Headlines News :
முகப்பு » , , , » பௌத்த எழுச்சியில் பஞ்ச மகா விவாதத்தின் வகிபாகம் (1915 கண்டி கலகம் – 9) - என்.சரவணன்

பௌத்த எழுச்சியில் பஞ்ச மகா விவாதத்தின் வகிபாகம் (1915 கண்டி கலகம் – 9) - என்.சரவணன்


பௌத்த அச்சகங்கள் மூலம் கிறிஸ்தவ மிஷனரிமாரின் பௌத்த எதிர்ப்பு பிரச்சாரத்தை முறியடிக்கும் முயற்சிகள் ஆரம்பமானது எப்படி என்பது குறித்து சென்ற வாரம் பார்த்தோம். கிறிஸ்தவ மிஷனரிகளிடம் மாத்திரம் மட்டுபடுத்தப்பட்டிருந்த அச்சக வசதி பௌத்த சக்திகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. விமல் அபயசுந்தரவின்  நூலின்படி 1865 ஆம் ஆண்டளவில் ஒருலட்சம் பைபிள் (புதிய ஏற்பாடு) பிரதிகள் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. வெஸ்லியன் அச்சகம் (Wesleyan Press) தொடங்கப்பட்டு முதல் 50 ஆண்டுகளுக்குள் மாத்திரம் நூல்கள், சஞ்சிகைகள், மற்றும் சிறு பிரசுரங்கள் என ஐந்து லட்சம் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பௌத்தர்கள் மத்தியில் அதிக சலசலப்புக்கும், அதிருப்திக்கும் உள்ளாகியது டானியல் ஜோன் கொகெர்லி (Daniel John Gogerly) பாதிரியார் “கிறிஸ்தியானி பிரக்ஞப்திய” (கிறிஸ்தவ பிரகடனம்) எனும் சிங்களத்தில் வெளியிடப்பட்ட நூல். இந்த நூல் 1848இல் முதலில் வெளியிடப்பட்டு பின்னர் 1853, 1857 காலங்களில் மீண்டும் மீண்டும் பதிப்பிக்கப்பட்டதுடன் 1862 இல் கொகெர்லி பாதிரியார் அதனை தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்த நூலில் பௌத்தத்தை தாக்குவதற்காக பாலி மொழியில் இருந்து கையாண்டிருக்கிற பல இடங்கள் புனைவும், திரிபும் உடையவை என்று குணானந்த தேரர் ஆத்திரமுற்றார்.
டானியல் ஜோன் கொகெர்லி
கொகெர்லி இலங்கைக்கு 1814 இல் வரும்போது ஒரு பாதிரியாராக வரவில்லை. இலங்கையில் அவர் பாதிரியாராக ஆகி பின்னர் சிங்களம், பாலி மொழியை கற்றுத் தேர்ந்து வெஸ்லியன் மிஷனரியின் தலைவரும் ஆனார். இந்த நூலுக்கு பதிலளிக்கும் வகையில் மிகெட்டுவத்தே குணானந்த தேரர் “துர்லப்தி வினோதினி” எனும் பத்திரிகையை ஆரம்பித்தார். தமக்கான அச்சகம் இல்லாத காலத்தில் அவர் அதனை கத்தோலிக்க அச்சகத்திலேயே அச்சிட்டார். அந்த பத்திரிகையில் கொகெர்லி பாதிரியாரின் திரிபுகள் அம்பலப்படுத்தப்பட்டது. “கிறிஸ்தவ பிரகடனத்தை” எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்காகவே “கிறிஸ்தவ வாத முறியடிப்பு” (“கிறிஸ்தியானி வாத மர்தன”) எனும் பத்திரிகையும் குணானந்த தேரரால் உருவாக்கப்பட்டு கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதன் பின்னர் “லக்மினி பஹான” எனும் சிங்கள அச்சகத்தை 1862இல் ஆரம்பித்த பின்னர் 3 ஆண்டுகளுக்குள் 60 நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.

