Headlines News :
முகப்பு » » போதைப் பொருள் பாவனை மலையக சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்ககள் - மொழிவரதன்

போதைப் பொருள் பாவனை மலையக சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்ககள் - மொழிவரதன்


போதைப்பொருள் பாவனை தொடர்பாக மிக அண்மைகாலமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

போதைப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் (Contains) பல கடந்த காலங்களில் கைப்பற்றப்பட்டன.

பரபரப்பான இவ்வாறான செய்திகள் அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் இடம் பிடித்திருந்தன. மீண்டும் இவ்விடயம் உறக்கத்திலிருந்து அண்மைக்காலமாக போதைப்பொருள் தலைப்புச் செய்திகளாகி உள்ளது.

ஆனால், போதைப்பொருட்கள் காலங்காலமாக பயன்படுத்தப்பட்டே வந்துள்ளன.

மனிதனின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுத்தும் ஒரு பொருளே போதைப்பொருள். உள உடல்ரீதியாக குறித்த அப்பொருள் மாற்றங்களை ஏற்படுத்தும் இரசாயனப் பொருட்களே போதைப்பொருள் எனலாம்.

கஞ்சா, அபின் போன்றவற்றோடு தொடர்பான போதைப்பொருட்கள் கீழைத்தேய மக்களின் உணவு தயாரிப்பு, நோய்தீர்த்தல், வலி தீர்த்தல் போன்றவற்றிக்கான ஒரு பொருளாக காலங்காலமாக பயன்படுத்தப்பட்டே வந்துள்ளன. எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் மேற்குறிப்பிட்ட போதைப்பொருட்கள் சில தேவைகளுக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

போதைப்பொருட்களின் வகைகளை பின்வருமாறு பார்க்கலாம்.
(அ) *அபின் (OPIUM)
*மோர்பின் (MORPHINE)
*ஹெரோயின் (HEROIN)
*கொடேயின் (CODEINE)
(ஆ) தனிப்பானங்கள் (SEDATIVE DRUGS)
*மதுபானம்
*தூக்கமாத்திரைகள்
(இ) தூண்டிகள் (SIMULANT DRUGS)
செயற்கைத்தூண்டிகள்
*அப்பெற்றமீன்கள் (AMHETAIMEINS)
*கொக்கேயின் (COCAINE)
(ஈ) கனாபிஸ்(CANNABIS)
கஞ்சா, ஹஷிஸ் (HASHISH)
(உ) உளமாயப்பொருட்கள் (HALLACINOGENIC DRUGS)
எல்.எஸ்.டி (L.S.D) மெஸ்கலீன்) (MESCALINE)
(ஊ) ஆவியாகு கரையங்கள் /உள்ளு யிர்ப்புப்பதார்த்தங்கள்
(VOLATILE SOLVENS)  INHALANTS
*ஒட்டுப்பதார்த்தங்கள் (GLUE) மண்ணெண்ணெய்
தொலூயின் (TOLIENE) பெற் றோலியப் பொருட்கள்
ஏறோ செல்கள் (AERUSOLS)
(எ) ஏனையவை புகையிலை, வெற் றிலை, பாக்கு

மிக அண்மைக்காலமாக பல புதிய போதைப்பொருட்கள் உலாவருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, இணையம் போன்றவற்றினூடாக பாரிய அளவில் இப்பொருட்கள் விளம்பரப்படுத்தப்பட்டு தபால்பொதிகள் ஊடாக மிக சூட்சுமமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இனிப்பு டொபிகள், இனிப்பு பண்டங்கள், பிஸ்கட்டுகள் போன்ற இன்னோரன்ன தின்பண்டங்கள் போலவும் அரிய சில மருந்து வகைகளின் குளிசைகள் பெயர்களின் அடிப்படையிலும் இவைகள் வெளிநாட்டியிலிருந்து சிறு சிறு பொதிகள் போல் வந்து சேர்கின்றன.

இப்போதைப்பொருட்கள் பல பெயர்களினால் அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மிக அண்மையில் குளிர்பானம் போல் (Spray) செய்யக்கூடிய பானங்கள் போதைப் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

சில பிரதேசங்களில் போதைப்பொருள் விநியோகம் மிக அதிகமாகவே உள்ளதாக கருதப்படுகின்றது.

பரவலாக போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதை கைதுகள் சுற்றி வளைப்புக்கள் காட்டுகின்றன. மேல் மாகா ணத்தில் மிக அதிகமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதனை கைது செய்யப்படுபவர்களின் வாக்குமூலங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் டெரஸ் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் அதன் பின்னரான விசாரணைகளில் பொலிஸ் பதிவுகள் போதைப்பொருள் பாவனை எவ்வளவு தூரம் மனிதனின் உளப்பகுதியை பாதிக்கின்றது என்பதனை காட்டுகின்றன.

மேல் மாகாணத்தை சூழ உள்ள பிரதேசங்களில் போதைப்பொருள் மிக இலாவகமாக பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பது பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவருகிறது. திறந்த பொருளாதாரம், உல்லாசப் பிரயாணிகளின் வருகை தற்போது பூகோளமயமாக்கம் (Globolization) நடைமுறையிலுள்ள இடங்களையாவது முறையாக பயன்படுத்தாமை, அமுலாக்காமை போன்ற பல காரணிகள் இலங்கையையும் போதை வர்த்தகத்திற்குள் தள்ளிவிட்டுள்ளன.

போதைப்பொருள் தொடர்பாக சட்டங்கள் போதுமானதாக இல்லை என்றதொரு குறைபாடுள்ளது.

1935 ஆம் ஆண்டுச்சட்டம் திருத்தப்பட்டு 1984 ஆண்டு கடுமையாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

பின்வரும் அளவுகளில் போதைப்பொருளை ஒருவர் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை அல்லது ஆயுட்காலச்சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

2 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஹெரோயின்
3 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட மோர்பின்
3 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட கொக்கேயின்
500 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அபின்
(ஆதாரம் : போதை – பலாலி ஆசிரியர் கலாசாலை விஞ்ஞானமன்ற நூல்)
போதைப்பொருள் தயாரித்தல், கடத்தல் போன்றனவும் தண்டனைக்குரிய விடயமாகும்.

போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்றும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படல் வேண்டும் என்றும் ஒரு பகுதியினர் கோஷங்கள் எழுப்புவதும் மற்றொரு பகுதியினர் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும் பழக்கப்பட்டவர்களுக்கும் புனர்வாழ்வு அளித்திட வழிவகைகள் செய்யப்படல் வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (National Dangerous Drugs Control Board) போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கண்டியில் இக்கட்டுப்பாட்டுச்சபை போதைப்பொருள் பாவனைகளுக்குள்ளானவர்களுக்கான ஒரு புனர்வாழ்வு முகாம் ஒன்றினை நடத்தி வருகின்றது. மேலும், இது அண்மையில் பல விழிப்புணர்வுத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்து டன் தனியார் தொலைக்காட்சி ஒன்றும் தேசிய இளைஞர் சேவை மன்றமும், தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை என்பன ஒன்றிணைந்து நடத்திய பேரணியையும் குறிப்பிடலாம்.

போதைப்பொருள் பாவனை பாடசாலைகளில் பல காலமாக இடம்பெற்றே வருகின்றன. எனினும், அவை பாரிய அளவில் இடம்பெறவில்லை எனலாம். ஆனால், தற்போது போதைப்பொருள் மாத்திரமல்லாது மனித வாழ்வே இந்நாட்டின் மனித விழுமியங்களுக்கு அப்பால் சென்று கொண்டிருக்கின்றது. அல்லது சென்றுவிட்டதெனலாம். ஒரு சமூகத்தின் அடையாளமான பாடசாலை மாணவர் இதற்கு விதிவிலக்கல்ல எனலாம். இன்றைய டீன்ஏஜ் பருவத்தினர் திறந்த கலாசார பின்னணியிலேயே வாழ்கின்றனர்.

உலகச் சந்தைகளிலுள்ள அல்லது சர்வதேச சந்தைகளிலுள்ள உணவு பண்டங்கள், குடிவகைகள், உடுபுடவைகள், போதைப்பொருட்கள், பழக்கவழக்கங்கள் பல் நாட்டுமேலைத்தேய கலாசார அம்சங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் ஒரு நொடிக்குள் இணையத்தினூடாக எமது கரங்களுக்குள், வீடுகளுக்குள், படுக்கையறைகளுக்குள் உலாவர எல்லா வசதிகளும் உள்ளன.

இந்தப் பின்னணியில் மாணவர், ஆசிரியர் மேலும் இவர்கள் தவிர்ந்த பிற இளைஞர், யுவதிகள் இந்த உலக மயமாக்க மாய வலையில் வீழ்ந்திடவே வாய்ப்புகள் உள்ளன. எமது கலாசார பாரம்பரியம் மத நம்பிக்கைகள் இவை தொடர்பாக இளைஞர்களுக்கான விழிப்பூட்டல்கள் அருகிவிட்டன.

பாடசாலைகளிலும் இவ்வாறான விழுமியர் கல்வி ஊக்குவிக்கப்படவில்லை என்றே கூறுதல் வேண்டும். பெற்றோர், மக்கள் ஒரு வர்த்தக உலகில் சஞ்சரிக்கின்றனர்.

மனிதன் மனிதனாக வாழுதல் வேண் டும். சத்தியம், உண்மை பேணப்படுதல் வேண்டும். ஒழுக்கம் பின்பற்றப்படல் வேண்டும். இளைஞர்  யுவதிகள் உள்ளம் நல்ல சிந்தனைகளால் நிரப்பப்படல் வேண்டும். வெறும் பணத்துக்கான வாழ்வு, ஆடம்பரம், பட்டோபாயம் தவிர்க்கப்படல் வேண்டும். சிக்கனம், எளிய வாழ்வு பின்பற்றப்படவேண்டும் போன்ற எண்ணங்கள் எமது பாடசாலை பாட விதானத்தில் உள்ளதா? என்பது வினாவாகவுள்ளது. மாணவர்கள் சமயத்தினை கிண்டல் செய்வதாகவும் எளிமையான வாழ்வை ஏளனம் செய்வதாகவே பெற்றோர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில், தறிகெட்ட வாழ்க்கைப்போக்கில் பணம் பண்ணும் கல்விக்கான பாடங்களையே முக்கியத்துவப்படுத்துவதோடு, போதைப்பொருள் பாவனை போன்ற தீய செயற்பாடுகளை இவர்கள்– மாணவர்கள் ஒரு பிழையாகவே கருதாமல் செய்து வருகின்றனர்.

இளைஞர்கள், மாணவர்கள் வாழ்வை இன்பமயமானதாக கருத அவர்களை சரியாக திசைமுகப்படுத்த வேண்டி உள்ளது. ஆரோக்கியமான உளமும் உடலும் கொண்ட ஒரு சமூகமாக இந்த இளம் பரம்பரையினர் மேலெழ பல வழிகள் உள்ளன.

விளையாட்டுத்துறை அவைகளில் ஒன்று. எனினும், பாடசாலை எமது தமிழ் சமூகத்தினர் பிள்ளைகளை விளையாட்டில் ஈடுபட அனுமதிப்பதில்லை. பாடசாலைகளில் விளையாட்டுக்கான செயற்பாடுகள் மேலும் வலுவூட்டப்படல் வேண்டும். இளம் உள்ளங்களின் நாட்டம் அது நோக்கி திருப்பப்படல்வேண்டும்.

இலக்கியத்துறையில் படைப்புக்களை செய்தல், அது தொடர்பாக உரையாடல், தேடல் நூலாக வெளியிடல், கலை நிகழ்வுகளை செய்தல், நடிப்புத் துறையிலீடுபடல் போன்றன மற்றொரு விடயமாகும். இதேபோல சமூக வேலைகள், சமய வேலைகள் என்பனவும் இளைஞர்கள், மாணவர்கள் துடிப்பாக ஈடுபட வழி வகுக்கும். அண்மைய சில ஆய்வுகள் பெற்றோர்களுக்கே தத்தமது பிள்ளைகள் போதைப்பொருளை பாவிக்கின்றனர் என்பது அறியாதுள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

சில பெற்றோர் தத்தமது பிள்ளைகள் பற்றி எண்ணுவது குறைவு. எண்ணினாலும் அவர்களுடன் இருப்பது கதைப்பது குறைவு. ஒன்றாய் இருந்து உணவு உண்பது குறைவு. எனவே, பிள்ளையின் நடத்தைக் கோலங்களை மிக உன்னிப்பாக இவர்களால் அவதானிக்க முடிவதில்லை. தவறான கூட்டத்திற்குள் பிள்ளை சென்றுவிட்டானா என்று பார்க்காதபோது காலம் கடந்த பின்னரே சில விடயங்களை கண்டறிகின்றனர். இவ்வேளையில், பிள்ளை போதைப்பொருள் பாவனை அல்லது கூடாத நடத்தையில் 50%மான நிலையை எட்டி இருப்பார்கள் எனலாம்.

எமக்கு நல்ல வாழ்க்கை முறை உள்ளது.
எமது கீழைத்தேய பழக்கவழக்கங்கள் நல்லவையே. நல்ல பழக்க வழக்கங்களை நாம் பின்பற்றுதல் வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டிலும் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் பழக்கிட ஆவன செய்தல் வேண்டும். இன்பம் தரும் பழக்கங்களை மனிதன் பழகிவிட்டால் அவனால் அதனை கைவிடுவது கடினம். அவ்வின்பம் உடலுக்கும் உள்ளத்திற்கும் பாதகமில்லையெனில் பிரச்சினை இல்லை. போதைப்பொருள் பாவனை உடலுக்கும் உளத்திற்கும் பாதிப்பைத் தருகின்றமையால் அவ்வின்பம் தீமையானதே என்பதனை உணர்த்துதல் வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates