இலங்கையின் வரலாற்றில் சோபித்த தேரர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு மதத் தலைவர் இருந்ததில்லை என்றே கூறலாம். அதுவும் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக சகல இனங்களின் நல்லெண்ணங்களையும் வென்றிருந்தார்.
நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்களினால் நீண்டகாலம் அவஸ்தைப்பட்டு வந்த சோபித்த தேரர் பைபாஸ் சத்திர சிகிச்சைக்கும் ஆளாகி இருந்தார். அதன் பின்னர் ஆரோக்கியமாகவே காணப்பட்டார். ஆனால் தொண்டையில் வந்த நோவின் காரணமாக சிங்கப்பூரில் மவுண்ட் எலிசபத் வைத்தியசாலையில் 9 மணிநேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இறுதியில் நிமோணியா ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு இறக்கும் போது வயது 73.
இலங்கையில் தேர்ந்த வலதுசாரி தேசியவாதிகளில் பலர் ஒரு காலத்தில் இடதுசாரிகளாக இருந்தவர்களே. ஆனால் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி நாடு போற்றும் ஜனநாயகத் தலைவராக ஆன அந்த மாற்ற இடைவெளியை ஆச்சரியமாகவே அனைவரும் பார்க்கின்றனர்.
60 களுக்குப் பின்னர் வந்த அனைத்து அரச தலைவர்களையும் துணிச்சலுடன் பகைத்துக்கொண்டவர். எந்த சக்திகளும் அவரை வழிநடத்த விடவில்லை. ஆனால் அவர் பல சக்திகளை வழிநடத்தியிருகிறார். இதுவரை எந்தவொரு மதத் தலைவருக்கும் இல்லாத மரியாதையை சகல இனங்களும் வழங்கி வருகிறார்கள் என்றால் அவர் தனது இறுதிக்காலங்களில் நீதியின் பக்கம் இருந்து செயற்பட்டது தான். அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை இலங்கையின் வரலாற்றில் எவரும் உருவாக்கிக் கொண்டதில்லை.
வாழ்க்கை
1942ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி ஹோமாகம பாதுக்க மாதுலுவாவே பிரதேசத்தில் மூன்று பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தில் இவர் பிறந்தார். குடும்பத்தில் ஒரேயொரு ஆண்பிள்ளை அவர். 1955ம் ஆண்டு மே மாதம் 9ம் திகதி கோட்டே ஸ்ரீநாக விகாரையில் தனது 13 வது வயதின் போது துறவறத்தில் இணைந்து கொண்டார். அவரது இயற்பெயரான ரத்னசேகர எனும் பெயர் மாதுலுவாவே சோபித்த தேரோ என்று மாற்றம் கண்டது.
1964 ம் ஆண்டு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார். 1965 இல் அன்றைய கல்வி அமைச்சர் ஈரியகொல்ல கட்சி சார்ந்து ஆசிரிய நியமனம் வழங்கியதை எதிர்த்து கொழும்பில் சத்தியாகிரக போராட்டம் நடத்தியதால் கண்ணீர் குண்டு வீச்சுக்கு இலக்கானார். தொடர்ச்சியாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து இயங்கியதால் 1970இல் வானொலியில் நிகழ்த்திவந்த பௌத்த போதனைகள் நிகழ்ச்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். 1967 இல் கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியானார்.
1978இல் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை எதிர்த்து களத்தில் குதித்தார். திறந்த பொருளாதார கொள்கை உள்ளிட்ட அரச கொள்கைகளை விமர்சித்ததால் மீண்டும் பழி வாங்கப்பட்டார். 1980 வேலைநிறுத்தப் போராட்டதின் போது தாதிமார்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் பௌத்த பிக்குகள். போலீசாரைக் கொண்டு தாக்கி அந்த பிக்குகளை அப்படியே கடத்திக்கொண்டு சென்று பொறல்ல மயானத்தில் விட்டனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த சோபித்த தேரர் பெருமளவு ஜனத்திரளை திரட்டினார். பொலிசாரும் பதிலுக்கு வீதித் தடைகளை அமைத்தனர்.
“இவற்றை உடைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டுக்கு ஊர்வலம் போக உங்களால் முடியுமா சொல்லுங்கள்”
என்றபோது அனைவரும் ஒருமித்த குரலில் “நாங்கள் தாயார் என்றனர்.” சோபித்த தேரரின் தலைமையில் அந்த ஊர்வலம் அனைத்துத் தடைகளையும் அகற்றிக்கொண்டு ஜே.ஆரின் வீட்டை முற்றுகையிட்டது. ஜே.ஆர் அரசு பணிந்தது. தாதிமாரின் கோரிக்கைகளும் நிறைவேறின.
1983 இல் ஜே.ஆரின் கொள்கைகளை விமர்சித்து கொழும்பு பௌத்த சம்மேளன சபையில் சிங்கள அதிகார சபையால் நடத்தப்பட்ட கூட்ட்டத்தில் சோபித்த தேரர் மேடையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு சண்டியர்களால் தாக்கப்பட்டார்.
1987 இல் இந்து-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து “தாய் நாட்டை காப்பதற்கான முன்னணி” என்கிற பலமான அமைப்பை உருவாக்கி பலரை அணிதிரட்டி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். புறக்கோட்டை போதிமரத்திற்கருகில் பாரிய போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தில் முதற்தடவையாக நாடு முழுவதுமிருந்து 3,000 க்கும் மேற்பட்ட பிக்குமாரை கலந்துகொள்ளச் செய்தனர். முழு பௌத்த சங்கங்களும் இதற்கு ஆதரவு அளித்தன. இந்த போராட்டம் ஜே.ஆர் அரசாங்கத்தின் படையினரால் தாக்கப்பட்டு நசுக்கப்பட்டது. சிறிமா பண்டாரநாயக்க, தினேஸ் குணவர்த்தன போன்ற தலைவர்களும் இதன் போது கண்ணீர் குண்டு வீச்சுக்கு இலக்கானார்கள்.
இந்த போராட்டத்தினால் ஜே.வி,பி எப்படி பயனடைந்தது என்பது இன்னொரு கதை. சோபித்த தேரர் தலைமை தாங்கினாலும் கூட ஜே.வி.பியே பின்னணியில் இருப்பதாக உளவுத்துறையின் அறிக்கை ஜே.ஆரை சென்றடைந்தது. உடனடியாக சொபித்தவை கைதி செய்யுங்கள் என்று ஜே.ஆரிடமிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. கைது செய்ய வந்த பொலிஸ் படையணியை விகாரைக்குள் விடவில்லை மக்கள். “எனக்கு வழி விடுங்கள்” என்றபடி வெளியே வந்த சொபித்த தேரர் “சிறை மட்டுமல்ல.. நான் மரணிக்கவும் தயார்” என்றபடி பொலிஸ் ஜீப்பில் ஏறினார். இந்து இலங்கை ஒப்பந்தம் முடிவடையும் வரை அவர் விடுதலை செய்யப்படவில்லை. ஓகஸ்ட் 1 ஆம் திகதி தான் அவர் விடுதலையானார்.
மாகாண சபை முறையையும், 13 வது திருத்தச் சட்டத்தையும், இந்திய அமைதி காக்கும் படையையும் எதிர்ப்பதில் வெகுஜன தலைமை கொடுத்தவர் சோபித்த தேரர். ஆனால் வடக்கு கிழக்கில் யுத்தத்தின் கொடூரம், அதைத் தொடர்ந்து சுனாமி அனர்த்தம் என்பவற்றின் போது மிகவும் நெகிழ்ந்து போயிருந்தார். அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்தார். இலங்கையில் சமாதான பேச்சுவார்த்தையை ஆதரித்தார். அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை தானே நேரடியாக ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். நோர்வே அரசாங்கம் அவரை நோர்வே அழைத்து அவரது செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தது.
1988இல் அரசாங்கம் மே தின நிகழ்வுகளை தடை செய்தது. ஆனால் மே தினத்தை அபயராம பௌத்த விகாரையில் நடத்தினார். அங்கும் பொலிசாரால் தாக்குதலுக்கு உள்ளானது கூட்டம். இதன்போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டார்கள். சோபித்த தேரர் மயிரிழையில் தப்பினார்.