பிரசுரங்கள் மூலம் வெளிக்கிளம்பிய பௌத்த-கத்தோலிக்க விவாதங்கள் மேலும் இறுகத் தொடங்கின. 1847 பரமதம்மா சைத்திய, 1873 வித்யோதய, 1875வித்யாலங்கார என்று தோன்றிய பௌத்த மதத் தளங்களில் கிறிஸ்தவ விரோத நடவடிக்கைகளுக்கு பௌத்த மதத்தலைவர்கள் தலைமைகொடுக்கத் தொடங்கினார்கள்.

தம்மோடு நேருக்கு நேர் வாதம் புரியவருமாறு கொகெர்லி பாதிரியார் உட்பட வெஸ்லியன் பாதிரியார்கள் பகிரங்கமாக சவாலிட்டார்கள். ஆரம்பத்தில் அவர்கள் சாதாரண சிங்கள பூசாரிகளுக்கே சவாலிட்டார்கள். இந்த சவாலை ஏற்று எவரும் வராத நிலையில் கிறிஸ்தவ பாதிரிகளின் கையோங்கியது. பௌத்த மதத்தலைவர்கள் இந்த வாதத்துக்குள் இழுக்கப்பட்டது இப்படித்தான். கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் பதிலளிக்கும் நிலையிலிருந்த பௌத்த தரப்பு பின்னர் கேள்விகளையும் கேட்டு அசத்தி கிறிஸ்தவ சக்திகளை நிலைகுலையச் செய்தார்கள். இறுதியில் இந்த விவாதத்தில் பௌத்த தரப்பே வெற்றியீட்டியது.

பிற்காலத்தில் (1908) கொகெர்லி பாதிரியார்  கிறிஸ்தவ தரப்பு வாதத்தை மீண்டும் பலப்படுத்துவதற்காக “Ceylon Buddhism” (சிலோன் பௌத்தம்) எனும் நூலை வெளியிட்டார். இது இரண்டு தொகுப்புகளாக வெளிவந்தது.

பஞ்ச மகா விவாதம்
ஐந்து வெவ்வேறு ஐந்து காலகட்டங்களில் வெவ்வேறு சர்ச்சைகளின் காரணமாக இந்த விவாதங்கள் உருவாகி இறுதியில் பாணந்துறை விவாதத்தில் முடிந்தது. முதல் மூன்று விவாதங்களும் எழுத்திலேயே பரிமாறப்பட்டன. யதார்த்தமும் உண்மையுமான மதம் பௌத்தமா கிறிஸ்தவமா என்பதே அடிப்படை வாதப் பொருளாக இருந்தது. எழுத்தில் பரிமாறப்பட்ட இவ்விவாதங்கள் மக்கள் மத்தியில் இருந்த ஆவலையும் எதிர்பார்ப்பையும் பாதித்தன.


தினம்
இடம்
1
08.02.1865
பத்தேகம விவாதம்
2
(08-22).08.1865
வறாகொட விவாதம்
3
01.02.1886
உதன்விட்ட
4
(09-10).09.1871
கம்பளை விவாதம்
5
(26,28).08.1873
பாணந்துறை விவாதம்
இந்த வாதங்கள் உள்ளடக்கம் மற்றும் அந்த வாதங்களின் தோற்றுவாய் என்பன குறித்து இந்தத் தொடரில் விரிக்கத் தேவையில்லை. அட்டவணையாக சுருக்க விபரம் தந்திருக்கிறேன்.

இந்த ஐந்து விவாதங்களிலும் மிகெட்டுவத்தே குணானந்த தேரர் பௌத்த தரப்பின் பிரதான வாதியாக கலந்துகொண்டு பௌத்தர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றார். இந்த விவாதங்களில் பௌத்தர்களின் மீட்பராக அவர் காட்சியளித்தார். அதேவேளை முதல் விவாதத்தில் கலந்துகொண்ட ஜார்ஜ் பார்சன்ஸ் இப்படி கூறுகிறார்.

