மலையகத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. தினமும் கடும் மழை பெய்கிறது. அதுவும் மாலை வேளைகளில் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை காணப்படுகிறது. அத்துடன் பாரிய முகில் கூட்டங்கள் காணப்படுகின்றன. குளிரும் அதிகரித்துள்ளது. கடுமையான குளிர் காரணமாக தோட்டத் தொழிலாளர்கள் பெரும் இன்னலகளை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் பல்வேறு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் தாழ்நிலப் பிரதேசங்களே பெரும்பாலும் பாதிப்படைகின்றன. அண்மைக்காலமாக மலையக பிரதேசங்களிலும் மண்சரிவுகள், வெள்ளப்பெருக்குப் பாதிப்புகள் என்பன அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் ஏனையோருக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மலையகத்தவர்களுக்கும் கிடைப்பதில்லை.
நிவாரணம்
அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தோட்ட நிர்வாகங்கள், நன்கொடையாளர்கள், வணக்கஸ்தலங்கள் போன்றவையே இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றன. அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையாகக் கிடைப்பதில்லை. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான தோட்ட மக்களுக்கு இன்னமும் முறையான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் ஏனைய மக்களுக்கு வழங்கப்படுவதைப்போன்று பாதிப்படைந்த தோட்ட மக்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகும்.
குளிரினால் பாதிப்பு
பொதுவாக நுவரெலியா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கடும் குளிர் நிலவுவது வழக்கமாகும். இவ்வாறான நிலையில் தற்போது தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக மேலும் குளிர் அதிகரித்துள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஒருநாள் சம்பளத்திற்கு தேவையான கொழுந்தையும் பறிக்கமுடியாத நிலையும் ஏற்படுகிறது. தொடர்ந்து தொழில் செய்யவும் முடியவில்லை குழந்தை பிரசவிக்கவிருக்கும் தாய்மார்களின் நிலையோ மேலும் பரிதாபகரமானது. பாடசாலை மாணவர்களும் பாடசாலை செல்வதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர்கள் கூறுகின்றனர்.
உற்பத்தி பாதிப்பு
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேயிலை உற்பத்தியில் மாத்திரம் அல்லாது விவசாய துறையிலும் பாதிப்பேற்பட்டுள்ளது. தேயிலையைப் பொறுத்தவரையில் நல்ல விளைச்சல் இருந்தும் அவற்றை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக தொழிலாளர்களின் வருகையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் உரம், இரசாயன மருந்து பாவனை போன்றவற்றையும் பிரயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
மழை காரணமாக அதிகளவிலான வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஹட்டன், நுவரெலிய பிரதேசங்களில் முகில் கூட்டங்கள் அதிகரித்து காணப்படுவதால்; வாகனங்கள் செல்ல முடியாத நிலை அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாகவே அதிகளவிலான விபத்தக்கள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்தவேண்டுமென்று போக்குவரத்துப் பொலிஸார் கூறுகின்றனர்.
நீரத்தேக்கங்களின் நீர் திறப்பு
தொடரும் மழையில் நீர்த்தேக்கங்கள் அனைத்திலும் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. கொத்மலை, மவுசாகலை, விமலசுரேந்திர, காசல்ரீ போன்ற நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீர் மட்டம் மேலும் உயருமானால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளை திறக்கவேண்டிய நிலை ஏற்படுமென்று நீர்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...