90களில் அவர் நில, விவசாய சீர்திருத்த இயக்கங்களுடன் இணைந்து விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தார். 17 வருட ஐ.தே.க காட்டாட்சியை முடிவுக்கு கொணர்வதற்காக சந்திரிகாவை ஆதரித்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். சந்திரிகா வென்றதும் முதலில் அவர் காணச் சென்றது நாக விகாரயிலுள்ள சோபித்த தேரரை சந்திப்பதற்குத் தான். அனால் சிறிது காலத்திலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக சந்திரிகா முன்வைத்த தீர்வுப்பொதியை கடுமையாக எதிர்த்து செயற்பட்டார்.
பேரினவாத பாத்திரம்
தாய் நாட்டை பாதுகாக்கும் முன்னணியானது தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து விடக்கூடாது, நாடு பிளவுபட்டுவிடும், ஈழக்கோரிக்கையை நசுக்க வேண்டும் போன்ற பிரச்சாரங்களை முன்னெடுத்த மிக முக்கிய இயக்கம். அன்று தலைமறைவாக இருந்த ஜே.வி.பியும் இதே கொள்கையுடன் பல வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதும் வெகு ஜன தளத்தில் அந்த கருத்தாக்கத்தை பரப்பியதிலும், சிங்கள பௌத்தர்களை அணிதிரட்டியதிலும் சோபித்த தேரரே தலைமை வகித்தார். 80 களின் ஞானசார அவர் தான். இன்றைய பல இனவாதிகளை அன்று உருவாக்கிய ஞானத்தந்தை (God father) அவர் தான். 80 களில் சம்பிக்க ரணவக்க, அத்துரலிய ரதன தேரர், ஞானசார போன்றோரின் கதாநாயகன் அவர். சோபித்த தேரரின் பாசறையிலேயே வளர்ந்ததாக அவர்களின் பேட்டிகளிலும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
83 இல் திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினர் உடலங்கள் கொழும்பு வைத்தியசாலைக்கு கொணரப்பட்டபோது ஆஸ்பத்திரியை சுற்றி வளைத்து அதனைச் சூழ ஊரவலமாக கோஷமிட்டவாறு மக்களை அணிதிரட்டினார் சோபித்த தேரர். இத்தகைய சம்பவங்களின் தொகுப்பே பின்னர் கருப்பு ஜூலை கலவரங்களுக்கும் காரணமாயிற்று.
மேலும், சிங்கள பௌத்த பேரினவாத இயக்கங்களான சிங்கள அதிகார சபை (சிங்கள பல மண்டல), தேசிய வீர மன்றம், தேசிய வீர விதான மன்றம் போன்ற 80 களில் கோலோச்சிய பல அமைப்புகளுக்கு தலைமை தாங்கினார். அவர் பேரினவாதத்தின் குறியீடாகவே அப்போது காணப்பட்டார். எனவே தான் எஸ்.ஜே.தம்பையா எழுதிய “பௌத்தம் காட்டிக்கொடுக்கபட்டது?” (“Buddhism Betrayed”) நூலின் முகப்பு பக்கத்தில் கை முஷ்டியை உயர்த்தியபடி ஆக்ரோஷமான சோபித்த தேரரின் புகைப்படத்துடன் வெளியானது. அது பெரும் சர்ச்சைகளுக்கும் உள்ளானது. ஒரு தமிழ் கத்தோலிக்கரால் அப்படித்தான் செய்ய முடியுமென்றார் நளின் டீ சில்வா. நளின் டீ சில்வாவின் “சிந்தக பர்ஷதய” எனும் இனவாத அமைப்புக்கு சில காலம் தலைமை தாங்கியவரும் சோபித்த தேரர். அந்த அமைப்பினால் வெளியிடப்பட்ட “காலய” (காலம்) சஞ்சிகையை சோபித்த தேரரின் அச்சகத்திலேயே அச்சிடப்பட்டு வந்தன. அதனை இலவசமாகவே அச்சு செய்து தந்ததாக 12.11.15 ரிவிர பத்திரிகையில் நளின் டீ சில்வா எழுதிய கட்டுரை தெரிவிக்கிறது. இப்போது வெறும் இணையத்தளமாக குறுகிவிட்டுள்ள http://www1.kalaya.org “காலய” இனவாத சித்தாந்தத்துக்கு தத்துவார்த்த நியாயங்களை நிறுவிவரும் முக்கிய தளம்.
சிங்கள பௌத்த கொமேனி
இலங்கையில் சர்வாதிகாரம், நிறைவேற்று அதிகாரம் போன்றவற்றுக்கு எதிராக அனைத்து சிவில் சமூக இயக்கங்களையும் இணைத்து சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தை தொடக்கி அதற்கு தலைமை தாங்கினார். நளின் டி சில்வாவின் கருத்தின் படி இந்திய, அமெரிக்க மற்றும் மேற்குல வழிநடத்தலில் சோபித்த தேரர் அந்த இயக்கத்திற்கு தரகராக ஆனார் என்கிறார். மகிந்தவாதிகளும், சிங்கள பௌத்த பேரினவாதிகளும் அந்த இயக்கத்தை அப்படித்தான் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஜனவரி 8 ஆட்சி மாற்றத்தில் அந்த இயக்கம் மிகப் பெரிய பாத்திரத்தை ஆற்றியிருந்தது.
ஆனால் ஒரு சராசரி சிங்கள தலைவர்களைப் போல இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார். இலங்கையில் நிலவுவது பொருளாதாரப் பிரச்சினையே என்றார். தமிழ் முஸ்லிம் மக்கள் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்றார். விசாரணயின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளின் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
அதேவேளை அவர் ஒரு சிறந்த சிவில் சமூக செயற்பாட்டாளர், விவசாய பிரச்சினைகள், அரசியலமைப்பு, மதுவொழிப்பு, சமூக நீதி, ஊழல் மோசடி, சர்வாதிகார எதிர்ப்பு, நாலாட்சிக்காக பாடுபட்டவர். மதுவொழிப்பு பிரசார இயக்கத்தை சமீபகாலமாக அதிகமாக முன்னெடுத்தவர் சோபித்த தேரர். கிராமம் கிராமமாக சென்று பிரசாரங்களில் ஈடுபட்டதுடன் இந்த பணிகளுக்காகவே தனியான அச்சகத்தை தொடக்கினார்.
சோபித்த தேரரை சிங்கள பௌத்த கொமேனி (ஈரானிய இஸ்லாமிய தலைவரைப் போல) என்று 80 களில் விமர்சித்தார்கள். சமீபத்தில் ராவய பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் குசல் பெரேரா “நாம் ஒரு சிங்கள பௌத்த கொமேனியை உருவாக்கப் போகிறோமா” என்று எழுதியிருந்தார்.
மதத்தை முன்னிலைப்படுத்திய அரசியல் அவரிடமிருந்து எப்போதோ அகன்றிருந்தது. இலங்கை ஒரு மத சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்றார். பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புகளை பகிரங்கமாக விமர்சித்தார்.
வெகுஜன தலைமை
கடந்த கால அரசாங்கத்தில் எந்த ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக போராடினோமோ அதே ஊழல் பெருச்சாளிகளை இந்த அரசாங்கமும் சேர்த்துக்கொண்டது மட்டுமன்றி அமைச்சு பதவிகளையும் கொடுத்ததை வெளிப்படையாக கண்டித்து வந்தார் சோபித்த தேரர்.
நோர்வேயின் அழைப்பின் பேரில் சில வருடங்களுக்கு முன்னர் ஒஸ்லோ வந்திருந்த போது அவரை சந்தித்து நான் உரையாடினேன். அப்போது யுத்தம் முடிந்திருக்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்ததால் அவரை பழைய மதிப்போடே சந்தித்தேன். ஆனால் அவர் நிறைய மாறியிருப்பது தெரியவந்தது. அங்கிருந்த ஒருவர் என்னை ஜேவிபி காரன் என்று கிண்டலாக அறிமுகப்படுத்திவிட்டார். உடனே அவர் ஜேவிபியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். ஜேவிபி மோசமான இனவாத நிலைப்பாடு எடுத்திருப்பதை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். 80 களில் ஜேவிபி எடுத்த இனவாத நிலைப்பாட்டுக்கு வெகுஜன/நடைமுறை தலைமை கொடுத்தவரும் இவர் தான் என்பதையும் மறக்க முடியாது.