 “கடுமையான வாதத்துக்கு தயாராகும்படி எமது மக்கள் எம்மிடம் கூறினர். இலங்கையில் இதற்கு முன்னர் இத்தகையதொரு எதிரிகள் கிறிஸ்தவத்துக்கு எதிராக தயாரானது இல்லை. பெப்.8 அன்று கூடிய 50 பிக்குமாரும் அவர்களின் இரண்டாயிரம் ஆதரவாளர்களும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்குடன் இருக்கவில்லை மாறாக கிறிஸ்தவ மதத்தை வீழ்த்தும் நோக்குடையதாக இருந்தது. எனவே சரியான பாதையை காட்டும்படிக்கு மன்றாடுகிறோம்”

குணானந்த  தேரர்
குணானந்த தேரர் 09.02.1823 இல் சலாகம எனும் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர். அவரின் இயற்பெயர் லத்து மிகேல் மென்டிஸ். 1840இல் பிக்குவாக ஆக்கி அவருக்கு மிகெட்டுவத்தே குணானந்த எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 1883 இல் நிகழ்ந்த கொட்டஞ்சேனைக் கலவரத்தில் இவருக்கு பெரும் பாத்திரம் உண்டு. அது போல பௌத்த மறுமலர்ச்சியின் மூலகர்த்தாக்களில் ஒருவராகவும், பௌத்த மகான்களில் ஒருவராகவும் சிங்கள பௌத்தர்களால் போற்றப்படுகிறார். பௌத்தத்தோடு மோதுவதில் பிரதான பங்கு வகித்தவர்கள் பாலி மொழியையும் பௌத்த அற நூல்களையும் கற்றுக்கொண்டதைப்போல கிறிஸ்தவத்துடன் மோதுவதற்காக குணானந்த தேரரும் ஆங்கிலத்தையும், பைபிளை முழுமையாக கற்றுத்தேர்ந்தவர். கொழும்புக்கு அவர் பெயர்ந்தபோது கொழும்பில் அப்போது 3 விகாரைகள் மாத்திரமே இருந்தன. அந்த விகாரைகள் பிற்காலத்தில் பல்கிப் பெருகுவதற்கு அவர் ஒரு முக்கியகர்த்தா. கொழும்பில் அரச மரங்களை வெட்டுவதற்கு அன்றைய ஆங்கிலேய அரசு எடுத்த முடிவை எதிர்த்து ஒரு இயக்கத்தையே நடத்தி பௌத்தர்களை ஒன்றுதிரட்டி விழிப்புணர்வூட்டியவர் அவர்.

பாணந்துறை விவாதம்
பாணந்துறையிலுள்ள மெதடிஸ்ட் தேவாலயத்துக்கும் ரன்கொத் விகாரைக்கும் 300 மீட்டர் மட்டுமே இடைவெளி. மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஆத்மா பற்றிய பௌத்த மத விளக்கத்தை விமர்சித்து பிரசங்கம் செய்ததால் ரன்கொத் விகாரையை சேர்ந்த பிக்குமார் அதிருப்தியடைந்துள்ளனர். பிக்குமாரும் தமது உபதேசத்தின்போது அதனை விமர்சிக்கவே மீண்டும் தேவாலய பாதிரிமார் அதனை விமர்சித்திருக்கிறார்கள். இந்த விகாரையோடு நெருக்கமாக இருந்த மிகெட்டுவத்தே குணானந்த தேரருக்கு எடுத்துரைக்கவே; அதன் விளைவு இறுதியில் பாணந்துறை விவாதத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது.
பாணந்துறை விவாதம் நிகழ்ந்த ரன்கொத் விகாரை
தொன் டேவிட்டின் (பிற்காலத்தில் அநகாரிக்க தர்மபால) நாட்குறிப்பின்படி “இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் இந்த விவாதத்தைக் காண மாட்டு வண்டில்களிலும், நடையாகவும் வந்து சேர்ந்திருந்தனர்.” என்கிறார்.

குணானந்த தேரரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து அவர் ஒரு மாட்டுவண்டி ஒட்டியைப்போல மாறுவேடத்துடன் ரன்கொத் விகாரைக்கு வந்து சேர்ந்தார்.

இந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்பு தோற்கடிக்கப்பட்டதாக பௌத்த தரப்பு பதிவு செய்துகொண்டது. வாதத்தில் பங்குபற்றிய கிறிஸ்தவ தரப்பு எதிர்த்தரப்பின் வலிமையை குறைத்தே மதிப்பிட்டிருந்தது ஒரு காரணம். பஞ்ச மகா விவாதங்களில் பாணந்துறை விவாதம் இன்று பாடசாலை நூல்களிலும் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. பரீட்சை கேள்விகளில் இணைக்கப்பட்டுள்ளது.

