இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அடுக்கடுக்காய் வரவுசெலவுத்திட்டம் குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆட்சிசெய்கிற அரசுகளால் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றமை ஒன்றும் வியப்பான விடயமல்ல. காலங்காலமாக ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்கள் அவர்தம் அதிகாரத்தை நிலைத்திறுத்திக்கொள்ள வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களை ஏமாற்றிவருகின்றமை கண்கூடு. இம்முறையும் மலையக மக்களுக்கு அவ்வாறானதொருநிலைமையே அரங்கேறியுள்ளது.
இலங்கையில் எச்சந்தர்ப்பத்தில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டாலும் மலையக மக்களின் அபிலாஷைகள் ஓரங்கட்டப்பட்ட ஒரு வரவுசெலவுத்திட்டமாகவே யஅமைந்துள்ளது. மலையக மக்களை இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள அரசு முன்வரவில்லை என்பதே அதற்கு அடிப்படைக் காரணமாகும்.
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியில் கொத்தடிமைகளாக மத்திய மலைநாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கும் வண்ணம் இந்த நாட்டை ஆட்சிசெய்த எந்தவொரும அரசும் முன்வரவில்லை என்பதற்கு என்ன காரணமென இன்றளவும் அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.
1972ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குக் கொண்டுவரப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் குறிப்பாக 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ போக்கு பொருளாதார முறைக்கு முன்னர் இந்த நாட்டின் அந்நிய செலாவணியின் முதுகெலும்பாகத் தோட்டத் தொழிலாளர்கள்தான் இருந்தனர் என்பதை இலங்கையின் ஆட்சியாளர்கள் மறந்துள்ளனர்.
உலகின் முதல்தரத் தேயிலையாகக் காணப்பட்ட இலங்கையின் தேயிலை இன்று சர்வதேச மட்டத்தில் வீழ்ச்சியடைய ஒருபோதும் தோட்டத் தொழிலாளர்கள் காரணமாக அமையவில்லை. அது தனியார் கம்பனிகளின் வினைத்திறனற்ற பராமரிப்பால் ஏற்பட்ட சாபக் கேடாகும்.
சுதந்திரத்துக்கு முந்திய ஆங்கிலேய ஆட்சியில் தேயிலை, இறப்பர், கோப்பி மற்றும் வாசனைத் திரவியம் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்களின் உற்பத்தியில் முன்னிலை நாடாக இலங்கை காணப்பட்டது. ஆனால், 1970ஆம் ஆண்டு சிறிமா ஆட்சியில் மூடிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டமையால் இலங்கையின் திறந்தப் பொருளாதாரக் கொள்கை பெரிதும் ஆட்டங்கண்டது மாத்திரமின்றி பெருந்தோட்டங்களின் வீழ்ச்சிக்கு முதல் அடித்தளமாகவும் அது அமைந்தது.
1992ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டமையால் வருமானத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்திய உற்பத்தியை கம்பனிகள் மேற்கொண்டன. இன்று சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலைக்கு மவுசு குறைந்துள்ளது. தரமற்ற இறப்பர் உற்பத்தியின் காரணமாக உலக சந்தையில் செயற்கை இறப்பரின் கேள்வி அதிகரித்துள்ளது.
மலையக மக்கள் அரசின் கீழ் இயங்கும்போதும் சரி, தனியார்துறையின் கீழ் இயங்கும்போதும் சரி, வரவு செலவுத்திட்டத்தின் போதும், ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின்போதும் ஏதோ அந்நிய நாட்டு பிரஜைகள் போலவே இன்னமும் இந்த நாட்டு ஆட்சியார்களால் கணக்கெடுக்கப்படுகின்றனர். கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசின் ஆட்சிக்காலம்வரை மலையக மக்களின் அபிலாஷைகள் தட்டிக்கழிக்கப்பட்டு வந்ததயின் காரணமாகவே மலையகத்தில் மிகப் பெரிய தேர்தல் புரட்சியொன்று இடம்பெற்றது. அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நல்லாட்சி என்று நாமம் ஓதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமோக ஆதரவளித்தனர்.
ஆனால், வாக்களித்த மக்களின் அபிலாஷைகளை ஐக்கிய தேசியக் கட்சி உள்வாங்கிச் செயற்படுகின்றதா என்பது தொடர்பில் பாரிய கேள்விகள் உள்ளன. சந்திரிகாவின் ஆட்சிக்குப் பின்னர் மலையக மக்களின் தனி வீட்டுத்திட்டத்திற்கு ஓரளவு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தற்போதைய ஐ.தே.கட்சிசார் கூட்டரசு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கியுள்ளன. 1,000 மில்லியன் ரூபாவில் முறையாக ஆயிரம் வீடுகளைக் கூட அமைக்க முடியாது என்பது தெளிவான விடயம்.
தேயிலை, இறப்பர் மீள் நடுகை மற்றும் பெருந்தோட்டங்களைப் பராமரித்தல் தொடர்பில் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் எவ்விதமான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வில்லை. மலையக அபிவிருத்திக்காக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரே விடயம் இந்த 1,000 மில்லியன் ரூபா என்பது மாத்திரமே. மலையகத் தலைமைகள் கூறுவது போல் பெருமளவிலான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதே உண்மை.
இந்த நாட்டில் சேரிப்புறங்கள் உருவானது நகரமயமாக்கலின் பின்னர்தான். ஆனால், மலையக மக்கள் 200 வருடங்களுக்கு அதிகமாக சேரிப்புறத்துக்கு ஒப்பான லயன் அறைகளில் வாழ்கின்றனர். மாற்றத்தை விரும்பிய மக்களின் தனிவீட்டுத்திட்டத்திற்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி சொற்ப அளவே. ஒரு வருடத்தில் 1,000 வீடுகள் அமைக்கப்படுமானால் 5 வருடத்தில் 5,000 வீடுகள்தான் அமைக்கப்படும். மலையகத்தைப் பொறுத்தவரை 2,50,000 தனிவீடுகள் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. இலங்கை அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் போது தொடர்ந்தும் மலையக மக்கள் ஏமாற்றப்படுவதாகவே இம்முறை வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் அமைந்துள்ளன.
வரவு செவுத்திட்டத்தில் மலையகத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்படுத்தும் என்ற கனவு துடைத்தெறியப் பட்டுள்ளது.என்றாலும், கண்துடைப்புக்காவது மலையகத்தை நினைவுப்படுத்தியுள்ளமை வரவேற்கத் தக்கதே. மலையகத் தலைமைகளுக்கும் இது ஒரு நல்லப்பாடம். அடுத்த வருட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஆணித்தரமான முன்மொழிவுகளை அரசுக்கு கொடுப்பதன் மூலம் சாதிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. வரவு செலவுத்திட்டத்துடன் நின்றுவிடாமல் அதனையும் தாண்டிய பல்வேறு சவால்கள் உள்ளன. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தனியார் உடமையின் கீழ் இருந்து பிரிந்து அரசின் மத்தியஸ்தத்திற்கு கொண்டுவருதல். மலையகமெங்கும் நீர்வளமிருந்தும் குடிக்கத் தண்ணீர் இன்றித் தவிக்கு மக்களுக்கு முறையான குடிதண்ணீர் திட்டத்தை ஏற்படுத்தல்.
1972ஆம் ஆண்டு பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக் காணிகளில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஜனவசம எனப்படுகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை மற்றும் எஸ். பி.சி. எனப்படுகின்ற அரச பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டன.
இதுவே, 1992ஆம் ஆண்டு மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டன. குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள இக்கம்பனிகளின் காணிகளிலிருந்தே "பசுமைபூமி' திட்டத்தின் கீழ் 7 பேர்ச் காணி வழங்கப்படுகின்றது. இதனை பிராந்திய கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்தே பெற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை அரசின் கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரவேண்டியது கட்டாயமானதாகும். "பசுமைபூமி' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உறுதிப்பத்திரங்கள் நம்பகத் தன்மை அற்ற ஓர் உறுதிப் பத்திரம் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அண்மையில் விளங்கப்படுத்தியிருந்தார். வழங்கப்படுகின்ற வீடுகளுக்காவது இந்த மக்கள் உரிமையாளர்களாக இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக நோக்கின் மலையக மக்களின் வாழ்வில் வரும் ஐந்தாண்டில் பாரிய மாற்றங்களும், அபிவிருத்தியும் ஏற்பட வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு. அதற்கான ஜனநாயக சூழல் இலங்கையில் இன்று துளிர்விட்டுள்ளது. எனவே, நல்லாட்சியிலும் இந்த மாற்று அரசியலிலும் மாற்றங்களை மலையக மக்களும் அனுபவிக்க முறையான அழுத்தத்தை அரசுக்கு கொடுப்பது மாத்திரமின்றி மலையகத் தலைமைகள் உறுதியுடனும், வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...