இந்தளவு அதிகாரங்களைக் கொண்ட எந்தவொரு ஜனாதிபதி முறையும் உலகில் இல்லை என்றார் அவர். மகிந்த அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கு சரியான பொது வேட்பாளர் சோபித்த தேரர் மாத்திரமே என்று பொது அபிப்பிராயம் கட்டியெழுப்பட்ட வேளை அதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் இருந்த இடதுசாரி சக்திகள் சிலரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதனை எதிர்த்தன. காமினி வியங்கோட போன்ற அரசியல் ஆய்வாளர்கள் பகிரங்கமாக எதிர்த்து எழுதினர். சம்பந்தர் தமது எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதன் விளைவாக வேறொருவரை நாட வேண்டியதாயிற்று. இறுதியில் சோபித்த தேரரை ஒரு மீட்பராக கட்டியெழுப்பும் முயற்சி தோல்வியுற்றது. இந்த நாட்டிற்கு சிறந்த தலைமையை அவரால் கொடுக்க முடியும் என்று ஆய்வாளர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி பல தடவைகள் எழுதியிருக்கிறார்.
இத்தனைக்கும் சோபித்த தேரர் 6 மாதங்களுக்குள் நிறைவேற்று ஜனாதிபதிமுறையை முடிவுக்கு கொணர்வதுவரை மாத்திரமே ஜனாதிபதிப் பதவியில் இருப்பதாகவே பொது முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
சோபித்த தேரர் நல்லாட்சி, இன நல்லிணக்கம், அதிகார பரவாலாக்கம் போன்ற விடயங்களில் அக்கறைக் காட்டத் தொடங்கியதை பேரினவாத தரப்பு விரும்பவில்லை. குணதாச அமரசேகர, நளின் டி சில்வா, போது பல சேனா மற்றும் இன்னும் பல பேரினவாத சக்திகள் அவரை விமர்சித்தன. கண்டித்தன. ஆனால் சரி பிழைகளுக்கப்பால் தான் நம்பிய பாதையில் உறுதியுடன் பயணித்து வந்திருக்கிறார் சோபித்த தேரர்.
இலங்கைக்கு முதலில் வந்தது விஜயன் என்பது விஞ்ஞானத்துக்கு புறம்பானது. இந்த நாடு சகலருக்குமான நாடு என்றார்.
“இனிவரும் காலங்களில் நடக்கும் புரட்சி வடக்கும் தெற்கும் இணைந்து மேற்கொள்ளவேண்டும்” என்றார். (ராவய 01.03.2015)
2002 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனையாக புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கைச்சாத்திட்ட மும்மதத் தலைவர்களில் ஒருவர் சோபித்த தேரர்.
இறுதி விருப்பம்
சோபித்த தேரர் தான் இறந்த பின்னர் எப்படி தன்னை வழியனுப்பவேண்டும் என்று ஒரு கானொளியில் குறிப்பிட்டிருந்தார். அந்த காணொளியில் திடகாத்திரமாகவும், எப்போதும் போன்ற கம்பீரமான தெளிவான குரலில் அவர் வெளியிட்ட விடயங்கள் ஆச்சரியமளிக்கும்.