அதுபோல பௌத்த பிக்கு ஆவதற்கான “உபசம்பதா” எனப்படும் பௌத்த தீட்சையை பெறவிடாது தடுக்கப்பட்ட கொவிகம அல்லாதோர் தமக்கான நிக்காயவை அமைத்து கரையோர பிரதேசங்களில் பல விகாரைகளை  உருவாக்கி அப்பகுதி சிங்கள பௌத்தர்களுக்கு வழிபாட்டுக்கான வழிகளை ஏற்படுத்தி பலமடைந்தனர். அந்த கரையோர பிரதேசங்களில் சிங்கள பௌத்தர்களுக்கு சவாலாக இருந்த கிறிஸ்தவ மிஷனரி சக்திகளை எதிர்கொண்டதும் அவர்கள் தான். கொவிகம அல்லாத கராவ, சலாகம, துராவ சாதியை சேர்ந்தவர்கள் தம்மை கொவிகம சாதியை சேர்ந்தவர்களை விட உக்கிரமான, உறுதியான பௌத்தர்களாக நிறுவ தொடர்ந்து போராடினர். பாணந்துறை விவாதம் அந்த வகையில் அவர்களுக்கு கிடைத்த முக்கிய வெற்றி. பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்துக்கு தூண்டுகோலாக இருந்ததும் இந்த விவாதமே. பௌத்த மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக பாணந்துறையை குறிப்பிடுவது வழக்கம். அதுபோல கொவிகம அல்லாதோரும் பிரவேசிக்கக் கூடிய வகையில் முதல் பௌத்த விகாரை ரன்கொத் என்கிற பெயரில் உருவாக்கப்பட்டதும் இங்கு தான். பாணந்துறை என்பது கராவ சாதியினரின் கோட்டை என்பார்கள். பௌத்த மறுமலர்ச்சிக்கு தேவையான நிதிமூலம் அங்கிருந்து தான் வந்தது என்கிறார் விக்டர் ஐவன்.
டேவிட் டி சில்வா
இந்த விவாதத்தின் போது கத்தோலிக்க தரப்பில் தலைமை ஏற்றிருந்த பாதிரியார் டேவிட் டி சில்வா கையாண்ட மொழிப்பிரயோகம் மக்களுக்கு அந்நியமானது. ஆனால் குணானந்த தேரர் மக்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் அந்த விவாதத்தை நகர்த்தியதுடன் அதுவரை அவர் இத்தகைய விவாதங்களில் கண்ட தேர்ச்சியை முழுவதும் பயன்படுத்தினார். பாதிரியாரின் தர்க்கமற்ற வாதங்கள் நகைப்பை ஏற்படுத்தியதுடன். குணானந்த தேரரின் கருத்துக்கள் ஆழமாக போய் சேர்ந்ததாக அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடரில் குறிப்பிடுகிறார். அவரின் இந்த தொடர் பின்னர் பிரசித்திபெற்ற நூலாக அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate - buddhismand christianity – face to face). பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.

 (தொடரும்)


இந்த வார கட்டுரைக்கு உசாத்துணையாக பயன்பட்டவை
  1. The Great Debate: Buddhism and Christianity Face to Face - J.M. Peebles (1878)
  2. Ceylon Buddhism: Being the Collected Writings of Daniel John Gogerly – (1908)
  3. පන්සලේ විප්ලවය Victor ivan – (Ravaya publication – 2006)
  4. මොහොට්ටිවත්තේ ශ්‍රී ගුණානන්ද අපදානය -  විමල් අභයසුන්දර (Godage publication, 1994)
  5. උඩරට රාජධානිය, ලෝනා ශ්‍රීමතී දේවරාජා, (Colombo Lake house, 1977)
  6. Caste Conflict and Elite Formation. The Rise of a Karava Elite in Sri Lanka, 1500-1931 - Michael Roberts, (Cambridge University Press, 2007)
  7. සිංහල සමාජ සංවිධානය: මහනුවර යුගය - පීරිස්, රැල්ෆ්
நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates