோர் உள்ளிட்ட பலரின்  பங்குபற்றலுடன் வீடமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.  இந்த நிகழ்விற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய 300 வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் மீரியபெத்தை வீடமைப்பு இன்னும் நிறைவு பெறாமல் இருப்பது அரசியல் மட்டத்தில் சர்ச்சைக்குரிய விடயமாகவும், சமூக மட்டத்தில் விமர்சனத்திற்குரியதாகவும் உள்ள நிலையில் அவற்றுக்கெல்லாம் அப்பால் மலையக மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்பதையும் மீரியபெத்தை வீடமைப்பு தாமதத்தின் பின்னணி என்ன என்பதையும் நாம் விரிவாக ஆராய வேண்டியுள்ளது.


கற்பாறை உருண்டுவரும் கவனம் 1 - மல்லியப்புசந்தி திலகர்

கற்பாறை உருண்டுவரும் கவனம் 2 - மல்லியப்புசந்தி திலகர்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates