Headlines News :
முகப்பு » , , , » "ஆரிய – சிங்கள - பௌத்த ஐதீகம்" (1915 கண்டி கலகம் – 5) - என்.சரவணன்

"ஆரிய – சிங்கள - பௌத்த ஐதீகம்" (1915 கண்டி கலகம் – 5) - என்.சரவணன்


புதிய வர்க்கங்களின் தோற்றமும் வர்த்தகத்துறையில் எழுந்த போட்டா போட்டியும் எவ்வாறு ஒரு கெடுபிடிப் புகைச்சலை கிளப்பின, முஸ்லிம்களின் வர்த்தக வளர்ச்சியை எழுச்சியுற்ற சிங்கள பௌத்த பூர்ஷ்வா வர்க்கம் எப்படி வெறுத்தன என்பதை சென்ற வாரம் சாராம்சமாகக் கண்டோம்.

புதிதாக எழுச்சி கண்ட மது ஒழிப்பு இயக்கங்களும் பௌத்த சக்திகளால் தலைமை தாங்கப்பட்டது. அதற்கு தலைமை தாங்கிய சக்திகளின் வர்க்கத்தன்மை காரணமாக தேசியவாதம் வெறும் அரும்பு நிலையிலேயே இருந்தது. ஒரு சக்தியாக உருவெடுத்தவர்கள் அவர்களின் வர்க்கத் தன்மை காரணமாக  ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வலுவான சக்தியாக மாறவுமில்லை, மாற விரும்பவுமில்லை. இவ்வாறு மது ஒழிப்பு போன்ற பணிகளில் குறுக்கிக்கொண்டவர்கள் வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளோடு மட்டுப்படுத்திக்கொண்டு வர்க்க முன்னுரிமைகளுக்கே போராடினர். 1912, 1923 களில் நடைபெற்ற அரசியல் சீர்திருத்தங்களோடு திருப்தியடைந்தனர்.

இந்த பின்புலத்தின் காரணமாக இலங்கை தேசியம் என்கிற பிரக்ஞையையோ எண்ணக்கருவையோ மக்கள் மத்தியில் உருவாக்க இயலாமல் போயிற்று எனலாம். ஆனால் அதேவேளை மரபு ரீதியிலான சித்தாந்தங்கள், மூடநம்பிக்கைகள் என்பவற்றில் ஒன்றித்துப்போயினர்.

இந்த புதிய வர்க்கம் இனம், சாதி சமயம் போன்ற பாரம்பரிய மற்றும் பழமைவாத கருத்துக்களுக்கு ஊடாக  மீளெழுச்சி கொள்ள துணிந்தது. சாதிவாதம், இனவாதம், வரலாற்றுத் திரிபு, தோற்றமூலம் பற்றிய ஐதீகங்களை மீட்கும் முயற்சி, தமது கடந்த பொற்காலம் பற்றிய வீரவழிபாடு, பாரம்பரியப் பெருமிதம் போன்றவற்றை தூக்கி நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மகாவம்ச ஐதீகம் புத்துயிர்ப்பு
இந்த தூய்மைவாத கருத்தாக்கம் அவர்கள் தவிர்ந்த அனைவரையும் அந்நியர்களாக ஆக்கிற்று, குறிப்பாக இந்த காலப்பகுதியில் “ஆரிய இனம்”, “சிஹதீப”, “தம்மதீப” போன்ற ஐதீகங்களை பரப்பும் பணிகளும் நிகழ்ந்தன.