"நான் இறந்த பின் எனது இறுதிக்கிரியைகளை மிக எளிமையாக நடத்துங்கள். எனக்காக விழாக்கள், ஊர்வலங்கள் நடத்தப்படுவதை நான் விரும்பவில்லை. மலிவான சவப்பட்டியை பயன்படுத்துங்கள். எனக்காக எந்த உதவியையும் எவரிடமும் பெறுவதை விரும்பவில்லை. கிரியைகளைக் கூட நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. ஒரே நாளில் முடித்து வேண்டும், அந்த பலகையோடு கொண்டுசென்று எரித்துவிடுங்கள். அவிஸ்ஸாவலையிலுள்ள உடல் உறுப்பு தான சங்கத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன் அவர்களிடம் எனது உடலைக் கொடுத்துவிடுங்கள் அவர்கள் தேவையானதை எடுத்துக் கொண்டு எஞ்சியதை புதைத்துவிடுவார்கள். பாடசாலை சிறுவர்களை ஊர்வலத்துக்கு பயன்படுத்தவும் வேண்டாம். பிக்குமார் இறந்த பின்னர் அவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக பல எற்பாட்டுக் குழுக்களை அமைத்து ஏராளமாக செலவுகளை செய்கிறார்கள். எனக்கு அப்படிபட்ட நிலை வேண்டாம். இறந்தபின்னர் இந்த உடலில் ஒரு அர்த்தமும் இல்லை."
இருந்தபோதும் அவரை வைத்து அரசியல் நடத்தியவர்கள், அவர் இறந்த பின்னரும் அவரது உடலை வைத்து அரசியல் நடத்தினார்கள். மேலும் அவரின் இறப்புக்கு காரணம் மகிந்த தான் என்று ஒரு தரப்பும், இல்லை மைத்திரிபால தான் என்று மறு தரப்பும் அரசியல் விவாதங்களில் ஈடுபட்டன.
சோபித்த தேரர் ஒரு தனித்துவமான மதத் தலைவர் மட்டுமல்ல, தனித்துவமான சமூக அரசியல் தலைவர் என்றே கூறவேண்டும். இறக்கும்வரை தான் நம்பிய கொள்கைக்காக விடாப்பிடியாக போராடிய ஒரு போராளி என்றே கூறவேண்டும். இறுதிக்காலங்களில் அவரின் தலைகீழான செயல்பாடே இன்று அவருக்கு நாடுமுழுதும் கிடைக்கின்ற மரியாதை.
மிகெட்டுவத்தே குனானந்த தேரருக்குப் பின்னர் சரித்திரத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தலைமை தாங்கிய மதத் தலைவர் என்று சிங்கள பௌத்த சக்திகள் கருத்து வெளியிட்டு வருகின்றன. 1883 இல் கொட்டாஞ்சேனைக் கலவரத்திற்கு சிங்கள தரப்பில் தலைமை தாங்கியவர் குனானந்த தேரர். அதுபோல கத்தோலிக்கர்களுடன் பிரபல பாணந்துறை விவாதத்திற்கு தலைமை தாங்கியவரும் குனானந்த தேரர் தான். அநகாரிக்க தர்மபால போன்றோர் வளர்ந்ததும் குனானந்த தேரரின் பாசறையில் தான்.
புதிய “நல்லாட்சி”யை ஏற்படுத்தியதில் சோபித்த தேரரின் பங்கு முக்கியமானது. “ஆயிரம் கடவுள்களால் கூட செய்ய முடியாததை சாதித்தவர் சோபித்த தேரர்” என்றார் ஜனாதிபதி மைத்ரிபால வெளியிட்ட இரங்கல் அறிவித்தலில். ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் விரக்தியடைந்த நிலையில் இருந்தார். மவ்பிம (10.11.15 மவ்பிம) பத்திரிகைக்கு அவர் இறுதியாக அளித்த நேர்காணல் அவரின் மறைவுக்குப் பின்னர் தான் வெளியிடப்பட்டது. அதில் அவரின் விரக்தியை காணக்கூடியதாக இருந்தது.
“நாம் பட்ட கஷ்டங்களெல்லாம் பாழாய்ப்போனது. அர்த்தமிழந்து போய்விட்டது. அனைத்தும் அரசியல்மயப்பட்டுவிட்டது. அப்பாவிகளுக்கு இறுதியில் ஒன்றும் இல்லை. இனி சகலவற்றிலிருந்தும் ஒதுங்கப்போகிறேன் என்றார்.”
அவர் சகலவற்றிலிருந்தும் ஒதுங்கப்போகிறேன் என்று கூறியதன் அர்த்தம் இது தானோ.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...