டி.ராமானுஜம் |
மலையக மக்கள் எங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் மலையக புதிய கிராமங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு எமது தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் இன்று மாத்தளை மாவட்டத்திலுள்ள பிட்டகந்த தோட்ட மக்களுக்கு இந்த வீடமைப்புத் திட்டத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். புல வருடங்களாக மண்சரிவில் பாதிப்புற்று இன்னல் உற்றிருந்த இந்த மக்களுக்கு இந்த வீடமைப்புத்திட்டம் பெரும் வரப்பிரசாதமாகும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்.பி தெரிவித்துள்ளார்.
மண்சரிவு பாதிப்புக்குள்ளாகி பல வருடங்களாக நிர்க்கதியாகியிருந்த மாத்தளை மாவட்ட பிட்டகந்த தோட்டத் தொழிலாளர்களின் 20 குடும்பங்களுக்கு புதிய வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளியன்று (13ஃ11ஃ2015) அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம.திலகராஜ் எம்பி கருத்து தெரிவிக்கையில்,
நான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளபோதும் கூட மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறும் இந்த வீட்டுதிட்ட திறப்புவிழாவில் பங்கேற்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. காரணம் இந்த வீட்டுத்திட்டத்திற்கான ஆரம்ப பணிகளின்போது அப்போதைய பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நான் இணைப்புச் செயலாளராக பணியாற்றினேன். அன்று அடிக்கல் நாட்டும் விழாவுக்கு அமைச்சர் திகாம்பரம் வருகை தர முடியாதபோது நானே இந்த வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினேன. இன்று 200 நாட்கள் நிறைவில் இங்கே இருபது வீடுகள் அமைக்கப்பட்டு திறப்புவிழாவில் அமைச்சருடன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இணைந்துவந்து பங்கேற்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்வாகிறது. அந்த வாய்ப்பினை வழங்கியமைக்காக அமைச்சருக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
ஆறுமாதங்களுக்கு முன்பு நான் இந்த பிரதேசத்துக்கு ஆய்வுக்காக வந்தபோது இங்குள்ள மக்கள் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. 1982ஆம் ஆண்டு முதல் இந்த மண்சரிவு அபாயம் இங்கே நிகழ்ந்து வந்துள்ளது. அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்களும் இங்கே வந்து அந்த அவலத்தை பார்வையிட்டு சென்றாராம். அதற்கு பின்னர் நம்மவர் பலர் அமைச்சுப்பதவி வகித்தாலும் வீடமைப்பு திட்டம் ஏதும் இங்கு நடைபெறவில்லை. இதனால் வெறுப்புற்றிருந்த மக்கள் யார் மீதும் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தனர். நான் இந்த பிட்டகந்த நிலவரம் பற்றிய அறிக்கைகைய அமைச்சர் திகாம்பரம் அவர்களுக்கு சமர்ப்பித்து இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான தேவையை வலியுறுத்தினேன். அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கட்டயாமாக இங்கு வீடுகளை ஒதுக்குமாறு உத்தரவிட்டார். இன்னும் 60 வீடுகளுக்கான தேவை உள்ள நிலையில் 20 வீடுகள் இன்று அமைச்சரின் கரங்களினால் உங்களுக்கு கிடைக்கப்பபெற்றுள்ளது.எஞ்சிய வீடுகளுக்கான நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மாத்தளை மாவட்ட வரலாற்றில் இடம்பிடித்த விடயமாகிறது. மக்கள் தமது கனவு நனவானது கண்டு மகிழ்ச்சியுடன் இன்று புதிய வீடுகளில் குடியேறுகிறார்கள்.
அதேநேரம் இந்த பதிய வீடமைப்பு திட்டத்திற்கு ‘ராமானுஜபுரம்’ என பெயரிட்டுள்ளோம். அமரர் டி.ராமானுஜம் 1947 ஆம் ஆண்டு சுதந்திர நாடாளுமன்றத்தில் கண்டி மாவட்டத்தில் இருந்து பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டவர்.; அவரது புதல்வர் கலாநிதி. பிரதாப் ராமானுஜம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றினார். இப்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரேரணையின்பேரில் பொதுச் சேவை ஆணைக்குழவில் அங்கத்தினராகவுள்ளார். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு ராமானுஜபுரம் என பெயரிட்டதன் மூலம் மலையக மக்களுக்கு சேவையாற்றிய தந்தை, மகன் ஆகிய இரண்டு ஆளுமைகளும் இங்கே கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த கிராம மக்கள் தங்களது முகவரிகளில் ராமானுஜபுரம், பிட்டகந்த, மாத்தளை எனக் குறிப்பிட்டு அமரர் ராமானஜம் அவர்களின் பெயரை நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். வரலாற்றில் மலையக மக்களுக்காக உழைத்த அனைத்து ஆளுமைகளின் பெயரும் நினைவுகூரப்பட வேண்டும் எனும் அமைச்சர் திகாம்பரத்தின் ஆசையை நிறைவேற்றுவதுடன் ‘தோட்டங்கள்’ என்பதை மாற்றி நாங்களும் கிராமத்தவர்கர்களெனும் அங்கீகாரத்துடன் மலையக மக்கள்வாழ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிக்ழவில் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறப்பினர்களான விவாசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, ரஞ்சித் அலவிகார மற்றும் திருமதி ரோஹினி கவிரத்ன உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...