ஆரிய இனம் எனும்போது சிங்களவர்கள் ஆரிய மரபைக்கொண்டவர்கள் என்று ஆரியப் பெருமிதத்தை உறுதிசெய்யும் ஐதீகத்துக்குள் விழுந்தனர். இவ்வாறான ஐதீகங்களுக்கு விஞ்ஞானபூர்வமான பின்புலம் பொருட்படுத்தப்படவில்லை. சிங்கள பௌத்தர்கள் போற்றும் மகாவம்ச வரலாற்றின் படி விஜயன் வங்காளத்திலிருந்து வந்து சிங்கள ஆரிய இனத்தை நிறுவினான் என்கிறது. எனவே சிங்களவர்கள் ஆரியர்கள் என்று நிறுவுகின்றனர். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் வங்காளிகள் கூட தம்மை ஆரியர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதில்லை என்பது தான்.
விஜயனும் அவனது “ஆரியத்” தோழர்களும் வங்காளத்திள் சிங்கபுர எனுமிடத்திலிருந்து வந்து சிங்கள ஆரிய இனத்தை நிறுவியதால் இது “சிஹதீப” (சிங்கதீப)  என்றனர்.

அதுபோல புத்தர் மரணித்த அன்று விஜயன் இலங்கை வந்திறங்கியதாகவும், புத்தர் மரணிக்கும் தருவாயில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பௌத்த தர்மம் தழைத்தோங்கும் நாடான இலங்கைக்கு வரலாற்றுப் பணி மேற்கொள்வதற்காக சென்றுள்ள விஜயனைப் பாதுகாக்குமாறு புத்தர் சக்கவை கேட்டுக்கொண்டதாக மகாவம்சம் கூறுகிறது. எனவே பௌத்த மதத்தைப் பாதுகாக்க சிங்கள இனம் பெற்றுள்ள தெய்வீக ஆணை என்று கூறி இவை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று பிணைத்தன. ஆக ஆரிய-சிங்கள-பௌத்த சித்தாந்தத்தை இந்த பின்னணியிலேயே கட்டியெழுப்பினர்.

அதன்படி சிங்களவர்களே இலங்கையின் நாகரீகம் அடைந்த முதலாவது குடிகள் மற்றவர்கள் வந்தேறிகள், அந்நியர்கள். அப்படிப்பட்ட அந்நியர்களுக்கு இங்கு வாழ மட்டும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சிங்களவர்களின் தயவாலும், கருணையாலும் அவர்கள் வாழ்ந்துவிட்டு போகலாம் உரிமை கொண்டாடக்கூடாது என்பதே பின் வரும் காலங்களில் வளர்த்தெடுக்கப்பட்ட மறைமுக ஐதீகங்களாயின.

“மரக்கல” முஸ்லிம்கள்
இந்த மண்ணின் மைந்தர் சித்தாந்தம் மிக நுணுக்கமாக முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பப்பட்டதன் பின்னணியில் முஸ்லிம்களுடன் வர்த்தக போட்டியை எதிர்கொண்ட புதிய சிங்கள பூர்ஷ்வா வர்க்கம் தொழிற்பட்டது. “கண்டி கலவரம்” கம்பளையில் தொடங்கப்பட்டாலும் சிங்களவர்கள் “மரக்கல கலவரம்” என்று தான் அழைக்கிறார்கள். மரக்கல (மரக்கலங்களில் வந்தவர்கள்) என்று அவர்களால் அழைக்கப்பட்டவர்கள் தெற்கு பகுதியில் வாழ்ந்த கரையோர முஸ்லிம்களே. அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்து வர்த்தகம் செய்தவர்கள். கலவரத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த முஸ்லிம்களே.

தென்னிந்தியாவில் இருந்து வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் சாதாரண சமூக வாழ்வில் இலங்கை முஸ்லிம்களுடன் ஒன்று கலந்து செயற்படவில்லை என்ற பொதுவான கருத்து நிலவி வந்தது. இவர்கள் தங்களது குழுவிற்குள்ளேயே குறுக்கிக் கொண்டுள்ளனர் என்றும் பொருளீட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர் என்றும் உள்நாட்டில் சம்பாதிக்கும் பணத்தை வியாபாரத்தின் மூலம் சுரண்டித் தமது தாய்நாடான இந்தியாவுக்கு அனுப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது சுமத்தப்பட்டது. அத்துடன் அடகுவைத்தல், வட்டிக்குப் பணம் கொடுத்தல், நிலத்தை அடமானமாக பெறுதல் போன்ற வழியிலும் பொருளீட்டுவதில் அவர்கள் அவர்கள் கவனம் செலுத்தினர். இவ்வாறு தாம் உழைத்த செல்வத்தின் பெரும்பகுதியைத் தமது தாயகத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றும் இலங்கையின் நலனில் அக்கறை காட்டுவதில்லை என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இவர்கள் உள்ளுர் வளங்களைச் சுரண்டும் வெளிநாட்டவர்கள் என்றனர்.

இதே வகை எதிர்ப்புகள் ஏனைய இந்திய வர்த்தர்கள் மீதும் எழுந்தன. அது இந்திய வர்த்தகர்கள் மீது மட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்கள் மீதும் பாய்ந்து. ஆனால் முஸ்லிம்கள் குறித்தே அதிகம் அடுக்கடுக்காக இத்தகைய குற்றச்சாட்டுகள் பரப்பட்டன.

வர்த்தகத்தில் மாத்திரமன்றி வேலைவாய்ப்புகளிலும் சிறுபான்மையினருடனான போட்டி சாதாரண மனிதனின் கசப்புணர்வையும் மேலும் வலுப்படுத்தியது. 

இப்படியான வரலாற்று எதிரிகளை சிங்களவர்கள் எதிர்கொண்ட விதம் குறித்த பெருமிதக் கதையாடல்கள் அவசியப்பட்டன. துட்டகைமுனு – எல்லாளன் கதைக்கு புத்துயிர்ப்பு கொடுக்கப்பட்டு அது இரு இனங்களுக்கு இடையில் நடந்த மகாப்போர் என்று திரித்தனர். அதனை சிங்கள மன்னர் துட்டகைமுனு முறியடித்த வரலாற்றுக்கதையை பெருமிதத்துடன் மீள நிறுவும் அவசியமும் இந்த சக்திகளுக்கு ஏற்பட்டன.
பொருளாதார ரீதியில் வளர்ச்சி மறுக்கப்பட்டு அரசியல் ரீதியில் ஒடுக்கப்பட்ட, கலாச்சார ரீதியில் ஒதுக்கப்பட்டவர்களாக தங்களைக் கருதிக்கொண்ட சிங்கள பௌத்தர்கள் இனவாத ஐதீகங்களிலும், புராணங்களிலும், இதிகாச வரலாற்று ஐதீகங்களிலும் ஆதரவு தேடினார்கள். புராண புனைவுகளில் பெருமிதம் கொண்டார்கள்.

முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் போன்றவற்றால் கொந்தளித்துக்கொண்டிருந்த சூழலில் இடையில் இருந்த வர்த்தகர்கள் இந்த நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி போட்டிபோட்டு சுரண்டினர். சாதாரண வியாபாரிகள் தொடக்கம், பெரிய வர்த்தகர்கள் வரை இந்த போட்டியில் இருந்த சக வர்த்தகர்களுடனான போட்டியாக பார்க்காமல் தனி ஒரு இனத்திடம் போட்டிப் பகைமையைக் காட்டினார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபட்டதுடன் சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளை நுட்பமாக பயன்படுத்திகொண்டார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்கள் பரப்பப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டன. இந்த முன் தயாரிப்பே கலவரத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கொதிநிலையாக வெளியானது.

சிங்கள பூர்ஷ்வாக்களின் ஆதரவு பெற்ற பௌத்த மறுமலர்ச்சி இப்படித்தான் பிழையான வடிவம் எடுத்தது.

இந்த பிரச்சாரங்கள் எந்தெந்த தரப்பால் எப்படியெல்லாம் புனையப்பட்டன, நிறுவப்பட்டன, பரப்பப்பட்டன, நிருவனமயப்பட்டன என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்.

தொடரும்...


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates