பொதுத்தேர்தல் முடிந்து விட்டது. அடுத்ததாக
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளூராட்சி
சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏனைய
அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் தேர்தல் நடைபெறப்போவது
உறுதியாகும்.
ஆனால், எல்லை மீள்நிர்ணயம் இன்னும் பூர்த்தியடையவில்லை. எனவே, விகிதார முறையில் நடைபெறப்போகின்றதா
அல்லது புதிய வட்டார முறையிலான உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறப் போகின்றதா என்பது
குறித்து போதுமான விளக்கம் இல்லாமலிருக்கிறது.
எல்லை மீள்நிர்ணம் எதிர்வரும் மார்ச்
மாதத்துக்குள் பூர்த்தியடையுமா என்றொரு கேள்வியும் எழுந்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள்
எல்லை மீள் நிர்ணயப் பணிகள் தாமதமாகுமானால் தேர்தலை பின்போடுவதும் தவிர்க்கமுடியாததொன்றாகிவிடும்
என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, மீள்நிர்ணயம் செய்து வரும் குழுவை மலையக அரசியல் தலைவர்கள் குறிப்பாக
அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் மாகாண உறுப்பினர்கள் இதுவரை சந்தித்துப் பேசவில்லை என்றே
தெரிய வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் நுவரெலியா மாவட்டத்தில்
புதிய உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எதிர்காலத்திலும்
அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போகும்.
குறித்த ஒருசில கட்சிகளுக்கு மட்டுமின்றி
அனைத்துக்கட்சிகளுமே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியமாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் மேலும்
குறைந்த பட்சம் 8 – 9 பிரதேச சபைகளையாவது ஏற்படுத்த ஏற்படுத்த வேண்டிய தேவையேற்படுமென இது
தொடர்பான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான பிரதேச சபைகளை உருவாக்கி
தேர்தல் நடத்தும்போது அவையனைத்திலும் மலையகத் தமிழ் கட்சிகளோ அல்லது மலையக தமிழ்
பிரதிநிதிகளோதான் வெற்றி பெறுவார்கள்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் மலையகக்கட்சிகள் எவ்வாறு போட்டியிடப்போகின்றன
என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கம்போல இ.தொ.கா. இந்தத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுமென்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய கட்சிகள் என்ன செய்யப்போகின்றன?
குறிப்பாக தமிழ் முற்போக்கு கூட்மைப்பு
என்ன செய்யப்போகிறது? கூட்டமைப்பிலுள்ள தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி இவை மூன்றும்
தனித்தனியாக, போட்டியிடப்போகின்றனவா
? அல்லது கூட்டமைப்பினூடாகவே
போட்டியிடப்போகின்றனவா?
மலையகத்தைப் பொறுத்தளவில் கூட்டணிகள்
நீடித்ததாக வரலாறு கிடையாது. கூட்டணி தேர்தல் வரை மட்டுந்தான். தேர்தல் முடிந்ததும்
கூட்டணி காணாமல் போய்விடும். இறுதியாக, கடந்த சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலோடு ஒரு கூட்டணி காணாமல் போய்விட்டது.
எனினும், கடந்த பொதுத்தேர்தலின்போது உருவான தமிழ் முற்போக்கு கூட்டணியை மலையக
மக்கள் அங்கீகரித்து தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அந்த கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியே
இதற்கு சாட்சியாகும்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில்
மலையகக் கட்சிகள் மலையகத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களைக் கைப்பற்ற
வேண்டும். அதன் மூலமே எமக்கு மக்களுக்கு அதிக சேவைகளை செய்யக்கூடியதாகவும் ஆட்சியைத்
தக்க வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
கடந்த காலங்களில் மலையகத்தின் பல பிரதேசங்களில்
உள்ள உள்ளூராட்சி சபைகளில் தலைவர்களாகவும் உபதலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும்
மலையகத்தவர்கள் இருந்து வந்துள்ளனர். இ.தொ.கா. பிரதான கட்சிகளான ஐ.தே.க. மற்றும்
பொ.ஜ.ஐ.மு. போன்றவற்றுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.
நுவரெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை என்பவற்றின் தலைமைப்பதவி, நுவரெலியா மாநகர சபையின் உபதலைவர் பதவி, ஹட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் பதவி
உள்ளிட்டவற்றைக் கூற முடியும். அதுதவிர பல்வேறு நகர சபைகள், மாநகர சபைகள்,
பிரதேச சபைகள் என்பவற்றில் உறுப்பினர்களாகவும்
இருந்துள்ளனர். தொடர்ந்தும் அதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்
அமைச்சர்களால் ஒதுக்கப்படும் நிதிகளின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்கு
உள்ளூராட்சி சபைகளில் எமது பிரதிநிதிகள் இருப்பது மிகவும் அவசியமாகும். அதன் மூலமே
சேவைகளை செய்யக்கூடியதாக இருக்கும்.
எனவே, மலையகக்கட்சிகள் இப்போதிருந்தே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்
போட்டியிடுவதற்குத் தம்மை தயார்ப்படுத்திக் கொள்வது நல்லது.
பொதுமக்களுக்கு நேர்மையாக, உண்மையாக சேவை செய்யக்கூடிய சுயநலமற்றவர்களை
போட்டியிடச்செய்ய வேண்டும். கடந்த காலங்களில் தேர்தலின்போது மக்கள் மத்தியில்
தோன்றி வாக்குக்கேட்டவர்கள் தேர்தலின் பின்னர் காணாமல் போய்விட்டார்கள்.
தேர்தல் வரை ஏழையாக சாதாரண நிலையில்
இருந்தவர்கள், இன்று
பெரும் மாளிகைகள், வாகனங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். சிலர் ஹட்டன், கொட்டகலை, நுவரெலியா, கண்டி என வீடுகளையும் நிலத்தையும் வாங்கிப் போட்டுள்ளனர். வேறு சிலர்
தலவாக்கலை, ஹட்டன் நகரங்களில்
கடை, கட்டடங்களை வாங்கியுள்ளனர்.
இவையெல்லாம் இவர்களுக்கு எப்படி வந்தது?
ஏழையாக இருந்த இவர்கள் திடீரென பணக்காரனானது
எப்படி? ஆனால் பொதுமக்களுக்கு
இவர்கள் செய்தது என்ன ? ஒரு சிலர் இருக்காத கட்சிகளே இல்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு
புதுக்கட்சியில் சேர்ந்து போட்டியிடுகின்றனர். மக்களுக்கு சேவை செய்கின்றனரோ
இல்லையோ தமக்குத் தேவையான சேவைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.
இவ்வாறானவர்களை அரசியல் கட்சித் தலைமைகள்
இனம் கண்டு அவர்கள் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கக்கூடாது. அவர்களை
ஒதுக்க வேண்டும். திறமையான, நேர்மையானவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். கல்வியின் முன்னோடிகளுக்கும்
சமூக முன்னோடிகளுக்கும் அதிகளவில் வாய்ப்பளிக்க வேண்டும்.
கட்சியின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள் என்பதற்காக, சமூக விரோதிகளுக்கும் மக்கள் வரிப்பணத்தை
கொள்ளையிடுபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக்கூடாது.
கட்சிகள் இப்போதே இது தொடர்பில் நடவடிக்கை
எடுக்க வேண்டும். இறுதி நேரத்தில் எதையும் செய்ய முடியாது என்பதை மனதில் கொள்ள
வேண்டும்.
நன்றி - வீரகேசரி
+ comments + 1 comments
காலத்திற்க்கு அவசியமான செய்தி கட்டுரையாளருக்கு நன்றி .
"இதேவேளை, மீள்நிர்ணயம் செய்து வரும் குழுவை மலையக அரசியல் தலைவர்கள் குறிப்பாக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண உறுப்பினர்கள் இதுவரை சந்தித்துப் பேசவில்லை என்றே தெரிய வருகிறது."
இந்த விடயத்தை திருத்திக்கொள்ளலாம் என நினைக்கின்றேன் தமிழ் முற்போக்கு கூட்டணி இது சம்பந்தமான முன்னெடுப்புகளை செய்துக்கொண்டிருக்கின்றது மீள் எல்லை நிர்ணயம் சம்பந்தமான உப குழுவில் கூட்டணி தலைவர் கௌரவ. மனோ கணேசன் அவர்களும் உள்வாங்கப்பட்டு இருக்கின்றார் .
மிக அண்மையில் எமது குழு அதிமேதகு ஜனாதிபதி , பிரதமர் , அமைச்சர்களை சந்திக்கவிருக்கின்றது அதற்கான தயார்படுத்தல்களில் இருக்கின்றோம் .
மேலும் தோட்டபுரங்களுக்கு உள்ளூராட்ச்சிசபைகள் சேவை செய்வதை தடுக்கும் சட்டமூலத்தை திருத்துவதட்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன அத்தோடு உள்ளூராட்சி சபைகளை நுவரஎளிய மற்றும் வேறுசில மாவட்டங்களிலும் அதிகரிப்பதற்கான வேலைகளும் ஒரு கட்டத்தை அடைந்துள்ளது .
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...