மலையக புதிய கிராமங்கள் மலையகத்தின் பதிய கலாசாரம். லயன் வீட்டில் இருந்து விடுதலை, தனிவீடுகளை கோருவோம், புதிய கிராமங்களை அமைப்போம் எனும் வேலைத்திட்டத்தோடு அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துவரும் திட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த மக்கள் பணியாளர்களும் நினைவு கூரப்படுவது மற்றுமொரு பதிய கலாசாரமாகும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு ஆபத்தினால் பாதிப்புற்ற ஹப்புத்தளை விஹாரகல தோட்ட மக்களில் ஒரு பகுதியினருக்கு தனிவீட்டுத் தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23.11.2015) அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய எம்.திலகர் எம்.பி மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வீட்டுத்திட்டத்தை ஆரம்பிக்கும் பணிகளில் எனக்கு பங்களிப்பு செய்ய கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. மீரியபெத்தையில் பாதிப்புற்ற மாணவர்களுக்கு ஹல்துமுல்ல பாடசாலையில் நடைபெற்ற ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தபோது விஹாரகல மக்கள் அகதிகளாக அங்கு தங்கியிருந்த அவலத்தை காணக் கிடைத்தது. அதன்போது ஒரு மாணவி தன்னுடைய வீட்டுக்கோரிக்கையை முன்வைத்தார். மீரியபெத்தை காணி தெரிவு வேலைகளுக்காக வந்திருந்தபோது அந்த மாணவியின் தந்தை என்னை அணுகி மனுவொன்றை கையளித்தார். அதனை அமைச்சர் திகாம்பரத்திடம் கொண்டு சேர்த்தேன். மீரியபெத்தைக்கு அடிக்கல் நாட்டும் அதே தினத்தில் இங்கேயும் அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இன்று இந்த மக்களுக்கு வீடுகள் கையளிக்கப்படுகின்றன. அதேநேரம் மீரியபெத்தையில் வீடமைப்பு வேலைகள் இன்னும் தாமதமாக நடைபெறுகின்றது. அங்கு நிலவிய அரசியல் தலையீடுகளே அதற்கு காரணம். அந்த திட்டம் எமது அமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. அங்கே நகர அபிவிருத்தி அதிகார சபையே கட்டுமாணப்பொறுப்பில் உள்ளது. அதேநேரம் அங்கே கட்டப்பட்டுள்ள 15 வீடுகளும் அமைச்சர் திகாம்பரம் அதனை பொறுப்பேற்று நடாத்திய குறுகிய காலத்திலேயே கட்டப்பட்டது என்பதனை இங்கே நினைவுபடுத்த வேண்டும். இப்போது இடர் முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து அந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்றும் கூட அதற்கான கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. எதிரவரும் ஜனவரிக்குள் அங்கு வீடுகள் அமைக்க இடர் முகாமைத்துவ அமைச்சர் உறுதி வழங்கியுள்ளார்.
இன்று மலையகப் பகுதிகளிலே புதிய கிராம உருவாக்கம் ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கே மேளதாளம் முழங்கி திருவிழா கோலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது நாம் லயன் வாழ்க்கை முறையில் இருந்து தனிவீட்டுத் திட்டங்களைக் கொண்ட 'புதிய கிராமங்கள்' நோக்கி நகர்கிறோம் எனும் புதிய கலாசாரம் நோக்கி வளர்வதனை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு புதிய கிராமங்களை உருவாக்கும் போது கட்சி பேதம் பாராது மக்கள் பணி செய்த மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் சமூக செயற்பாட்டாளர்களின் பெயர்கள் நினைவு கூரப்படுகிறது. மாற்று அரசியல் கட்சி ஆனாலும் மக்கள் பணியாளரை மறவோம் எனும் இந்த அரசியல் கலாசாரத்தை தோற்றுவித்த பெருமை அமைச்சர் திகாம்பரம் அவர்களையே சாரும்.
இன்று சி.வே.ராமையாபுரம் எனும் பெயரிலே இந்த வீட்டுத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளது. சிவேரா எனும் சுருக்கப்பெயரில் அழைக்கப்பட்ட அன்னார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தொழிற்சங்க பணி செய்தவர். பின்னாளில் கொள்கை முரண்பாட்டினால் விலகி சுயாதீன ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் பணி செய்து கொண்டிருந்தார். பத்திரிகைகளிலே காரசாரமான கட்டுரைகளை எழுதி வந்தார். மலையக அரசியல் களத்தில் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தார். இதனால் இவர் வத்தளையில் வாழ்ந்த வீட்டுக்குள் புகுந்த காடையர்களால் தாக்குதலுக்கு உள்ளானார். அதோடு மரணப்படுக்கையில் வீழ்ந்து மரணமானார். அவர் இந்த ஹப்புத்தளை பிரதேசத்தைச் சே;ரந்தவர் என்ற வகையில் அவரது பெயரை இந்த வீட்டுத்திட்டத்திற்கு பிரேரித்த போது எவ்வித தயக்கமுமின்றி அமைச்சர் திகாம்பரம் அதற்கு ஒப்புதலளித்து இன்று அன்னாரது பெயர் இங்கே நிலைத்திருக்கச் செய்யப்படுகின்றது. இதேபோல பதுளை மாவட்டத்தில் பல பதிய கிராமங்கள் அமைச்சர் தலைமையிலே உருவாக்கப்படும். அதன்போது பதுளை மாவட்ட மக்களுக்கு பணியாற்றிய பல மக்கள் பணியாளர்கள் நினைவு கூரப்படுவார்கள். இந்த வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்த மறைந்த அமைச்சர் வேலாயுதம் இன்று நம்மிடையே இல்லை. எதிர்வரும் வேலைத்திட்டங்களின்போது அமையப்பெறும் புதிய கிராமம் ஒன்றுக்கு அன்னாரது பெயரும் சூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் எஸ். ராஜமாணிக்கம் உள்ளிட்ட பல அரசியல் சமூக பிரதிநிதிகள் இந்த விழாவிலே கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...